வேதாளம் கேட்ட கதை

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

பாரதிராமன்


திடாரென்று எனக்குள்ளிருந்து ஒரு குரல் வெளிப்பட்டு ‘ நீ எவ்வளவோ கதைகள் பண்ணுகிறாயே, எனக்காக ஒரு கதை பண்ணேன்! ‘ என்று கேட்டது.

அதிர்ச்சியுற்ற நான் ‘ முதல்லே நீ யாருன்னு சொல்லு , ரொம்பவும் அதிகாரத்துடன் கேட்கிறாயே ? ‘ என்றேன்.

‘ நான் யாரென்று கொஞ்சநேரத்துலே சொல்றேன். நான் விரும்பிக்கேட்கிறமாதிரி ஒரு கதை சொல்லமுடியுமா உன்னால் ? ‘என்றது குரல்.

‘ ஓ! நேயர் விருப்பமா ? சரி, என்னமாதிரி கதை வேணும் ? காதல், வீரம், சோகம்,விவேகம், விரக்தி இத்தியாதிலே எது வேணும் ? அப்படியே நீ யாருன்னும் சொல்லிவிடு. நேயர் விருப்பத்திலே முன்னாடி நேயர் பேரைச்சொல்லணுமே! ‘ என்று கேட்டேன் நான்.

‘ அட நானா ? நான் யாருமில்லேப்பா, உன் கதைகளையெல்லாம் இதுவரை உன் உள்ளேயே இருந்துகொண்டு கேட்டு அலுத்துப்போனவன்தான் நான் ஒரு நாளைக்கு ஹாய்யாக வெளியே வந்து ஒரு வித்தியாசமான கதையைக் கேட்கணும்போல இருந்தது, அதான். சொல்லமுடியுமா ? ‘ எக்காளத்துடன் கேட்டது குரல்.

‘ என்னப்பா பயமுறுத்தறே ? உன் நிபந்தனைகளைச் சொல். எந்த மாதிரி கதை வேணும் உனக்கு ? ‘- சற்று உரக்கவே கேட்டேன் நான்.

‘ சபாஷ்! அதுதான் வேணும் எனக்கு. நிபந்தனைகளைக் கேட்டுக்கொள். இதபாரு, வாடிக்கையான காதல் கீதல், சொத்து சுகம், மாமியார் மருமகள் பிணக்கு, துரோகம், விரோதம், ஏமாற்றம், நம்பிக்கை, லொட்டு லொசுக்கு, இந்த மாதிரி ஃபார்முலா எல்லாம் கூடாது. கதையிலே மனுசங்களே வரக்கூடாது. வர்ர கேரக்டர்களும் வாயைத் திறந்து ஒரு பேச்சுகூடப் பேசக்கூடாது. உன் பாத்திரங்களின் லொடலொட பேச்சையும் மூக்கால் அழும் பாட்டையும் கேட்டுக்கேட்டு எனக்கு விரக்தி ஏற்பட்டுப் போச்சு. உன்னாலே முடியும்னா சொல்லு, முடியல்லேன்னா பரவாயில்லை. நான் உள்ளே போய்த் தூங்கிப் போறேன்.என்ன ? ‘ -சவால் விட்டது குரல்.

நான் ரோஷத்துடன் கூறினேன்: ‘ நீ என்னை ரொம்பத்தான் சீண்டுகிறாய். என்னைக் கேலி செய்தாலும் என் உள்ளே இருக்கும் எழுத்தாளனைக் கிண்டல் பண்ணாதே, செமத்தியா வாங்கிக் கட்டிக்குவே. — கொஞ்சம் இரு— நீ போட்டிருக்கிற நிபந்தனைகளை ஒப்புக் கொள்கிறேன். என் கதையிலே மனுசங்க வரமாட்டாங்க. ஏன், கிளி மைனாவைக்கூட அதுங்க பேசுற சாதிங்கறதாலே ஒதுக்கிடறேன் ஆனா பதிலுக்கு நான் ஒரு கண்டிஷன் போடுவேன். நான் சொல்லப்போவது சின்னக் கதைதான். என்றாலும் எனக்குத் தோணறபோதெல்லாம் கொஞ்சம் கதையிலிருந்து விலகி ரவுண்டு அடிப்பேன். சரியா ? ‘

‘ ஓ, ஆயக்காலா ? பரவாயில்லை, எப்படியோ கதை பண்ணி முடிச்சால் சரி. இப்ப ஆரம்பி. ‘

குரலின் அனுமதியுடன் கதை சொல்ல ஆரம்பித்தேன்.

