ஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

மலர்மன்னன்


கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் மலேசியாவின் பாரளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் தீர்ப்பு, நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம்தான் மலேசிய ஹிந்துக்கள் பொறுமையிழந்து, மௌனம் கலைந்து, அங்கு முகமதிய அரசின் கீழ் இரண்டாந்தரக் குடிமக்களாகத் தாம் வாழ நேரிட்டுள்ள இழிவை உலகறிய பிரகடனம் செய்தனர். அவர்களின் குரலில் தொனித்த நியாயத்தை அங்கீகரிப்பதேபோல் நான்கே மாதங்களில் மலேசியப் பாராளுமன்றத் தேர்தல் தீர்ப்பு வந்துவிட்டது.

இந்தத் தேர்தலில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சம், ஹிந்துக்கள் மிகவும் கட்டுபாடாக ஒன்றுபட்டு நின்று, வாக்களித்ததுதான். பெயரளவில் அவர்களின் பிரதிநிதிகளாய்ப் பல காலம் பாராளுமன்றத்தில் அமர்ந்து பதவியின் பலனைப் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களைத் தோல்வியடையச் செய்து, தங்களது வாக்கின் வலிமையை ஹிந்துக்கள் நிரூபணம் செய்தனர். இதற்கு மலேசியாவின் இன்னொரு சிறுபான்மையினரான சீனரும் துணை நின்று, மலேசியாவின் சிறுபான்மை விரோதப் போக்கை உறுதி செய்தது மேலும் கவனிக்கத் தக்கது.

மலேசிய ஹிந்துக்கள் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹிந்து உரிமைப் போராட்டக் குழு முன்னின்று ஏற்பாடு செய்த பேரணியை மலேசிய அரசு வன்முறையைப் பிரயோகித்து அடக்கியபோது அதனைக் கண்டிக்கத் தவறியதோடு மட்டுமின்றி, ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவின் போக்கு அமைதியைக் குலைத்து அனாவசியமான குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும், அது ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்புகளின் தூண்டுதல் காரணமாக ஒரு சிலர் மேற்கொள்ளும் விஷப்பரீட்சையேயன்றி வேறொன்று
மல்ல எனவும், மலேசியாவில் ஹிந்துக்களுக்கு ஒரு குறையும் இல்லை என்றும் ஆட்சியில் பங்கேற்றிருந்த ஹிந்துக்களே கூசாமல் காலை வாரினார்கள். அவர்களின் சொந்த வாழ்க்கை சொஸ்தமாக இருப்பதால்தானோ என்னவோ, அனைத்து ஹிந்துக்களும் அவர்களைப் போலவே பிரச்சினை ஏதும் இன்றி வாழ்வதாக அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அவர்களுக்குச் சரியான புத்தி புகட்டி பிரத்தியட்ச நிலைக்கு அவர்களை அழைத்து வருவதாக மலேசியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

நீண்ட நெடுங் காலமாக மலேசிய ஹிந்துக்களின் பிரதிநிதி போல அரசியலில் வேரூன்றி, அதன் காரணமாகவே அமைச்சரவையிலும் இடம் வகித்து வந்த மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலுவும் அவருடைய தளபதிகளும் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். மலேசிய இந்தியன் காங்கிரஸ் முந்தைய பாராளுமன்றத்தில் பெற்றிருந்த மொத்த இடங்களில் மூன்றில் இரண்டு இடங்களில் தோல்வி கண்டுவிட்டது. ஹிந்துக்களின் நியாயமான உரிமைக் குரலை எதிரொலிக்கத் தவறியதோடு, ஹிந்துக்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் பாரபட்சம் ஏதும் இல்லை, எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன என்று பொய் சாட்சியமும் அளித்த மலேசிய இந்தியன் காங்கிரசுக்கு ஹிந்துக்களும் பிற சிறுபான்மையினரும் கொடுத்த தண்டனை அது!

ஹிந்துக்களின் எழுச்சியை இரும்புக் கரங்கொண்டு அடக்கிய மலேசியப் பிரதமர் படாவியின் பாரிசான் நேஷனல் கட்சியும் தனது பங்காளியான மலேசிய இந்தியன் காங்கிரசைப் போலவே பலத்த அடி வாங்கியுள்ளது. வெகு காலமாகப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு இடங்களைக் கைப் பற்றித் தனது இச்சைப்படி அதிகாரம் செலுத்தி வந்த பாரிசான் நேஷனல், பல இடங்களில் தோற்று, அதிக இடங்களைப் பெற்ற பெரும்பான்மைக் கட்சியாகச் சுருங்கிவிட்டது.

