வெளிச்சம்

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


ட்ரிங் …. ட்ரிங் … ட்ரிங்…..
அலாரம் அடித்த சத்தத்திற்க்கு வழக்கம்போல் விழிப்பு வந்தது. பிரிய மறுக்கும் இமைகளை வலுக்கட்டாயமாகத் திறந்து அலாரத்தை நிறுத்தினேன்.
“இன்றுகூட சீக்கிரம் எழுந்துகொள்ளணுமா? சற்று நேரம் கழித்து எழுந்துகொண்டால் என்னவாம்? லேட்டாக போய்க் கொள்ளலாம்.” போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டே முணுமுணுத்தார் என் கணவர். அவருடைய பேச்சை பொருட்படுத்தாமல் எழுந்துகொண்டு வழக்கம்போல் சமையலறையை நோக்கி நடந்தேன். கொல்லைக் கதவு திறந்ததுமே சில்லென்று காற்று வந்து இதமாக என்னைத் தழுவிக்கொண்டது.
‘ஆமாம். இன்றுதானே என் ரிடையர்மென்ட். முப்பது வருடங்களாக ரொட்டீனாக செய்துகொண்டிருந்த பல வேலைகளில் ஒன்றிலிருந்து சாசுவதமாக விடைபெற்றுக்கொள்ளப் போகிறேன்.’
“அம்மாப் பெண்ணே! வென்னீர் எடுத்து வைத்தாயா?” ஊன்றுகோலை சத்தப்படுத்திக் கொண்டே கொல்லைப்புரம் வந்தாள் மாமியார்.
ஐம்பதெட்டு வயதாகிவிட்டாலும் மாமியாருக்கு நான் இன்னும் அம்மாப் பெண்தான். சிரித்துக் கொண்டேன்.
மாமியாருக்கு வென்னீர் போட்டுக் கொடுத்தேன். குழாயில் கார்ப்பொரேஷன் தண்ணீர் வரத் தொடங்கியது. தண்ணீரைப் பிடித்துக் கொண்டே சமையலறையில் ஒவ்வொரு வேலையாகச் செய்துகொண்டே காபியைக் கலந்து முடிக்கும் போது மணி ஏழாகிவிட்டது.
டி.வி.யில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் என் கணவர். மாமியாருக்கும், அவருக்கும் காபியை கொடுத்துவிட்டு நானும் சோபாவில் உட்கார்ந்துகொண்டேன்.
“மேஸ்திரிக்கு சொல்லி அனுப்பியிருக்கிறேன். நாளை முதல் மாடியில் ரூம் கட்ட ஆரம்பிப்பார்கள். நாளையிலிருந்து நீ சும்மாதானே இருக்கப் போகிறாய். கிட்டே இருந்து கவனித்துக்கொள்ளலாம்.”
கணவர் இப்படிச் சொன்னதும் விக்கித்துப் போய்விட்டேன். இனி நாளை முதல் வீடு முழுவதும் சிமெண்டும், மணலும், குப்பை கூளமும், வீட்டில் இருப்பவர்களில் தலை வெடித்துவிடும் அளவுக்கு சத்தம், சித்தாட்களின் ரகளை……..ஏற்கனவே எனக்கு மூட்டுவலி. மாடிக்கும் கீழுக்கும் அலைந்துகொண்டே மேற்பார்வையிட வேண்டும். நினைக்கும் போதே என் இதயம் படபடக்கத் தொடங்கியது.
“நாளைக்கு நீலிமாவை அழைத்துவரணும்னு நினைத்திருந்தோம் இல்லையா? ஏற்கனவே தாமதமாகிவிட்டது.” முணுமுணுத்தாற்போல் சொன்னேன்.
நீலிமா எங்களுடைய மகள். திருமணமாக இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. உள்ளூரிலியே இருந்தாலும் மாமியார் வீடு ரொம்ப தொலைவு. டாக்டர் அடுத்த மாதம் டெலிவரியாகும் என்று சொல்லியிருந்தார். பெட்ரெஸ்ட் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
மாமியார் வீட்டில் ரெஸ்ட் கிடைப்பதில்லை என்று மகள் ஏற்கனவே புலம்பிக்கொண்டிருக்கிறாள். ஆகட்டும், என்னுடைய ரிடையர்மெண்ட் ஆன பிறகு அழைத்து வரலாம் என்று தள்ளிப் போட்டு விட்டோம்.
“அழைத்து வந்தால் மட்டும் என்ன ஆகிவிடும்? டெலிவரிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே? உள்பக்கமாக இருக்கும் அறையை அவளுக்கு ஒழித்துக் கொடுத்துவிட்டால் இந்த தூசி, சிமெண்ட் நெடி அவ்வளவாக தாக்காமல் இருக்கும்.”
அவர் ஒரு வார்த்தை சொன்னால் சொன்னதுதான். இத்தனை ஆண்டுகளில் அதற்கு மறுப்பு இருந்தது இல்லை. இது போன்ற நேரத்தில் எனக்கு சின்ன வயதில் படித்த குரங்கு முதலையின் கதை நினைவுக்கு வரும். நாம் எவ்வளவு நம்பிக்கையுடன், பணிவுடன் இருப்போமோ எதிராளிக்கு நம் மீது அதிகாரம் காட்டுவதற்கு அந்த அளவுக்கு இடம் கிடைத்து விடும்.
“நாளையிலிருந்து நீ வீட்டில்தானே இருப்பாய் இல்லையா. தினமும் அந்த ஹாட்பேக்கில் சாதம் விரைச்சு ஆணியைப் போல் தொண்டையின் கீழே இறங்க மாட்டேங்கிறது. கொஞ்சம் குழைவாக மதியம் எனக்காக சூடாக சாதம் வடித்துவிடேன்.” காரியத்தோடு காரியமாக மகன் முன்னிலையில் தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டாள் மாமியார்.
“ஆகட்டும் அத்தை” என்று சொல்லிட்டு சமையலறை பக்கம் நடந்தேன். மாமியார் தன்னுடைய விருப்பங்களை எப்போதும் மகன் இருக்கும் போதுதான் வெளியிடுவாள். அந்த சூழ்நிலையில் தன்னுடைய அப்பீலுக்கு மறுப்பு இருக்காது என்று தெரியும். ரொம்ப சாமர்த்தியம். எனக்குத் திருமணமானது முதல் எங்களுடன்தான் இருக்கிறாள். உள்ளூரிலேயே இன்னொரு மகனும், மகளும் இருந்தாலும் அங்கே போக மாட்டாள். என் ஓர்ப்படி வேலைக்கு போகமாட்டாள். வீட்டில்தான் இருப்பாள். இருந்தாலும் மாமியார் அங்கே இருக்க மாட்டாள். இங்கே இருக்கும் சுதந்திரம் அங்கே இருக்காது. அது எனக்கும் தெரியும். என் நாத்தனார் அவ்வபொழுது வந்து “அண்ணீ! வர வர அம்மா இளைத்துத் துரும்பாகிவிட்டாள். கொஞ்சம் கவனித்துக்கொள்ளக் கூடாதா? ஏதோ காலையில் சமையலை ஒப்பேற்றிவிட்டு நீ பாட்டுக்கு ஆபீஸ¤க்குப் போய்விடுவாய். அம்மா பாவம் பகல் முழுவதும் வேளைக்கு சரியான சாப்பாடு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாள்” என்று நீண்ட சொற்பொழிவு ஆற்றிவிட்டுப் போவாள்.
நான் உள்ளுக்குள் சிரித்துக்கொள்வேன் அதுபோன்ற சந்தர்ப்பங்களில். என்ன இருக்கு மாமியார் செய்வதற்கு? சகலமும் நானே செய்து, அவங்களுக்கு டேபிள் மீது எல்லாம் எடுத்து வைத்துவிட்டு ஆபீஸ¤க்குக் கிளம்புவேன். என் கணவருக்கு சொந்த பிசினெஸ் என்பதால் மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வருவார். தாயும் மகனுமாக சேர்ந்து சாப்பிடுவார்கள். மறுபடியும் மாலை ஆறுபணிக்கெல்லாம் பணிவிடை செய்வதற்கு நான் திரும்பி வந்திருப்பேன்.
அன்றும் வழக்கம் போல் டிபன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தேன்.
“மம்மீ! டிபன் ரெடியா? கோச்சிங் கிளாஸ¤க்கு நேரமாகவிட்டது” என்றபடி முகத்தை அலம்பிக் கொண்டு வந்து என் புடவைத் தலைப்பில் முகத்தைத் துடைத்துக் கொண்டான் சீனூ, கடைக்குட்டி.
“ஆகிவிட்டது கண்ணா! இதோ ஒரு நிமிஷம்” வேகமாக இட்லி சட்டினியை தட்டில் பரிமாறிவிட்டு அவன் கையில் கொடுத்தேன்.
“இன்னிக்கும் இட்லிதானா?” நெற்றியைச் சுளித்தான். பி.டெக். மூன்றாவது வருடம் படித்து வருகிறான். ஜி.ஆர்.இ. வகுப்பில் சேர்ந்திருக்கிறான். அமெரிக்காவுக்குப் போய் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது அவனுடைய திட்டம்.
“இன்றைக்கு நீ ரிடையர் ஆகப் போகிறாய் இல்லையா? நாளை முதல் ஆபீஸ¥க்குப் போக வேண்டியதில்லையே. கொஞ்சம் டிபன் மெனு மாற்றேன் மம்மீ?” வேண்டுகொளும், உரிமையும் கலந்த குரலில் சொன்னான்.
அவசர அவசரமாக குளித்துவிட்டு பூஜை மற்றும் சமையலை முடிக்கும் போது மணி ஒன்பது. டிபன் தட்டுக்களை மேஜையின் மீது வைத்துவிட்டு கணவரை, மாமியாரை அழைத்தேன்.
வழக்கம்போலவே லஞ்ச் பாக்ஸ் எடுத்து வைக்கப் போனவள், இன்று எனக்கு ஆபீஸில் லஞ்ச் கொடுப்பார்கள் என்ற விஷயம் நினைவுக்கு வந்ததும் அந்த முயற்சியை கைவிட்டேன்.
“இன்னிக்கு ஆபீஸில் உன்னை இறக்கி விடட்டுமா?” கேட்டார் அவர்.
“வேண்டாம். முடிந்தால் மாலையில் வாங்க. மீட்டிங் தாமதமாக முடிந்தாலும் இருவரும் சேர்ந்து வரலாமே” என்றேன்.
“மாலையில் அம்மாவை டாக்டரிடம் அழைத்துப் போகணும். வரமுடியாது என்று நினைக்கிறேன்” என்றார்.
அவர் வரமாட்டார் என்று எனக்குத் தெரியும். அங்கே என்னை நாலுவார்த்தை பாராட்டிப் பேசுவார்கள். கட்டாயத்தின் பேரில்தான் அப்படிப் பேசுவார்கள் என்று அவருக்குத் தெரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவருடைய ஆணாதிக்கியம் இடம் கொடுக்காது. இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையில் இதுபோன்ற பல உண்மைகளை நான் தெரிந்துகொண்டிருக்கிறேன்.
பஸ்ஸில் எப்போதும் போல் ஜன்னலுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்துகொண்டேன். பஸ் புத்தங்களின் கடை வழியாக சாலையில் போய்க் கொண்டிருந்தது. தினமும் போலவே ஜன்னல் வழியாக கண்ணுக்கு எட்டிய வரையில் கடையின் முன்னால் புதிதாக வெளிவந்த புத்தகங்களின் பெயர்களை படிக்க முயற்சி செய்தேன்.
அது என்னுடைய தினசரி நிகழ்ச்சி நிரல். எனக்கு ஏனோ புத்தகங்களைப் பார்த்தால் புத்துயிர் கிடைத்தாற்போல் உற்சாகமாக இருக்கும். நல்ல இலக்கியமாக இருந்தால் அதிகமாகவே. கடையின் முன்னால் தொங்க விடப்பட்ட வார இதழ்களை கண்குளிரப் பார்ப்பது… அவற்றை படிக்க முடியாமல் போனதால் ஏதோ ஏமாற்றம் …. வேதனை.
நாளை முதல் இந்த ரூட்டில் வர மாட்டேன் என்ற யோசனை வந்ததும் என் மனதில் சுருக்கென்ற வேதனை. பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன.
அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று பள்ளிக்கு புதிய தமிழ் வாத்தியார் வரப் போவதாக தெரிந்து ரொம்ப உற்சாகமாக இருந்தேன். ஏனோ தமிழ் பாடம் படிப்பதில் இருந்த ஆர்வம் மற்ற பாடங்களில் எனக்கு இருந்ததில்லை.
இப்போ வரப் போகும் தமிழ் வாத்தியார் ரொம்ப கண்டிப்பானவர் என்று ஹெட்மாஸ்டர் ஏற்கனவே சொல்லியிருந்ததால் வகுப்பு முழுவதும் ஊசிப் போட்டாலும் கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. வாத்தியார் வந்ததுமே எல்லோருடைய பெயர்களையும் வரிசையாக கேட்டுக் கொண்டார். என்னுடைய முறை வந்ததும் எழுந்து நின்று “ஆமுக்தமால்யதா” என்றேன். வாத்தியார் பார்வை என்மீது ஆர்வத்துடன் படிந்ததை நான் கவனித்தேன்.
என்னுடைய பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். எனக்கு அந்தப் பெயரைச் சூட்டியது அப்பாவுடைய அப்பாவாம். வாழ்க்கையின் முதல் படியில் தனித்தன்மை என்ற பூமாலையை ஆபரணமாக சூட்டிக் கொண்டு சந்தோஷப்பட்டவள். விரைவிலேயே கடைமைகள் என்ற வளையத்திற்குள் புகுந்துகொண்டு அந்த மாலையை தொலைத்து விடப் போகிறேன் என்று தாத்தா ஒருக்கால் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். எனக்கு விவரம் தெரியும் முன்பே அவர் இறந்து போய்விட்டார். அவர் வேதம் படித்தவர் என்றும், காப்பியங்களை எல்லாம் படித்திருக்கிறார் என்றும், மகா பண்டிதர் என்றும் வீட்டில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் மூட்டையாக கட்டி பரணில் போட்டு விட்டிருந்தார்கள். இரவு நேரங்களில் எலிகளின் நடமாட்டம் பரணில் அதிகமாக கேட்டுக் கொண்டிருந்தது.
தமிழ் வாத்தியார் கணீரென்ற குரலில் பாடங்களைச் சொல்லித் தந்தபோது மந்திரத்திற்கு கட்டுண்டவர்கள் போல் கேட்டுக் கொண்டிருப்போம். காளிங்க மர்த்தனத்தை அவர் நடத்தியபோது அந்தக் காட்சி எங்கள் கண்முன்னால் நடப்பதுபோல் தோன்றும். எழுத்தாளர்களைப்பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் அவர் விரிவாக சொன்னதும் அந்தப் புத்தகங்களை எல்லாம் உடனே படித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் ஏற்பட்டது.
அந்த ஆர்வம்தான் எங்க ஊரில் பஞ்சாயத்து நூலகத்து புத்தகங்களை போட்டு பூட்டி வைத்திருந்த எங்கள் வீட்டு காமிரா அறையின் பூட்டைத் திறக்க வைத்தது. எங்க ஊரில் புத்தகங்களைப் படிக்க யாரும் முன் வராததால் நூலகப் புத்தகங்களை எல்லாம் எங்கள் வீட்டு அறையில் போட்டு பூட்டி வைத்திருந்தார்கள். அந்த புத்தகங்களில் தேவன், எஸ்.வி.வி. கல்கி, சாண்டில்யன், சரத்சந்திரனின் மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் படித்தேன்.
பேனாவின் முனையா? கத்தியா? எது கூர்மையானது? என்று எங்கள் பள்ளியில் நடத்திய பேச்சுப் போட்டியில் பேனாவின் முனைதான் கூர்மையானது என்ற தலைப்பில் பேசி முதல் பரிசை பெற்றேன். பாரதியாரின் கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்து மெய்மறந்தேன். அந்த ஊக்கத்தில் ஓரிரண்டு கவிதைகளைக்கூட எழுதினேன். தாத்தாவின் வாரிசு பிறந்துவிட்டாள் என்று எங்கள் வீட்டில் கிண்டல் செய்ததால ரோஷப்பட்டுக்கொண்டு அந்த முயற்சியை கைவிட்டேன்.
பட்டப்படிப்பு முடிந்ததும் கிருஷ்ணமூர்த்தியுடன் என் திருமணம் முடிந்து விட்டது. அவர் சுபாவத்திலேயே கொஞ்சம் ரிசர்வ்ட். அதோடு பிசினெஸ் விஷயமாக எப்போதும் பிஸி. கற்பனை உலகம் என்றாலே அவருக்கு பிடிக்காது. ரொம்பவும் பிராக்டிகல். நாளேட்டைத் தவிர எங்கள் மாமியார் வீட்டில் வேறு புத்தகமோ பத்திரிகைகளோ கண்ணில் படவில்லை.
பிறந்தவீட்டிலிருந்து கொண்டுவந்த நாவல்களை, சிறுகதைத் தொகுப்புகளை எங்கள் பெட்ரூம் அலமாரியில் அழகாக அடுக்கிவைத்தேன்.
“இதெல்லாம் என்ன?” அவற்றைப் பார்த்ததுமே நெற்றியைச் சுளித்தார்.
“நான்தான் கொண்டுவந்தேன். ஓய்வுநேரத்தில் படிக்கலாம் என்று” பயந்துகொண்டே முணுமுணுத்தேன்.
“இந்த குப்பையை உடனே இங்கிருந்து எடுத்துவிடு. வீணாக இடத்தை அடைத்துக் கொண்டு. கண்ட கண்ட குப்பையெல்லாம் படித்து நேரத்தை வீணாக்குவதை விட சர்வீஸ் கமிஷன் பரீட்சைக்குப் படி. தேவைப்பட்ட புத்தகங்களை நான் வாங்கி வருகிறேன்.”
சப்தநாடியும் குன்றிப் போய்விட்டாற்போல் உணர்ந்தேன். இருந்தாலும் அந்தப் புத்தகங்களை அங்கிருந்து அகற்றாமல் அப்படியே வைத்திருந்தேன்.
“இன்னும் இதெல்லாம் இங்கேயே இருக்கு. ஏன்?” எரிச்சலுடன் பார்த்தார்.
“எனக்குப் புத்தகங்களை வாசிப்பது ரொமபப் பிடித்தமான விஷயம். அதிலும் தமிழ் இலக்கியம் …” என் மனதிலிருப்பதை அவரிடம் வெளிப்படுத்த முயன்றேன்.
“நான் ஒரு தடவை சொன்னால் சொன்னதுதான. எந்த விஷயமாக இருந்தாலும் சரி, இரண்டாவது முறை சொல்லுவது எனக்குப் பிடிக்காது.”
என் பேச்சை அவர் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லிவிட்டு போய்விட்டார். அப்பொழுதுதான் அவருக்குள் இருந்த மற்றொரு மனிதனை அடையாளம் கண்டுகொண்டேன். அன்றிலிருந்து என் விருப்புவெறுப்புகளை வெளியில் சொல்லுவதை விட்டுவிட்டேன். என் பிரச்னைகளை, கஷ்டங்களை வெளியில் சொல்லாதவரையில் வீடும், வாழ்க்கையும் அமைதியாக போய்க் கொண்டிருக்கும் என்றும், கொஞ்சம் வெளிப்படுத்தினாலும் ஆபத்து எனக்குத்தான் என்றும், நான்தான் நிம்மதியை இழக்க வேண்டி வரும் என்றும் உணருவதற்கு அதிகநாள் தேவைப்படவில்லை.
பரணில் ஏறிவிட்ட இலக்கிய தாகத்துடன், என் ரசனைகளும், விருப்புவெறுப்புகளும் நாளடைவில் செல்லரித்துப் போய்விட்டன.
மாமியாரின் அதிகாரம், நாத்தானார்களின் கல்யாணங்கள், மைத்துனர்களின் படிப்பு இவற்றுக்கு நடுவில் அவர் எனக்காக லஞ்சம் கொடுத்து வாங்கித் தந்த வேலை.
பைல்கள், லெட்டர்கள், மெமோக்கள், பதில்கள், இன்கிரிமெண்டுகள், பிரசவங்கள், குழந்தைகளின் வீட்டுப் பாடம் … ஒரு நிமிஷம்கூட ஓய்வு இல்லாமல் காலச் சக்கிரம் வேகமாக சுழன்றுவிட்டது. இந்த இயந்திரச் சுழற்சிக்கு இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஒரு கமா வைக்கப்பட்டிருக்கிறது. ஆபீஸ் ஸ்டாப் வந்ததும் இறங்கிக் கொண்டேன்.
அன்று மாலை மீட்டிங்கில் என் மேலதிகாரிகள், யூனியன் லீடர்கள் எல்லோரும் என்னைப் புகழ்ந்தார்கள் முக்தா மேடம் ரொம்ப சின்சியர், பங்க்சுவல் என்றும், அது இது என்றும்.
விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்போல் இருந்தது எனக்கு. இந்த ஆபீஸிற்கு நான் என்ன செய்துவிட்டேன்? செய்த வேலைக்கு மாதாமாதம் சம்பளம் வாங்கிக் கொண்டேன். வீட்டில் எந்த சின்ன தேவை வந்தாலும் லீவ் போட்டேன். சரியாக இருவரும் ஆபீஸிற்குக் கிளம்பும் நேரத்தில் வீட்டிற்கு யாராவது உறவுக்காரர்கள் வந்துவிட்டால் அவர் பாட்டுக்கு ஆபீஸ¤க்குக் கிளம்பிப் போய் விடுவார். நான்தான் லீவ் போடவேண்டிய கட்டாயம்.
“ஆபீஸில் வேலையிருக்கு. கட்டாயம் போக வேண்டும்” என்ற வார்த்தைகள் என் குரல்வளையை விட்டு ஒருநாளும் வெளியே வந்ததில்லை. மாலை ஐந்து மணியானதுமே ஒரு நிமிஷம்கூட தாமதம் செய்யாமல் பேக்கை மாட்டிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவேன். டிபார்ட்மெண்டுக்காக , இந்த நாட்டுக்காக நான் செய்த தொண்டு எதுவும் இல்லை. பிரமோஷனுக்காக எழுதிய தேர்வுகளைத் தவிர வேலையில் முன்னேற்றத்திற்காக நான் எந்த முயற்சியும் செய்ததில்லை.
குழந்தைகளுக்கு ஜுரம் வந்தாலும், மாமியாருக்கு உடல்நலம் சரியாக இல்லாமல் போனாலும், வீட்டில் கல்யாணம் கார்த்திகை என்று ஏதாவது விசேஷம் வந்தாலும் எல்லாவற்றுக்கும் நான்தான் விடுப்பு எடுத்துக் கொண்டு சமாளித்து வந்தேன். என் கணவர் ஒரு நாளும் தன் வேலைகளை நிறுத்திக் கொண்டதில்லை. ஒவ்வொரு மாதமும் சம்பளக் கவரை அவர் கையில் கொடுத்ததைத் தவிர நான் செய்த கனகாரியம் எதுவும் இல்லை. செக்குமாடுபோல் உழைத்தேன், அவ்வளவுதான்.
நான் பார்த்து வந்த வேலையில் எனக்கு உற்சாகமோ, ஆர்வமோ ஒருநாளும் இருந்தது இல்லை. இத்தனை வருடங்கள் ஒன்றாக வேலை பார்த்து வந்தாலும் சக ஊழியர்களுடன் எனக்கு எந்த விதமான ஒட்டோ உறவோ இருந்தது இல்லை. குறைந்தபட்சம் சாதாரண் நட்புகூட ஏற்பட்டதில்லை.
பஸ்ஸையோ, ரயிலையோ பிடிப்பதற்காக ஓடும் பயணிகளைப் போல்தான் அவர்களைப் பார்த்திருக்கிறேன். வேண்டுமென்றே அவர்களை தொலைவில் வைத்திருந்தேனோ என்னவோ. ஆபீஸில் செய்த சர்வீஸை விட வீட்டில் இருப்பவர்களுக்காக செய்த சர்வீஸ்தான் அதிகம். ஆனாலும் குடும்பத்தில் ஒருவர்கூட தோளில் தட்டி என்னைப் பாராட்டியதாக நினைவு இல்லை.
வீட்டின் முன்னால் ஆட்டோவில் வந்து இறங்கிக் கொண்டேன். கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்தேன். வாசற்கதவு பூட்டியிருந்தது. மாமியாரை அழைத்துக் கொண்டு அவர் டாக்டரிடம் போயிருப்பார். சீனு இன்னும் கல்லூரியிலிருந்து வந்திருக்க மாட்டான்.
எத்தனை தூரம் பயணம் செய்து திரும்பி வந்தாலும் இந்த கதவு மட்டும்தான் எனக்காக காத்திருப்பது போல் தோன்றும். முப்பத்தைந்து வருஷங்களின் சகவாசம் இல்லையா பின்னே.
புடவைத் தலைப்பால் கதவில் பொருத்தியிருந்த பித்தளைப் பூக்களைத் தூசி போக துடைத்துவிட்டு பூட்டைத் திறந்தேன். ஆபீஸில் எனக்கு போர்த்திய சால்வை, சூட்டிய மாலைகள், ஸ்வீட் பாக்கெட்டுகள் எல்லாம் மேஜை மீது வைத்தேன்.
டி.வி.யை போட்டுவிட்டு இரவு சமையலுக்காக காய்கறி நறுக்கத் தொடங்கினேன். ஏதோ டப்பிங் சீரியல் வந்து கொண்டிருந்தது. மாமியார் மருமகளிடம் தேனொழுக பேசிக் கொண்டே க்ளோசப்பில் கொடூரமாக சிரித்துக் கொண்டிருந்தாள். மருமகள்களை துன்புறுத்துவதில் புதிய முறைகளை கற்றுத் தந்து கொண்டிருந்தார்கள் சீரியல் தயாரிப்பாளர்கள்.
இல்லத்தரசிகள் பத்திரிகைகளை, நாவல்களை படிப்பதை விட்டுவிட்டு டி.வி. சீரியல்களை அதிகமாக பார்ப்பது ஏன் என்று யோசித்த போது எனக்குத் தோன்றியது ஒன்றுதான். புத்தகத்தைப் படிக்கும் போது வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. அதுவே டி.வி.யைப் பார்த்துக் கொண்டே காய்கறி நறுக்கலாம். சப்பாத்தி மாவு பிசையலாம். விளம்பரம் வரும்போது உள்ளே போய் சமையலையும் கவனிக்கலாம். வீட்டு வேலையும் முடியும். பொழுதும் நன்றாகப் போகும்.
சமையல் முடியும் நேரத்தில் கணவரும், மாமியாரும் வந்து விட்டார்கள்.
“என்ன சொன்னார் டாக்டர்?” எதிர்கொண்டு அழைத்து மாமியாரின் கையைப் பற்றி உள்ளே அழைத்து வந்தேன்.
“புதுசா என்ன சொல்லப் போகிறார்? அந்தக் கடவுள் எப்பொழுதுதான் என்னை அழைத்துக் கொள்ளப் போகிறானோ?” என்று தன் வழக்கமான புலம்பலை ஆரம்பித்தாள்.
“அதெல்லாம் இப்போ எதுக்கு? நேரம் வந்துவிட்டால் எதுவும் நிற்கப் போவதில்லை.”
மகன் சலித்துக் கொண்டதும் மாமியார் தன் பேச்சை நிறுத்திவிட்டாள்.
“முக்தா! சீனூவை அனுப்பி இந்த மருந்துகளை எல்லாம் வாங்கி வரச் சொல்லு. அம்மாவுக்கு வேளை தவறாமல் மருந்து மாத்திரை கொடுக்கும் பொறுப்பு உன்னுடையது. இரவில் அம்மா கோதுமை கஞ்சிதான் சாப்பிடணும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.”
மறுபேச்சு பேசாமல் பிரிஸ்கிரிப்ஷனை வாங்கிக் கொண்டேன். எனக்கும் இரண்டு வருடங்களாக ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் சேர்ந்து கொண்டன. உடலில் தெம்பு குறைந்துவிட்டாலும் எப்படியோ ஆபீஸையும் வீட்டையும் சாமாளித்துக்கொண்டு வந்தேன். யாராவது கொஞ்சம் ஒத்தாசை செய்தால் நன்றாக இருக்கும என்று சில சமயம் தோன்றும். ஆனால் எப்படி நடக்கும் ?. இந்த ஜென்மத்தில் அந்த பாக்கியம் இல்லை. இப்படியே நாட்களைத் தள்ளவேண்டியதுதான். ஒருவிதமான வெறுமை படர்ந்தது மனதில்.
இரவு சாப்பிடும் நேரத்தில் ” நாளைக்குப்போய் நீலிமாவை அழைத்து வா. காலையில் மேஸ்திரி வந்துவிடுவான். அந்த வேலையைக் கவனிக்கணும். அது சரி, உனக்கு ஏதாவது பேமெண்ட் வந்ததா ? நாளைக்கு மேஸ்திரிக்குக் கொடுக்கனும்.” என்றார். குறைந்தபட்சம் மீட்டிங் எப்படி நடந்தது என்றுகூட கேட்கவில்லை.
“பிராவிடண்ட்·பண்ட் கணக்கில் ஒரு லட்சத்திற்கு செக் கொடுத்திருக்கிறார்கள். இந்த மாத சம்பளம், லீவ் என்காஷ்மெண்ட் செக்குகளை தந்திருக்கிறார்கள். கிராட்சுவிடி எல்லாம் வருவதற்கு நாளாகுமாம்.”
எழுந்துபோய் ஹேண்ட் பேக்கிலிருந்து காசோலைகளை எடுத்து வந்துக் கொடுத்தேன்.
“என்காஷ்மெண்ட் ரொம்ப குறைச்சலாக இருக்கே. சரியாக கணக்குப் போட்டாங்களா?” என்று கேட்டார். எதிராளி எப்போதும் தவறாகத்தான் செய்வான் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. எதிலேயும் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார்.
“லீவ் எங்கிருந்து இருக்கும்? எப்போ பார்த்தாலும் லீவ் போடுவதுதானே என் வேலை. உறவினர்களின் வருகை, குழந்தைகளின் உடல் நலக்குறைவு…..” மேலும் ஏதொ சொல்லப் போனேன்.
“போதும் போதும். பாட்டு பாட வேண்டாம். பிரபாகரின் மனைவிக்கு இருநூற்றி நாற்பது நாட்களுக்கு என்காஷ்மெண்ட் கிடைத்ததாம். பின்னே அந்த அம்மாளுக்கு இல்லையா குடும்பம்?” எரிந்து விழுந்தார்.
என் விழிகளில் நீர் சுழன்றது. எனக்கு குடும்பம் மட்டும்தான் இருக்கு. ஒத்துழைப்புதான் இல்லை. மனதில் நினைத்துக் கொண்டேன்.
“ராகவன் போன் பண்ணவில்லையா? இன்னிக்கு போன் வரணுமே?” தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் சொன்னார்.
ஆமாம். ராகவனிடமிருந்த போன் வரவே இல்லை. காலையிலிருந்து என்னையும் அறியாமல் என் மனம் அவனுடைய போனுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
ராகவன் என்னுடைய மூதத மகன். என்னுடைய என்று ஏன் சொன்னேன் என்றால் அவன் என்னிடம் நடந்துகொள்ளும் முறையில் அன்பும், அக்கறையும் கலந்திருக்கும். என்னைப் பார்க்கும் பார்வையில் கரிசனம் வெளிப்படும்.
பி.டெக். முடித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இந்த வாரக் கடைசியில் நேரில் வருவானோ என்னவோ” என்றேன்.
அன்று இரவு படுத்துக் கொண்டேனே ஒழிய தூக்கம் வரவில்லை. நாளை முதல் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி என் மனம் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தது.
நீலிமாவை பிரவசத்திற்கு அழைத்து வரணும். காலையில் எழுந்துகொண்டதுமே அவளுக்காக அறையை ஒழித்து வைக்கணும். சித்தாட்களை சமாளிப்பது என்றால் எனக்கு பெரிய தலைவலி. கூலி அதிகம் கொடுக்கும் வரையில் விடமாட்டார்கள். அவர்கள் கேட்டதை கொடுத்து அனுப்பிவிட்டால் மாலையில் இவர் வீட்டுக்கு வந்ததும் ஆயிரம் குறைகளை கண்டுபிடித்து நான் முட்டாள்தனமாக பணத்தை தாரைவார்த்து விட்டதாக குத்திக் காட்டாமல் இருக்கமாட்டார்.
மாடி போர்ஷன் கட்டி முடிக்கும் வரையில் எனக்கு நித்யமும் கண்டம்தான். மகளின் பிரசவம் வேறு. நீலிமாவின் பையன், என்னுடைய பேரன் நான்கு வயது கௌசிக் ரொம்ப விஷமம். இந்த நான்கு மாதகாலமும் அவனை இங்கேயே ஏதாவது பள்ளியில் சேர்த்தாக வேண்டும். சீட்டுக்காக ஸ்கூலுக்கு அலைய வேண்டியிருக்கும். ஆபீஸிற்குப் போய் அவ்வப்பொழுது விசாரிக்கவில்லை என்றால் என் கிராட்சுவிடீ பைல் அப்படியே இருக்கும். மேலும் யோசிப்பதற்கு பயந்துகொண்டு கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டேன்.
கனவில் ஒரு அரக்கன். அவன் முகம் அப்படியே எங்கள் வீட்டைப் போலவே இருந்தது. வயிற்றுப் பகுதி எங்கள் ஆபீஸைப் போல். மீதி உடல் உறுப்புகளில் என் கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார் படர்ந்திருந்தார்கள். அந்த அரக்கண் வாயைத் திறந்து என்னை விழுங்கிக் கொண்டிருந்தான். கரகரவென்று மென்றுகொண்டே என் உடலில் சிறு துளி கூட மிச்சம் வைக்காமல் விழுங்கிக் கொண்டிருந்தான். நான் முழுவதுமாக அவன் வயிற்றுக்குள் சென்று விட்டேன்.
வீலென்று கத்திக் கொண்டே எழுந்து உட்கார்ந்துகொண்டேன். உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. பக்கத்தில் கணவர் குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்தார். எழுந்து போய் தண்ணியைக் குடித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டேண்.
யாரோ கதவைத் தட்டிய சத்தம். திடுக்கிட்டு எழுந்துகொண்டேன். மணியைப் பார்த்தால் நாலரை. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே போய்க் கதவைத் திறந்தால் எதிரே ராகவன்!
என் மனம் காற்றில் மிதப்பது போல் இலேசாகிவிட்டது.
“ஹாய் மாம்!” என்றான் சிரித்துக் கொண்டே.
“ராகவா! என்ன இது? சொல்லாமல் கொள்ளாமல்.”
“சர்பிரைஸ் மாம்! உனக்காகத்தான் வந்தேன்.”
“எனக்காகவா?” வியப்புடன் கேட்டேன்.
“உனக்குப் பிடித்தமான கி·ப்ட் வாங்கி வந்திருக்கிறேன்.” பேக்கைத் திறந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்துக் கொண்டிருந்தான். புத்தகங்கள்….புது புத்தகங்கள்…. பலவிதமான வண்ணங்களில் அட்டைப் படத்துடன்.
“மம்மீ! இவை கல்கியின் புத்தகங்கள், இவை சரத்ச் சந்திரரின் நாவல்கள், இது கு.ப.ரா. வின் தொகுப்பு. எல்லாம் உனக்குப் பிடித்தமானவை. எல்லாவற்றையும் படித்து முடித்துவிடு. இன்னும் வாங்கித் தருகிறேன்.”
“இதெல்லாம் எனக்குப் பிடிக்கும் என்று உனக்கு எப்படித் தெரியும் ராகவா?” பிரமிப்புடன் கேட்டேன்.
“பெங்களூரின் மாமா வீட்டுக்குப் போயிருந்தேன் மம்மீ. அன்று முழுவதும் உங்களுடைய சின்ன வயது விஷயங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார். உனக்கு என்ன புத்தகங்கள் பிடிக்கும், எப்படியெல்லாம் விரும்பி படிப்பாய் என்றும் சொன்னார். இந்த புத்தகங்களை வாங்குவதற்காக மாமாவும் துணைக்கு வந்தார். ஹேப்பிதானே மம்மீ.”
என் மடியில் தலை வைத்தபடி படுத்திருந்த ராகவனைப் பார்க்கும் போது உள்ளேயிருந்து சந்தோஷம் பொங்கிக் கொண்டு வந்தது எனக்கு. என் கணவர் எழுந்து வந்து சோபாவில் உட்கார்ந்துகொண்டு எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த விடியற்காலை வேளையில் திறந்திருந்த வாசற்கதவு வழியாக வீசிய குளிர்ந்த காற்று என் உடலில், மனதில் புதிய உற்சாகத்தை நிரப்பியது.

