சாரங்கா தயாநந்தன்
கார்க்கண்ணாடியூடாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். பார்வை விளம்பரச் சுவரொட்டியில் பிரிக்கமுடியாது ஒட்டியிருந்தது. அவன் திரும்பி வருவதற்குள் அந்த விளம்பரத்தை விழிகளால் விழுங்கி விடுகின்ற தீவிரம். பதினைந்து நிமிடக் காத்திருப்பின் சலிப்பை அவளில் தவிர்க்க வேண்டி அவளையும் கூட வரும்படி அவன் கேட்டபோது தன் ஆர்வமின்மையைப் வெளிப்படுத்தி அவனைப் போய் வரும்படி சொன்னபொழுதிலேயே அந்த ரோஜாவர்ணச் சுவரொட்டி அவள் விழிகளில் விழுந்து மனதில் இறங்கி நினைவுகளை உக்கிரமாய் உலுக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அவன் அதை அறிந்து விடாதிருக்க அவள் மிகுந்த முயற்சி எடுக்கவேண்டியிருந்தது. அவன் சற்றே குனிந்து பரிவோடு ‘போய்வருவதாகச் ‘ சொன்னபோது மெல்லத் தலையசைத்தாள். ஆனால் அதே பொழுதில் ‘அந்தப் பரிவும் நேசமும் காலகாலமும் நிலைத்திருக்குமோ ‘ என்றெண்ணி ஏங்கினாள்.
சுவரொட்டி அதீத அழகுடன் கண்களை அள்ளியது. அதில் உலகத்து மகிழ்வும் நேசமும் ஒட்டுமொத்தமாய்த் தேக்கித் தன் ஆரோக்கியமான குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளந்தாய். தாயின் இடுப்பின் இருபுறமும் தன் குளுகுளுத்த கால்களைப் போட்டிருந்த குழந்தை, ஒரு பூந்தளிராய், மடியிலிருந்து முழங்கால்வரை நீண்டு படுத்து, தாய் முகம் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அருகில் அக்குழந்தையின் முடிவுகாணமுடியாத ஆனந்தத்தின் காரணம் தாமேயென வெட்கமற்றுப் பொய் சொல்லும் மென்மையான மேனித்தைலங்கள். வரிசைப்படுத்தப்பட்டிருந்த அப் போத்தல்களை இரக்கம் மீதுரப் பார்த்தாள். சடுதியாக அவளது பார்வையை வலிந்திழுத்து மீண்டும் தன் மேனி மீது ஊரவிட்டது குழந்தை.
குழந்தைகளோடு விலகாது இணைந்துள்ள ரோஜாவர்ணம் மனதை சுகமாய் வருடிற்று. ஆனால் இதன் சற்றே வன்மையுற்ற வர்ணம் அவள் வாழ்வை உலுக்கும் நிரந்தரமான பயமாக, வேதனையாக, அவமானமாக வாழ்ந்து வருகிறது. முன்பொருநாள் அதே வர்ணம் அவளது தூய்மையான வெண்ணிறச் சட்டையின் பின்புறம் கலங்கலாக முகங்காட்டி அனைத்து உறவுகளிலும் மலர்வள்ளி எற்றியது. தொடர்ந்து மெல்லப் பூவிதழாய் விரிந்த பருவம் அவளில் வனப்பள்ளிக் கொட்டியது. பார்ப்பவரை மீண்டும் ஒருமுறை பார்க்கச் சொல்லும் வசீகரம் அவளது. நோக்கமற்றுத் துளித்துவிட்டுப் போகும் மழைத்துளிகளைக் கவனமாகத் தேக்கி வைத்து சிலமாதங்களின் பின்னர் பூக்களாய் முகம் மலர்த்தும் இயற்கையின் இரகசியம் பெண்ணின் மென்பூப்பில் பொதிந்திருப்பதாய்த் தோன்றும் அவளுக்கு. வாலிபர்கள் மீது வீசத்தக்க அலட்சியத்தை அவள் விழிகளிலும் பரப்பி பல ரகசியச் சிலிர்ப்புக்களை மனதிற்கு அறிமுகப் படுத்திய அதே வர்ணத்தைத் தான் அவளுக்கு இப்போது நேசிக்க முடியாமல் இருக்கிறது.
தூரத்தில் அவன் வருவது தெரிந்தது. குழந்தைகள் நேரத்தை விழுங்கி விடுவதாகத் தாய்மார் அலுத்துக் கொள்வதை அவளிலும் நிரூபித்துவிட்டு நிமிஷங்கள் விலகியிருந்தன. அவை ஊற்றியிருந்த துயரத்தைத் துடைக்கும் எத்தனிப்போடு வேறுதிசை திரும்பினாள். அவளது ஆற்றாமைகளை அறிகிறபோது அவன் மனம் கருகுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.
‘ ‘வெயிற் பண்ணச் சிரமமாயிருந்ததா அகலி…. ‘ ‘
‘ ‘ச்சீ… இப்பதான் போனது போல இருந்தது… ‘ ‘
மிருதுவான புன்னகையோடு அவனை எதிர்கொண்டாள். மீண்டும் ஒருமுறை தன்னைப் பார்க்கும்படி விளம்பரக்குழந்தை தூண்டினாலும் பார்வையை வலிந்து வீதிக்குத் திருப்பினாள். பரபரப்பாய் உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. வர்ணச்சிதறல்களாய் கடக்கும் இளம் பெண்களை விட மெல்ல வயிறுப்பிய இளந்தாய் ஒருத்தியாலேயோ அல்லது ஒரு பிள்ளைகளுடன் ‘இழுபடும் ‘ குடும்பத்தினாலேயோ இலகுவாக ஈர்க்கப்படத்தக்க தன் விழிகளுக்காய்க் கழிவிரக்கம் கொண்டாள்.
குழந்தைகளே உலகின் மகிழ்வையும் நிறைவையும் தீர்மானிப்பதாய் உணர்ந்தாள் அவள். பகல்கள் ஓடிவிட்டாலும் இரவுகளைக் குழந்தைகளின் நினைவுகள் ஆக்கிரமித்துக் கொள்வதைத் தவிர்க்க மாட்டாது தினமும் தவிப்பாள். முன்பொருநாள் இவள் சின்னஞ்சிறுமியாய் இருந்தபோது, இருளடர்ந்த இரவுகளை ஒளியேற்றப் பாட்டி சொன்ன, வெண்பட்டுத்துகில் சரிய வானிலிருந்து இறங்கி வருகின்ற தேவதைக் கதைகள் நினைப்புக்கு வரும். அவ்வாறு ஒரு தேவதையேனும் அவளுக்காக இரங்கக் கூடாதா ? என்றுகூட நினைப்பாள். அருகில் சுகந்துய்த்த நிறைவோடு திரும்பிப் படுத்துத் தூங்கிப் போயிருக்கும் அவனைப் பார்க்க மனம் நைந்து போகும். சூடாய் வழியும் கண்ணீணீணீணிரை மெல்லத் தலையணையில் ஒற்றித் திரும்பிப் படுப்பாள். உடைகளின் தொந்தரவற்று மென்பஞ்சு மெத்தையுள் புதைந்து கிடக்கும் அவளது மனம் மட்டும் முள்படுக்கையில் உருண்டு தவிப்பதை அவனறியாமல் மறைப்பாள். கூடலின் மகிழ்வைக் கூட குழந்தைக்கான எதிர்பார்ப்பு மேவிவிடுகிறது.
திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. மூன்றாம் வருடத்தின் தொடக்கத்திலேயே குழந்தை பற்றிய ஏக்கம் பயமாய் விரியத்தொடங்கி விட்டது. இவர்களது திருமணவருடத்தை நினைப்பிலிருத்தி, உள்மனத்தைச் சாகடிக்கத் தக்க
கேள்விகளை ஊர்கேட்கத் தொடங்கிவிட்டது. அவளை நன்கு தெரிந்த நடுத்தர வயதுப் பெண்மணிகள் அவளிடம் தம் நாக்கை ஒரு தேளின் கொடுக்காய் விரிப்பார்கள். ‘விஷேஷம் ‘ பற்றி விசாரிப்பார்கள். அவர்களின் கடைவாயோரம் வசிக்கின்ற ஏளனச்சிரிப்பு அவளின் ஆழ்மனத்தை உலுக்கும். அவன் அத்தகைய நிலைகளை எதிர்கொள்வதில்லை. அவனிடம் அக்கேள்விகளைக் கேட்கும் துணிச்சல் எவரிடமும் இல்லை. இருவரிடமும் குறையில்லை என்றுதான் மருத்துவர் சொன்னார். அவ்விதமாயின் ‘அது ‘ ஏன் நிகழாதிருக்கிறது ?
‘ ‘என்ன கடுமையான யோசினை போல கிடக்குது ? ‘ ‘
‘ ‘தாலி கட்டிற நேரத்துக்கு முன்னம் போயிடுவமோ எண்டு யோசிக்கிறன்…. ‘ ‘
கூசாமல் பொய் சொன்னாள். ‘பொய்மையும் நன்மையுடைத்து ‘ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ‘குழலையும் யாழையும் பழித்து மழலைச் சொல்லின் மகத்துவம் சொன்ன மனிதர் ‘ அவரென்ற நினைப்பு தேவையே இல்லாமல் அவள் நெஞ்சில் ஓடிற்று. உலகின் சகல புள்ளிகளிலும் குழந்தைகளின் படிமங்கள் ஒன்றியிருப்பதை வகை பிரிப்பதற்கு தானாகவே கற்றுக் கொண்டிருக்கிற தன் மனத்தில் சொல்லமுடியாத ஆத்திரம் கிளர்ந்தது. எப்போது இது முடிவுக்கு வருமோ… ? அவன் திடாரெனத் திரும்பி அவளைப் பார்த்தான்.
‘ ‘இந்த மாதம்…. எத்தினை நாள் ‘தள்ளிப் ‘ போயிட்டுது… ?
அவளது மனதை வாசித்து விட்டானா என்ன ? திடுக்கிட்டு அவன் முகம் பார்த்தாள். அவன் சாதாரணமாக வீதியைப் பார்த்து காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். மெலிந்த குரலில் சொன்னாள்.
‘ ‘அஞ்சு நாளாகுது… ‘ ‘
‘ ‘இண்டைக்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்யிறது கஷ்டமில்லையா ? ‘ ‘
‘ ‘இல்லை…. ‘ ‘
மென்பஞ்சு ‘நாப்கின் ‘ நெருஞ்சிமுள்ளாய் மனத்தை உறுத்தியது.மாதமொருமுறை அவளது மனதோரம் துளிர்த்து வாடும் ‘ஒளிகாலும் நம்பிக்கைச்செடி ‘ இம்முறையாகிலும் தழைத்து விடக் கூடாதா ? அந்த ஏக்கத்தை மறைத்தபடியே வேறு கேள்வி கேட்டாள்.
‘ ‘போய்ச்சேர இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும் ?… ‘ ‘
‘ ‘பத்து நிமிஷத்திலை போயிடுவம்… ‘
தொடர்ந்து அதையும் இதையும் சம்பந்தமற்றுக் கதைத்தார்கள். அவனது பகிடிக் கதைகளுக்கு அவள் குலுங்கிச் சிரித்தாள். அவன் முகம் மலர்ந்தது. எத்துணை நேசமான புருஷன் அவன்! அவள் மனம் அன்பில் உருகி நெகிழ்ந்தது.
****
திருமணவீடு களை கட்டியிருந்தது. வர்ணக் கலவைகளாய் மக்கள் கூட்டம். வாண்டுக்கூட்டங்கள் அவர்களைக் குறுக்கறுத்து ஓடின. சந்தனநிறப் பட்டுப்புடைவை சரசரக்கக் காரை விட்டிறங்கி அவனுடன் கூட நடந்தபோது பல விழிகள் அவர்களை விழுங்கினாலும் திருமணமான பொழுதின் சந்தோஷத்தை அவளுக்கு உணரமுடியவில்லை. ‘ ‘என் கண்ணே பட்டிடும் போல… ‘ ‘ என்று பெற்ற தாயே வியந்திருந்த அவளது அழகுக்காய், அவர்களது ஜோடிப்பொருத்தத்துக்காக அவள் கொண்டிருந்த சந்தோஷத்தையும் ஒரு திருமணவீட்டில் தான் முதன்முதல் தொலைத்தாள்.
அன்றும் ஒரு வெளிச்சக்கொடியாய் புருஷனின் பக்கத்தில் ஒசிந்து நடந்தாள் இவள். இவளது தங்க நிறத்தில் தம் சோபையிழக்கின்ற மெல்லிய தங்க நகைகளில் விழுந்து அவள் மேனியழகை விழுங்கும் பெண்களின் கண்களைக் கவனியாதது போலக் கவனித்து உள்ளூரக் கர்வமிகும் மனத்தில் எச்சிலாய் விழுந்த அந்த வார்த்தைகளை இப்போதும் மீட்க முடியும் அவளுக்கு.
‘ ‘கலியாணம் முடிச்சும் அகல்யான்ரை வடிவு குறையேல்லை…. ‘ ‘
யாரோ ஒருபெண் ஏக்கம் வழிந்த குரலில் சொன்னாள். தங்க நிறத்தில் ஒளிக் கண்களோடு ஆஸ்பத்திரிக் கட்டிலில் கிடந்த இவளை அன்போடு தூக்கி அகல்யா என்று பெயர் வைத்தவர் தாத்தாதான். ‘எங்கட குடும்பத்துக்குக் கிடைச்ச விளக்கு… அகல்விளக்கு… வெளிச்சம்… அகல்யா… ‘ என்று சொல்லிப் படுத்தினாராம். அவள் வயதுகள் எல்லாவற்றிலும் அழகு ஒளிரத்தான் உலாவந்தாள்.
‘ ‘அகலி…அகலிக்குட்டி… ‘ ‘ என்று பிஞ்சு வயதில் பெற்றவர் செல்லங்கொஞ்சிய வார்த்தைகளை திருமணமான முதலிரவில் அவன் இரகசியமாய் உச்சரித்தபோது உடல் சிலிர்க்க அவனுள் மூழ்கிப் போனாள். ஆனால் வாழ்வு முழுதும் அவன் குழந்தையாய் அவளே இருக்கவேண்டியவிதிதான் அவனை அவ்விதம் அந்நாளில் அழைக்கவைத்ததோ என்றெண்ணிப் பின்னாளில் மனம் வருந்தியிருக்கிறாள்.
‘ ‘அதென்ன…பிள்ளையள் பெத்தஉடம்பே… கட்டுக்குலையிறதுக்கு… எனக்கு இந்த வயதிலை நாலாவது பெடியனும் பிறந்திட்டான்… ‘ ‘
கரகரத்த குரலில் எரிஅமிலமாய் மறுபெண் விசிறிய சொல் கேட்ட பிறகு சபைநடுவே நடக்கப் பயமாய் வருகிறது. அவளது பெண்மை பற்றி இரகசியமாய்க் கிசுகிசுக்கப்படும் சந்தேகத் தொனிகளை காற்று இழுத்து வந்து அவளில் மோதவைத்துவிடுமோ என்ற பயம் சகல உற்சாகங்களையும் சிதறடித்து விடுகிறது.
நல்லவேளை தாலிகட்டும் தருணத்துக்குச் சற்று முன்னரே வரமுடிந்திருக்கிறது. ஆண்களின் கூட்டத்தோடு அமர்ந்து கொள்கின்ற புருஷனை ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு திருமணமேடையிலிருந்து சற்றே விலகி அமர்ந்து கொண்டாள். சுமங்கலிப் பெண்கள் வியர்வை கசகசக்கும் பட்டுடைகளில் நெற்றிக் குங்குமத்தைப் அழுந்தப் பதித்தபடி பெருமிதத்தோடு நின்றுகொண்டிருந்தார்கள். இந்தப் பெருமைக்காகத் தான் பெண்கள் ‘கல்லானாலும் புல்லானாலும் ‘ புருஷர்களைக் கொண்டிழுக்கிறார்களோ ? இவளது திருமணப் பொழுதில் வயதான ஈஸ்வரிப்பாட்டி மனம் நிறைந்து வாழ்த்தினாள்.
‘ ‘நிறைஞ்ச சுமங்கலியாய் இரடி கண்ணு… ‘ ‘
‘ ‘அதென்ன பாட்டி…நிறைஞ்ச சுமங்கலி … ? ‘ ‘
முகங்கொள்ளாச் சிரிப்போடு இவள் கேட்டாள்.
‘ ‘எல்லாச் செல்வமும் கிடைச்சு ஆயுள் முழுக்கப் புருஷனோடை சேர்ந்து வாழுறது தான்… ‘ ‘
செல்வங்களுள் தலையான செல்வம் குழந்தைச்செல்வம் இல்லையா ? பாட்டியின் வாழ்த்துப் பொய்த்துத் தான் போகப் போகிறதோ ? தலைகுனிந்து நாணம் மிதுர அமர்ந்திருக்கும் மணப்பெண் நிறைஞ்ச சுமங்கலியாய் இருப்பாளோ என்னமோ. சின்னப் பையன் ஒருவன் மணமேடைக்கு முன்பிருந்த அரிசிக்கோலம் சிதைத்தபடி ஓடினான். பெரியவர் ஒருவர் அவனை ஆத்திரத்தோடு அதட்டினார். கோல அரிசி விதவித வர்ணங்களில் பரந்திருந்தது. நீலம், ரோஜாவர்ணம், மஞ்சள், பச்சையாய் முகம் காட்டும் தானியமணிகளின் பொய்மை அவள் மனத்தைச் சுட்டது. தாய்மையற்ற பெண்மையும் பொய்மையோ ? சிந்திக்கத்தெரிந்த மனந்தான் துயரங்களின் மூலகாரணம். அது ஏன் அவளுக்கு வந்து வாய்த்தது ?
புரோகிதர் புரியாத பாஷையில் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். மணமக்கள் அவர் ஆட்டி வைக்கும் பொம்மைகளாய் அவர் சொன்னதெல்லாம் செய்துகொண்டிருந்தார்கள். முன்பொருநாள் அவனோடிருந்து இவ்வாறு செய்து கொண்ட நினைப்பு இனிமையாய் அவளைக் கடந்தது. புரோகிதர் மட்டுமன்றி எவர் எது சொன்னாலும் அதைச் செய்யத்தக்கவர்களாய் மணமக்கள் இருந்தார்கள். பக்கத்துப் பெண் இவள் தோள்தட்டிக் கேட்டாள்.
‘ ‘தனியத்தான் வந்தீங்களோ ? ‘ ‘
கோலங்குழப்பி ஓடிய பையனை பிடித்துப் பலவந்தமாய் அமர்த்தியிருந்த அந்தப் பெண் இவளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தக் கேள்வி இவளைக் காயப்படுத்திவிட்டது. மகனினாலான தொல்லையில் கஷ்டப்பட்டு, அதேவேளை குழப்பமற்று இருக்கும் இவளைப் பார்த்தேங்கி அந்தக் கேள்வியை அப்பெண் கேட்டிருக்கக் கூடும். மனிதர்களின் ஏக்கங்கள் தான் எவ்வளவு வேறுபடுகின்றன ?
‘ ‘அவரும் வந்தவர்… ‘ ‘
சொல்லிவிட்டு சிறுபுன்னகையோடு முகம்திருப்பினாள். அந்தப் புன்னகை உரையாடலை மேலும் தொடர விரும்பாததை நாசூக்காக வெளிப்படுத்திவிடும் என்று நம்பினாள். தான் தேடிய ‘கதைக்கத்தக்க ‘ பெண் இவளில்லை என்று புரிந்துகொண்டோ அல்லது தலைக்கனமாக அதைக் கருதியோ அப்பெண் தொடர்ந்து கதைக்கவில்லை. எந்த உரையாடலிலும் நிச்சயமாய் இடம்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை பற்றிய கேள்வியைத் தவிர்ப்பதே அவளது நோக்கம் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
ஓமப் புகையின் அப்பால் மணமக்களது முகம் கலங்கலாய்த் தெரிந்தது. அந்தப் பெண்ணின் மனதிலும் எத்தனை எதிர்பார்ப்புக்களோ ? எதிர்பார்ப்புக்கள் அடையப்படும்வரை மனத்தை முழுதாகக் கைப்பற்றிவிடுகின்றன. அடையப்பட்ட பிறகு மெல்லக் காற்றோடு சேர்ந்துருளும் இலைகளாய் விலகிவிடுகின்றன. அடையப்படாதபோது இரும்புதகடுகளாய் மனதில் படிந்து கனக்கின்றன. இவளது மனத்தை ஐந்து நாட்களாய்க் கைப்பற்றியுள்ள எதிர்பார்ப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தமாதம் இப்படியே ‘தள்ளிப் ‘ போய் ‘அந்தநாள் ‘ வராமலே போய் விடுமோ ? இம்மாதம் ‘பொன்மாதமாய் ‘ வாழ்வு முழுமையும் தங்கி விடுமோ ? அது பற்றி ஒரு மெல்லிழைச் சந்தோஷம் அவள் மனதோரம் வசித்தாலும் ஏமாந்துபோய்விடக் கூடாத கவனம் அவள் மகிழ்வைக் கட்டுப்படுத்தியிருந்தது.
சின்னக் குழந்தைகளில் தன் பார்வை அழுத்தமாகாதபடி கவனமாய் இருந்தாள். உள்மன ஏக்கங்களைப் பிறர் அறிவது அவளுக்கு விருப்பமில்லை. துன்பங்கள் அனுபவிக்கப்படுவதைவிட பிறரால் அறியப்படும் போதுதான் அதிகம் வலிக்க வைக்கின்றன.
‘கெட்டிமேளம்… கெட்டிமேளம்… ‘ ‘
புரோகிதரின் உரத்த குரலோடு சேர்ந்தொலிக்கும் மங்கள கீதங்களின் மத்தியில் சொரியப்படும் மலர்களோடு தானும் பூக்களைத் தூவினாள் அவள். ஏனோ மனம் மணப்பெண்ணை ‘நிறைஞ்ச சுமங்கலியாய் இருக்கவேணும் ‘ என்றுதான் வாழ்த்தியது.
****
திருமணவீடு முடிந்து வீடு வரும் போது இரவு எட்டு மணியாகி விட்டிருந்தது. வீட்டினுள் நுழைந்து அடர்ந்திருந்த இருள் தொலைக்க மின்குமிழ் போட்டபோது வீடெல்லாம் ஒளி பரவிற்று.
‘ ‘அகலி… களைப்பாய் இருக்கா… ‘ ‘
‘ ‘இல்லையே… ‘ ‘
போலி உற்சாகம் தேக்கிச் சொன்னாள். அருகில் வந்து இவள் நாடி நிமிர்த்தி மெல்லக் கேட்டான்.
‘ ‘ஆராவது ஏதாவது சொன்னவையா… ? ‘ ‘
‘குழந்தை பற்றிய ஊர் விமர்சனங்களுள் சிக்கி ஊமைக்காயத்தோடு இருந்து விடுவாளோ ‘ என்ற பயம் எங்காவது போய் வந்தவுடன் இப்படி அவன் கேட்பதை வழக்கமாக்கியிருந்தது.