மலேசியாவில் தன வசமிருந்த பதிமூன்று மாநிலங்களில் பன்னிரண்டு மாநிலங்களை படாவியின் கட்சி இழந்துவிட்டது. சரவாக் மா நிலத்தை மட்டுமே அது தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதற்குக் காரணம் அங்கு சென்ற ஆண்டே தேர்தல் நடைபெற்று
விட்டதுதான்!

தமது பாராளுமன்றத் தொகுதியான சுங்காய் சிபுட்டில் போட்டியிட்ட டத்தோ சாமிவேலு, அரசியலுக்குப் புதியவரான டாக்டர் டி. ஜயக் குமாரிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்புக் கிட்டும் அளவுக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தால் சிறையில் அடைபட்டிருக்கும் ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினரை விடுதலை செய்து அவர்கள் மீதான வழக்குகளும் கைவிடப் படும் என்று வாக்குறுதி அளித்திருந்த பார்ட்டி கேடிலான் ரப்யாத் என்ற கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார், ஜயக் குமார். சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவர் தனது கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகாரம் இல்லாததால் இவ்வாறு வேறு கட்சியின் சார்பில் போடியிட நேர்ந்தது.

மலேசியாவிலேயே ஹிந்துக்கள் அதிகம் உள்ள தொகுதி, சாமிவேலு போட்டியிட்ட தொகுதி. அங்கு ஹிந்துக்களின் எண்ணிக்கை 22 சதம். சீனர்கள் 42 சதம். மலாய்கள் 32 சதம். அங்கு சாமிவேலுவைத் தோற்கடிக்க சீனர்கள் ஹிந்துக்களுக்குத் தோள் கொடுத்தனர்.

மலேசியாவி லுள்ள சீனர்கள் பல்லாண்டுக் காலமாக மலேசியாவையே தாயகமாகக் கொண்டு வாழ்பவர்கள். அவர்களுக்கு இன்றைய சீனாவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை. இவர்கள் இன்றைய சீன ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பவர்களுங்கூட. ஹிந்து ஆலயங்களுக்கு வந்து வழிபாடு செய்வதிலும் ஆர்வம் மிக்கவர்கள், மலேசியச் சீனர்கள்.

மலேசியத் தேர்தல் தீர்ப்பில் தவறமல் குறிப்பிடத் தக்க இன்னொரு செய்தி, தேர்தலில் போட்டியிட்ட ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினர் அனைவருமே வெற்றி பெற்று விட்டிருப்பது. ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவிற்கு அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் இல்லாததால் அவர்கள் வெவ்வேறு எதிர்க் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர். எனினும், வாக்காளர்கள் அவர்களைச் சரியாக அடையாளங் கண்டு வாக்களிக்கத் தவறவில்லை.

சிறையிலிருந்தவாறே மாநிலத் தொகுதியொன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார், ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம். மனோகரன். கடுமையான விதிகளைக் கொண்ட மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி சிறையில் தள்ளப் பட்டவர், மனோகரன்.

மக்கள் தீர்ப்பைப் புரிந்துகொண்டு படாவி பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனல் தமக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் விலகுவதாக இல்லை என அவர் அடம் பிடிக்கிறார்.

தேர்தலில் தோல்வி கண்ட இன்னொரு முக்கிய நபர் படாவியின் தகவல் துறை அமைச்சர் ஜைனுத்தின் மொய்தீன். மலேசியாவில் சிறுபான்மையினருக்கு சம வாய்ப்பு எல்லாவற்
றிலும் குறைவறக் கிடைக்கிறது என்று பேசியவர், அவர். ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினரை பயங்கரவாதிகள் என வர்ணித்தவர். கடந்த ஆண்டு ஜிகாதிகளின் பிரசார ஊடகமான அல் ஜசீரா தொலைக் காட்சியில் தோன்றி, உலக அரங்கில் மலேசியாவுக்குப் பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தியவர், இந்த ஜைனுத்தீன்!

மலேசியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை விமர்சனம் செய்த பிரபல சர்வ தேச இதழான “த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ தனது மார்ச் 11 தேதி இதழில் மலேசிய அரசாங்கம் இனியாகிலும் தனது சிறுபான்மையினரின் காயங்களை ஆற்ற முற்பட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளது.

இதற்குச் செவி சாய்க்கின்ற அளவுக்கு நடைபெற்ற தேர்தல் மூலம் மலேசிய அரசு படிப்பினை பெற்றுள்ளதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


malarmannan79@rediffmail.com

Series Navigation