‘பேச்சே கூடாது என்கிறாயே, கதாபாத்திரங்கள் எப்படித்தான் ஒருத்தரோடு ஒருத்தர் ( சாரி, ஒருத்தர்னா மனுசா இல்லையோ ? உனக்குத்தான் மனுசங்களே கூடாதே!) ஒன்றோடு ஒன்று கருத்துப் பரிமாறிக்கொள்ளும் ? கதையை நடத்திச்செல்லும் ? உன் நிபந்தனை விசித்திரமானதுதான்!

நீ மெளனத்தின் உபாசகனோ ?

நீ என் உள்ளே இருக்கும்போதுகூட மெளன மொழியில்தான் பேசுகிறாய். குரல் இருந்தும் வெளிப்பாடு இல்லை. மொழி இருந்தும் பேச்சு இல்லை. அதனால்தான் உன் சுய ரூபத்திற்குத் தகுந்தாற்போல் கதை கேட்கிறாய். கேட்டுக்கொள்.

நிசப்தமே முதலும் கடைசியுமான கதை. எப்பொழுதுமே இன்பமான கதை; லொட்டு லொசுக்கு ஃபார்முலாக்கள் இல்லாத கதை.

சூரியனையும் இந்நிலத்தில் விளையும் பயிரையும் பார்.

பால் நிலவையும் இக்கடலையும் பார்.

கறுத்துத் திரண்ட முகில்களையும் இம்மலை முகட்டையும் பார்.

தேன் சொரியும் மலர்களையும் இவ்வண்டையும் பார். இவை பேசவா செய்கின்றன ? என்றாலும் பரஸ்பரம் எவ்வளவு உயிர் ஒன்றின் மேல் ஒன்றுக்கு ? அவைகளின் மெளன மொழிதான் எவ்வளவு கதைகளைச் சொல்லுகின்றது ?

அலுக்காத கதை; மெளனத்தின் கதை; தட்சிணாமூர்த்தியின் கதை. ( உன் கண்டிஷன் ஞாபகம் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி கடவுள், மனிதரில்லை. கதையில் கடவுள் வரலாம். நிபந்தனையை நான் மீறவில்லை) பேசாத கடவுளின் கதை. மெளனத்தையே மெளனமாக்கிவிட்ட கதை. அந்த மெளனத்துக்கு மாத்திரம் அர்த்தம் புரிந்துவிட்டால் அப்புறம் ஏது வேறு கதை ?

‘ பெம்மான் மவுனி மொழியையும் தப்பி

என் பேதைமையால் வெம்மாயக் காட்டில் அலைந்த கதை ‘- இதுதான் மிஞ்சப் போகும் கதை. ‘

குரல் குறுக்கிட்டுக் கேட்டது. ‘ நீ தடுமாறுகிறாய். கதையே ஆரம்பிக்கலே, அதுக்குள்ள ஆயக்காலா ? ‘

ஒரு கனைப்புடன் தொடர்ந்தேன் நான்.

‘இல்லேப்பா, கொஞ்சம் ‘ வார்மிங் அப் ‘. விருந்துக்கு முன்னாடி ‘சூப் ‘ குடிக்கிறமாதிரி. அப்பத்தானே பசிச்சு ருசிச்சு சாப்பிடமுடியும்! இப்ப கதையைக் கேட்டுக்கொள். நீ சுத்தமா மனுசங்களே வேண்டாங்கறதாலே உன்னை ஒரு காட்டுக்கு அழைத்துப் போகிறேன். அங்கதான் நம்ப கதை நடக்கிறது. நம்ப ஊரு கிட்டத்தான் இந்தக் காடு. அடர்த்தியான காடு. சூரியனேகூட மரங்கள் கிட்ட அனுமதி வாங்கிக் கொண்டுதான் உள்ளே போகணும். காட்டின் மத்தியிலே பல நீர்ச்சுனைகள் உண்டு. ஆழி நீர் சூழ்ந்தது இவ்வுலகம். காட்டுக்கு உள்ளேயும் ஆழிநீர்- மரம் செடி கொடிகள் மட்டுமல்ல, மற்ற பல மிருகங்களும் உயிர் வாழத்தான். இந்தக் காட்டு வழியாக நடுவே ஒரு சாலை போகிறது. ஆனாலும் சாலையினாலே காட்டு மிருகங்களுக்கு ரொம்பத் தொந்தரவு இல்லே. அதனதன் வழியிலே அதது. அதனதன் பாட்டுக்கு ஜீவனம், சுக ஜீவனம். வேட்டையாடப்பட்டவையும் ஒன்றுக்கொன்று உணவாய்ப் போனவையும் தவிர மீதிக்குப் பூரண ஆயுள்.

‘இப்ப உனக்கு இந்தக் காட்டுல இருக்கிற ஒரு புலியின் கதையைச் சொல்லப்போறேன். கதையிலே கலை மானும் உண்டு. அந்தப் புலியைப் பார்!

‘புலிதான் எத்தனை அழகு!

பயங்கரமான அழகு!

அந்த வால்!

சூரியனை மங்கச் செய்யும் மஞ்சள் உடல்!

ராகு கேதுக்களைப்போல தீண்டும் வரிகள்!

சுடும் கண்கள்!

ஒளிரும் மீசை!

கதிர்களாய்க் கிழிக்கும் பற்கள்!

அழுத்தும் கனம்!

நீறுபூத்த நெருப்பைப்போல பஞ்சுக்கால்களின் பலம், கொல்லும் பலம்!

ஒவ்வொரு அங்கத்திலும் பூரண பயங்கரத்தின் அம்ச செளந்தர்யங்கள்!

அழகே உன்னை ஆராதிக்கிறேன்!

அழகென்னும் காளி உன்மேல் வீற்றிருக்கிறாள், அழகாக.

புலியே , உன்னை ஆராதிக்கிறேன்!

‘அந்த அழகான புலியின் அருகில் இரண்டு சின்ன அழகுகள்!

அழகிலிருந்து அழகை எடுத்துவிட்ட பின்பும் அழகு குறையாமல்,அழகையும் குறைக்காமல் அழகாகவே இருக்கும் அழகு. அதுவே பூரண அழகு. அப்பூரண அழகில் பூரணமாய்த் தோய்ந்து………… ‘

நான் முடிப்பதற்குள் தலையிட்டது குரல்:

‘ எதுக்கு இப்ப ஆயக்கால் ? கற்பனை முட்டுதோ ? ஒரு காட்டுலே ஒரு புலி. அதுக்கு ரெண்டு குட்டி.அவ்ளோதானே, மேலே போ! ‘

நான் தொடர்ந்தேன். ‘ நீ ரொம்ப அவசரப்படறே! கதை பெரிசில்லே. சுற்றுப்புற அழகை அனுபவிக்கத் தெரியணும். சாலை வழியா வேகமா ஓடிப்போயே வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனா மெதுவாக நடந்துகொண்டே, சுற்று முற்றும் அழகைப் பார்த்துண்டு, ஸ்லோ மோஷன்லே அசைபோட்டு அனுபவித்துக்கொண்டு, அந்த சுகம் இருக்கே…………… ‘

மீண்டும் அவசரப்பட்டது குரல்:

‘ஆமாம், அதுக்காக செக்கு மாடுமாதிரி,

சுத்திச் சுத்தி, பார்த்ததையே பார்த்துண்டு,

ஆடறதையே ஆடிண்டு,

நீ என்ன சொல்லவரே, உனக்கே அலுக்காதோ ? ‘

நான் விளக்கினேன்:

‘சுத்தறது, பார்க்கிறது, ஆடறது மட்டும் செய்யறதில்லே செக்குமாடு. கேட்கவும் கேட்கிறது. நீ கேட்கிறமாதிரி இல்லே. செக்கைச் சுத்தறபோது அது கேட்பது ஒரு ஜீவநாதத்தை. சுற்றிக்கொண்டே வைக்கோல் தின்னும்போதும்- ‘ ரொய்ங் ‘!

அசைபோடும்போதும், சாணி இடும்போதும் – ‘ரொய்ங் ‘!

இந்த நாதம்தான் எல்லாவற்றையும் இயக்கும் நாதம்.

பம்பரம் வேகமாகச் சுழலும்போது தூங்குகிறது என்கிறோம். தூக்கமா அது ? வேகத்தின் இயக்கமல்லவா அது ? வேகத்தின் நாதம் – ‘ரொய்ங்! ‘ பூமிக்கு வெளியேபோய் அது சுற்றும் வேகத்தைப் பார், அதன் நாதத்தைக்கேள். ‘ரொய்ங்! ‘ ஏன் , இப் பிரபஞ்சம் முழுதுமே ‘ரொய்ங் ‘கிறதுதான்!

