வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


‘நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது! ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். ‘

குயிலர்மோ கன்ஸாஸ், பெளதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]

‘ஞாயிறே, நின் முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளி பெறுகின்றது. பூமி, சந்திரன், செவ்வாய், சனி, புதன், வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்டியூன் முதலிய பல நூறு வீடுகள்….நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே, ஒளியுற நகைக்கின்றன! தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல, … இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன… ‘

கோடி அண்ட மியக்கி அளிக்கும் நின்

கோலம் ஏழை குறித்திட லாகுமோ ?

நாடி யிச்சிறு பூமியிற் காணும் நின்

நலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே!

மகாகவி பாரதியார்

‘விஞ்ஞானிகளைச் சூனியக்காரர் என்று மதாதிபதிகள் மட்டமாக மதிக்கிறார்கள்! பேரண்டங்கள் சீரமைப்பாக இயங்கிவரும் பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் நம்புவதால், அவர்கள்தான் உண்மையான சமயவாதிகள்! ‘

‘ஒருவர் வாழ்க்கையை இருவிதங்களில் மட்டுமே கடைப்பிடித்துக் காட்ட முடியும். ஒன்று எதுவுமே ஓர் அற்புத மில்லை என்று எண்ணி யிருப்பது! அடுத்தது, எல்லாமே ஓர் அற்புதம் என்று கருதுவது! ‘

‘வடிவத் தோன்றத்தில் கருதப்படும் கடவுளின் மீது எனக்கு நம்பிக்கை யில்லை! நானதை என்றுமே மறுத்த தில்லை! ஆனால் அழுத்தமாக நானதை எடுத்துக் கூறியிருக்கிறேன். சீரான அண்டவெளி அமைப்பில் இயங்கிவரும் உலகத்தைக் கண்டு எல்லையற்ற முறையில் அடையும் பிரமிப்பதில்தான் என் மதப்பண்பு ஊன்றியுள்ளது. ‘

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

முன்னுரை: 2004 ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் மீண்டும் விண்வெளி விமானிகள் வெண்ணிலவுக்குப் பயணங்கள் புரிவார் என்றும், அங்கு நிரந்தரக் கூடாரம் அமைத்த பிறகு, 2020 ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளுக்குச் செல்ல முனைவார் என்றும் பறைசாற்றினார்! அந்த அசுர விண்வெளிச் சாதனைகள் 2018 முதல் 2030 ஆண்டுக்குள் நிகழும் என்று நாசா மதிப்பிடுகிறது! அப்பணிகள் ஆரம்பமாகும் முன்பு 25 ஆண்டு காலமாய்ப் பயணங்கள் புரிந்த ‘விண்வெளி மீள்கப்பல் திட்டங்கள் ‘ [Space Shuttle Programs] அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு விடும். மீள்கப்பல்கள் இரண்டு விபத்துக் குள்ளாகி அனைத்து விமானிகளும் மாண்டுபோய், அவற்றின் பாதுகாப்புத் தகுதியில் உறுதிப்பாடு இல்லாது போய்விட்டது! புதிய நிலவுத் திட்ட விண்ணூர்திகள் 2011 ஆண்டுக்குள் தயாரானால், நிலவுப் பயணங்களை 2018 வருடத்திற்குள் துவங்கலாம் என்று நாசா மதிப்பீடு தருகிறது.

1961 மேமாதம் 24 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி முதல் சந்திர மண்டலப் பயணத்துக்கு அழுத்தமாக அடிகோலி, ‘1970 ஆண்டு முடிவுக்குள் மனிதன் ஒருவனைச் சந்திர தளத்தில் நடமாட வைத்துப் பாதுகாப்பாக பூமிக்கு மீளும் ஒரு குறிக்கோளைச் சாதிக்க அமெரிக்கா நாடு உறுதி எடுக்க வேண்டும், ‘ என்றோர் அறிக்கையை வெளியிட்டுக் கடிகாரத்தை முடுக்கி வைத்தார். நாசா அவரது ஆணையை நிறைவேற்றி 1969 ஜூலை 20 தேதி முதலிரு விண்வெளி விமானிகளை நிலவில் தடமிட வைத்துப் பாதுகாப்பாகப் புவிக்கு மீள வைத்துப் பிறகு பலமுறைச் செய்தும் காட்டியது.

நிலவில் முதல் தடம்வைத்த நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங்

‘மனிதன் வைக்கும் சிறு காலடி யிது! ஆனால் மானிட இனத்துக்குப் பூதப் பாய்ச்சல்! [One Small Step for a Man; But One Giant Step for Mankind] ‘ என்று பூரிப்புடன் பூமிக்குத் தகவல் அனுப்பி, நமது அண்டைத் துணைக் கோளான சந்திர தளத்தில் முன்னடி வைத்த முதல் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங். இருபதாம் நூற்றாண்டின் மனித வரலாற்றில் முதன்மை பெறும் மாபெரும் மகத்தான சாதனையாக உச்ச நிலையைப் பெறுவது இந்த நிகழ்ச்சி ஒன்றுதான்! பூத ராக்கெட் சாட்ர்ன்-V விடுதலை வேகத்தில் [Escape Velocity] பூமியின் ஈர்ப்பு மண்டல எல்லையைத் தாண்டி, நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் நுழைந்து தாய்க் கப்பல் [Mother Ship] வட்டமிடத் துவங்கியது. பிறகு நிலவுத் தேர் [Lunar Module] தாய்க் கப்பலிலிருந்து பிரிந்து, தனது சிறிய எதிரியங்கு ராக்கெட்டுகளைச் [Retro-rockets] சுடவைத்து, நிலவின் ஈர்ப்பாற்றலில் மெதுவாகக் கீழிறங்கிச் சந்திர தளத்தில் யந்திரக் கால்களை முதலில் ஊன்றியது. நிலவைத் தொடச் சென்ற முதற் குழுவின் அதிபர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங். தாய்க்கப்பலை இயக்கிச் நிலவைச் சுற்றி வந்தவர் மைக்கேல் காலின்ஸ். ஆர்ம்ஸ்டிராங் முதலில் நிலவில் கால்வைக்க இறங்கும் போது, நிலாத் தேரில் கண்காணித்து, அடுத்து நிலவில் கால்வைத்தவர் எட்வின் அல்டிரின். பிறகு நிலாத் தேரை இயக்கி ஆர்ம்ஸிடிராங், அல்டிரின் தாய்க் கப்பலோடு பிணைத்துக் கொண்ட பிறகு, நிலாத் தேர் துண்டித்து நீக்கப்பட்டு, தாய்க்கப்பல் மட்டும் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டது. முடிவாக மூவரும் அமர்ந்த கூம்பு விண்சிமிழ் [Space Capsule] மட்டும் பாராசூட்களின் உதவியால் பசிபிக் கடலில் வந்திறங்கியது.

மீண்டும் திட்டமிடப்பட்ட வெண்ணிலவுப் பயணங்கள்

1969 ஜூலை 20 ஆம் தேதி நீல் ஆர்ம்ஸ்டிராங் முதலில் தனது பாதங்களை நிலவில் பதிய வைத்த பிறகு அடுத்த மூன்று வருடங்கள் மேலும் 6 முறை நிலவை நோக்கிப் பயணம் செய்து மொத்தம் 12 விண்வெளி விமானிகள் பங்கெடுத்து நிலவில் தடம் வைத்து மீண்டார். ஒரே ஓர் அபொல்லோ-13 விண்வெளிப் பயணம் பிரச்சனையால் தடைப்பட்டு குறிப்பணி முடியாமல் பூமிக்குத் திரும்பியது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு [2010] முடிவுக்குள்ளே நாசா தனது பழைய நிலவுத் திட்டத்தைப் புதுப்பித்து, விண்வெளி விமானிகளை மீண்டும் அனுப்ப முடிவு செய்துள்ளது! ஆனால் 21 ஆம் இரண்டாம் கட்டத் திட்டத்தில் நாசா கருநிலவில் நிரந்தரமாகத் தங்கிட நிலவுக் கூடாரம் [Lunar Outpost], ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கப் போகிறது. நிலவில் அமைக்கப்படும் தங்குமிடம் பிற்காலத்தில் செவ்வாய்க் கோள் நோக்கிப் பயணம் செய்யும் விண்வெளி விமானிகளுக்கு ஓய்வெடுக்கும் இடைப்பட்ட தங்குமகமாக விளங்கும்.

நாசாவின் மீட்சி நிலவுத் திட்டங்கள் விரைவாக முன்னேறி வருகின்றன. முதலில் புதுமையான விண்கப்பல் தயாராக்கப் படுகிறது! வெற்றிகரமாக நிகழ்ந்த அபொல்லோ, மீள்கப்பல் நுட்பங்கள் [Apollo, Spaceship Technologies] பின்னப்பட்டு மேம்பட்ட கம்பியூட்டர், காமிராக்கள் புதிய விண்ணூர்தியில் அமைக்கப்படும்! அவை யாவும் நிதி விழுங்காதவை, தகுதியானவை, தரமுள்ளவை, உறுதியானவை, நம்பத் தக்கவை, பாதுகாப்பனவை. அபொல்லோவில் மூவர் நிலவுக்குச் சென்றார். புதிய விண்ணூர்தியில் நால்வர் பயணம் செய்வர். அபொல்லோ போல் தோற்றம் அளித்தாலும், புதுக்கப்பல் அதைவிட மூன்று மடங்கு பெரியது! செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்ணூர்தி ஆறு விண்வெளி விமானிகளைத் தூக்கிச் செல்லும் தகுதி பெற்றது. அது அகில நாட்டு விண்ணிலையத்தின் [International Space Station] தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

புதுக்கப்பலுக்குப் பரிதித் தட்டுகள் [Solar Panels] மின்னாற்றல் அளிக்கும். நிலவைச் சுற்றும் விண்சிமிழுக்கும் நிலவில் கால்வைக்கும் தேருக்கும் மீதேன் [Methane] எஞ்சின் எரிவாயுவாகப் பயன்படும். மீதேன் வாயு எஞ்சின்களுக்குப் பயன்படுத்தப் படுவதின் காரணம்: பின்னால் செவ்வாய்க் கோளில் கிடைக்கும் மலிவான மீதேன் வாயுவைப் பயன்படுத்தலாம் என்னும் எதிர்கால எண்ணத்தில் நாசா செய்யும் டிசைன்கள் அவை. விலைமிக்க அப்புதிய விண்ணூர்தியை பத்து முறைகள் பயன்படுத்தலாம். பூமிக்கு மீளும் விண்கலம், பாராசூட் குடைகள் தாங்கிப் பாலைவன மண் தளத்திலோ, அல்லது கடலின் மடியிலோ விழும்படி அமைப்பாகி யுள்ளது. நிலவில் இறங்கும் தேர் பெரிதாக்கப்படும். அப்புதிய விண்ணூர்தி இரண்டு மடங்கு விண்வெளி விமானிகளைக் கொண்டு செல்லும் தகுதி வாய்ந்தது! நிலவின் தளத்தில் விமானிகள் 4 முதல் 7 நாட்கள் வரைத் தங்கி ஆராயத் தேரில் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. நிலவின் தளத்தில் ‘நிலவுக் கூடாரம் ‘ [Lunar Outpost] அமைத்து விட்டால், அங்கு விமானிகள் 6 மாதங்கள் வரைத் தங்கும் வசதி கிடைக்கிறது.

நிலவிலிருந்து செவ்வாயிக்குத் தாவும் முயற்சிகள்!

ஒவ்வோர் ஆண்டிலும் இரண்டு முறைகள் நிலவை நோக்கிச் சென்று நிரந்தர நிலவுக் கூடாரத்தை விரைவில் அமைக்கப் போகிறார்கள். பூமியிலிருந்து நிலவுக்குப் போகும் காலம், மூன்று நாட்கள்! நிலவுப் பயணக் குழுவினர் நீண்ட காலம் தங்கிச் சந்திர தளத்தில் கிடக்கும் புதைக் களஞ்சியங்களை ஆராய்வார்கள். நிலவுக்குப் பளு ஏற்றிச் செல்லும் பார வாகனம், பண்டங்களை இறக்கிய பிறகு திரும்பி பூமிக்கு வந்துவிடும். நிலவில் ஆய்வுகள் நடத்தி வரும் ஆராய்ச்சிக் குழுவினர் ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் அடைவர். நாசா நிலவின் தென் துருவத்தில் ஹைடிரஜன் எரிவாயு கிடைக்கும் நீர்ப்பனிப் பாறைகளை எதிர்பார்க்கிறது. நிலவில் பரிதியின் ஒளி வெப்பத்தைப் பயன்படுத்திப் பேரளவு மின்சக்தி பெற விமானிகளுக்கு வாய்ப்புள்ளது. அதைக் கொண்டு நிலவுக் கூடாரத்தை ஒளிமயமாக்க முடியும். பனிப்பாறைகளை உருக்கி நீர் பெற்றுக் கொள்ள முடியும். நீரைப் பிரித்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயுக்களைச் சேமித்துக் கொள்ள முடியும். நிரந்தர நிலவுக் கூடார அமைப்பின் முக்கிய காரணம், செவ்வாய் கோளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் மனிதர் பயணம் செய்து கால் தடம் வைத்து மீள்வது. பிறகு செவ்வாய்க் கோளில் நிரந்தரக் கூடாரம் அமைத்து செவ்வாய்க் கோளை ஆராய்வது. அதற்குத் தேவையான அசுர உந்து சாதனங்கள், விண்வெளி விமானிகளுக்கு வேண்டிய பயிற்சிகள் யாவும் நாசாவிடம் தயாராக உள்ளன.

****

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; Time Magazine.

1. Returning to the Moon By: Jeffrey Kluger Time Magazine [March 20, 2006]

2. Apollo Missions (11-17) First Man on the Moon [www.panoramas.dk/]

3. http://www.thinnai.com/science/sc0505022.html [Authors Article on First Moon Landing (May 5, 2002)]

4. Return to the Moon Frequently Asked Questions [www.space-frontier.org/projects/moon]

5. NASA How We will Get Back to the Moon [www.nasa.gov./mission_pages/exploration/spacecraft/]

6. BBC Science News: Space Agencies Take New Look at Moon [July 27, 2002]

7. The Space Review- Return to the Moon By: Anthony Young [Jan 3 2006]

8. Moon -Astronomical Data [www.amastro.org/at/mo/mod.html] [May 15, 2001]

****

jayabarat@tnt21.com [March 29, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா