வெ.சா. – சு.ரா. விவாதம்: சில குறிப்புகள்

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

ஆசாரகீனன்


வெ.சா. பெருங்காயப் பாத்திரத்துக்கு இன்னமும் காரம் இருக்கிறது என்று நிரூபித்துள்ளார். ஆனாலும் நீ சொன்னாய், நான் சொன்னேன் போன்ற விவாதமாக இருக்கிறது என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அடிப்படையில் தன் கட்சி, கருத்து விரிவாக்கத்துக்கு, சுய லாபத்துக்கு அல்ல என்று நாட்ட முயல்கிறார். மாறாக எதிராளர்கள் சுயலாபக் கூட்டம் என்பது அவரது மைய வாதம்.

இது அவருக்கு உவப்பில்லாத சோசலிச/பொதுவுடைமைவாத/ஜவஹர்லால் நேரு காலத்து மதிப்பீடுகளைச் சார்ந்த ஒரு வாதம் என்பது அவருக்குத் தெரியவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. சந்தைப் பொருளாதாரம் அமுலுக்கு வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை ஒட்டித்தான் அரசு அதிகாரம் சார்ந்த சுரண்டல் கூட்டமாக இருந்த காங்கிரஸ், திமுக போன்ற கும்பல்கள் இன்று பெரு முதலாளிக் கூட்டமாகக் கொழுத்து சந்தை மூலமாகவே சுரண்டுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாதா என்ன ?

இந்தப் பண்பாட்டில் அல்லது சூழலில் (சூழல் என்பது வெ.சா.வின் கருத்தாக்கமாயிற்றே!) தனிநபரைப் பீடமேற்றுதல் (Iconization), சந்தைப் பொருளாக்குதல், விரி-விநியோகத்துக்குக் (wide-distribution) கருத்தை வளைத்தல், போட்டிக் கருத்துகளைக் கரியாக்குதல் என்பதெல்லாம் சகஜம் மட்டுமல்ல. அவைதான் நியதியே. பேய் அரசாண்டால் சாத்திரங்கள் பிணம்தானே தின்னும் ?

சுயலாபம் தவறு என்று சொல்லியபடியே, மக்களை அவர் தம் விருப்பத்துக்குச் சந்தையை அணுக முடியாமல் கட்டிப் போட்டு விட்டு, அரசு அதிகாரத்தில் பங்கேற்பவரோ அல்லது அதை வளைக்க முடிபவரோ மட்டும் தடையற்று சுயலாபம் தேடிய இருபத்து ஐந்தாண்டுகளில் வெ.சா அந்த இரட்டை வேடத்தைத் தாக்கியதற்கு வாசகரிடமும், ‘அறிவு ஜீவி ‘ களிடமும் ஓரளவு வரவேற்பு இருந்தது. இன்றைய சூழலில் சுயலாபம் தேடுவது தவறு என்று ‘அறிவு ஜீவிகளில் ‘ பலர் வெளிப் பேச்சில் ஆமோதித்தாலும், தம் தனி வாழ்வில் அதே அறிவு ஜீவிகளில் பலரும் சுயலாபம்தான் தேடுகிறார்கள். அதாவது வெ.சா. முன்பு எந்த இரட்டை வேடத்தைத் தாக்கினாரோ அது இன்று நியதி. மக்களோ தம்மளவில், சுயலாபம் தேடாதவன் ஏமாளி என்ற முதலிய வாதத்தை எளிதாகவே ஏற்கிறார்கள். அவர்களது பொதுமுகம் இன்னமும் சுயலாபம் தேடுபவரை இழிவாகக் கருதுவது போல நடிக்கிறதா என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அதாவது, முதலிய நாடுகளில் பெருவாரியான மக்கள் தனிநபர் எம்முறையிலாவது தம் நலனைப் பெருக்குவதுதான் சரியான வழி என்று கருதுவது போல இந்தியாவிலும், தமிழகத்திலும் மக்கள் தனிநபர் நலனை முன்வைத்துப் பொது நலனைப் பின் தள்ளுவதுதான் சரி என்று ஏற்றுக் கொண்டு விட்டார்களா என்பது எனக்குத் தெளிவாகவில்லை. நடைமுறையில் மக்கள் அப்படி இயங்குகிறார்கள் என்பது தெளிவு. ஆனால் இன்னமும் அத்தகைய நடத்தை வெட்கப்படத்தக்கது என்ற பண்டை நாகரிகம், பண்டை அறம் சார்ந்த பார்வை நம்மிடையே உயிருடன் இருக்கிறது. வெட்கமேதுமற்ற நவீனத்துவம், அதிலும் கூடதிகமாக நாணமற்று உலவுவதுதான் அறம் என்னும் கடந்த-நவீனத்துவம் ஆகியன இன்னமும் மக்களை வேர்வரை நனைத்து விடவில்லை என்று நான் கருதுகிறேன். அறம் முற்றிலும் அழிய வெகு காலம் ஆகும். நாம் அந்தத் திக்கில் நடந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெரிகிறது.

ஆனால் நாணம் ஏதுமற்று உலவுவது ஏற்கனவே பொது நியதியாக, பொது அறவியலாகவே மாறி விட்டதாக நினைத்தோ என்னவோ, அல்லது தன் அதிகாரம் எதிர்ப்பற்றது என்ற மமதையாலோ, ஜெயலலிதா சர்வாலங்கார பூஷணியாக ஒரு திருமண ஊர்வலம் நடத்தியது நினைவிருக்கலாம். இன்று திரும்பிப் பார்த்தால் ஜெ-விற்கே தான் என்ன அவ்வளவு முட்டாளாகவா இருந்தோம் என்று கருதத் தோன்றும். இப்படிக் கருத ஒரு காரணம், பதவிக்குத் திரும்பியவர் ஆபரணங்களை அறவே விலக்குவதாக அறிவித்தது. இது ஓர் ஓட்டைக் குறியீடு என்று நாம் கருத முடியும்தான். ஆனால், இன்னமும் துறப்பது என்பதற்கு மக்களிடையே மதிப்பு இருக்கிறது என்று ஒரு ‘சாமர்த்தியம் ‘ நிறைந்த அரசியல் தலைவர் கருதுவது குறிக்கத்தக்கது. இந்த வகை இரட்டை வேடங்கள் நமக்கு ஒரு புறம் நகைப்பூட்டுகின்றன என்றாலும் அவை ஏன் இன்னமும் மக்களிடையே காணப்படுகின்றன என்பதை நாம் கருத வேண்டும். மு.க. வின் மஞ்சள் துண்டைப் பலர் இங்கு சாடினாலும் அவரளவில் அதுவும் ஒரு குறியீடு என்பது தெளிவு. வேட்டி கட்டாத ஆண் தலைவர் தமிழக அரசியலில் வெல்வது கடினம் என்பது எப்படி நமக்கு எந்த வித கேள்வியும் இல்லாமலே புரிகிறதோ அதே போல இந்த வகைக் குறியீடுகளும் ஏன் புரிய மாட்டேனென்கிறது என்பது எனக்கு இருக்கும் கேள்வி.

இவை ஒரு விதத்தில் பண்டை மதங்கள் சார்ந்த பண்பாட்டுத் தளத்தில் இயங்குவது நமது அரை வேக்காட்டு நவீன அறிவு ஜீவிகளுக்குத் தொல்லையாக இருக்கிறதா என்று கேள்வி எழுகிறது. பழைய பண்பாடுகள், மொழியைத் தவிர, அனைத்தையும் அழித்தால்தான் சமத்துவ சொர்க்கம் கைவசப்படும் என்ற ஃபார்முலாவை இது உடைக்கிறது என்பதாலா என்றும் இன்னொரு கேள்வி எழுகிறது.

இப் பின்னணியில் பார்த்தால், ஒரு வேளை வெ.சா. பின்னொதுங்கி இருந்து பொதுநலத்தை முன்னேற்றும் ஓர் அறவியலை முன் வைக்கும் ‘காந்திய வாதத்தை ‘ மதித்து வந்த ஒரு காலத்தில் இருந்து விடுபடாமல் இன்றைய சூழலைப் பார்க்கிறாரோ என்று தோன்றுகிறது. அதன் தொடக்க காலத்திலேயே அது அவ்வளவு எடுபடவில்லை. மேலும், நேருவிய சோசலிச காலத்தின் இறுதியில் இந்த வாதத்தை ஓரளவு பின்பற்றிய காமராஜர், கக்கன், சாஸ்திரி போன்றார் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போனார்கள். இந்த இடத்தில் நேருவிய சோசலிச காலத்தில் இப்படி தனிமனிதர் என்ற அளவில், அதாவது தம் அளவில், சொத்து சுகங்கள் சேர்க்காமல், தம் குடும்பங்களைக் கொழுக்க வைக்காமல் வாழ்ந்த வெகு சிலர் சோசலிச நோக்கினால் அப்படி இருந்தனர் என்பதை விட காந்திய அற நெறியின் பாதிப்பால் அப்படி இருந்தனரா என்றும் கேட்கத் தோன்றுகிறது. இதற்கு விடை வாசகரின் சிந்தனையில் தெளிவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

தனி நபர் ஒழுக்கம் பொது ஊழியத்துக்கு அடிப்படைத் தகுதி என்பதை ஏற்காத இந்திராவும், கருணாநிதியும் சமகாலத்தில் பதவி ஏற்ற போதே சாத்திரங்களுக்குப் பிணம் தின்னும் வேலை ஏற்பட்டுப் போயிற்று.

இது ஏன் வெ.சா.விற்கு – நோய்ப்பட்ட சூழல் பற்றிப் பல புத்தகங்களும், ஒரு நாடகமும் எழுதியவருக்குத் தெரியவில்லை ? அக்கிரகாரமே கழுதையின் பிணத்தால் நாறிக் கொண்டு இருக்கிறது என்று எழுதிய வெ.சா. ஒரு பண்பாட்டின் உயர்தளத்தில் அதை வழி நடத்துவதாகத் தம்மைக் கருதிய ஒரு சிறு கூட்டமே செயல் திறன் அற்று சிறு பிரச்சினைகளைக் கூடச் சமாளிக்க இயலாத கையாலாகத் தனத்தில் இருந்து கொண்டு வாய் சவடால் மட்டும் அடித்துக் கொண்டு இருக்கிறது என்று சுட்டுவதாக அந்த நாடகத்தை நான் கருதினேன். ஆனால் வெ.சா. தமது நாடகத்தின் மையக் கருத்து அனைத்துத் தமிழ் சமூகத்துக்குமே பொருந்தும் வகையில் இன்று பரவி இருப்பதாகக் கருதுகிறாரா என்று தெளிவாக்கி இருக்கலாம்.

50-80களில் இருந்த அரசு மைய அதிகார வர்க்க சோசலிச காலத்தில் தனிநபர் ஊக்கமோ, சந்தைப் பொருள் விநியோகமோ தரக் குறைவு அல்லது இழி செயல். இன்று இதுதான் புத்திசாலித்தனம் என்பதால்தானே தமிழரெல்லாம் சந்தையே பண்பாடான மேலை நாடுகளுக்கு எந்தத் தயக்கமும் இன்றி, இவை பற்றி மனதளவில் என்ன விமர்சனம் இருந்த போதும், வந்து குடியேறுகிறோம் ? (அகதிகளாக வந்த தமிழரை இங்கு நான் சேர்க்கவில்லை.)

திண்ணையே சந்தையில் கிட்டியதில் ஒரு பகுதியை சந்தைக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சிதான் என்று வைத்துக் கொண்டாலும், அதுவும் சந்தையின் உபயம்தான் என்பது வெ.சா.விற்கு எப்படித் தெரியவில்லை ?

மாறாக எழுத்து, பிரக்ஞை, வைகை, யாத்ரா, படிகள் போன்ற சிறு பத்திரிகைகள் பெரும்பாலும் சந்தையில் இருந்து விலகிய, அரசு இயந்திரத்தின் நிறுவனங்களில் இருந்த கீழ்நிலை ஊழியர்கள் தம் குடும்பத்திற்குத் தராமல் அல்லது தெரியாமல் ஒதுக்கிய தம் வருமானப் பகுதியில் இருந்து நடந்தவை. ‘எழுத்து ‘ ஒரு தனி நபர் தன் சொற்ப சொத்தை இழந்து விட ஏதுவான ஒரு முயற்சி.

