வைரமுத்துக்களின் வானம்-2

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

ருத்ரா.


கவிஞர் திலகமே!

பெருசுகளுக்காக

வார்த்தைகளெனும்

உங்கள்

புருசுகள் தீட்டிய

அந்த ஓவியம்

ஒரு ஒப்பற்ற கவிதை.

வீடு தோறும்

சுருண்டுகிடக்கும்

அந்த கடைசி

மைல் கற்களைக்கொண்டு

கல்லறைக்கட்டி

ஆன்மீகசொற்பொழிவுகள்

தந்து கொண்டிருக்கும்

பத்திரிகை பக்கங்களில்

கொஞ்சம்

மின்னல் பாய்ச்சியிருக்கிறீர்கள்.

எப்போதுமே

உங்கள்

நிப்புகள்

துப்பும்

காதல் எனும்

ஏழுவர்ண எச்சில்களில்

வித்தியாசமாய்

கொஞ்சம்

முதுமையின்

வெற்றிலை எச்சில்

வர்ணம் குழைத்திருக்கிறது.

மரணத்துக்கு

மரணம் வராதா

என்ற

ஒரு மத்தாப்புக்குச்சியை

கொளுத்தி

பற்கள் இல்லாமல்

கொட்டாவிகளையே

தின்று கொண்டிருக்கும்

அந்த

நீண்டகுகைக்குக்குள்

வெளிச்சம்

காட்டியிருக்கிறீர்கள்.

மூட்டுவலியும்

முதுகுவலியும்

எலும்புக்குள்

எரியத் தொடங்கிய போதும்

அந்த வரட்டிகளைக்

கண்டு அஞ்சாமல்

மானுடத்தின்

அந்திவானம்

தன் தாஜ்மகாலை

கட்டிக்கொள்ள

உங்கள் கவிதையெனும்

சலவைக்கல்லை

கண்டு கொண்டது.

உங்கள் சினிமாப்பாட்டுகளின்

கச்சா ஃபிலிம்

விளையாட்டுகளில்

சில சமயம்

பொக்கைவாய்த்

தாத்தாக்களுடன்

பாம்படத்துக்

காதுகளின் ஆச்சிகள்

காதல் மூட்டி

சிரிக்க வைப்பதுண்டு.

சிறிசுகளை

கிறங்க வைக்க

பெரிசுகளின்

இந்த முது ‘மை ‘ யைத்

தொட்டு தான்

நீங்கள்

எழுத வேண்டுமா ?

காதலுக்கு முதுமையில்லை

என்று கவிதை செய்து

கட்டியம் கூற

கிளம்பிவிட்டார்களோ

என்று நினைத்தோம்.

நல்லவேளை

முதுமையும் பிழைத்தது.

காதலும் பிழைத்தது.

பல்லக்குகள் போல்

வளைந்துகிடக்கும்

இந்த கூன் முதுகுகளில்

உங்கள் மயிற்பீலிகளின்

பாரம் ஏற்றாதீர்கள்.

‘பீலி பெய்ச் சாகாடும் அச்சிறும் ‘

தெரியாதா உங்களுக்கு ?

இந்த

சாக்காட்டுப்பூக்களில்

காதலின்

தட்டாம் பூச்சிகளையும்

பட்டாம் பூச்சிகளையும்

தேடித்திரியும்

விளையாட்டுகள்

உங்களுக்கு எதற்கு ?

முதுமை என்று

நீங்கள் பாடினாலும்

அது எங்களுக்கு

முழுமை என்று தான்

கேட்கிறது.

ஏனெனில்

கைத்தடி இல்லாமல்

உங்கள் வானம்

நிமிர்ந்து அல்லவா

நிற்கிறது.

=ருத்ரா

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா