வேத வனம் விருட்சம் 77

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

எஸ்ஸார்சி


வச்சிராயுத பாணி
இந்திரனுக்கு
அளிக்கப்படுகிறது சோமம்
உற்சாகம் அவனிடம் பெருகி
எமக்கு செல்வம் அருளட்டும்
அறிவின் பகைவனை
இந்திரன்அப்புறப்படுத்தட்டும்
மொழிவதால் உம்மைத்
தொடர்கிறோம் இந்திரனே
எம் அச்சம் தொலைக
நீயே பெரியோன்
துதியருகன்
நிகர் யாருமிலி ( சாம வேதம்- காண்டம் 21)
விஷ்ணுவின் திருக்கால்களால்
அடிகள் மூன்று
பின்னும் அவன் காலடி த்தூசு
கொணர்ந்ததுவே இப் பிரபஞ்சம் ( சாம. வே. 23)
தந்தை மகற்கு
பெருஞ்செல்வம் அளிப்பதுபோல்
இந்திரன் யாம் வினையாற்றச்
சக்தி அருள்க
நன்னெறி காட்டுக
நீண்ட ஆயுள் வழங்குக ( சா, வே 27 )
கானஞ்செய்கிறவர்கள்
துதிக்கிறார்கள்
மந்திரங்கள் மனனமாகிறது
பிராமணர்கள்
மூங்கில் கம்பமென
உத்தம வழிபாடு
காண்கிறார்கள் இறைக்கு
வழிபடு மொழிகள்
இந்திரனைச்சமுத்திரம் போலே
விசாலமாக்குகின்றன
தேருடைய இந்திரன்
தேர்ப்படை நடுவே அத்தனை
கம்பீரமாய்க்காட்சி
வலிமையன் அவனே மாசிலி
மகிழ்ச்சி தருவோன்
சோமம் பருகுக
சத்திய கூடமான
வேள்வி அரங்கிலிருந்து
வெண்மைக்கதிர்கள்
இந்திரனை நோக்கிப்பெருகுகின்றன
வச்சிராயுதன் எமக்கு
எதனையும் வழங்குவான்
எமது கைகளிரண்டும்
பெற்றுத்தாமே நிறைந்தன
கானம் விரும்பியே
சோமம் பெருகப்பெருக
துதிமொழிகள் உன்வசமாகின்றன
கன்று பசுவை
அழைப்பதுவாய்
இந்திரனுக்கு எம் துதிமொழிகள்
தூய சாமகானத்தால்
தூயன் இந்திரனை போற்றுவோம் ( சா. வே. 36)
வீரத்தை விரும்பிடும்
இந்திரத்துதிக்கு
மனம் வாக்கு காயம்
சுத்தமாகட்டும்
பிள்ளைகளும் கானஞ்செய்க
கோட்டைபோல் வலிமையன்
இந்திரன்
சுப வண்ணமுடை உஷையே
நின்னை நோக்கி
மனிதர் மிருகம் பறவை
சுற்றிச் சுற்றி வருகின்றனர்
தேவர்களே இறை மய்யமாய்
நீவிர் உறைவதெங்கெனம்
இதன் ரகசியம்
தெரிவீரோ
அமிருதம் பெற்றதெப்படி
பழமை வேள்விப்போதில்
உம்மை எப்படி அழைத்தார்கள் ( சா.வே. 38)
இந்திரச்சினமே
எமது நம்பிக்கை
விருத்திரனை இந்திரக்
கோபந்தானே விழுங்கியது
வானும் விண்ணும்
பூவுலகும் நினக்கு அடைக்கலம்
நின் சினம் மட்டுமே
நெறிப்படுத்துவன அனைத்தையும்
கடமைகள் பின் ஆவதெப்படி
பூமி இங்குள்ள
அத்தனையும் நேசிக்கிறது
எம் துதியை இந்திரன் நேசிக்கட்டும்
மனைவி கணவனைக்
அணைத்துக்கொள்வதுபோலே
யாம் மாசற்ற இந்திரனைத்
துதிக்கின்றோம்
கதிரவனின் விரிகதிர்கள்போலே
மக்களை நேசிப்போனுக்கே
அரங்குகள் எப்போதும் விசாலமாகின்றன ( சா.வே. 39)
—————————————————–

Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts