ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் – எழுத்தும் எதிர்வினையும் — ஒரு பார்வை

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

நாகூர் ரூமி


கவிஞரும் சுயமாக சிந்திக்கின்ற திறன் கொண்டவருமான ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் செய்யப்பட்டிருக்கிறது. “இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் — மௌனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்” என்ற தலைப்பில் ‘உயிர்மை’யில் ஒரு கட்டுரை எழுதியதால் அவருக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘மைலாஞ்சி’ கவிதைத் தொகுதி எழுதியதன் மூலம் சில இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.

அந்த தொகுதியில் இருந்த சில கவிதைகள் எனக்கு ஒரு நுட்பமான, உன்னதமான கவிஞனை அடையாளம் காட்டின. அவருக்கு எதிர்ப்பு சம்பாதித்துக் கொடுத்த சில கவிதைகள் மீது எனக்கும் விமர்சனமிருந்தது. இன்னும்கூட இருக்கிறது. அதையெல்லாம் நான் ஒரு நீண்ட கடிதமாக எழுதி அவருக்கே அனுப்பினேன் (என்று ஞாபகம்). அவருடைய கவிதைகளைப் பாராட்டி எழுதப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாக வெளிவந்த சிறு நூலில் என் பாராட்டும் இடம் பெற்றது. (ஆனால் விமர்சனம் இடம் பெறவில்லை என்பது வேறு விஷயம். என்றாலும் நான் பாராட்டியது உண்மைதானே?) அதில் எனக்கு இன்றளவும் எந்த மாற்றமும் இல்லை.

இப்போது ‘மைலாஞ்சி’ தொகுதி ஏற்படுத்திய விளைவைவிட அதிகமான பாதிப்பை ஒரு கட்டுரை அவருக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அக்கட்டுரையில் அவர் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்?

மது அருந்துவது ஹராம், அதாவது தடுக்கப்பட்டது, விலக்கப்பட்டது என்றுதான் இன்று வரை இஸ்லாத்தின் நிலைப்பாடாக சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வருகிறது. ஆனால் திருக்குர்ஆனில் இருந்து குடி பற்றிய அத்தனை வசனங்களையும் மேற்கோள் காட்டி அது ஹராமானதல்ல, ஆகுமானதற்கும் விலக்கப்பட்டதற்கும் இடைநிலையில் உள்ளது (ஹராமும் அல்ல, ஹலாலும் அல்ல, இறால் சாப்பிடுவதைப் போன்ற மக்ரூஹ்-தான்) என்று அக்கட்டுரையில் ரசூல் வாதிடுகிறார்.

வாதம் மிக ஆழமாக, அழகாக, ஆணித்தரமாக ஆனால் அமைதியாக வைக்கப்படுகிறது.

மதுவில் — நன்மை கொஞ்சமாகவும், தீமை அதிகமாகவும் உள்ளது என்று இறைவசனம் 2:219 சொல்கிறது. பள்ளிவாசலுக்குச் சென்று தொழ போதையோடு போகக்கூடாது என்று வசனம் 4:43 கூறுகிறது. மது சாத்தானின் கைவேலையாக இருப்பதால் அதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று வசனம் 5:90 கூறுகிறது.

இப்படி எல்லா வசனங்களையும் ஹெச்.ஜி.ரசூல் எடுத்துக் காட்டுகிறார். திருக்குர்ஆனில் எந்த வசனமும் மதுவை ஹராம் என்று சந்தேகத்திற்கு இடமின்றிச் சொல்லவே இல்லை என்பது அவரது வாதம்.

உண்மையில் ரசூலுடைய வாதம் மது ஹராமானதா மக்ரூஹா என்பதாக நான் நினைக்கவில்லை. நாம் எடுத்துப் பின்பற்ற வேண்டியது திருக்குர்ஆனையா அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகே தொகுக்கப்பட்ட ஹதீதுகளையா? இந்த கேள்வியைத்தான் மறைமுகமாக ரசூலின் கட்டுரை முன்வைக்கிறது.

இது ஒரு மிகமுக்கியமான கேள்வி என்றே நான் நினைக்கிறேன். என்றாலும் திருக்குர்ஆன் ஆனாலும் சரி, ஹதீதுகளானாலும் சரி, விளக்கத்தின் அடிப்படையிலேயே அவை புரிந்து கொள்ளப்படுகின்றன. விளக்கங்கள் என்று வரும்போது அவை குழுக்களுக்குத் தகுந்தவாறும், தனி மனித சிந்தனைக்குத் தகுந்தவாறும் மாறுபடுகின்றன. இதன் காரணமாகவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் ஒற்றுமைக்குலைவும், பூசல்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுதான் சரியான விளக்கம் என்று யாரும் எந்தக் காலத்திலும் ஒன்றைச் சொல்ல முடியாதுதான். ஒவ்வொருவருடைய அனுபவத்திற்கும் அறிவின் விசாலத்திற்கும், கிடைக்கும் இறையருளின் அளவுக்கும் ஏற்ப விளக்கங்கள் வேறுபடலாம். வேறுபடும்.

எது எப்படி இருப்பினும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டதோடு முரண்படும் கருத்து ஹதீதில் வருமானால் நாம் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டதையே பின்பற்றலாம் என்பது என் கருத்து.

ஆனால் மது ஹராமா மக்ரூஹா என்ற விஷயத்தைப் பொறுத்தவரை நான் ரசூலின் பக்கமில்லை. ஏனெனில் மது ஹரமானதுதான் என்று வெளிப்படையாக இறைவன் திருக்குர்ஆனில் சொல்லாவிட்டாலும், எது ஹராம் எது ஹலால் என்று நிர்ணயிக்கின்ற உரிமையை, அதிகாரத்தை அவன் நபிகள் நாயகத்துக்கு வழங்கியிருக்கிறான்.

வசனம் 7:157-ல் அவன் இறுதித் தூதரைப் பற்றி இப்படிக் கூறுகிறான்:

நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிலிருந்து விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்.

இன்னொரு வசனத்தில் அவர் நல்லதைக் கொண்டு வருபவர், தீயதைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிப்பவர் (5:19) என்று கூறுகிறான்.

இந்த வசனங்களின்படி பார்ப்போமேயானால், எது சமுதாயத்தினருக்கு ஹராமானது, எது ஹலாலானது என்பதை நிர்ணயம் செய்யும் delegation of authority-யை இறைவன் நபிகள் நாயகத்துக்கு வழங்கி விட்டான் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. அதோடு பல இடங்களில் இறைவனுக்கும் இறுதித் தூதருக்கும் அடிபணிய வேண்டும் என்றும், இரண்டு ஒன்றுதான் என்றும் கூறுகிறான்:

அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் அடிபணியுங்கள் (3:32, 132)

அல்லாஹ்வுக்கு ரசூலுக்கும் அடிபணிபவர்கள் சொர்க்கம் செல்வார்கள் (4:13),

அடிபணியாதவர்களுக்கு நரகம் (4:14)

ரசூலுக்கு அடிபணிந்தவர் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராவார் (4:80)

இன்னொரு இடத்தில் அல்லாஹ் மற்றும் இறுதித் தூதரோடு இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும் என்றும் கூறுகிறான் :

அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும், அதிகாரம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் அடிபணியுங்கள் (4:59)

ரஸ¥லுக்கு அடிபணிவது என்றால் அவர்கள் செய்யச் சொன்னதைச் செய்வதும், தடுத்ததைச் செய்யாமல் இருப்பதுமாகும். ‘அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள்’ என்பது கலீ•பாக்களையும், இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் — அப்படி ஒரு நாடு இருந்தால் — உள்ள ஆட்சியாளர்களையும் குறிக்கிறது.

மது கூடாது என்று சொல்லும் பல ஹதீதுகளை ஆதாரப்பூர்வமான தொகுப்புகள் என்று சொல்லப்படும் புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, நசயீ போன்றவற்றில் பார்க்க முடிகிறது. சில உதாரணங்கள்:

மதுவைக் குடிப்பவன் குடிக்கின்ற அந்த செயலில் இருக்கின்றவரை அவன் நம்பிக்கையாளன் அல்ல (அபூ ஹ¤ரைரா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீது புகாரி 2295, முஸ்லிம் 86, திர்மிதி 2549, அபூதாவூத் 4069, இப்னு மாஜா, 3926 ஆகியவற்றில் உள்ளது).

அதாவது மது அருந்துபவன் அந்த நேரத்தில் மட்டும் ஈமானை இழந்து முஸ்லிமாக இல்லாமல் போகிறான் என்று இறைத்தூதர் கூறுகிறார்கள். இது மிகவும் கடுமையானது. ஏனெனில் இறக்கும் தருவாயில் நீங்கள் முஸ்லிமாக இருங்கள் என்று ஒரு வசனம் (3:102) கூறுகிறது. குடி போதையில் ஒருவன் இறந்து விடுவானாகில் அவன் முஸ்லிமாக மரணிக்க மாட்டான் என்ற குறிப்பு இந்த ஹதீதில் மறைந்துள்ளது.

அல் பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் இறங்கியபோது அவற்றை மக்களுக்குப் படித்துக் காண்பித்துவிட்டு, மது வியாபாரம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் தடுத்தார்கள் என்று ஆயிஷா அவர்கள் அறிவிக்கும் ஹதீது புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா, நசாயி, அபூதாவூத், முஸ்னத் அஹ்மத் ஆகியவற்றில் உள்ளது.

மது குடிக்கக் கூடாது (அதாவது தவிர்த்துக் கொள்ளுங்கள்) என்று இறங்கிய வசனத்துக்குப் பிறகு, மது தடை செய்யப்பட்டுவிட்டது என்று கலீ•பா உமர் அவர்கள் குத்பா மேடையில் பேசியதாக இப்னு உமர் அறிவிக்கும் ஹதீது புகாரி, முஸ்லிம் போன்ற தொகுப்புகளில் உள்ளது. (இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு அடிபணியுங்கள் என்ற இறைக்கட்ட¨ளையை இங்கே நினைவு கூர்வது நல்லது).

மது கூடாது என்று குறிப்பால் உணர்த்தும் ஹதீதுகளும் உண்டு. உதாரணமாக நபிகள் நாயகத்தின் மி’ராஜ் எனப்படும் விண்ணேற்றப் பயணத்தின் போது, ஜிப்ரயீல் தனக்கு ஒரு கோப்பையில் மதுவும், இன்னொரு கோப்பையில் பாலும் கொடுத்தார் என்றும், நான் பாலை எடுத்துக் கொண்டேன் என்று நபிகள் நாயகம் சொல்ல, நீங்கள் இயற்கையானதையே தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் மதுவைத் தேர்ந்தெடுத்திருந்தால் உங்களுடைய சமுதாயம் வழி கெட்டுப் போயிருக்கும் என்று ஜிப்ரயீல் சொன்னதாக அபூஹ¤ரைரா அறிவிக்கும் ஹதீது புகாரி (ஹதீது எண் 3143, முஸ்லிம் (234), திர்மிதி (3055), அந்-நசாயீ (5563), முஸ்னது அஹ்மத், (2ம் பாகம், பக்கம் 282) ஆகியவற்றில் உள்ளது.

இதில் மது குடிக்கும் சமுதாயம் வழிகெட்டுப் போகும் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். முத்தாய்ப்பாக ஒரு ஹதீது உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்:

போதையூட்டும் எல்லாமே (ஹம்ர் எனப்படும்) மதுதான். எல்லா மதுவும் ஹராமானது. இந்த உலகில் மதுவருந்தி பாவமன்னிப்புத் தேடாமல் இறந்து விடுபவருக்கு அந்த உலகின் மது கிடைக்காது. (புகாரி, ஹதீது எண் 5147, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா)

மேற்கூறிய இறைவசனங்கள், ஹதீதுகள் ஆகியவற்றை வைத்துப் பார்ப்போமேயானால், இந்தப் பிரச்சனைக்கு சுமூகமான ஒரு முடிவுக்கு வர முடியும் என்று நினைக்கிறேன். நான் சொல்வது தவறு என்று ரசூலோ அல்லது வேறு யாருமோ வாதிடலாம். ஆதாரங்களை முன்வைக்கலாம். ஆனால் கருத்துக்கு கருத்துதான் பதிலாக இருக்க வேண்டுமே தவிர, பீர்முஹம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் செய்ததுபோல சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைப்பது, கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செய்ததுபோல ஹெச்.ஜி.ரசூல் முஸ்லிமே அல்ல என்று தீர்ப்பு வழங்குவது போன்ற செயல்களெல்லாம் நமது முதிர்வின்மையைத்தான் காட்டும். தஸ்லிமா நஸ்ரீனின் கழுத்தை வெட்டச் சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. தீர்ப்பு வழங்க வேண்டியவன் தீர்ப்பு நாளின் அதிபதியான அல்லாஹ். அந்தப் பொறுப்பை உலமாக்களுக்கு வழங்கியது யார்? தவறான கருத்தை வெட்ட வேண்டும். கழுத்தை அல்ல.

