சுகந்தி பன்னீர்செல்வம்
அக்டோபர் 19, 2008 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் (www.ilakkyavattam.com) நடத்திய கூட்டம், நாடி வந்த இலக்கிய அன்பர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. திரு.வி.க, வ.வு.சி, தேவநேயப் பாவாணர், சி.சு.செல்லப்பா, வை.மு. கோதைநாயகி அம்மாள் மற்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகிய ஆறு தமிழறிஞர்களைப் பற்றி ஆறு உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.
இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஹாங்காங்கில் துவங்கப்பட்ட இலக்கிய வட்டத்தின் கூட்டங்களில் தமிழ் இலக்கியத்துடன் பிறமொழி இலக்கியம், திரைப்படம், நாடகம், இசை, இணையம், ஓவியம், நாட்டியம், புலம் பெயர் வாழ்க்கை என்று பலவும் பேசப்பட்டு வருகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளாக வட்டம் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. அக்டோபர் மாதம் நடந்தது வட்டத்தின் 27ஆவது கூட்டம்.
வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.மு.இராமனாதன் முதலில் அறிவித்திருந்த தலைப்பு “அதிகம் அறியப்படாத தமிழறிஞர்கள்” என்பதாகும். கூடவே ‘அதிகம் அறியப்படாத’ தமிழறிஞர்களின் பட்டியல் ஒன்றையும் இணைத்திருந்தார். வட்டத்தின் மூத்த உறுப்பினர் திரு.ப.குருநாதன், “இந்த அறிஞர்களைத் தமிழ் அறிவுலகம் ஓரளவேனும் அறியும், ஆனால் அவர்களது எழுத்தும், தொண்டும் பெரிதும் பேசப்பட்டதில்லை” என்று சுட்டிக் காட்டியவுடன் தலைப்பு, “அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்” என மாற்றப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு நினைத்துப் பார்க்கையில் “அறியப்பட்ட தமிழறிஞர்களின் அறியப்படாத மொழித்தொண்டு” என்பது இன்னும் பொருத்தமான தலைப்பாக இருந்திருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.
திரு.அ.செந்தில்குமார் பேசப்பட்ட அறிஞர்களைப் பற்றிய சிறப்பான தகவல்களோடு கூட்டத்தை ஒருங்கிணைத்தார். மேடைப் பேச்சு வித்தகர்களையும், கன்னி முயற்சியாக மேடை ஏறியவர்களையும் ஒரு மனதாக ஊக்குவித்தார்.
முதலில் தமிழ் தென்றல் திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலக் கல்யாணசுந்தரம்) பற்றி திரு.ப.குருநாதன் ஒரு சீரிய உரையாற்றினார். திரு.வி.க-வின் வாழ்க்கை வரலாறு, கொள்கை, கோட்பாடுகள், படைப்புகள் என தனி கவனத்துடன் ஆற்றப்பட்ட உரை. திரு.வி.க ஒரு பன்முகம் கொண்ட விந்தையாளர்; இயற்கை உபாசகர்; சமரச சன்மார்க்கத்தில் நாட்டம் கொண்டவர்; தொழிற்சங்கவாதி; சுதேசி இயக்கத்தால் கவரப்பட்டவர்; பெண்ணுரிமை ஆதரவாளர்; அவரின் தனித்தன்மை தமிழ் உரைநடையை எளிமைப்படுத்தியதாகும். அதுவரை எழுதப்பட்டு வந்த கடினமான, நீண்ட வாக்கியங்களைக் கொண்ட தமிழ் உரை நடையை, சிறு சிறு சொற்றடர்களால் அமைக்கப்பட்ட எளிய உரைநடையாக்கினார். தொழிற்சங்கத் தலைவராக இருந்து விழிப்புணர்ச்சி, எழுச்சி, தொண்டு மனப்பான்மை, தோழமை என்ற பண்புகளை தொழிலாளர்களுக்கு எடுத்து இயம்பியவர். இவரது குறிக்கோள் மனிதநேயம், பொது மக்களின் சுகவாழ்வே அவரது அரசியல் நோக்கம். “அரசியலில் புயல், தமிழில் தென்றல்” என அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர். இவருடைய படைப்புகள் மொத்தம் 56. இதில் “பெண்ணின் பெருமை” இன்றும் திருமணங்களில் பரிசளிக்கப்படும் நூலாக அமைந்துள்ளது. சிறப்பாகச் சொல்லப்படும் பிற நூல்கள் முருகன் (அ) அழகு மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் (தலைமைப் பொழிவு) போன்றவை.
அடுத்ததாக, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட செயல்பாடுகளா லும் , அதற்காக அவருக்குக் கிடைத்த சிறைவாசக் கொடுமைகளாலும் பெரிதும் அறியப்பட்ட வ.உ. சிதம்பரனாரின் தமிழ் முகம் தமிழர்கள் பலரும் அறியாதது. அதைப் பற்றிப் பேசியவர் திருமதி.சுகந்தி பன்னீர்செல்வம். இந்த உரைக்காக நூல்களை சேகரிக்க தான் பட்ட சிரமத்தையும், நண்பர் திரு. மு.இராமனாதனின் முயற்சியால் பேராசிரியர். ஆ.இரா. வேங்கடாசலபதியிடமிருந்து ஆய்வு நூல்கள் கிடைத்ததையும் நன்றியோடு விவரித்து உரையைத் தொடங்கினார். அந்த நூல்கள்: வ.உ.சியும் பாரதியும், வ.உ.சி ஒரு பன்முகப் பார்வை (எஸ்.கண்ணன்), வ.உ.சி வளர்த்த தமிழ் (ம.ரா. அரசு), இந்திய இலக்கியச் சிற்பிகள் – வ.உ. சிதம்பரனார் (ம.ரா. அரசு), வ.உ.சி கண்ட மெய்ப்பொருள் (டாக்டர். அரங்க இராமலிங்கம்).
‘விவேகபாநு’ பத்திரிக்கையில் ஆரம்பித்த வ.உ.சி-யின் இலக்கியப் பணி பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளாக வளர்ந்தது. அதன் பின்னர் அவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள்; இலங்கையிலிருந்து பிரசுரமான வார இதழில் எழுதப்பட்ட திலகரின் வாழ்க்கை வரலாறு; அரசியலில் ஈடுபட்ட மக்கள் எழுச்சியைத் தூண்டிய உணர்ச்சிகரமான அரசியல் சொற்பொழிவுகள்; தமிழில் மேடைப் பேச்சு எனும் புது வகை; சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட நீதிநூல்கள்; மெய்யறிவு(நன்னூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல்), மெய்யறம் (திருக்குறள் பாணியில் எழுதப்பட்ட ஒரு அடி கொண்ட பாக்கள்) என்று அவரது மொழித் தொண்டு பரந்தது.
மேலும் அவரை மிகவும் கவர்ந்த ஜேம்ஸ் ஆலனின் சில வாழ்வியல் நூல்களின் மொழிபெயர்ப்புகள்: அகமே புறம் (Out from the Heart), மனம் போல் வாழ்வு(As a man thinketh), வலிமைக்கு மார்க்கம்(From poverty to power), சாந்திக்கு மார்க்கம்(The way to peace). இவற்றைத் தவிர அவர் பதிப்பித்த நூல்கள்: திருக்குறள் மணக்குடவர் உரை, சிவஞான உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை மற்றும் இன்னிலைக்கு விருத்தியுரை. மேலும் கவிதைத் தொகுப்பான அவருடைய பாடல் திரட்டு; தமிழ் மொழியில் கவிதை நடையில் முதலில் எழுதப்பட்ட அவருடைய சுயசரிதை என்ற நூல்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளுடனான உரை. வ.உ.சி-யின் காலத்திற்குப் பிறகு வெளிவந்த நூல்கள்: அவருடைய மேடைப் பொழிவுகளின் தொகுப்பு மற்றும் வ.உ.சி கண்ட பாரதி. ஆக, வ.உ.சி-யின் 16 நூல்களைப் பற்றியும் அமைந்தது அவருடைய பேச்சு. பேச்சாளரின் விண்ணப்பம் வ.உ.சி-யின் படைப்புகளை இணையத்தில் ஏற்றி அவரின் தமிழ் இலக்கியப்பணியைப் பரவலாக உலகம் அறியச் செய்ய வேண்டும் என்பதாகும்.
அடுத்ததாக, திரு.ராஜேஷ் ஜெயராமன் வர இயலாத காரணத்தால் அவரது உரையை திருமதி.ஆர்.அலமேலு வாசித்தார். உரை, தமிழ் ஞாயிறாகிய தேவநேயப் பாவாணர் பற்றியதாகும். அறிமுக உரையில் திரு. அ.செந்தில்குமார் தமிழ் ஞாயிறு என்ற பெயருக்கேற்ற முறுக்கி விட்ட மீசை கொண்டவர் தேவநேயப் பாவாணர் என்றார். ஞாயிறுக்கும் முறுக்கி விட்ட மீசைக்குமான தொடர்பு எனக்கு இன்னும்
விளங்கவில்லை.
தேவநேயப் பாவாணர் 23 மொழிகளின் இலக்கிய இலக்கணங்களைக் கற்றறிந்தவர்; 58 மொழிகளில் பேசும் வல்லமை பெற்றறவ்ர்; தமிழை அறிவியல் முறைப்படி வேர்ச்சொல் ஆராய்ச்சி செய்தவர். 50 ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல ஆய்வு நூல்களைத் தந்தவர். அவற்றினுள் குறிப்பிடத்தக்கவை: “ஒப்பிலன் மொழி நூல்”, “இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்”, “சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்”, “தமிழ் இலக்கிய வரலாறு, “தமிழர் வரலாறு”, “தமிழர் மதம்”, “திராவிடத்தாய்”, “பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்”, “செந்தமிழ் சொற்பிறப்பியல்”, “பேரகரமுதலி” எனப் பல.
இவரின் ஆராய்ந்தறிந்த அசைக்கமுடியாத ஆணித்தரமான கருத்து: “தமிழ் திராவிடத்திற்குத் தாய்; ஆரியத்திற்கு மூலம்; உலக முதல் மொழி தமிழ்; முதல் மனிதன் தமிழன், தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம்” என்பதாகும். உலகில் ஆறு மொழிகளே தாய்மொழிகள்;அதில் தமிழே மூத்த முதல் மொழி என சான்றுகளுடன் விளக்கியவர். அவர் இவ்வுலகை விட்டுப் பிரியுமுன் கூறிய இறுதி வார்த்தைகள்: “தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களை விட்டுப் பிரிகிறேன், தமிழைக் காப்பாற்றுங்கள்” என்பதாகும். செவி சாய்க்கிறோமா நாம்?
அடுத்ததாக வை.மு. கோதைநாயகி அம்மாள் பற்றிப் பேசினார் திருமதி. தீபா சுவாமிநாதன். அவரது பேச்சின் சாராம்சம்: வை.மு. கோதைநாயகி அம்மாள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதிகம் பேசப்பட்டவர்; சரியாகச் சொல்லப்போனால் வாசிக்கப்பட்டவர். பெண்
எழுத்தாளர்கள் அதிகம் இல்லாத காலகட்டத்தில் கணவரின் ஆதரவால் வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட, பத்திரிக்கை நடத்திய சாதனையாளர். 115 நாவல்கள் எழுதிய எழுத்துலகத் தாரகை. எழுதப்படிக்கத் தெரியாதபொழுது அவர் சொல்லச்சொல்ல எழுதியவர் புகழ் பெற்ற டி.கே பட்டம்மாள். அவரிடமிருந்துதான் வை.மு. கோதைநாயகி அம்மாள் எழுதக் கற்றுக் கொண்டார். காந்தீயத்தால் ஈர்க்கப்பட்டவர். மேடைப்பேச்சு, மேடைப்பாட்டு, காந்தீயப் பிரச்சார எழுத்து; புகழ் பெற்ற “ஜகன்மோகினி” என்ற பத்திரிக்கையை நிர்வாகம் செய்தது என்பன இவரின் வெற்றிப்படிகள். முதலில் துப்பறியும் நாவல்களில் ஆரம்பித்த இவரது எழுத்து, பின்னர் பொதுவுடமை, தத்துவம், சமூக நாவல்கள் எனப் பரவி விரிவடைந்தது. சமூக நாவல்களில் இவர் எடுத்துக் கொண்ட கருத்துகள் மதுவிலக்கு, பெண் விடுதலை, இந்து முஸ்லிம் ஒற்றுமை, தேசபற்று போன்றவை. மேலும் சொல்லப்பட்ட தகவல் -இவர் ஒரு முறை எழுதிய எழுத்துக்களை திரும்ப படித்துத் திருத்தியதே இல்லையாம்!
பேச்சாளர் அதிகமாக சிலாகித்தது பார்த்தசாரதியை. வை.மு. கோதைநாயகி அம்மாள் மிகவும் இளம் பிராயத்தில் மணமுடிக்கப்பட்டு, கணவர் வீடு வந்து, கல்வி கற்று, ஆதரிக்கப்பட்டு, வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, முன்னிலைப்படுத்தப்பட்டவர். எழுத்தாளரின் வெற்றிக்குப் பின் அவரது கணவரின் ஊக்கமும், ஆதரவும் இருந்தன.
அடுத்ததாக, இலக்கிய வட்டத்தின் நிறுவனர், தற்போது சென்னையில் வசிக்கும் திரு.எஸ். நரசிம்மன் எழுதி அனுப்பியிருந்த உரையை திரு. காழி அலாவுதீன் வாசித்தார். உரை, சி.சு.செல்லப்பா பற்றியது. தற்காலத்திய தமிழ் இலக்கியம் நினைவுகூரப்படும் பொழுது மனதில் நிற்பவர்களில் சிலர் தமிழ் எழுத்தாளர்கள்; சிலர் தமிழ் இலக்கியம் வளர்த்தவர்கள்; மற்றும் சிலர் தமிழ் இலக்கியமாகவே வாழ்ந்தவர்கள். இந்த வகையில் சி.சு செல்லப்பா மூன்றாம் வகையைச் சார்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விமரிசகர், பிரசுரகர்த்தர், சுதந்திரப் போராட்ட வீரர், தன் மானம் மிக்க தனி மனிதர்; இலக்கியம் தான் வாழ்வு என்ற மூர்க்கத்தனத்தோடு 84 ஆண்டுகள் வாழ்ந்தவர்.
இவருடைய நூல்கள்: வாடிவாசல், ஜீவனாம்சம், சுதந்திர தாகம் ஆகிய நாவல்கள், முறைப்பெண் என்ற நாடகம், ஊதுபத்திப்புல், மாயத்தச்சன் ஆகிய கவிதைத் தொகுப்புகள், “பி.எஸ் ராமையாவின் சிறுகதைப் பணி” என்ற விமர்சன நூல் எனப் பலவாறாக இருந்தாலும் “எழுத்து” பத்திரிக்கைதான் அவருடைய இலக்கியப்பணிக்கு மணிமகுடம். தமிழில் விமரிசனத்திற்காகவே உருவான சிற்றேடு “எழுத்து”, பிறகு புதுக்கவிதையின் களமாக அமைந்தது. பின்னால் வந்த “நடை”, “கசடதபற”, “யாத்ரா”, “பிரக்ஞை” போன்ற சிற்றேடுகளுக்கு “எழுத்து” தான் முன்னோடி.
“இலக்கியச் சிந்தனை”, “ராஜ ராஜன் விருது”, கோவை ஈ.எஸ். தேவசிகாமணி, அக்னி அட்சரா விருது எனப் பல விருதுகளை மறுத்துவிட்ட அவர் இறுதியில் அமெரிக்கா வாழ் தமிழர் அமைப்பான “விளக்கு” வழங்கிய “புதுமைப்பித்தன்” விருதை மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் பரிசுத் தொகை ரூபாய் 25000-த்தை புத்தகம் போடச் சொல்லி அங்கேயே வழங்கி விட்டார். சாகித்ய அகாதமி விருதும், தமிழக நூலகத் துறையின் ஒரு லட்ச ரூபாயும் தேடி வந்த பொழுது அவர் உயிரோடு இல்லை. தார்மீகக் கோபம் கொண்டால் எதற்கும் பணிய மாட்டார். படிக்கத் தெரியாவிட்டாலும் படைக்கப்பட்டதை நியாயமாக விமரிசிக்கத் தெரிய வேண்டும் என்பது அவர் கருத்து. தனிமனிதனாகவே கடைசிவரை கலங்கரை விளக்கம் போல் அவரது முயற்சிகள் இருந்தன, “எழுத்து” உள்பட. அவரது வாழ்வே ஒரு இலக்கியம் போல்தான்.
இறுதியாக, மேற்கூறிய எழுத்தாளர்களிலிருந்து மாறுபட்ட, சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதியைப் பற்றி சுருக்கமாக உரையாற்றினார் திரு. மு.இராமனாதன். இது மாறுபட்ட உரையாக இருந்தது. இதற்கு முன் கூட்டத்தில் பேசப்பட்டவர்கள் வாழ்ந்து மறைந்தவர்கள். பேராசிரியர் வேங்கடாசலபதி வாழ்ந்து கொண்டிருக்கும், நாற்பது வயதேயான ஒரு ஆராய்ச்சியாளர் என ஆரம்பித்தார். திரு. அ.செந்தில்குமார் தனது முகவுரையில் அவர் படித்து மகிழ்ந்த “அந்த காலத்தில் காப்பி இல்லை” என்ற கட்டுரை, சிறுகதை பாணியில் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்ததை விவரித்திருந்தார். அதைப்பற்றியும் பேசிய திரு.மு. இராமனாதன், காப்பி இந்தியாவில் அறிமுகமாகாத காலத்திலிருந்து தொடங்கி, அதைப்பற்றி முழுமையான சமூக- பண்பாட்டு- இலக்கிய ஆராய்ச்சியை ஆசிரியர் மேற்கொண்டுள்ளதை விவரித்தார். ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சுவாரசியம் மிக்கதாக இலக்கிய தரத்தோடு படைக்கும் திறனை மெச்சினார்.