முற்றும்

தெலுங்கில் கோடூரி துர்கா நாகராஜு
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

வெளிச்சம்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

பனசை நடராஜன், சிங்கப்பூர்


எல்லோரையும், நின்று
ஏறிட்டு ப் பார்த்து,பின்பு
நடந்து கொண்டேயிருக்கிறது
வெளிச்சம்…!

இறுகக் கண்களை மூடி
இருட்டுக் குழிக்குள்ளே
கிடப்பதாய் புலம்புவோரை…

எட்டும் தூரத்தில்
இருப்பதை அறிந்தும்
வெறித்து பார்த்தபடி நிற்போரை…

மாயம் என்று சொல்லி
வேறுபக்கம் திரும்பி நின்று
கனவுகளில் தேடுவோரை
அது கண்டு கொள்வதில்லை…!

உணர்ந்தோ,உருவாக்கியோ
நெருங்கும் சிலரையே
ஓடிச்சென்று
தழுவிக் கொள்கிறது…!

இப்போதுகூட
எனக்கான வெளிச்சம்
காத்திருந்து விட்டுக்
கடந்து போயிருக்கலாம்..!!!

Series Navigation

வெளிச்சம்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.


காலையிலிருந்து தொலைபேசி அடித்தபடியிருந்தது. நல்லதோ கெட்டதோ மக்களுக்கு நாளிதழ்களில் ஏதும் செய்தியாக வந்தால் ஒரு ஈடுபாடுதான். அழைத்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள் மற்றும் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எனக்குத் தெரிந்தவர்கள். வருடக்கணக்காய் மனதில் போட்டு, அக்கு வேறு ஆணி வேறாய் ஆராய்ந்து தக்க சமயம் பார்த்து எடுத்த முடிவானதால் எனக்கு இதில் பெரிய ஆரவாரம் ஒன்றையும் உணர முடியவில்லை.வீட்டின் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி சர்க்கரையில்லாத தேநீரைச் சுவைத்தேன். இந்தச் சக்கரையை நிறுத்த சில வருடங்களுக்கு முன்னால் நான் பட்டபாட்டை இப்போது நினைத்தாலும் சிரிப்பு முட்டிக்கொண்டு வரும். ஆனால், இப்போதோ இனிப்பு சேர்த்த தேநீர் நாவிற்குப் பிடிப்பதில்லை. தேவையானதெல்லாம் சூடான துவர்ப்புச் சுவை மட்டுமே.

வயதான சீனத் தம்பதி காலை நடை போவது என் கவனத்தை ஈர்த்தது. எப்போதும் நான் பார்ப்பவர்கள் தான். இருவரும் பேசிக்கொள்வது மிக அரிது. எனினும் கண்ணசைவும், உடலுறுப்புகளின் அசைவுகளுமே அவர்களுக்கு பாஷையானது என்பது ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் உயர்ந்த விஷயமாகப்படும். காலம் முழுவதும் பேசிப்பேசி இப்போது மெளனமே தங்கள் மொழியாகக் கொண்டிருந்த அவர்களைக் காணும் போதெல்லாம் ஒரு புறம் சிறு பொறாமைப் பட்டாலும், என் மனம் முழுவதும் ஏனோ சொல்லத்தெரியாத ஆனந்தம் நிறையும். நிச்சயம் வயதில் என்னைவிட குறைந்தது பத்து வயதாவது மூத்தவர்களாய் இருப்பார்கள். பஞ்சாய் இருந்த இருவரது தலை முடியும் அவர்களது வயதைக் காட்டுவதாய் மற்றவர் போல நான் என்றும் நினைத்ததில்லை. அவை முதிர்ச்சியின் அழகான அடையாளங்கள் அல்லவா!

டிரிங் டிரிங்,..

“அம்மா, நல்லவேள, எங்க வீட்டுல இல்லாமப் போயிடுவீங்களோன்னு பயந்துட்டேன். ஏம்மா இப்பிடியெல்லாம் செய்யிறீங்க ? எங்க மாமியார் போன் அடிச்சி நாக்க புடிங்கிக்கறாப்போல கேக்கறாங்க தெரியுமா ? லீவு எடுத்துட்டு தான் உங்கள வந்து பாக்கணும்னு நினச்சேன்.முடிஞ்சா இந்த வாரக்கடைசியில வரேன்.நல்லாத் தானே இருந்தீங்க, என்னாச்சி, உங்க கூட்டாளி, மணிமேகல ஆண்டி மலேசியாவுக்குப் போனதுமே, உங்களுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல ? இல்ல, அதான் இப்பிடியெல்லாம் செய்யறீங்களா ? இந்த வயசுல உங்களுக்குத் தேவையாம்மா இதெல்லாம் ?”, என்னைப் பேசவே விடாமல் தொலை பேசியில் இளைய மகள் ப்ரியா ஏதோ தன் மாணவனை எச்சரிப்பதைப்போல படபடவென்று பொரிந்து தள்ளுகிறாள்.

“ என்னம்மா பெரிசா செஞ்சிட்டேன், ஊருல உலகத்துல இல்லாதத ? ஆமா,.இதுல உனக்கோ உங்க மாமியாருக்கோ என்ன வந்திடிச்சு ? எனக்கு இப்போ வேண்டியதெல்லாம், ஒரு கம்பானியன்,..,.. ,..”

“ ஐயோ அம்மா, இப்போ பேச எனக்கு நேரமில்ல. நா மறுபடியும் வீட்டுக்குப் போயி சாயங்காலமா போன் அடிக்கிறேன், சரியா ?”, கூறிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமலேயே தொலைபேசியையும் வைத்து விடுகிறாள்.

0 0 0

உலகமே ஏன் இத்தனை சுயநலமாகப் போனது ? நினைத்து நினைத்து எனக்கு அலுப்பும் எரிச்சலுமே மிஞ்சியது. சொந்த ரத்தத்திடமே கூட மனிதன் சுயநலம் காட்ட ஆரம்பித்து விட்டான். தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. தானாடா விட்டாலும் தன் சதையாடும் என்று நம்பிய தலைமுறையைச் சேர்ந்தவளாய் நான் இருந்ததும் இதற்குக் காரணமோ ?! மகள் பிறந்ததுமே தன்னுடையது இல்லையென்று வளர்க்கவேண்டுமென்று இதனால் தான் சொன்னார்கள் போலும்! சொந்தத்தாயின் மனநிலையைப் புரிந்துகொள்ளக்கூட ப்ரியாவுக்கு அவகாசமில்லை. அவளுக்கு தன் குடும்பம், தன் புக்ககத்தார் மட்டுமே முக்கியமாய் இருந்தது.

நிச்சயம் என் மகன் என் முடிவை வரவேற்பான். அவன் அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் கூப்பிட்டால் நிச்சயம் இத்தனை காட்டமாய் பேசமாட்டான். அவன் தொலைபேசியைத் தான் நான் எதிர் பார்த்த படியிருந்தேன். இந்த வாரம் இன்னும் அவன் அழைக்கவில்லை.

திடாரென்று வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். இந்த நேரத்தில் யாரது என்று எண்ணியபடியே கதவைத்திறந்தால், மூத்தவள் ராகினி நின்றிருந்தாள். “வா ராகினி, நீ இன்னிக்கி வேலைக்கி போகலையா ?”, என்ற எனக்கு ஒரு முறைப்பையே பதிலாகக் கொடுத்தாள். முகத்தில் எப்போதும் குடி இருக்கும் புன்னகையை வீட்டிலேயே விட்டுவிட்டாள் போலும், அவசரமாய் உள்ளே நுழைந்து இருக்கையில் பொத்தென்று உட்காருகிறாள்.

“ஏம்மா, பேப்பர்ல உங்க படம் வரணும்னு எத்தன நாளா உங்களுக்கு ஆசை ? சொல்லியிருந்தா அன்னையர் தினத்துல ஒரு வாழ்த்து கொடுத்து உங்க போட்டோவையும் போட்டிருப்பேனே. இப்போ இதெல்லாம் என்னம்மா ? கேக்கறவங்களுக்கு எப்பிடித்தான் பதில் சொல்றதோ தெரியல. இன்னிக்கி என்னவானாலும் லீவு போட்டுட்டு உங்க அம்மா கிட்ட பேசிட்டு வான்னு அவரு தான் அனுப்பிச்சாரு.“

“அதிருக்கட்டும் நீ பசியாறிட்டியா ?“

“ ஏம்மா உங்களுக்கு சீரியஸ்னசே புரியலையா ? நா எதப்பத்திப் பேசறேன், நீங்க என்னடான்னா பசியாறிட்டியான்றீங்க. “

“ சரி பேசுவோம். என்ன தெரியணும் உனக்கு ?

“எதுக்கிதெல்லாம் ? தனியா இருக்க போரடிச்சா மலேசியாவுக்கு மாமா வீட்டுக்கு போயிட்டு வாங்கம்மா. அத விட்டுட்டு இப்பிடியெல்லாம் விளம்பரம் கொடுத்திட்டிருக்கீங்களே, அதுவும் எங்களயெல்லாம் ஒரு வார்த்த கூட கேக்கல நீங்க.”

“ அது மட்டும் சொல்லாத ராகினி.போன வருஷம் ஒரு தடவ நா ப்ரியாகிட்டயும் உங்கிட்டயும் இது பத்தி பேசினேன் நீங்க ரெண்டு பேரும் ஏதோ நான் ஜோக்கடிக்கறதா சிரிச்சிட்டு போயிட்டாங்க. அப்பதான் எனக்கு யார் உதவியும் கிடைக்கும்ற நம்பிக்கையே போயிடிச்சி. யோசிச்சித்தான் ஆங்கில பத்திரிக்கைக்கு நேர்ல போயி விளம்பரம் கொடுத்தேன். அங்க இருக்கறவங்கதான் ஒரு கதயாவே போட்டுடறதா சொன்னாங்க. சரி இதுல என்ன இருக்குன்னு நெனச்சி, அவங்க கேள்விக்கெல்லாம் பதில் சொன்னேன்.”

“ அப்ப நீங்க நிஜமாவே ஒரு கல்யாணம் செஞ்சிக்கறதுக்குத் தயாராயிட்டாங்களாம்மா ?” — அவநம்பிக்கையும் ஆச்சரியமும் ராகினி முகத்தில் அப்பியிருந்தது.

“ ஆமா, .. .இல்லாமயா நாளிதழ்ல விளம்பரம் கொடுத்தேன்.”

“ அம்மா, இப்போ உங்க வயசென்ன ?”

“ இதென்ன நீயும் பத்திரிக்கைக்காரங்க மாதிரி கேக்கற ?”

“ சிரிக்காதீங்கம்மா,.. சொல்லுங்க.”

“ இந்த ஆறாம் மாசம் வந்தா அறுவத்தொண்ணு முடியும்.”

“ ஏம்மா இந்த வயசுல எதுக்கும்மா உங்களுக்குக் கல்யாணம் ? ஒரு பக்கம் சிரிப்பு வருது. இன்னொரு பக்கம் கோபமா வருது. இருங்க, நா டோய்லெட் போயிட்டு வரேம்மா.” எழுந்து குளியலறைக்குள் போகிறாள்.

0 0

மணமுடித்து இரண்டு பிள்ளைகள் பெற்ற ராகினிக்கே என் நிலை புரியாவிட்டால் இவளையும் விட ஆறு வயது இளையவளான ப்ரியா எப்படிப் புரிந்து கொள்வாள் என்று நினைத்தால் எனக்கு சற்று மலைப்பாகவே இருக்கிறது. ப்ரியா இரண்டு வயதாகும் போதே கணவனைப் பறிகொடுத்த எனக்கு மூவரையும் வளர்த்து ஆளாக்குவதற்குள் அறுபதல்ல, நூறு வருட ஆயாசம் ஏற்பட்டிருந்ததென்னவோ உண்மை. கணவன் இருந்தபோதும் பெரிதாக ஒன்றும் வாழ்ந்து விடவில்லை. அதனால் தானோ என்னவோ அவர் இறப்பு என்னை மற்றவர் நினைத்த அளவிற்கு பாதிக்கவில்லை. நேயமே இல்லாது தன் உடல் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்துகொண்டு வாழ்ந்த அம்மனிதனின் போக்கு எனக்குப் புரியவே வருடங்கள் ஆயின. இதற்குள் மூன்று குழந்தைகள் பிறந்து விட்டிருந்தன.

“ ம்,.. இப்போ, இந்த வயசுல உங்களுக்கு கல்யாணம் எதுக்குன்னு கேட்டேன்”, குளியலறையிலிருந்து வெளியில் வந்து, விட்ட இடத்தில் ராகினி தொடர்ந்தாள்.

“ அதென்ன, இந்த வயசுல இந்த வயசுலன்னுஅழுத்தி அழுத்தி சொல்ற ?”

“ ஆமாம்மா, இப்போ உங்கள யாரும் கல்யாணம் செய்ய வந்தாலும் நிச்சயமா அது உங்க சொத்துக்காகத் தான் இருக்கும். தவிர எதுக்கும்மா உங்களுக்கு இதெல்லாம் ?”

“ இல்ல ராகினி, உனக்குப்புரியுமோ தெரியல. எனக்கு இப்போ தேவையா இருக்கறதெல்லாம் ஒரு நல்ல நட்பு. ஒரு நல்ல பேச்சுத் துணை தான்.

நா படிக்கிற புத்தகத்தப் பத்தி பேச, காலைல வாக்கிங் போகும் போது கூட பேசிகிட்டே வர, என்னோட சேர்ந்து டாவி பார்க்க இப்பிடி தான் நான் ஒரு துணைக்காக ஏங்கறேன் தெரியுமா ?”

“ ஓஹோ,..”,விழுந்து விழுந்து சிரித்துவிட்டு,”அம்மா, உங்களுக்கு இப்போ பிரச்சனையே தனிமை தான். நா வேணா ஒரு வாரம் இங்க வந்து இருக்கட்டுமா ? இங்கேயிருந்தே வேலைக்குப் போறேன். இல்ல, ஒரு வாரம் லீவு கூட போட்டுட்டு உங்கள எங்கயாவது வெளியூருக்குக் கூட்டிட்டுப்போறேன், என்ன சொல்றீங்கம்மா ?” என்று கேட்கிறாள்.

“ இல்ல, அதெல்லாம் வேண்டாம். ராகினி, பொழுது போறதொண்ணும் எனக்கு சிரமமில்ல. இது எனக்கென்ன புதுசா ? இருக்கப் போறது இன்னும் ஒரு சில வருஷங்கள்,..”

“ அதேதான் நானும் சொல்றேன், இப்போ போயி கல்யாணம் அது இதுன்னு எதுக்குன்னு தான் கேக்கறேன்.”

“ என்னைப் பேச விடாம நீ குறுக்க குறுக்கப் பேசாத. “ என்றேன் காட்டமாக.

“ சரி,சரி சொல்லுங்க.”

“ எனக்குத் தேவை நல்ல ஒரு நட்பு. கல்யாணம், கணவன் என்பதெல்லாம் கூட ஒரு சடங்கிற்காகவும் சமூகத்தைத் திருப்திப் படுத்தவுமே. இது உனக்குப் புரியுதா ?எனக்கு உடல் தேவைகள் இருக்கும்னு நீ நம்பறியா ? அதுவும் நீ சொல்றா மாதிரி இந்த வயசுல ? நட்புக்கு உங்களுக்கு தான் நிறையா சினேகிதிங்க இருக்காங்களேன்னு நீ கேப்ப. நிறையா பேர் இருக்காங்க தான். ஆனாலும் எல்லாருமே தன் குடும்பம் குழந்தைகள்னு இருக்காங்க. நான் எப்போவாவது போன் அடிச்சி பேசினா கூட அவங்களுக்கு மனசும் நேரமும் இருந்தா தான் பேசுவாங்க. இல்லன்னா பேச மாட்டாங்க.அவங்களயும் குத்தம் சொல்லமுடியாது. சூழ்நிலை அப்படி. இதில் வம்பு பேச்சு பேசுபவர்களும் அதிகம். அது எனக்குப்புடிக்காது.”

“ விளம்பரத்தப் பார்த்ததும் உங்களுக்கு பிடிக்கிறா மாதிரி நட்ப மட்டும் எதிர் பார்த்து நல்லவங்க யாரும் வருவாங்கன்னு நம்பறீங்களா ? உங்களோட நோக்கம் எனக்குப்புரியும். மத்தவங்களுக்குப் புரியாதும்மா. பலவிதமா பேசுவாங்காம்மா.”

“ எனக்கும் நல்லாத் தெரியும் உண்மையான நட்பு கிடைகிறது மிகவும் கஷ்டம்னு. ஆனா உலகத்துல இன்னும் நல்லவங்க இருக்காங்கன்னு மட்டும் நான் நம்பறேன்.”

“ ஏம்மா, அப்பா செத்துப்போயி ஒரு முப்பது வருஷமிருக்குமா ? இத்தன வருஷத்துல தோணாம இப்போ ஏம்மா உங்களுக்கு தோணிச்சு ?

“ உங்க மூணு பேரையும் படிக்க வைக்க, கல்யாணம் கட்டிக்குடுக்கன்னு இருந்துட்டதால எனக்கு தோணல. இப்போ ப்ரியா கல்யாணம் முடிஞ்சி, நாலு வருஷமா தான் இதப் பத்தியே யோசிச்சேன்”

“ நீங்க என்ன தான் சொன்னாலும், இதுல பல பிரச்சனையிருக்கு. எனக்கு என் வீட்டுக்காரர மட்டும் எப்படியாவது சமாளிச்சா போதும். ஆனா ப்ரியாவுக்கு, அவங்க வீட்டுல எல்லாரையும் சமாளிக்க முடியும்னு எனக்குத் தோணல. அவங்களப்பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே.”

“ இதுல அவங்களுக்கென்னம்மா கஷ்டம் ?”

“அம்மா சொல்றது ஈஸி. அவங்களுக்கெல்லாம் பதில் சொல்ற போது தான் அந்தக் கஷ்டம் புரியும். ரமேஷுக்கு இன்னும் தெரியாதுன்னு தான் நினைக்கிறேன். தெரிஞ்சா நிச்சயமா அவனுக்கும் இதெல்லாம் பிடிக்காதுன்னு தான் தோணுது. சரிம்மா, நான் கிட்ட இருக்கற பேங்குக்குப் போயிட்டு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். உங்களுக்கு கடையில ஏதும் வாங்கணுமா ?”

“ எனக்கு ஒண்ணும் வேணாம். நீ போயிட்டு வா. நா சமைக்கிறேன்.” ராகினி சென்றதும் கதவை மூடி விட்டு, சமையலறையில் நுழைந்து உருளைக்கிழங்கு இருக்கிறதா என்று பார்த்து எடுத்து அவளுக்குப் பிடித்த பொரியல் செய்ய ஆரம்பிக்கிறேன்.

000

வீட்டில் அப்போதெல்லாம் ஒரு பணிப்பெண்ணுக்கு இருக்கக்கூடிய மதிப்பைத்தான் எனக்குக் கணவனாய் இருந்த ஆள் கொடுத்திருந்தான். பல சமயங்களில் அதுவும் கூட இருந்ததில்லை. நேசம், நட்பு இவற்றையறியாத அத்தகைய ஒரு பிறவியை என் வாழ்வில் இதுவரை நான் கண்டதில்லை. பிள்ளைகளிடமும் கூட நட்பு இருந்ததில்லை.

இத்தனை நியாயம் பேசுகிறாளே ராகினி, இவள் எத்தனை முறை பகலில் நான் ரகசியமாகக் கண்ணீர் விடும் போது என்னிடம் காரணம் கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் பிஞ்சு மனதில் நஞ்சு வேண்டாமே என்று எண்ணி, அம்மாவுக்கு வயிற்றுவலி என்றோ, இல்லை அம்மாவுக்கு தலை வலி என்று பல விதமாய் கூறி மழுப்பியிருக்கிறேன். நட்புக்காக ஏங்கிய அந்த நாட்கள் இன்றும் பசுமையாய் இருக்கின்றன. மருந்திற்கும் கூட நான் வேண்டி ஏங்கிய நட்பு கிடைக்காததாலேயே அந்த ஆளுக்குத் தேவையாயிருந்த ஒன்றே ஒன்று எனக்கு பெரும் வெறுப்பைக் கொடுத்தது. இந்நிலையில், இன்றைய தேதியில் கல்யாணம் எனக்குத் தந்த பொருள் ‘நட்பு ‘ மட்டுமே. வயதும் ஒரு காரணமாய் இருக்கலாம். இதையெல்லாம் நான் பெற்ற பிள்ளைகளுக்கே கூட புரியவைக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

அப்போதெல்லாம் தோன்றாதது இப்போது ஏன் என்கிறாள். அப்போது தோன்றியிருந்தாலும், நானும் தேடி ஒரு நட்பைப்பெற்று, மணமுடித்திருந்தால் மூவரின் கதியென்னவென்று யோசிக்கத் தோன்றவில்லையே அவளுக்கு. என் மூன்று குழந்தைகளுக்கும் எந்த விதமான சிரமங்களும் கூடாதென்றே நான் ஒரே மனதாக அவர்களை தனியாளாய் வளர்க்கத்தொடங்கினேன். இப்போது எல்லோருமே நல்ல நிலையில் அவரவர் வாழ்க்கையில் ஒன்றிய பிறகு, எனக்கு இருக்கும் இந்தத் தனிமை என் பழைய ஏக்கத்தை மறுபடியும் துளிர்ப்பித்துள்ளது. இது இவர்களுக்கு ஏன் இத்தனை மனசஞ்சலத்தைக் கொடுக்கிறது என்று தான் புரியவில்லை. இதையெல்லாம் சொன்னால், தன் கடமையைச் செய்து விட்டு அம்மா சொல்லிக் காண்பிக்கிறாள் என்று தோன்றும்.

ஒருவழியாக ராகினிக்குப்பிடித்த மீன் சம்பாலும் உருளைக்கிழங்கு பொரியலும் செய்து முடித்து மின்விசிறியடியில் உட்கார்ந்ததுமே, ராகினி வந்தாள்.

“பயங்கரமான வெயில்மா. கொடையாவது எடுத்துகிட்டுப் போயிருக்கலாம் . மறந்துட்டேனே,உஸ் அப்பாடா,..”, என்று உட்கார்ந்தவளின் கையில் குளிர்சாதனைப் பெட்டியிலிருந்து எடுத்த தண்ணீரை புட்டியுடன் நீட்டுகிறேன். அப்படியே மடமடவென்று குடிக்கிறாள்.

“ உனக்குப்பிடிச்ச சமையல் செஞ்சிருக்கேன், சாப்பிடாம நீ பாட்டுக்கு கிளம்பிடாத. இப்போ சாப்பிடுவோமா, இல்ல கொஞ்சம் நேரம் போகட்டுமா ?”

‘இல்லம்மா, ஒரு மணி நேரம் போகட்டும்மா”, என்று இருக்கையிலேயே சாய்கிறாள். “சாப்பிட்டுட்டு நா கிளம்பறேன்மா. பிள்ளைங்கள இன்னிக்கி வெளிய கூட்டிட்டுப் போறேன்னிருக்கேன்”, என்கிறாள்.

“ ஆமா, ப்ரியாவும் சரி, நீயும் சரி வரதே இல்ல. போன் அடிக்கறதோட சரி. வந்தாலும் தங்கறதில்ல. ஓடறீங்க.”

“ என்னம்மா செய்யறது. வேலைக்கு போவணுமே. இன்னிக்கி உங்க கூட பேசத்தானே வந்தேன்.”

“பேசவா வந்த,சண்ட போடத் தானே வந்த ?”

“ சண்டையெல்லாம் ஒண்ணுமில்லையே. ஆனா நீங்க நினைக்கிறது மட்டும் வேணாம்மா. சரியா வராது. நீங்க வேணா பாருங்களேன். இதுனால எத்தன பிரச்சனைகள் வரப்போகுதுன்னு. நாலு பக்கத்துலேயிருந்தும் கேள்வி கிளம்பும். சரி, சரி வரீங்களா சாப்பிடலாம்.”

இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கைப்பையைத் தூக்கிக் கொண்டு

மறுபடியும் அடுத்த வாரம் வருவதாய் சொல்லிவிட்டுக் கிளம்பிச்சென்று விடுகிறாள்.

0 0

இன்றைய தேதியில் நான் இருக்கும் வீடு தவிர , வங்கிக்கணக்கில் கணிசமான தொகையும் உள்ளதால் என் நிலை பரவாயில்லை. அதுவும் இல்லையென்றால், யோசிக்கவே முடியவில்லை. பொருளாதாரத் தேவைகளுக்கும் மற்றவரை நாடும்படி இருக்கும்.அமெரிக்காவுக்கே தன்னுடன் வந்துவிடும் படி ரமேஷும் எத்தனையோ முறை சொல்லி விட்டான். பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு போவதற்கு மனமில்லாமல் ‘இப்போ வரேன் ‘, ‘அப்போ வரேன் ‘ என்று தள்ளிப் போட்டபடியிருக்கிறேன். ஏதோ ஓரிரு மாதங்களுக்கு வேண்டுமானால் போய் வரலாம். அதுவும் அங்கு குளிர்காலம் இல்லாத நேரமாய் போகவேண்டும். இல்லையென்றால், என் மூட்டு வலி தலை தூக்கி என்னோடு

உடன் இருப்போரையும் சேர்த்து பாடாய் படுத்தி விடுமே. மாலை இத்தனை நேரமாகியும் ரமேஷ் இன்னும் அழைக்கவில்லையே என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது.

டிரிங் டிரிங் ,..

தொலை பேசியை எடுத்தால் ரமேஷே தான் ! “காலையிலேயிருந்து உன்னோட போனத்தான் எதிர் பார்த்தபடி இருக்கேன். ரமேஷ் எப்பிடியிருக்க ? மது நல்லாயிருக்காளா ? வேலை அதிகம்னு சொன்ன, போன் பண்ண மாட்டியோன்னு நினைச்சேன்.”

“ அம்மா நான் நல்லா இருக்கேன். மதுவும் நல்லா இருக்கா. இப்போதான் ராகினி போன் செஞ்சா. விவரமெல்லாம் சொன்னா. விளம்பரம் கொடுத்திருக்கீங்களாமே ? ம் ,.. ஆமாவா ? நீங்க உடனே கிளம்பி இங்க வாங்கம்மா. தனியா இருக்கறது உங்களுக்கு சிரமமா இருக்குன்னு தெரியுது. நான் டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யறேன். சீக்கிரமே வந்து சேருங்கம்மா.” — அவன் குரலில் அக்கறையோடு சிறு எரிச்சலும் தெரிந்தது.

“இருப்பா, இரு. இப்ப என்ன ஆயிடிச்சின்னு அக்காளும் தம்பியும் குதிக்கிறீங்க. இப்போ நான் அங்க வராப்புல இல்ல. உன்னால முடிங்ச போது வா. முடியறப்பயெல்லாம் போன் அடி. நான் அப்புறமா வரேன்.”

“ இங்கயும் வரமாட்டாங்க. தனியா இருக்கறதால ஏதேதோ செய்யத் தோணுது உங்களுக்கு.” — அலுத்துக்கொண்டான்.

“ கொஞ்சம் இரு. நீ என்ன விடலப்பையன் கிட்ட பேசறா மாதிரி பேசற. நான் தனியா இருந்துகிட்டு ஏதேதோ செய்யிறேனா ? எனக்கு ஒரு நட்பு தேவைன்னு தோணினதால விளம்பரம் கொடுத்தேன். இது உங்களுக்கெல்லாம் பிடிக்கலன்னும் தெரியுது. நீங்கல்லாம் கொஞ்சம் பொறுமையா நல்லா யோசிங்க. அப்ப புரியும்.”

சிறிது நேரம் மறுபுறத்தில் மெளனம் நிலவியது. யோசிக்க ஆரம்பித்து விட்டானோ ?“அம்மா நம்ம ஜனங்க, சொந்தக்காரங்க எல்லாரும் சிரிப்பாங்கம்மா.”

“ம்,. அவங்கல்லாம் தானே நா ஒத்தையா நின்னு கஷ்டப்பாட்டு உங்களையெல்லாம் வளத்தப்ப கூட வந்து நின்னு கை கொடுத்தாங்க. என்ன ரமேஷ் பேசற நீ. அமெரிக்காவுல இருக்கற உன்கிட்டயிருந்து இத நான் எதிர் பார்க்கல”,ஏமாற்றத்துடன் நான் சொன்னதும்,

“ அம்மா, இருக்கறது அமெரிக்கான்னாலும் ஆப்பிரிக்கான்னாலும் அடிப்படையில நானும் ஒரு இந்திய இனத்தச் சேர்ந்தவன் தானே ? அம்மா எனக்கு வேலை அதிகமாயிருக்கு. இன்னும் ரெண்டு வாரத்துக்கு நான் போன் பண்ணுவேன்னு தோணல. ஏதாவதுன்னா நீங்க தான் போன் அடிக்கணும், சரியா ?” — ரமேஷ் சொல்கிறான்.

“ என்னப்பா திடார்னு வேல அதிகமாயிடிச்சா ? “

“ இல்லம்மா ஒவ்வொரு வருஷமும் இதே நேரத்துல எனக்கு வேலை கூடுமேம்மா. நீங்க மறந்துட்டாங்களா ? சரிம்மா நா வரேன். நீங்க யாரையாவது நல்லவருன்னு நம்பிடப் போறீங்க, முடிவெடுக்கறதுக்கு முன்னாடி எங்க கிட்டயும் ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்மா நீங்க. சரி இனிமேலாவது ப்ரியா, ராகினிய கலக்காம ஒண்ணும் செய்யாதீங்க. மலேசியாவுக்கு மாமா வீட்டுக்கு போயிட்டு வாங்களேம்மா. “

“ வேணாம்ப்பா. நீ கவலப்படாத. நான் நல்லாதானே இருக்கேன். விளம்பரம் குடுத்தா என்ன, தகுந்த வயதான ஒருத்தர் எனக்குப் பிடிக்கிறாப் போல கிடைக்கணுமே. எதானாலும் போன் அடிச்சி சொல்றேன். நீ கவலப்படாதே. வேலையில சாப்பாட்ட மறந்துடாத. வேளைக்குச் சாப்பிட்டு ரெஸ்ட் எடு ரமேஷ்.சரியா ?”

“சரிம்மா. நா வைக்கறேன். நீங்க உடம்பப்பார்த்துக்குங்க. மூட்டு வலி வந்தா உடனே டாக்டரப் போயிப் பாருங்க.”

“சரிப்பா. போன வைக்கிறேன்.”

ரமேஷின் குரலைக்கேட்டதும், எனக்கு வழக்கம் போலவே அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. இரவு தூங்கி எழுந்ததும் சரியாகி விடும். எதற்கும் இல்லாத ஆற்றல் இந்த காலத்திற்கு மட்டும் அல்லவோ இருக்கிறது!

0 0

‘வசந்தம் சென்ட்ரல் ‘ வழங்கிய நாடகத்தில் ஒன்ற மறுத்தது மனம். கண்கள் தன்னிச்சையாக திரையில் ஆழ்ந்திருந்தபோதிலும், ரமேஷுடன் பேசிய உரையாடல் தான் மனத்தில் ஓடிய படியிருந்தது.என் மகன் என் நிலையைப் புரிந்து கொள்வான் என்று நம்பிய என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. நான் தான் அதிரடியாக முடிவெடுத்து விட்டேனோ ? அப்படியும் இல்லையே! நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகவே யோசித்துத் தானே விளம்பரம் கொடுக்கப்போனேன். அமைதியாக முடிந்திருக்க வேண்டியதைப் பத்திரிக்கையாளர்கள் கதையாகக் கொடுத்தது தான் தவறாகி விட்டது. இதற்குச் சம்மதித்திருக்கக் கூடாது. ஆரவாரம் தான் ப்ரியாவிற்கும் ராகினிக்கும் பிடிக்கவில்லை. ஆனால், இதை நானே எதிர் பார்க்கவில்லையே!

மறுபடியும் தொலைபேசி சிணுங்க, ப்ரியா தான் பேசினாள்.

“அம்மா நான் என்னோட ரூம்லேயிருந்து பேசறேன். அவரும் டாவி பார்த்துகிட்டிருக்காரு. அக்கா வந்தாளாமே. போன் அடிச்சா. விவரமெல்லாம் சொன்னா. உங்க பிரச்சனை எங்களுக்கு புரியுதும்மா. நான் நாளைக்கு லீவு போட்டிருக்கேன். காலையில வந்து உங்கள ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போகப் போறேன்.”

“ எங்க ?”

“ வாங்களேன் காலையில போவோம். உங்களுக்கு ரொம்பப்பிடிக்கும்மா.”

“ கோயிலுக்கா ? ‘

“இல்ல. காலையில பார்க்கலாம். வச்சிடறேன். பை மா.”சட்டென்று தொலைபேசியை வைத்தும் விடுகிறாள். இவள் எங்கு அழைத்துக் கொண்டு போகப்போகிறாள் ? பெரிய மர்மாக புதிர் போட்டு விட்டு மேலே பேசாமல் வைத்தும் விட்டாளே ?! எல்லோரையும் விட வயதில் சிறியவளாக வளர்ந்திருந்த காரணத்தாலேயே ப்ரியாவிற்கு வீட்டில் என்னைத் தவிர,அண்ணன் மற்றும் அக்காவிடமும் செல்லம் அதிகம்.படபடவென்று பேசுவதில் விவரங்கள் அதிகம் இருக்காது. பொறுமை குறைவு. ராகினி மூத்தவள் என்ற காரணத்தாலேயோ என்னவோ நிதானம் உடன் வளர்ந்திருந்தது. ரமேஷிற்கு என்னிடம் மற்றவரை விட பாசம் அதிகம். ஆனால் மூவருமே இப்போது அவரவர் குடும்பம் வேலையென்றானதும் என்னைப் பற்றி நினைப்பது குறைவு;இதுவும் காலத்தின் கட்டாயம். அவர்களையும் சொல்லியும் குற்றமில்லையே.

ஏறி வந்த வாகனத்தையும் ஓட்டி வந்த ஓட்டுனரைமட்டுமே நினைத்திருந்தால் மேற்கொண்டு ஆகவேண்டிய அலுவலகங்களில் வேலைகள் ஆகுமோ, இல்லை முன்னேற்றம் தானிருக்குமா ?!நாளை ப்ரியா எங்கே அழைத்துப்போகப்போகிறாள் என்று என்னால் ஊகிக்கவே முடியவில்லை. இரவுக்கஞ்சியைக் குடித்து விட்டு சிறிது நேரம் படித்துக்கொண்டே தூங்கி விட்டேன்.

காலையில் எழுந்திருக்கும் போதே புது உற்சாகம் உடம்பிலும் மனதிலும் இருப்பதை உணர்ந்தேன். காலையில் தினசரி நடப்பது வழக்கமாதலால், காலணியை மாட்டிக்கொண்டு நடக்கப்போனேன். வழியெல்லாம் தெரிந்த முகங்கள்; பலர் பதிலுக்குப் புன்னகைத்தனர்.இன்று ப்ரியா வருவதாய் சொன்னது நினைவில் வந்ததும் எங்கே கூட்டிக்கொண்டு போகப்போகிறாள் என்று நடந்தவாறே யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு விவரமும் அவள் சொல்லாததால், கேள்விக்கு பதில் கிடைக்கவே இல்லை.

நடந்து விட்டு, வீடு வந்து சேர்ந்து ஐந்து நிமிடங்கள் இளைப்பாறினேன். பிறகு குளித்து விட்டு குளியலறையிலிருந்து வெளியில் வரவும், ப்ரியா வந்து சேரவும் சரியாக இருந்தது.

“ வா ப்ரியா, இந்நேரத்துக்கு, வேலைக்குப்போகாத நாள்ள நீ படுக்கையை விட்டு எழவே மாட்டியே, இன்னிக்கி என்ன சீக்கிரமே எழுந்திட்டியா ?” — சிரித்தபடி நான் கேட்டதும், “இன்னிக்கி, எனக்கு இதவிட வேற முக்கியமான வேலை இல்ல. அதான் தினமும் போலவே எழுந்திட்டேன். ரமேஷ் போன் அடிச்சானா ?” என்று எதிர் கேள்வி கேட்டாள்.

“ ஆமா போன் அடிச்சான். மாப்பிள்ள எப்பிடியிருக்காரு. சீனாவுக்கு வேல விஷயமா போகப்போறாருன்னியே, எப்போ போகப்போறாரு ?”

“போயிகிட்டே பேசுவோம்மா. வெளிய பசியாறிக்கலாம். நீங்க கிளம்புங்க, ம், சீக்கிரம்மா”, காலில் சுடு கஞ்சியைக் கொட்டிக்கொண்டவள் போல தவித்தாள்.

“ என்ன அவசரம் இப்போ ? ஆமா எங்க போறோம்.”

“ வாங்க, உங்களுக்கே புரியும். இந்த ஐடியாவே உங்க மாப்பிள்ளையோடது தான்.”

உடையை மாற்றிக்கொண்டு அவளுடைய அவசர நடைக்கு ஈடு கொடுத்து கீழே வந்தால், வாடகை உந்துவண்டியைக் கை நீட்டி நிறுத்தினாள். செம்பவாங்கிலிருந்து கிளம்பினோம். ஓட்டுனரிடம், ‘ஈஷுன் ‘ என்றதும், “ப்ரியா, ஈஷுன்ல எங்க போறோம் ?” அடக்கமுடியாமல் நான் கேட்டது, “அம்மா அங்க நாராயண மிஷன் முதியோர் இல்லத்துக்கு தான் போறோம்”, என்றாள் ப்ரியா.

“யாரப்பாக்க ?”

“யாரையுமில்ல.”

“பின்ன ?”

“அம்மா, இந்த நாலு வருஷத்துல நேத்திக்கி தான் உங்க மாப்பிள்ள உருப்படியா ஒரு யோசனை சொல்லியிருக்காரு. உங்களுக்கு அந்த இடம் பிடிச்சிருந்தா, அங்க தங்கிக்கலாம். நல்லா கவனிப்பாங்க. நிறைய பேர் இருக்காங்க. நீங்க எதிர் பார்க்கற பேச்சுத் துணைக்கு குறைவே இருக்காது.”

“ இது எதுக்கு ? நானென்ன என்னோட வேலைய செய்ய முடியாமயா இருக்கேன். இந்த மூட்டு வலியத் தவிர எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லயே. நான் பாட்டுக்கு இருக்கேன். நா ஏன் இங்க வந்து தங்கணும்.”

“ கோவப்படாதீங்கம்மா. உங்களுக்குத் தனியா இருக்க கஷ்டமா இருக்கில்ல, அதான்.”

“ ப்ரியா, எனக்குப் பிடிக்கல்ல”, வண்டியில சத்தமாகக்கூட என்னால் பேச முடியவில்லை. இந்தத் திருப்பம் எனக்குப் பிடிக்கவில்லை.

“ப்ரியா நீ ஏன் என் கிட்ட சொல்லல்ல ? வா, திரும்ப வீட்டுக்கே போயிடலாம்.”

“ஏம்மா ?ப்ளீஸ்.”

“ வீட்டுக்குப் போயி சொல்றேன்”

“ சரி, சும்மா போயிப் பார்ப்போமே,ப்ளீஸ்.பிடிக்கல்லன்னா தங்கவே வேணாம். ஈஷுனுக்குள்ளயே வந்தாச்சி. அங்க பாருங்க நாராயண மிஷன் தெரியுது.”

0 0

வண்டிச்சத்தத்தைக் கொடுத்து விட்டு ப்ரியா வருவதற்குள், நான் சுற்றும் முற்றும் ஒருமுறை நின்ற இடத்திலிருந்தே பார்க்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை கூட்டாளி ஒருவரின் சொந்தக்காரைக் காண நான் வந்திருந்தும் ஏனோ அங்கு முதல் முறை வருவது போல உணர்ந்தேன். ஒரு புறம் ப்ரியாவிடம் எனக்குக் கோபம் இருந்தது. ஆனால் அதையும் மீறி ஏதோ ஒரு புதிய உணர்வு! சற்று நேரத்தில் ப்ரியா என்னோடு மெளனமாய் நடந்தாள். உள்ளே சென்றதுமே, வரவேற்பறையில், ‘நீங்கள் தான் ப்ரியா ரகுராமனா ? ‘ என்று கேட்டதுமே, முன் தினமே தொலைபேசியில் இவர்களுடன் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறாள் என்று புரிந்தது. அங்கு ப்ரியா பேசிக்கொண்டிருக்கும் போதே, என்னை மட்டும் தாதி ஒருத்தி புன்னகையுடன் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாகச் சுற்றிக் காட்டினாள்.

காலை உணவு நேரமாதலால், சாப்பாட்டுக் கூடத்தில் கூடியிருந்தனர் முதியோர் அனைவரும். இருந்தவர்களில் பெரும்பாலும் என்னை விட மூத்தவர்கள் தான் அதிகமாயிருந்தனர். சுருக்கங்கள் விழுந்த அந்த முகங்கள் ஒவ்வொன்றிலும் இருந்த கதைகளை என்னால் படிக்க முடிந்தது. அன்பு, பாசம் , நேசம் மற்றும் நட்பை என்னைப்போல அவர்கள் எல்லோருமே எதிர் பார்க்கிறார்கள் என்பது எனக்கு அந்தச்சூழலில் உணர முடிந்தது. ஆங்காங்கே சில இளைஞர்கள் முதியோருக்கு உதவிக்கொண்டிருந்தனர். சிலருக்கு கைகளும் விரல்களும் ஒத்துழைக்காததால், கஞ்சியை கரண்டியால் சிறிது சிறிதாக ஊட்டி விட வேண்டியிருந்தது. சிலருக்கு நடக்க உதவி தேவையாகயிருந்தது என்பதால் கைத்தாங்கலாய் அழைத்துச் சென்றனர்.இவர்களுக்கெல்லாம் என்னைப்போன்றே ஒரு வகைத் தேடல் இருந்திருக்கும்; விடை எத்தனை பேருக்குக் கிடைத்திருக்குமோ ?! வருடக்கணக்காக வெளிச்சத்தைத் தேடியலைந்த எனக்கு வெளிச்சம் தெரிந்தது. வெளிச்சத்தைத் தேடுவதை விடுத்து ஏன் நானே வெளிச்சமாக ஆகக்கூடாது என்று தோன்றியது.

“அம்மா, என்னம்மா இடம் பிடிச்சிருக்கா ? என்ன நினைக்கிறீங்க ?,ப்ரியா என் தோளைத்தொட்டுக் கேட்டதும் தான் நான் அவளுடன் வந்திருந்ததே நினைவிற்கு வந்தது.

“ம்,.. என்ன கேட்ட ?”

“ இல்ல,.. இந்த இடம் நல்லா இருக்கான்னு கேட்டேம்மா.”

“ நல்லா ரொம்ப இருக்கே. ரொம்ப நல்லா, அமைதியா இருக்கு.”

“அப்ப இங்கயே இருக்கீங்களாம்மா ?”

“இங்கயேவா ?”

“பின்ன ?”

“இங்கயே இருக்கமுடியாதும்மா.”

“அப்பிடின்னா ?

“எல்லா முதியோர் இல்லத்துக்கும் போகணுமே, அப்பத்தானே எனக்கு நிறைய பேரைப் பார்க்கமுடியும்.ப்ரியா இன்னும் வேற எங்கேயெல்லாம் சிங்கப்பூருல இது போல முதியோர் இல்லம் இருக்குன்னு சொல்லு.”

“ என்னம்மா சொல்றீங்க ?”

“ நான் நல்லா தானே இருக்கேன். நானே ஏன் தொண்டூழியம் செஞ்சி, நான் தேடின நேசம், நட்பு மற்றும் அன்ப இவங்களுக்கெல்லாமும் கொடுக்கக்கூடாதுன்னு

நினைச்சேன். சரி இனிமே இது தான் நல்லதுன்னு உடனே தீர்மானமான முடிவும் பண்ணிட்டேன்.”

“ அப்ப அந்த விளம்பரம் ?”

“ எது ? ஓ ,அதச்சொல்றயா ? அது சரியான தீர்வுன்னு நினைச்சேன். ஆனா அதுனால எனக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய நட்பை இன்னும் பல பேருக்கு நான் கொடுக்கமுடிம்னா, அது தானே நல்லது. எனக்கும் நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. தவிர குடும்பத்துல யாருக்குமே பிடிக்காததையும் நா ஏன் செய்யணும் ?”

“அம்மா, வாலண்டரி சர்விஸ் செய்யவும் உடம்புல தெம்பு வேணும்மா. ஈஸியொண்யில்ல. சொல்றது ஈஸி. செய்ய வேணாமா,..”

“ப்ரியா, இவங்களோட பேசி, இவங்க பேசறதக்கேட்டு, அவங்களுக்கு என்னால முடிஞ்சத உதவி செஞ்சா எனக்கு வயசு கொறஞ்சிடும், நீ வேணாப் பாரேன், நான் இன்னும் சுறுசுறுப்பா ஆயிடுவேன். இப்போ தான் எனக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை அமைஞ்சதா மன நிறைவா இருக்கு. உனக்கு தான் நன்றி சொல்லணும் ப்ரியா.”

“ என்னம்மா சொல்றீங்க ?”

“ ஆமாம் ப்ரியா, எனக்கு இன்னிக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாளிதழுக்கு போன் அடிச்சி, நானே பேசிடறேன். யாரும் தகவல் கேட்டா கொடுக்க வேண்டாம்னு சொல்லிடணும். எனக்கு இது முன்னாடியே தோணாம போச்சேன்னு நினைக்கிறப்போ தான்,..”

“நீங்க கோபப்படுவீங்கன்னு தான் நான் எதிர் பார்த்தேன்.முதியோர் இல்லத்துல பெற்றோரை விடறதுன்றது கேவலமா தானே பொதுவா எல்லாரும் நினைக்கிறாங்க. அதனால நானும் ரொம்ப பயந்துகிட்டே தான் உங்களக் கூட்டிட்டு வந்தேன்.”

இருவரும் அங்கிருந்து கிளம்பினோம். இனிமேல் ரமேஷை இரவில் தொலைபேசியில் அழைத்துப்பேசச் சொல்லவேண்டும். பகலில் நான் வீட்டில் இருக்கமாட்டேன் என்றும் மறக்காமல் விவரங்களைச் சொல்லி விடவேண்டும். நூலகத்திலிருந்தும் வாரம் நான்கு புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம்.

பெட்டியில் பத்திரமாய் இருக்கும் என் கதைப் புத்தகங்களை தூசு தட்டி எடுத்து வைக்க வேண்டும். இனிமேல் அவை நிறைய உதவியாக இருக்கும்; படித்துக் காண்பிக்கலாம் இந்த புதிய நண்பர்களுக்கு.

———–தமிழ் முரசு 20-4-02 / 27-4-02 —————————-

Series Navigation