வேத வனம் விருட்சம் 85

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

எஸ்ஸார்சி


பர்ணமணி அணிந்துள்ளேன் யான்
வலிமையும் வளமும் சேர்க
உயர்வும் உண்மையும் நிறைக
நிறை ஆயுள் பெறுக
ஒளியுடனே நூறு வருடங்கள் வாழ்ந்திட
நோய் நீங்குக எனக்கு
சிற்பிகளும் தேர்செய் தச்சர்களும்
என்னை அனுரிக்கட்டும்
அரசாட்சி செய்வோரும்
சூதரும் கிராமத்தலைனும்
அனுசரித்திடுக எம்மை
என்னுடல் காப்போனை
வீரத்தின் மூலத்தை
வருடத்தின் ஒளி ச்சேர்ப்பை
அணிகிறேன் யான்
வீரனிலிருந்து வீரன்
வீர்ய விதையினின்று அரச மரம்
அரச மரமே இந்திரனோடு இணைந்து
மித்திர வருணனோடு சேர்ந்து நீ
எதிரியை அழி
எம்மை வெறுப்போரை மாய்த்து விடு
வெற்றி விருட்சம் நீ
பிற விருட்சங்களை வெற்றிகொள்ளும் நீ
கரையில் பிணைத்துக்
கட்டப்படா படகுபோலே அழியட்டும் அவர்கள்
மனத்தால் சித்தத்தால் பிரமத்தால்
அரசுக்கிளைகொண்டு
விரட்டுகிறேன் எதிரியை
அழியட்டும் அவர்கள்
மானின் கொம்பு நோயுக்கு நற்சிகிச்சை
காளைக்கவரிமானின் கொம்பு கபம் போக்கி
தண்ணீரே நோய் நீக்கி
பெருஞ்சிகிச்சை த்தண்ணீரே
விண்மீன்கள் மறைபோது
உஷாக்காலம் நிறை போது
எம் கொடுமை தொலைக
குளம்புள்லவை குளம்பில்லாதவைக்கு
பூமியே தாய்
பொன்நிற கயிறால் மிருகங்கள்
கட்டப்பட்டுள்ளன
அசுர மாயை யோடு விரையும் தேவர்கள்
நாயை இகழ்ந்து விரையும் குரங்குகள் போலே
துன்பம் இழைக்கும் ஜந்துக்களின்று
யாம் காக்கப்படுக
நூற்றியொரு வலிகொடுக்கும் நோய்
அவை போக்கும் வழியறிந்தவனை
சனங்கள் பற்றுகிறார்கள்
இந்திரனே அக்கினியே
இவன் நூறு ஆண்டு நோயின்றி வாழ்க
பிராண அபானனே பிரவேசியுங்கள்
எதிரிகள் அவனுக்குத் தூரமாகட்டும்
வீடே என் நிலையான வாழிடம்
சூரர் தீரரோடு உன்னில் வசிப்போம்
கிருகமே நீ களஞ்சியம்
தானிய இருப்பிடம்
மனையின் மனைவியே புனிதமுடனாகுக
புல் உடைக்காரியே
வீரமும் செல்வமும் தா
பொங்கி வழியும் பாண்டமும்
தயிர்க்கலசங்களும் காட்சியாகின்றன
பெண்ணே நெய்கும்பத்தோடே
வந்து பானம் செய்வோருக்கு அமுதம் படை
நோய் ஒழிந்து அமுதும் அனலும் வருகின்றன
வணிகனான இந்திரன் எம்மிடம் வருக
வாங்குவதும் விற்பதும் சுகமாகுக
தனம் வளர்க
அக்கினியே லாபம் தடுக்கும் தேவர்களை
தடை செய்யுங்கள்
குடியானவர்கள் எருதுகளைச்சுகமாய்ப்பேணுக
காளைகள் வெற்றியுடன் செல்லட்டும்
கலப்பைகள் உழட்டும்
கயிறும் சாட்டையும் இணைந்து உயரட்டும்
சீதே அது கலப்பை கொண்டுவந்த பள்ளம்
செளபாக்கியம் தருபவள்
நல்மனஞ் செய்க எமக்கு
நற்பயன் தருக
உழவுச்சால் நெய்யில் தேனில் நனைகிறது
பாலும் நெய்யும் தருக
சோமத்திலும் பசுக்களிலும்
பறவை விலங்குகளிலும் நுழைந்துள்ள அக்கினிக்கு
இவ்வவி சேரட்டும்
பதிமூன்று வகை உயிரினங்கட்கும்
ஐந்து மக்களினத்தாருக்கும்
யார் தலைவனோ அவனுக்கு அவி போய்ச் சேரட்டும்
பசுவும் காளையும் உணவாயுள்ளோனுக்கு
சோமப்புனிதனுக்கு வைசுவாநரனுக்கு
அவி சேர்க
இந்திரன் பிருகசுபதி வருணன் மித்திரன்
அக்கினி விசுவதேவர் அங்கிரசர்களையும்
அழைக்கிறோம் வேள்வியிடம்
மாமிசம் புசிக்கும் அக்கினியை
அவர்கள் சாந்தப்ப்டுத்தட்டும்
யானையின் பலம் ஒங்குக
யானையின் பலத்தால் பாக்கியத்தால்
யானே அபிடேகஞ்செய்துகொள்கிறேன்
யானையின் பலம் இந்திரியம் என்னில் சேர்க
யோனியே மலட்டுதன்மையை நாசஞ்செய்
தூரத்தில் வைத்திடு
பாயும் அம்பு போலே ஆண் வீர்யம் உன்னுள் நுழையட்டும்
வீர புத்திரன் யோனியில்
பத்து மாதம் பூரணாகிப்பிறக்கப்
பிரஜாபதியின் பலம் உனக்குக் கிட்டட்டும்
மூலத் தானத்தில் சிசு செல்க
சுகமளிக்கும் மகனைப்பெறுக பெண்ணே
தந்தை வானும் தாய் நிலமும்
கடல் மூலமுமாயுள்ள செடிகொடிகளும்
நின்னை ரட்சிக்கட்டும்
பெண்ணே சயனத்தில் சாந்தமாய் சயனிக்காதே
காமன் நின் இருதயத்தை
சரங்களால் குத்தட்டும்
தாபத்தில் துன்பமாகி வாய் உலர்ந்து பின்
அமைதியாகி இன்மொழி பேசிடு
பூரணமாகுக நீ
வேறு நினைவற்று அவள் என் வசமாகட்டும்
ஆயுதங்களே கீழ்த்திசைத்தேவர்களே
ஆர்வங்ளே தென் திசைத் தேவர்களே
சோதிகளே மேற்றிசைத்தேவர்களே
வேதனைதருவோரே வடதிசைத்தேவர்களே
பசை உடல் கொண்டு நக்கிமுடிக்கும்
அத்திசை எதுவோ ஆங்கு அமர்வோரே
உதவிக்கு வரும் உச்சி திசை தேவர்களே
எங்களுக்கு க்கருணை கூறுங்கள்
கருநாகம் கீழ்த்திசை
யமன் தென்திசை
விரியன் மேற்திசை
விரியனில் வேறு வடதிசை
புள்ளிப்பம்பு துருவதிசை
வெள்ளை நாகம் உச்சி
எங்களை வெறுப்போரை உம் வாய்களில்
வைக்கிறோம் இப்படி யாம்
பசுவும் கன்றுபோலே யாம் அன்புசெய்க
தந்தை சொல் கேட்க மகன்
தாயொடு மனம் ஒன்றுக அவன்
மனையாள் தேன்நிறையும் இன் சொல் மொழிக
அமைதி இங்கே மிகட்டும்
சகோதரர்கள் தூற்றிகொள்லாதிருக்கட்டும்
சகோதரிகளும் அப்படியே ஆகுக
நோக்கம் ஒன்றாகுக எமக்கு
தேவர்கள் ஒன்றாதல் எப்படியோ
அப்படி இவண் புருடர்களாகட்டும்
ஒரு சித்தம் ஒரு முயற்சி ஒரு செயல்
பிரியாதிருங்கள் யாவரும்
இனியன மொழிக
காலையும் மாலையும் நற் சிந்தனையே பெறுக
ஒரு கொத்தாய் வாழ்க நீவிர் ( அதர்வ வேதம் காண்டம் 3)
———————————————————————-

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி