வேதவனம் விருட்சம் 79

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

எஸ்ஸார்சி


வந்தனம் தேவர்கட்கு
கானம் இந்துவிற்கு
அதர்வண அறிஞர்கள்
ஆக்கினர் சோமம்
சோம அரசனே
மாவும் மக்களும்
அவுடதங்களும் சேமமுறுக
மேய்ந்த பசுக்கள்
தம்வீடு மீள்வதுபோலே
ஈசனை ச்சேர்கின்றது சோமம்
சத்திய நிலையம் ஏகுகின்றது சோமம் ( சாம வேதம்67)
மடியில் பால் கனமாகி
அது கறந்துவிடக்கதறும்
பசுபோலே இந்திர அழைப்பு
பூவுலகிதனில்
அசையும் அசையாப்பொருட்களின்
தலைவனே இந்திரன்
குதிரை விரும்பி
பசு விரும்பி
போஜன விரும்பியவன் ( சா.வே 70)
இந்திரன் செல்வம் அருளி
வலிமை தருவோன்
நடனக்கலை தெரிந்தோன்
அவனைக்கானம் செய்தே
துதிக்கிறோம் யாம்
ஐம்புலன்களின் ஈர்ப்பு
ஐம்புலனொடு நினைப்பும் விருப்பமும்
விரவி ஆனந்தித்தல்
சாத்தியமாக்கும் இந்திரனை
சோமம் பருகிட அழைக்கிறோம்
தேவர்கள் மூவுலகும் உயர்த்தும்
வேள்வியைச்
செய் மன ஊக்க ஆழம் அளப்பவர்கள்
எமது வார்த்தைகள்
வளம் சேர்ப்பவை வேள்விக்கு. ( சா.வே. 73)
இந்திரனே வீரனே
திருப்தியாய்ப்பருகுக
இனிய சோமத்தை
மூர்க்கரும் கேலிபேசுவோரும்
நின்னை நாடுங்கால்
ஏமாந்து போவாயோ இந்திரனே
வலிமையை இகழ்வோரை
பிரம்மத்தை இகழ்வோரை
நேசிப்பாயோ இந்திரனே
பசுவின் பால் கலந்த சோமமிது
மிருகங்கள் ஏரி நீர் உறிஞ்சுவதுபோலே
பருகி மனம் நிறைவாய் இந்திரனே
மனிதர்களால் சுத்தமாகி
சாதனங்களால் பிழிபட்டு
புனித ஆட்டு உரோமங்கள் வடிகட்டிய
சோமச்செல்வம் இது
ஒடும் ஆறு இரங்கி குளித்த குதிரையென
புத்துணர்வு பொங்கு சோமம் இது
பாலொடு பார்லியும் விரவிய
இனியசோம விருந்திற்கு
இந்திரன் உடன் வருக ( சா.வே. 74)
சோமனே வேத நாயகன்
கவிஞன் பலவான்
கொடையாளி
அவன் நட்பே யாம் நாடுவது
வீர மக்கள் தந்து
சுகம் தருக இந்திரன் எமக்கு
பசுவும் குதிரையும்
இந்திரனாலே ஒங்கிக் குரல் கொடுக்கின்றன
எதிரிகளை நின் துணைகொண்டே
யாம் அடக்க முயல்கிறோம் இந்திரனே ( சா.வே.79)
அக்கினி அக்கினியாலே
உயர்ச்சி எய்துகிறான்
அவன் தூதுபோகிறவன்
மித்திரவருணர்கள்
சத்தியச் செய்கையாலே சத்தியம்
உயர்ச்சி எய்துகிறது
மித்திர வருணர்கள் அறிந்த செய்தி இது
ஆரிய எதிரிகள் தொலைக
தாசர்கள் கொல்லப்படுக
எம்மைத்தூற்றுவோர் விரட்டப்படுக
இந்திர அக்கினி துணை செய்க எமக்கு ( சா. வே 86)
குதிரைக்குச்சமமான சோமன்
கலசத்தில் நிறைகிறான்
புத்தியின் தந்தை
வானத்தின் தகப்பன்
பூமியின் தாய்
அக்கினியின் அப்பன்
கதிரோனின் பிதா
இந்திர விஷ்ணுவின் மூலம்
சோமன் இங்கே பெருகுகிறான்
தேவர்களின் பிராம்ணன்
கவிஞர்கல் தலைவன்
முனிபுங்கவன்
மிருக நாயகன்
பறவைகள் நடுவே கருடன்
வனக்கோடரி
கூவி வருகிறான் சோமன்
சொல் வளம் கூட்டுவோன்
துதிக்க ஆணைதருவோன்
அச்சோம ஞானவான் ( சா.வே. 96)
மூப்பிலா முதல்வன் அக்கினி
உத்தம அன்ன தாதா
ஞான வாரிதி
வானமும் பூமியும்
பக்குவமாதல் அவனால்
விசுவ கர்மம்
விசுவ தேவன்
கானஞ்செய்வீர் இந்திரனுக்கு
அறிவொடு ஆண்மை அருளி
மேதாவி இந்திரன்
கானஞ்செய்வீர் இந்திரனுக்கு ( சா.வே.104)
வீரனே இந்திரனே
புத்தி யுக்தி தெரிந்தோன்
தேரின் அச்சுபோலே வருவோன்
தேரின் அச்சாணியவன்
சோமம் சுவைப்போன்
உஷை போலே வானும் பூமியும்
நிறைந்தோன் நீ
அழகி தேவ மாதா
பெற்றெடுத்தாள் நின்னை
முன் கால் கொண்டு ஆடொன்று
செடியின் இலை தாங்கு கிளை
கொணர்வது போலே
தேவ அன்னைக்கு
இயல்பாய்ப்பிறந்தோன் நீ
தீயோன் திருடன் பலம் சிதைப்போனே
எம்மை அடிமையாக்க
விழைவோன் நின் பாதம் வீழ்க ( சா.வே. 109)

Series Navigation