ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

மு இராமனாதன்


கதிஜா ஹாங்காங்கின் ஆரம்பப் பள்ளியொன்றில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஓராண்டுக்கு முன்பு வரை இவளது சனிக்கிழமைகள் வெகு சாவதானமாகவே விடியும். பகல் பொழுது, வீடியோ விளையாட்டும் தொலைக்காட்சிக் கார்ட்டூனுமாய் சோம்பல் முறித்தபடி நகரும். மதிய உணவு வேளை மூன்று மணிக்குத்தான் வரும். ஆனால் இப்போதெல்லாம் கதிஜா சனிக்கிழமை காலையில் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கி விடுகிறாள்; உச்சிப் பொழுது உணவு வேளை; இரண்டு மணிக்கு வகுப்பில் ஆஜராகி விடுகிறாள். இந்தச் சனிக்கிழமை வகுப்பின் ஆசிரியர்கள் ஆங்கிலமோ சீனமோ பேசுவதில்லை. இந்த வகுப்பு- தமிழ் வகுப்பு.

ஹாங்காங்கின் ‘இந்திய இளம் நண்பர்கள் குழு ‘வால் செப்டம்பர் 2004-இல் துவங்கப்பட்ட இந்தத் ‘தமிழ் வகுப்பு ‘, ஹாங்காங்கின் இடப் பிரச்சனைகளையும் பணி அழுத்தங்களையும் மீறித் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள், சனிக்கிழமை மதியப் பொழுதுகளை 35-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது. தமிழைப் பாடமாகப் படிக்க இயலாத ஹாங்காங் சூழலில் இந்த முயற்சி கவனம் பெறுகிறது. இந்தக் கல்வி இவர்களுக்குத் தமிழ் எழுத்துக்களுக்கு அப்பால் தமிழ் இலக்கியத்திற்கான சாளரங்களையும், தமிழ்ப் பண்பாட்டிற்கான கதவுகளையும் திறந்துவிடுமென்பதை இவர்களின் பெற்றோர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

கிழக்கும் மேற்கும் சந்திக்கிற புள்ளியாக ஹாங்காங் எப்போதும் கருதப்பட்டு வந்திருக்கிறது. இங்கு வளர்ந்த நாடுகளின் வசதிகளும் உள்கட்டமைப்பும் உள்ளன; மேற்குலகின் உணவும் உடையும் நுண்கலைகளும் உள்ளன; இவற்றோடு சீனப் பாரம்பரியத்தின் கலாச்சாரமும் கல்வியும் பண்டிகைகளும் வேரோடி உள்ளன. ஹாங்காங் அரசு தமது நாட்டை, ‘ஆசியாவின் உலக நகரம் ‘ என்று குறிப்பிடுகிறது. சட்டத்தின் மாட்சிமை (rule of law), கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, வர்த்தக வாய்ப்பு மற்றும் ஹாங்காங் மக்களின் பரந்த மனப்பான்மை போன்றவை பல்வேறு நாட்டினரை, ஹாங்காங்கை வாழ்விடமாகத் தெரிவு செய்ய வைத்திருக்கிறது.

ஹாங்காங்கின் 70 இலட்சம் மக்கள் தொகையில் சுமார் 93 சதவீதம் சீனர்கள்தாம். சுமார் 5-1/4 இலட்சம் வெளிநாட்டினரில் ஃபிலிப்பைன்ஸினர், இந்தோனேசியர் மற்றும் அமெரிக்கர்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் இணையாக, சுமார் 35 ஆயிரம் இந்தியர்கள் ஹாங்காங்கில் வசிக்கின்றனர். இன்னும் கனடா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, பாகிஸ்தான் மக்களும் ஹாங்காங்கின் பன்முகக் கலாச்சாரத்தில் பங்கு பெறுகின்றனர். எல்லாச் சமூகத்தினரும் தமது அடையாளங்களைப் பேண முடிகிறது.