தமிழின் மேன்மை அதன் தொடர்ச்சியில் உள்ள சிறப்பினால், ஒரு வாழும் தமிழறிஞரைப் பற்றி இந்த மேடையில் பேசுவதற்குத் தாம் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகக் கூறினார். வ.உ.சி மேல் கொண்ட பற்றினால் அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதன் வழியாக பாரதியின் மேல் பற்று கொண்டு, அவர் பதிப்பித்த பாரதி குறித்த நூல்களைப் பற்றியும் கூறினார். பேராசிரியர் வேங்கடாசலபதி பதிப்பித்த “பாரதி விஜயா கட்டுரைகள்” எனும் நூலில் பாரதி ஆசிரியராக இருந்து நடத்திய”விஜயா” பத்திரிக்கையின் இதழ்களைப் பாரீசில் கண்டு பிடித்து நூலில் சேர்த்திருப்பதையும், தமிழில் கிடைக்கப்பெறாத அதன் பல கட்டுரைகளை ஆங்கிலேய அரசின் ரகசிய அறிக்கைகளிலிருந்து எடுத்து, அதை மீண்டும் தமிழில்- பாரதி காலத்துத் தமிழில்-மொழி் பெயர்த்திருப்பதையும் விவரித்தார். பாரதி ஹிந்து நாளிதழுக்கு எழுதிய கடிதங்களைக் கண்டெடுத்து சமீபத்தில் “பாரதி கருவூலம்” எனும் தலைப்பில் சிறப்பாகப் பதித்திருப்பதையும் வியந்து பாராட்டினார். பிற்பாடு மீண்டும் ஒரு கூட்டத்தில் இவரைப்பற்றி விரிவாகப் பேசுவதாகக் கூறி முடித்துக்கொண்டார் – நேரமின்மையால்.
ஹாங்காங் தமிழ்ச் சமூகத்தின் மூத்த பிரமுகர் திரு.செ.முஹம்மது யூனூஸ் நிறைவுரை ஆற்றினார். இங்கு பேசப்பட்ட பல அறிஞர்களின் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன்; அவர்களது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன் என்றார். திரு.வி.க-வின் தமிழ்த் தொண்டையும், பாரதிக்கும் வ.உ.சிக்கும் இடையே நிலவிய உயர்ந்த நட்பையும், கோதைநாயகி அம்மாளின் ஜகன்மோகினி சஞ்சிகையில் வெளியான கதைகளுக்கு அந்நாட்களில் இருந்த பெண் வாசகர்களின் ஆதரவையும் யூனுஸ் பாய் சுவைபட விவரித்தார். பேச்சாளர்கள் அனைவரையும் பாராட்டினார்.
ஆழமான உரைகள் நிகழ்த்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் சிலருக்கு ஒரு குறை இருந்தது. அது கூட்டம் குறைவாக இருந்ததைப் பற்றி. கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே. கூட்டம் குறைவாக இருந்தாலும் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லை என்ற நிறைவுடன் வந்திருந்தவர் விடைபெற்றனர். முதலாவதாகப் பேசிய திரு.ப.குருநாதன் தனது உரையின் துவக்கத்தில் இப்படிச் சொன்னார்: “அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் சிலரைக் குறித்துப் பேசியதன் மூலம், ஹாங்காங் இலக்கிய வட்டம் தன்னைத் தானே பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.”
*************
ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: www.ilakkyavattam.com
*************
suganthi61@yahoo.co.uk
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா ? அல்லது சுடாத பிண்டமா ?
- கவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு!
- தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு
- இறுதிப் பேருரை
- நீர்வளையத்தின் நீள் பயணம் -2
- நீர்வளையத்தின் நீள் பயணம்-1
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2
- மகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]
- கலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !-கவிதை -1
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு ! >>
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)
- குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்
- இம்சைகள்
- வேத வனம் விருட்சம்-21
- SlumDog Millionaire a must see film
- மகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி
- ‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’
- மயிலிறகுக் கனவுகள்
- வெள்ளைக் கனவின் திரை
- சிறகடித்து…
- வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி
- பின்னற்தூக்கு
- மோந்தோ- 1
- உள்ளும் புறமும் – குறுங்கதை
- மோந்தோ- 2
- குறளின் குரல் : காந்தி
- ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்!
- ஆர்.வி என்ற நிர்வாகி
- நினைவுகளின் தடத்தில். – (24)
- கோயில் என்னும் அற்புதம்
- பின்னை காலனிய எழுத்தும்,மொழிபெயர்ப்பும்
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)
- என்னை தேடாதே
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து