வேத வனம் விருட்சம் 90 –

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

எஸ்ஸார்சி


வேத வனம் விருட்சம் 90 -எஸ்ஸார்சி

அசுவினிகளே எம் ஆன்மா
வலிமை பெறுக
தேனில் இனிமை சேர்வது போலே
ஆன்மாவில் நற்திறம் சேர்க
மக்கள் மன்றத்தே தேர்ந்த வார்த்தை
யான் எப்போதும் மொழிக
அசுவினிச் சாட்டையே மதுகசையே
ஏழு இனிமைகள் நின்னிலுண்டு
பிராமணன் அரசன் பால்பொழியும்பசு
வலிக்கும்காளை நெல் பார்லி
இவற்றோடு தேன் என்பவை அவ்வேழு
இவை அறிவோன் தேன்மயவான்
காமன் இவண் வருக
இந்திராக்கினியோடு இணைந்து
எதிரியை வீழ்த்து காமனே
தேவ அசுர இந்திர தசுயு ப்போர்களில்
எது வெற்றிக்குப் பயன் பட்டதோ
அதுயெம் எதிரியை தூரமாக்குக
வளியின் வலியோன் காமன்
கதிரோனின் வலியோன் காமன்
நிலவின் வலியோன் காமன்
எப்போதும் பெரியோன் காமன்
எங்களில் அவன் வருக
சிறு புத்தி எம்மிடமிருந்து விடைபெறட்டும்
எல்லா உயரியபொருட்களும்
உடைய மனையே வாழ் இடமே
தேவியின் இருப்பிடம் நீ
மனையே நீ அவதரிப்பவள்
அக்கினியின் இருப்பிடம்
மனைவியின் வாழ்விடம்
தேவ இருப்பிடம் மனையே
பிராமணனுக்கு காளைத்தானம் செய்வோன்
ஆயிரம் பசுக்கள் பெறுவான்
ஆடு அக்கினிக்கு ச்சமானம்
பிராமணனுக்கு அவ்வாடு அளிப்போன்
அடர் இருளிலிருந்து மீள்கிறான்
கன்றுக்குப்பின் கன்று ஈனும் பசுவை
வலிக்கும் காளையை
தலையணையை ஆடையைப் பொன்னை
தானமளிப்போர் உத்தம சொர்க்கம் சேர்வார்கள்
பகைவன் பெற்றிட்டப் பாக்கியம் புகழ்க்கருகித் தீயட்டும்
தானங்கொடு ஆடு தயாராகட்டும்
விருந்தினரை மனையகத்தேக்காண்பவன்
தேவ வேள்விக்குத் தயாராகிறான்
அவர்க்கு வந்தனம் செய்து யாமே புனிதமாகுக
விருந்தினர்க்கு நீர் தந்து வேள்வி நீர் பெறுக
விருந்தினர்க்கு த்தங்க இடம் தருவோர் வேள்வி நிலையம் காண்போர்
விருந்தினர்க்குச்செய்யும்
எச்சிறிய போற்றுதலும் வேள்வியின் ஒரு கூறு
அதிகம் உள்ளதை விருந்தினர்க்கு அள்ளித்தருவோன்
வாழ் நாள் தனக்குக் கூட்டிக்கொள்கிறான்
விருந்தினர் கொள் உணவு
ஒருவன் பாபம் போக்கும்
விருந்தினர்க்குச்சமைக்கும் நெருப்பே
தட்சிணாக்கினி ஆகும்
விருந்தினர்க்கு முன்னம் புசிப்போன்
தன் வலிமை வளர்தனம் புகழ் புசிப்போன்
பால் வெண்ணெய் தேன் மாமிசம் அவர்க்கு அளிப்போன்
முன்னே உஷை கதிரோன் மழை என்பவைக்
காத்துக்கிடக்கின்றன கட்டளைக்கு
நீர் பருகு பாத்திரம்கொண்டு
விருந்தினர் உபசரிப்போர்
சோமம் ஏந்திய புரோகிதரேயாவர்
கோ தேவதைக்கு வந்தனம் செய்க
பசுவின் நா மின்னல்
பற்கள் மருத்துக்கள்
விலா எலும்பு தேவ பத்தினிகள்
பின்பாகம் இந்திராணி
வால் வாயு
சனன இடமே நதி
எல்லாப்பாகங்களும் தேவ சம்பந்தமுடையன
பசு புனிதம் மொத்தாய்
அமரும்போது அக்கினி அது
எழ இரு அசுவினியாகும்
கீழ்த்திசை நிற்க இந்திரன்
தென்திசை நிற்க யமன்
மேற்திசை நிற்கத் தாத்ரு வடதிசை நிற்கச் சவிதா
பார்வைக்கு நண்பன் உடன் வரும்போது ஆனந்தம் வழங்கி
எல்லாமானது பசு எதுவும் அது
கதிரோனின் ஏகச் சக்கரத்தை
எழுவர் இணைக்கிறார்கள்
ஏழு குதிரைகள் சக்கரத்தை இழுக்கின்றன
ஏழுச்சகோதரிகள் கானம் பொழிகின்றனர்
இவண் வருவோரே செல்வோர்
இவண் செல்வோரே வருவோர்
என்பதாய் அறிக நீவிர்
அத்திமரத்து இரு பறவைகள்
ஒன்று கனியுண்ண மற்றது வாளாபார்த்து நிற்கிறது
சீவாத்துமாவும் பரமாத்மாவும் அவை
மர உச்சியில் உயர் பழமொன்றுண்டு
படைத்தோனை அறிந்தோன் மட்டுமே
பற்றமுடியும் அதனை
பறவைகள் அமிருதபானம் வேண்டியே
அறிவொடு கானம் செய்கின்றன
பெரும் படைப்புக்கு ப்பொறுப்பாளியொருவன்
அவனோ என்னுள்ளேயே
வாசம் செய்கிறான்
எம் தந்தை வானம் தாய் பூமி
படைத்தோன் அவனே வாக்கு வையம் வானம்
மனிதன் மரணம் அனைத்துமாய்
வாக்கு நான்கு வகை
பிராமணர் அறிவர் இதனை
மறைவாய் உள்ளன மூன்று
நான்காவதை மட்டும்தான் மானிடர் மொழிகிறார்கள்
இருப்பது ஒன்று- அதனைத்தான்
அறிஞர்கள் பலவகையாய் தெரிவிக்கிறார்கள் ( அதர்வ வேதம் காண்டம் 9)
—————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி