ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

தொகுப்பு:மன்சூர் ஹல்லாஜ்



பேரன்புடையீர்…வணக்கம்.

புகழ்மிக்க தமிழ்கவிஞரும் பண்பாட்டு விமர்சகருமான ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னால் நாகர்கோவில் கார்மல் மேல்நிலை பள்ளிவளாகத்தில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயபதி அடிகளார் மற்றும் சில இறைப் பணியாளர்களின் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட மதுவுக்கு எதிரான இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றுநாள் கருத்தரங்கத்தில் கவிஞர் ரசூலும் ஒரு கட்டுரை படித்தார். சொந்த வாழ்வில் குடிக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கும் ரசூலின் அக்கட்டுரை இஸ்லாமிய பண்பாட்டு வாழ்க்கையில் குடியின் இடத்தையும் இஸ்லாமிய பண்பாட்டு வாழ்க்கையில் குடியின் இடத்தையும் இஸ்லாமிய அறக்கருத்துக்கள் அதன்மீது கொண்டிருக்கும் பார்வையையும் வரலாற்றுப் போக்கில் ஆய்வு செய்தது.இக்கட்டுரையின் சிறப்புக் கருதி உயிர்மை இலக்கிய இதழ் அதை வெளியிட்டுத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தது.

கவிஞர் ரசூல் இஸ்லாமிய நம்பிக்கை உடையவர். பூட்டிய அறை,மைலாஞ்சி உட்பட்ட நான்கு கவிதை நூல்களுக்கு சொந்தக்காரர். தக்கலை ஜமாத்தின் உதவிதலைவராக இருந்தவர். ஒரு சிறந்த குடும்பத்தின் புதிய தலைமுறை. மகான்பீரப்பா,சூபீலக்கியம், தர்காபண்பாடு, இஸ்லாமியப் பெண்ணியம், அரபுலகம், அர்சால் அடித்தள முஸ்லிம்கள் என பன்முக நிலைகளில் விரிவான ஆய்வுகள் செய்து தமிழ் உலகத்திற்கு அறிமுகம் செய்தவர். நேர்மைமிக்கவர்.தேடல் நிறைந்தவர்.ஜமாத்தில் ஒழுங்கும் நேர்மையும் ஜனநாயகப் பண்பும் மிளிர வேண்டுமென்று போராடி வந்தவர். இதன் காரணமாக சிலருடைய தனிப்பட்ட மனக்கசப்புக்கும் ஆளானவர்.
உயிர்மையில் ரசூலின் கட்டுரை வெளிவந்ததும் அவரை எதிர்த்தவர்களுக்கு அவரைத் தாக்க இது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. ரசூல் இஸ்லாமிய விழுமியங்களை சர்ச்சைப்படுத்திவிட்டார் எனக் காரணம் காட்டி அவரை ஜமாத் நிர்வாகம் பொறுப்பிலுள்ளோரில் ஒரு சிலரின் தூண்டுதலால் நீக்கி வைத்துவிட்டனர். அவரைமட்டுமல்ல கட்டுரைக்கு எந்தத் தொடர்புமில்லாத அவருடைய துணைவியாரையும் குழந்தைகளையும் சேர்த்து நீக்கி வைத்துவிட்டனர்.

இந்த ஊர்விலக்கு தமிழ் எழுத்தாளர்களுக்கிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தமிழ் சிந்தனையாளனின் கட்டுரைக்காக அவரை ஊர்விலக்கம் செய்வது ஜனநாயகப் படுகொலை.அறிவுச்சுதந்திரத்திற்கு எதிரான வன்முறை எனக் கண்டித்து கருத்தரங்கங்களும் கண்டன அரங்கங்களும் கலைஇலக்கியப் பெருமன்றம்,முற்போக்கு எழுத்தாளர்சங்கம் இன்னும் பல இலக்கிய அமைப்புகள் தமிழகமெங்கும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

எங்களுடைய முதன்மையானகேள்வி இதுதான். கவிஞர் ரசூல் எழுதிய கட்டுரை இஸ்லாத்தின் அறவியல் கோட்பாடுகள் சார்பானது. அந்தக் கோட்பாடுகளை வரலாற்றுப்பூர்வமாக அணுகுவதும் அணுகி ரசூலின் அணுகல் சரியானதா தவறாதனா என்று விவாதித்து முடிவு செய்வதும் யார்? ஆய்வுத்துறை பரிச்சயமற்ற சமயவாதிகளா.? ஆய்வுஅனுபவமும் தகுதியும் கொண்ட இஸ்லாமிய ஆய்வு அறிஞர்களா?ஊரின் நடைமுறைகளுக்கு எதிராக ரசூல் ஏதாவது செய்திருந்தால் ஊரார் கூடி அதை ஆலோசித்து முடிவு செய்வதில் நியாயம் இருக்கிறது. ரசூல் பிரச்சினை அதுவல்ல. அவர் எழுதியது ஒரு ஆய்வுக் கட்டுரை. இஸ்லாமிய மேற்குலகு மற்றும் கிழக்குலக ஆய்வு அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டு அவர் சிரமப்பட்டு உருவாக்கிய கட்டுரை அது. இக்கட்டுரையை மதிப்பீடு செய்வது என்பதும் முடிவு சொல்வது என்பதும் இஸ்லாமிய ஆயவு அறிஞர்கள் கூடி விரிவாக விவாதித்துச் செய்ய வேண்டிய நுட்பமான பணி. ஒரு ஆய்வு அறிஞரை ஒரு சமூகம் பெறுவது என்பது அச் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் பெரும் பேறு.அப்பேர்றினை மேலும் பேணி வளர்ப்பதுவும் அதனை முறையாகக் கண்காணித்து நெறிபிறழாமல் திசைப்படுத்துவது சமுதாய அறிஞர்களின் கடமை. இந்தக்கடமையை இஸ்லாமிய அறிவுலகம் ஏன் இன்னும் நிறைவேற்றாமல் மவுனம் காத்துக் கொண்டிருக்கிறது. அறிவுலகத்துக்கு சற்றும் பொருந்தாத இந்த போக்கு எங்களை வருத்துகிறது.

இஸ்லாமிய அறிஞர் குழு கூடி விவாதித்து ஒருவேளை ரசூல் மீது தவறு கண்டாலும் அதை தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பது அடுத்தக் கேள்வி. தண்டனை அளித்து அவரையும் அவரது குடும்பத்தையும் சிதைப்பது என்பது அறவியல் நெறிமுறைக்கு சற்றும் பொருத்தமில்லாதது.எது உண்மை என்று கவிஞருடன் தொடர்ந்து விவாதித்து தெளிவுபடுத்துவதே சரியான வழி.இந்த வழிமுறையைத் தமிழ் இஸ்லாமிய அறிவுலகம் நடைமுறைப்படுத்துவதில் இதுவரை என்ன செய்திருக்கிறது.இனி என்ன செய்யக் காத்திருக்கிறது என்று அறியப் பெரிதும் விளைகிறோம்.

மூன்றாவதாக இன்னும் ஒரு கேள்வி.ஒருவர் தவறு செய்தால் அதற்காக அவருடைய குடும்பத்தையும்கண்டிப்பது பழைய காட்டுமிராண்டித்தனமான தண்டனை.எந்த நாட்டின் நீதிமன்றமும் இன்று இந்த முறையை பின்பற்றுவதில்லை. குற்றம் என்று முடிவு செய்தால் குற்றத்துக் குரியவரை மட்டும் தண்டிப்பதே அறவுலகத்தின் ஒப்புக் கொள்ளப்பட்ட கோட்பாடு.இது இஸ்லாமிய அறவியலுக்கும் பொருந்தும் தானே… இதை மீறி குற்றம் செய்தவர் என்று கவிஞர் ரசூலைச் சாட்டி அவர் எழுதியக் கட்டுரைக்கு எந்தச் சம்பந்தமுமில்லாத அவருடைய அப்பாவித் துணைவியாரையும் அருமைக் குழந்தைகளையும் தண்டித்ததை இஸ்லாமிய அறிவுலகம் எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது.

மதிப்புற்குரிய அய்யா மேலே நான் பதிவு செய்திருக்கும் மூன்று கேள்விகளும் என் தனிப்பட்ட கேள்விகளல்ல.. பல சமூகங்களையும் பல சிந்தனைப் போக்குகளையும் சார்ந்த மற்றும் சாராத மனித நேயச் சிந்தனையாளர்கள் கூடி விவாதித்து விடை காண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளுக்குரிய விடைகளை அல்லது எங்களுக்கான விளக்கங்களைத் தங்களிடமிருந்து பெற காத்துக் கொண்டிருக்கிறோம்.இஸ்லாத்தில் அன்பும் மனித நேயமும் சகிப்புத் தன்மையும் உண்மையைத் தேடும் ஆற்றலும் நிறைந்திருப்பதாக நம்புகிறவர்கள் நாங்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்தக் கேள்விகளை உங்கள்முன் சமர்ப்பிக்கிறோம்.தங்கள் பதிலில் தேடல் நிறைந்த மனிதநேயக் கவிஞர்களையும் ஆய்வு அறிஞர்களையும் பாதுகாத்து வளர்ப்பதற்கான அற ஆற்றல் நிறைந்திருக்கிறது என்று முழுமையாக நம்புகிறோம்.அதற்காகவே தவிக்கிறோம். தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.


mansurumma@yahoo.co.in

Series Navigation