‘ ‘ச்சீ… ‘ ‘
‘ ‘சந்தோஷமாய்ப் போச்சுதோ பொழுது… ? ‘ ‘
‘ ‘ம்…ரீ போட்டு வாறன்… ‘ ‘
சொன்னபடியே பட்டுப்புடைவையிலிருந்து இரவுடுப்புக்கு மாறினாள். குறும்புத்தனமாய் அவளைப் பார்த்துக் கொண்டு உடைமாற்றும் அவனைப் பார்த்தாள். அவளது அதீத அழகு தன்வசப்பட்ட பெருமிதம் அவன் கண்களில் நிரந்தரமாக வசிப்பதை அவள் அறிவாள். ஆனால் அந்த அழகைத் திருப்தி செய்கின்ற தாய்மையின் நினைப்பே இப்போதும் அவளை வருத்திற்று.
அவன் தேனீர் குடித்தபடி ஏதோ மாதஇதழைப் புரட்டிக்கொண்டிருக்கும் போது இரவுணவிற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள். எனினும் எதிர்பார்ப்பில் துடிக்கிற மனத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல் கழிவறையுள் புகுந்தாள்.
‘ ‘நாளையோடை ‘தள்ளிப் ‘ போய் ஆறு நாளாகப்போகுது… ‘ ‘
கடைசியில் பெருமிதமாய்ச் சபை நடுவே அவள் உலவத்தக்க நாள் வந்தே விட்டதோ ? மெல்ல உடைவிலக்கியபோது, அங்கே… இவளின் முழுவெறுப்புக்குரிய குருதிச்சிவப்பு நிர்ச்சலனமாய் உட்கார்ந்திருந்தது.
—-
- ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு 12 மார்ச் 2005 (சனி)
- தொடரும் கவிதைக் கணம்
- சென்னை இலக்கிய நிகழ்வுகள் -`எழுத்தாளர் மா. அரங்கநாதனின் படைப்புலகம்
- நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘
- எள்ளிருக்கும் இடமின்றி
- கலைச்செல்வனின் மரணச்செய்தி. துயருறு பொழுதுடன் நாம்
- மழை ஆடை (Rain Coat)
- சென்னை இலக்கிய நிகழ்வு
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-2
- பால் பத்து
- டாக்டர் ராமதாசும் இசைப்பாடமும்
- கடிதம் பிப்ரவரி 11,2005
- தளப்பரப்பில் ஒலிகடத்தும் கருவிகளும் செல்பேசிகளும்
- மனவெளி நாடக விழா
- கடிதம் பிப்ரவரி 11, 2005
- கடிதம் பிப்ரவரி 11 ,2005 – சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்
- மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்
- கருமையம் வழங்கும் நாடகங்கள்
- கடிதம் – பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை – இடமாற்றம்
- கீதாஞ்சலி (14) உன் ஆடம்பர ஒப்பனைகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கீதாஞ்சலி (15) அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 32 (18. மானகஞ்சாற நாயனார் புராணம் – தொடர்ச்சி )
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் -விரைவில்
- பாகிஸ்தானில் விற்கப்படும் இரானியப் பெண்கள்
- அறிவியல் கதை – விளையாட்டுப் பிள்ளை (மூலம் : மைக்கேல் ஸ்வான்விக்)
- திரை
- து ணை – 6
- நினைப்பும்.. பிழைப்பும்..
- ஓணான்கள்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி மூன்று: ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு)
- சிந்திக்க ஒரு நொடி : தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை
- சிந்திக்க ஒரு நொடி : நடிப்பு சுதேசிகள்
- சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பரெல்லாம் பாடையிற்போவர்! ( பாகம்:1 )
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (பாகம்:2)
- வெறுப்பு வர்ணம்
- மோகமுள்
- ‘இக்கணம் ‘
- நிஜங்களையும் தாண்டி…
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட் )
- பேசி பேசி…
- பிரிய மனமில்லை
- மெளனவெளி
- இடையினம்
- கூ ற ா த து கூ ற ல்
- பூகோள வடிவத்தின் பூர்வீக நாடகம்!யுக யுகங்களாய்ப் பிணைந்து பிரிந்த கண்டங்கள் (4)