நாதத்தின் இன்பம் அலுக்குமா ?

நாதபிந்து கலாதி நமோ நம.

சரி ஆயக்காலை எடுத்துவிட்டுக் கதைக்கு வரேன்.

‘சுனையின் அருகிலிருந்த பெரிய புலியின் வயிறு நிரம்பியிருக்கிறது. முழு விருந்துஅப்போதுதான் முடிந்திருக்கிறது. இப்போது அது வேட்டைக்குப் போகாது. அதற்கு உணவைச் சேர்த்து வைத்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது. பசிக்கும்போது புசிப்பதும் பசித்தாலும் புல்லைப் புசியாததுமான புலி. புலிக்கு அப்போது வயிறு நிறைந்திருந்தாலும் அதன் உடலில் ஒரு அமைதியின்மை புலப்படுகிறது எவ்வளவு பலமிருந்தும் எழ முடியாத அவஸ்தையில் இருக்கிறது இப்புலி.

அதன் முன் வயிறில் ஒரு காயம், ரத்த காயம்.

புலிக்கா காயம் ? புலியை எதிற்கும் சக்தி காட்டில் ஏது ?

சரி, புலி காயமாறிக்கொண்டிருக்கட்டும்!

இதற்கிடையில் சற்று இந்தக் குட்டிகளை, (அட, மனுச குட்டிகள் இல்லேப்பா) புலிக்குட்டிகளைப் பார்ப்போம்.

புலிக் குட்டிகளுக்கும் பசி இல்லை. இருந்தாலும் சுனைக்கரையில் ஒரு மானின் துண்டுக் காலை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கின்றன. கவ்வுவதும் கடித்துச் சுனையில் துப்புவதுமாக. அத்துண்டுக் காலுக்குச் சொந்தம் கொண்டாட உரிமையுள்ள கலைமான் சற்றுத் தொலைவிலிருந்த புதரருகில் மூன்றே முக்கால் கால்களுடன் முனகிக் கொண்டே கிடக்கிறது.

ஏன் ?

ஒரு விபத்து.

விபத்தின் விளைவுகள் இன்னும் முழுவதுமாக வெளிப்பட ஆரம்பிக்கவில்லை.

விபத்து எப்படி நேர்ந்தது ?

சற்று நேரத்துக்கு முந்திதான் சுனையில் நீர் குடிக்க அக்கலைமான் வந்தது.நீளமான பலமான கொம்புகள், பல கிளைகளுடன். மான் சுனையில் இறங்கியது. நீர் அசையும் ஓசை கேட்ட புலி மானைப் பார்த்துவிட்டது. பசியில்லாததால் வேட்டையாடும் எண்ணம் அதற்கு உண்டாகவில்லை. மானைப் பார்த்தபடி வாயைத்திறந்து கொட்டாவி விட்டபடியே உடம்பை நீட்டி நெளித்தது. கலைமானோ, புலி தன்னைத் தாக்க வருகிறது என்று எண்ணி சுனையின் கரையிலிருந்து எகிறிக் குதிக்க, அப்போதுதான் எழுந்து நெளிந்த வேகத்தில் புலியின் முன் வயிறில் மானின் கொம்புகள் குத்தி ரத்தம் பீறிட, எதிர்த் தாக்குதலாக புலி பாய்ந்தபோது தன் பின்னங்கால்களிலொன்றின் சிறு பகுதியைப் புலியின் வாயில் காவு கொடுத்துவிட்டு மான் தப்ப முயற்சிக்கையில் கீழே கிடந்த சாக்கு மூட்டையொன்றைத் தடுக்கித் தாண்டி, ( மூட்டை வந்த கதையைப் பின்னால் சொல்கிறேன்) புதரில் விழ, துரத்தி வந்த புலியும் மூட்டை தடுக்கி விழ, ஒரே ரகளை! இவ்வளவும் ஒரே மூச்சில், ‘கேளடிகண்மணி ‘ படப் பாட்டைப்போல!

இத்தனை ரகளையிலும் ஒரு ரசனையான செய்தி.