எனினும் நண்பரும் சகோதரருமான ஹெச்.ஜி.ரசூலிடம் நான் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது: இவ்வளவு கஷ்டப்பட்டு, மலையைப் பிடுங்கி எலியை விரட்ட வேண்டுமா?

குடிகாரர்கள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சம், அவர்களுக்கு இறை எதிர்ப்பு இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? உடல் நலத்திற்குத் தீங்கென்று நன்றாக நமக்குத் தெரிந்த ஒன்றை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் இறைவன் சொல்லியிருக்கிறான் என்பதையே குடித்தால் பரவாயில்லை, தண்டிக்க மாட்டேன் என்று அவன் சொல்வதாக எடுத்துக் கொள்வதா? அவன் கருணை மிக்கவன். ஏற்கனவே நீங்கள் குடித்து உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்துக் கொள்கிறீர்கள். இன்னொரு தண்டனை எதற்கு என்று அவன் விட்டிருக்கலாம்! குடிகாரர்களுக்கு ஆதரவாக ஒரு ஆழமான கட்டுரை தேவைதானா? அதை விடுத்து நீங்கள் வேறு நல்ல விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமல்லவா?

மது ஹராமானதாக இருந்தால் சொர்க்கத்தில் மது ஆறு ஓடுவதாக இறைவன் சொல்கிறானே என்று கேட்கக் கூடாது. இம்மையிலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்வின் குறியீடுதான் சொர்க்க வாழ்வு. இங்கே கிடைக்காததெல்லாம் அங்கே கிடைக்கும் என்று அர்த்தம். அவ்வளவுதான். இங்கே மனிதர்கள் குடிக்கக் கூடிய பீர், பிராந்தி, விஸ்கி போன்ற சமாச்சாரங்களைத்தான் சொர்க்கத்திலும் ஆண்டவன் தருவதாகச் சொல்லுகிறான் என்று எண்ணுவது நுட்பமான புரிந்துகொள்ளலல்ல.

குடிப்பது மட்டும் போதையூட்டும் காரியமல்ல. ஆரோக்கியம் குலைக்கும் ஒரு காரியத்துக்கு தெய்வவாக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று விலாவாரியாக ஆராய்ந்து சொல்வதுகூட ஒருவிதமான எழுத்து போதைதான். ஹெச்.ஜி.ரசூலின் கட்டுரையும் ஒருவித போதையில் எழுதப்பட்ட கட்டுரைதான். அது ஒரு தேவையில்லாத கடும் உழைப்பு. விழலுக்கு இரைத்த நீர். ஏனெனில் அடிப்படையான ஒரு கேள்வி இதுதான்: மது குடிக்கிறவன் குர்ஆனையும் ஹதீதையும் பார்த்துவிட்டா குடிக்கிறான்? மது குடிப்பவர்களுக்கு இதெல்லாம் தேவையா? மது குடிக்காமல் இருப்பவர்கள் குரானிலோ ஹதீதிலோ சொல்லப்படாவிட்டாலும் குடிக்காமல்தான் இருப்பார்கள் அல்லவா?

கெட்ட பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு வேதங்கள் தேவையில்லை. நல்ல மனிதர்களாக வாழ்ந்து பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு அவர்களுடைய மனமும் மனசாட்சியுமே வேதமாக இருக்கும். அவர்களுக்கு இறைவனின் குரல் திருக்குர்ஆனிலிருந்து மட்டும் ஒலிக்க வேண்டியதில்லை. அவர்களுடைய மனதிலிருந்தும் அந்தக் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.


ruminagore@gmail.com

Series Navigation