ஹாங்காங் இந்தியர்களுள் வர்த்தகத் துறையில் கோலோச்சும் சிந்திகளும் குஜாராத்திகளும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அடுத்த இடத்தில் ராஜஸ்தானியர், சீக்கியர் மற்றும் தமிழர்கள் வருகின்றனர். மராட்டியர்களும் மலையாளிகளும் உள்ளனர். ஹாங்காங் இந்தியச் சமூகத்தின் மாணவர்கள், எல்லா மொழி வழிச் சிறுபான்மையினரைப் போல், ஆங்கிலப் பயிற்று மொழி (medium of instruction) மூலமாகவே கற்கிறார்கள். ஆயினும் இந்திய மாணவர்கள், தத்தமது தாய்மொழியை ஒரு பாடமாகக் கற்கிற வாய்ப்பு ஹாங்காங்கில் எப்படி இருக்கிறது ? எல்லிஸ் கடோரி என்கிற அரசுப் பள்ளியின் மாணவர்களில் 38% சதவீதம் இந்தியர்கள், 41% சதவீதம் பாகிஸ்தானியர்கள். இந்தப் பள்ளியில் இந்தியும் உருதும் கற்பிக்கப்படுகிறது. எஸ்.எஸ் குரு கோவிந்த சிங் கல்வி அறக்கட்டளை சீக்கிய மாணவர்களுக்குப் பஞ்சாபி கற்பிக்கிறது. இவற்றைத் தவிர ஹாங்காங்கில் முறையாகக் கற்பிக்கப்படும் இந்திய மொழிக் கல்வி குறித்து வேறு விவரமில்லை.

தமிழர்கள் ஹாங்காங்கில் 2,000 பேர் இருக்கலாம் என்பது ஒரு மதிப்பீடு. 20 ஆண்டுகள் முன்பு வரை கணிசமான தமிழர்கள் நவரத்தின வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்போது மிகுதியும் நிதி, வங்கி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றும் தமிழர்கள், தமது பண்பாட்டை மதம், கலை, திரைப்படங்கள் மற்றும் சங்கங்கள் மூலமாக அடையாளம் காண முற்படுகின்றனர். பள்ளிக்கு வெளியே ஹாங்காங் தமிழ்க் குழந்தைகள் போகிற வகுப்புகள் அநேகம். குரலிசை, நாட்டியம், பிரார்த்தனை, வாத்திய இசை போன்றவை இதில் அடங்கும். கடந்த ஆண்டு வரை இந்தப் பட்டியலில் தமிழ்க் கல்வி இல்லாதிருந்தது. ஹாங்காங் தமிழர் வரலாற்றில் முறையான பாடத்திட்டத்தோடு தொடர்ச்சியாகத் தமிழ் வகுப்புகள் நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கக் கூடுமென்பதால் இந்த வகுப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தத் தமிழ்க் கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.உபைதுல்லா. நிர்வாகப் பணிகளை அப்துல் அஜீஸ் கவனிக்கிறார். பண்டிதச் சாயல் சிறிதுமின்றி பாடஞ் சொல்லித் தருகிறார்கள் காழி அலாவுதீீனும் வெங்கட் கிருஷ்ணனும். இந்த வகுப்புகள் துவங்கப்பட்டதன் பின்னணி என்ன ? ‘மொழி, கலாச்சாரத்தின் வேர். தாய் மொழி அறியாத சிறுவர்கள் சொந்த வீட்டிற்குள்ளேயே அந்நியர்களாய் வளர்கிறார்கள். இந்த ஆதங்கந்தான் இந்தத் திட்டத்தின் விதையாய் அமைந்தது ‘, என்கிறார் உபைதுல்லா. ‘ஹாங்காங் தமிழ்ச் சமூகச் சிறுவர்களுக்குத் தமிழைப் படிக்கவும் பிழையின்றி எழுதவும் கற்பிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ‘ என்கிறார் அஜீஸ்.

வகுப்புகள் துவங்கப்பட்ட முதல் மாதத்திலேயே 45 மாணவர்கள் சேர்ந்தனர். 5 முதல் 13 வயதிற்கிடையிலான இவர்களின் தமிழ்க் கல்வி, எழுத்துப் பயிற்சிப் புத்தகங்களின் ஒளி நகல்களில் துவங்கியது. விரைவில் பாடத்திட்டம் (syllabus) வகுக்கப்பட்டது. அலாவுதீீனும் வெங்கட்டும் தமிழ்க் கல்வி குறித்தான இணையத் தளங்களையும், தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனத்தின் நூல்களையும், சிங்கப்பூர் அரசு அங்கீகரித்த தமிழ்ப் பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களையும் பரிசீலித்து, மூழ்கிக் கரை சேர்ந்த போது ஹாங்காங் சூழலுக்கு இசைவான ஒரு பாடத்திட்டம் அவர்கள் கையில் இருந்தது. இப்போது சிங்கப்பூர்ப் பாட நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கிற பயிற்சிப் புத்தகங்களில் (exercise books) கோடிட்ட இடங்களை நிரப்புவது, ஹாங்காங் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தனியே எடுத்து எழுதுவதைக் காட்டிலும் எளிதாயிருக்கிறது.

மாணவர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றனர். எழுத்துக்கள் மட்டும் முதற் பிரிவுக்கும், சொற்களும் சொற்றொடர்களும் பாடல்களும் கதைகளும் இரண்டாம் பிரிவிற்கும், வாக்கியங்களும் உரைநடையும் மெல்லிய இலக்கணமும் மூன்றாம் பிரிவிற்கும் சொல்லித் தரப்படுகிறது. பீர் முகமதுவின் மகள் மாஜிதா ஃபாத்திமா இடைப்பட்ட பிரிவிற்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். யாவ் மாவ் டை கைஃபங் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஃபாத்திமாவிற்கு வயதில் சிறிய மாணவர்களோடு படிப்பதில் ஆரம்பத்தில் மனத்தடை இருந்தது. ஆனால் தமிழ்ப் படிப்பில் ஆர்வமேற்பட்ட பிறகு இந்தப் புகார் மறைந்து விட்டதென்கிறார் முகமது. ‘திருநெல்வேலிக்குப் போனா பஸ்லெ இருக்கிற போர்டெல்லாம் என்னாலேயே படிக்க முடியும் ‘, என்று ஃபாத்திமா சொல்கிற போது அந்த ஆர்வம் தெரிகிறது. மூன்றாம் பிரிவில் படிக்கும் சையது காதிரியும் இந்தக் கோடை விடுமுறையில் காயல்பட்டினத்தில் இருக்கும் தாத்தா-பாட்டியைத் தனது தமிழ் வாசிப்பால் வியக்க வைக்கக் காத்திருக்கிறார். காதிரி, தோ கோ வான் பகுதியில் உள்ள போ லிங் க்யுக் மேனிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு (Form 2) மாணவன்.

2005 மே 29 அன்று நடந்த தமிழ் வகுப்பின் ஆண்டு விழாவில் திருக்குறளும், ஆத்திச்சூடியும், பாரதியின் கவிதைகளும் சொன்ன மாணவர்களிடத்தில் இந்த ஆர்வத்தைப் பார்க்க முடிந்தது. ‘இந்தியா என் தாய் நாடு. நாம் அனைவரும் இந்தியர்கள் ‘ என்று பேசிய சேய்க் இம்தாதின் கண்கள் ஒளிர்ந்தன. இவரின் தாய் ஜெய்னப் தமக்கு மொழி ஆர்வம் உள்ள போதும் தொடர்ச்சியாகப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது நடைமுறைச் சாத்தியமாயில்லை என்கிறார். மாணவன் முகமது அர்ஃபாக்கின் தாய் நாலிமா அபுவும் இதை எதிரொலிக்கிறார். மேலும் நாலிமா தமிழகத்திலேயே நகர்ப்புற மாணவர்கள் பிரெஞ்சு, ஜெர்மன், அரபி முதலானவற்றில் ஒன்றைத் தெரிவு செய்து தமிழைத் தவிர்ப்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். அவர்கள் ‘பா பா பிளாக் ஷீப் ‘ படிக்கிற போது, ஹாங்காங் சிறுவர்கள், ‘நிலா நிலா ஓடி வா ‘ படிக்கிறார்கள். வீட்டுப் பாடங்களும், பயிற்சிகளும், தேர்வுகளும் ‘தமிழ் வகுப் ‘பின் பாடத்திட்டத்தில் கவனமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வியாண்டில் நிகழ்ந்த சுற்றுலா, மாறு வேடப் போட்டி, ஓவியப் போட்டி போன்றவை மாணவர்களுக்கு மட்டுமில்லை, பெற்றோர்களுக்கும் உற்சாகம் நல்கியது என்கிறார் மாணவன் முகமது தல்ஹாவின் தாய் மஹ்சூனா.

துவங்கப்பட்ட நாளிலிருந்து ஆண்டு விழாவிற்கு முந்தின தினம் வரை ஒரு வகுப்புக்கூட ரத்து செய்யப்படவில்லை. அக்கறையோடு வகுப்புகள் நடக்கிற செய்தி பரவியதும் அதிகம் பேர் நிர்வாகிகளை அணுகினர். ‘புதிதாகச் சேருபவர்களை ஏற்கனவே படித்து வருவோரோடு பொருத்துவதில் உள்ள சிக்கல்களால் ஒரு கட்டத்தில் மாணவர் சேர்க்கையை நிறுத்தினோம் ‘, என்கிறார் வகுப்பறை நிர்வாகத்தைக் கவனிக்கும் எச்.எம்.அம்ஜத். அப்படி வருத்தத்துடன் அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களுள் இருவரின் தந்தை அகமது முஷ்டாக், நிர்வாகத்தின் சிரமம் தனக்குப் புரிகிறதென்கிறார்; வகுப்புகள் விரிவாக்கப்படவிருக்கும் அடுத்த கல்வியாண்டில் தம் பிள்ளைகள் கண்டிப்பாகத் தமிழ் கற்பார்கள் என்றும் சொல்கிறார்.

சுங் கிங் மாளிகை எனும் பழம் பெரும் கட்டிடத்தில் E ப்ளாக்கின் 9-ஆம் தளத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த இடத்தில் நடைபெறும் இந்திய உணவகம், வகுப்புகளுக்காகச் சனிக்கிழமை மதியம் தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருக்கைகளும் எழுதுவதற்கு அட்டைகளும் கொடுக்கப் பட்டன.விரைவிலேயே இருக்கைகளோடு மேசைகளும் வகுப்பறைகளில் இடம் பெற்றன. உணவகத்தின் உரிமையாளர் டாக்டர் ஜவகர் அலியைப் போன்ற புரவலர்கள் தமிழுக்கு எல்லாக் காலங்களிலும் கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகின் இட வாடகை அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான ஹாங்காங்கில் டாக்டர் அலியின் இந்த உதவியை அமைப்பாளர்களும் பெற்றோரும் நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றனர்.

ஹாங்காங் இந்திய முஸ்லீம் கழகத்தின் நஜிமுதீனும், தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ஜே.வி.ரமணியும் இந்தத் திட்டத்தின் புரவலர்களாக இருந்து வகுப்புகளை ஊக்குவிக்கின்றனர். ஹபிப் முகமது திட்டத்தின் பொருளாளர். நன்கொடைகளையும், நீண்ட ஆலோசனைக்குப் பிற்பாடு வசூலிக்கப்படும் மாதந்திரக் கட்டணத்தையும், செலவினங்களையும் அவர் கவனிக்கிறார். பிரபு சுஐபு, முபாரக், மற்றும் ஷேக் அப்துல் காதர் வகுப்பறை நிர்வாகத்தில் தோள் கொடுக்கிறார்கள்; பெற்றோர் அழைத்து வருகிற மாணவர்களைத் தனியே செல்ல இவர்கள் அனுமதிப்பதில்லை; மற்றவர்களைச் சுங் கிங் மாளிகை வாசல் வரை கொண்டு விடுவதும் இவர்கள் பொறுப்பு.

தமிழகத்திலிருந்து மனித வள மேம்பாட்டு முகாமொன்றில் பயிற்றுவிக்க ஏப்ரல் 2004-இல் ஹாங்காங் வந்திருந்த வி.ராமன் இந்த வகுப்புகளுக்கும் வந்தார். ‘ஆசிரியர்கள் அலாவுதீீனும் வெங்கட்டும் சிறுவர்களை அன்போடு பன்மையில், ‘வாங்க போங்க ‘ என்று விளிப்பதைக் கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது ‘ என்றார் அவர். வகுப்பறையில் மாணவர்கள் தமிழ் மட்டும் கற்கவில்லை என்று தெரிகிறது. ‘அடுத்த தலைமுறைக்கு நமது மொழியை எடுத்துச் செல்வதன் மூலம் நமது பண்பாட்டையும் இலக்கிய வளங்களையும் எடுத்துச் செல்கிறோம் ‘, என்கிறார் அஜீஸ்.

தொடர்புக்கு- Mr. T. Ubaidullah, Co-ordinator- Tamil Class,

Young Indian Friends Club, Post Box No.91221,

Hong Kong.

Tel: 852-9670 7011, Email: tamil@yifchk.org

****

mu.ramanathan@gmail.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்