கீழே கிடந்த மூட்டை சர்க்கரை மூட்டை. ரகளையின்போது மூட்டை பொத்துக்கொண்டு சர்க்கரை மானின் காலிலும் அப்படியே புலியின் முன் வயிறிலும் நன்றாக அப்பிக்கொண்டதால் ரத்தப்பெருக்கு நின்று வலியும் சற்றுக் குறையத் தொடங்கியிருந்தது இரண்டுக்கும். இதற்குள் பாயும் புலியின் கனத்தில் உருண்டு சரிந்த மூட்டையிலிருந்து சர்க்கரை சுனை யோரமாக நீரில் விழுந்து கரைய ஆரம்பித்திருந்தது. சர்க்கரையில் ரத்தமும் பட்டிருந்ததால் சுனை நீர் சற்று சிவக்கத் தொடங்கியது. சுனைக் கரையிலிருந்த புலிக் குட்டிகள் நீரில் ரத்தத்தைக்கண்டு ருசிக்கப்போக சுனை நீர் பாயசம்போல் இனித்தது.

புலிக்குப் பாயசமா என்கிறாயா ?

செய்முறையைக் கேள்:

காராம்பசுவின் பாலில் மென் சாதத்தையும் சர்க்கரையையும் சம அளவில் கலந்து மணக்கக் கொதிக்கவைத்து நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, மற்றும் பச்சைக் கற்பூரம், காஷ்மீர் குங்குமப்பூ, ஏலப்பொடி,கொஞ்சம் கேசரிபவுடர் போட்டு- இது பூனைக்குப் பிடித்த பாயசம் என்றால் , புலிக்கு – இரண்டு வகை ரத்தம், சர்க்கரை கலந்த குளிர்ந்த சுனை நீர், சுனையின் கரையோரச் செடிகள் பெய்த இயற்கை மசாலாக்கள், மிதக்கும் மான் இறைச்சித் துண்டுகள்- இது புலிக்குப் பிடிக்கும் பாயசம் அல்லவா ?— ‘

என்னை இடை மறித்தது குரல்:

‘ மறுபடியும் ஆயக்காலா ? கதையை சீக்கிரம் முடி. அதது விற்கிற விலையில் நீ பாட்டுக்கு நீட்டிக்கொண்டேபோனால் எவன் ( சாரி, நானும் மனுசங்களைக் கொண்டுவரக்கூடாது ) எந்த ஏடு இதை ரசிக்கும் ? கதை எனக்குமட்டும்தான் என்றாலும் சிக்கனத்துக்காகச் சொன்னேன் ரவுண்டு அடிப்பதை

நிறுத்திவிட்டு கதைக்கு வா. ‘

‘ சிக்கனத்தைப் பார்த்தா முடியுமா ? காரியம் ஆகவேண்டாமா ? எதுதான் இப்ப அதனதன் விலையிலே விற்கிறது ? வெட்கம் ஒன்றுதான் ரொம்ப மலிவு- கெட்டு அலைகிறது! சரி, கதைக்கு வரேன்.

‘ இரண்டு புலிக்குட்டிகளும் பாயசம் குடிப்பதை எதிர்க்கரையிலிருந்த இன்னொரு குட்டிப் புலி பார்த்துக் கொண்டே ஜொள்ளுவிட்டுக்கொண்டிருந்தது. பெரிய புலி காயத்தை ஆற்றிக்கொண்டே ஏதோவாக்கில் எதிர்க்கரையைப் பார்க்க அங்கிருந்த குட்டிப் புலி பெரிய புலியின் முறைப்பைக் கண்டு பயந்து ஓடத் துவங்கியது.பெரிய புலி தலையைத் திருப்பியதுதான் தாமதம், புதரில் கிடந்த கொம்புமான் இத்தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல ‘தப்பினேன் பிழைத்தேன் ‘ என்று மூன்றேமுக்கால் கால்களுடன் முழு மூச்சுடன் தப்பி ஓடலாயிற்று.

‘இப்படி எல்லாம் சுபமாக முடிய காட்டில் சுகஜீவனம், பூரண ஆயுள் மீண்டும் திரும்பியது. அடடே, சர்க்கரைக் கதையைச் சொல்லலையே ? அதையும் கேள்.

‘ஒரு நாள் காட்டுச் சாலை வழியாக சர்க்கரை மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரியின் கூரை மீது பெரிய மரக்கிளை பட்டு ஒரு மூட்டை தவறி கீழே விழுந்துவிட்டது.சுனைச் சரிவில் விழுந்த அந்த மூட்டையிலிருந்த சர்க்கரைதான் மானுக்கும் புலிக்கும் காயம் ஆற்றிய மருந்தாகவும், புலிக்குட்டிகளுக்குப் பிடித்த பாயசமாகவும் ஆனது.

‘ கதை எப்படி ? உன் நிபந்தனைப்படி மனுசங்களே அதுலே வரலை பாத்தியா ? ஏன் நான் அடிச்ச ரவுண்டுகளிலேகூட வரலை. எழுத்தாளனாலே எதுவும் முடியும். இப்படியெல்லாம் சோதனை செய்யலாம்னு இனியும் நினைக்காதே. முன்பு போல பேசாமல் உள்ளேயே அடங்கிக்கிட. எங்களுக்கு எல்லாம் தெரியும்! ‘

இப்படி நான் கூறி முடிக்கையில் வெளியில் வந்து கேட்ட குரல் முடங்கிவிட்டதுபோலத் தெரிந்தது. குரலையே காணோம்

இதற்காகவே காத்திருந்ததுபோல நான் இப்போது வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பித்தேன்

பாவம் அந்தக் குரல்!- அது ஏமாந்துவிட்டது!

வாழ்க்கையே இப்படித்தான். ஏமாற்றமில்லாமல், விரக்தியில்லாமல் அமைவதில்லை. நான் இப்போது அதனிடம் சொன்ன கதைபூராவும் மனுசங்களைப் பற்றிய கதைதான்.

என் குடும்பத்தைப் பற்றிய கதைதான். ஃபார்முலா கதைதான். ஏனோ அதற்குப் புரியவில்லை!

தப்பித்தால் போதும் என்று தண்ணீர்கூட அருந்தாமல் ஓடிய மான் நான்தான். பெரிய புலி என் மனைவி. எங்களுடையது கலப்புத்திருமணம். இரண்டு பு லிக்குட்டிகளில் ஒன்று என் மகன், மற்றது மகள். கட்டுப்பாட்டுக் குடும்பம். ‘நாம் இருவர் நமக்கு இருவர் ‘ காலத்தது. எதிர்க்கரைப் புலிக்குட்டி என் மகளை ‘டாவு ‘ அடிக்கும் அடுத்த தெரு விடலை. கரைந்த சர்க்கரை மூட்டை என் சம்பாத்தியம்.லாரி என்னுடைய ஆபீஸ்- வாழ்க்கையின் நடுவிலேயே என்னைக் கழட்டிவிட்ட ஆபீஸ். புலிக்குட்டிகள் அருந்திய பாயசம் என் மற்றும் என் மனைவியின் உழைப்பு. ஆக கதையே எங்களைச் சுற்றித்தான்; எங்கள் ஜீவித நாதத்தின் எதிரொலிதான்!

மனுசங்களை வச்சுத்தான் கதை,

மனுசங்களுக்காகத்தான் கதை,

மனுசங்களை ‘உம் ‘ கொட்டவைக்கத்தான் கதை.

இதையெல்லாம் கடைசியில் ஏமாந்துபோன அந்தக் குரலிடம் சொல்லிவிடலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் நான் கதையை சொல்லி முடித்த கையோடு அது திருப்தி அடைந்து உள்ளடங்கிவிட்டதுபோல் தெரிந்தது. மீண்டும் ஒரு சமயம் அது வெளியில் வந்து கதை கேட்டால் சொல்லிவிடலாம் என்று என்னை சமாதானப்படுத்திகொண்டிருந்தபோது காதில் விழுந்தது ஒரு பேச்சு.

‘வேண்டாம், வேண்டாம்! ஏதோ ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்தேன். உலகத்தில் எதைப்பார்த்தாலும் நீங்கள் மனிதப் பார்வை கொடுத்துக் கெடுத்து விடுகிறீர்கள். மனிதர்களைத் தவிர மற்றவைகளைப் பற்றி உயர்வாக உங்களால் எண்ணவோ, பேசவோ, எழுதவோ முடியுமோ ? அதற்கெங்கே உங்களுக்கு ஆர்வம் ? வெட்கம், வெட்கம்! இனியும் கதை கேட்கவெளியே வர மாட்டேன், பயப்பட வேண்டாம்! ‘

அதே மன வேதாளத்தின் குரல்!

***

kalyanar@md3.vsnl.net.in

Series Navigation