என்றாலும் அவை எல்லாமே இழப்பைப் பார்த்து பயப்படாமல் அதை ஒரு கவுரவமாகக் கருதி நடந்த முயற்சிகள். ஓரளவில் அவை எல்லாமே ஓடும் ஆற்றில் மீன் ஏதும் சிக்காத போதும், தூண்டிலைப் போட்டு காத்துக் கிடப்பதையே வாழ்வின் ரசிக்கத் தக்க ஒரு அம்சமாகக் கருதிய முயற்சிகள். பெரும் சமூக மாறுதலை விரும்பினாலும் அதை அடைய ஒரு வரைபடம் அல்லது திட்டம் போட்டு அதன் வழி தம்மை நடத்தும் செயல் திறன் இல்லாமல் நடந்தவை என்று எனக்குத் தோன்றுகிறது.

அவற்றிலேயே கூட தனி நபர் பீடம் ஏறுவதைத் தவிர்க்க முடியாது பல கவிழ்ந்தன. இதற்கு ஒரு சில விதி விலக்குகளும் உண்டு. இவற்றில் பல பீடமேற்றுவதில் நாட்டம் இல்லாதவை என்பதையே சுட்டுகிறேன், கவிழ்வதை அல்ல.

இத்தகைய பத்திரிகைகளின் தரும நோக்கு, அதாவது நெறி இயல் வேறு வகையாக இருப்பதும் 90-களில் பிரபலமான சந்தைப் பத்திரிகைகளாகி இருப்பவை வேறு விதமாக இயங்குவதும் ஏன் ஆச்சரியம் தரவேண்டும் ?

பின்னவை, சந்தைக்கான கருவிகள். தனி நபர் தூண்டில் போட்டுப் பொறுத்திருக்கும் வகையான அழகியலால் வாழ்வைச் செலுத்துபவை அல்ல. மாறாக கடலையே அடியோடு துழாவிச் சகட்டு மேனிக்கு அகப்பட்ட அனைத்து வகை மீன்களையும் இயந்திரப் படகின் தளத்தில் வாரிக் கொட்டுபவை. இவற்றில் முழுச் சந்தை ஊடகங்கள் – சன் டிவி, ஜெ டிவி, விகடன், குமுதம், தினத் தந்தி, தினமலர் போன்றவை திமிங்கில வேட்டையாடும் ராட்சதப் படகுகள் என்றால், காலச்சுவடு போன்றவை இன்று இறால்களைப் பிடிக்கும் சிறு இயந்திரப் படகுகள். ஆனால், இயந்திரம் செலுத்த கடலோடும் சந்தை நோக்கப் படகுகள். இவற்றோடு தனி நபர் தூண்டில் முறையை ஒப்பிடுவதே சரியல்ல.

சிறு சந்தைப் பத்திரிகைகள் என்ன அறம் கருதி நடப்பவை என்று வெ.சா. விமர்சனப் பார்வையில் கருதி ஒரு கட்டுரை எழுதி இருந்தால் அது உபயோகமாக இருந்திருக்கும்.

என் கருத்தில், நடப்பில் எது விலை போகுமோ அதைத் தருவதும் மறுபுறம் தம் கருத்தில் உருவாகும் ‘திரு ‘வை ஒரு சரக்காக்கி, அதற்குப் பொது ஜன விருப்பை உருவாக்குவதும் அவற்றின் நோக்கங்கள். மற்றபடி அவை எந்த அற நோக்கமும் அற்றவை என்று நான் சொல்லவில்லை. ஆனால், தன் அல்லது ஒரு குழுவின் அற நோக்கங்களின் படி ஒரு பத்திரிகை இயங்க வேண்டும் என்பதை விட சமூகத்தில் இயங்கும் பல குழுக்களின் அரசியல் நோக்கங்களில் சிலவற்றின் நலன்காப்புக் குழுக்களாக, தமது அபிமானக் குழுக்களுக்கு வலுச் சேர்க்கும் படியாகத் தாம் இயங்க வேண்டும் என்பதை உணர்ந்தவை இவை. இவற்றின் அரசியல் வெறும் இலக்கியம் அல்லது பண்பாட்டு அரசியல் மாத்திரம் அல்ல. இவை பேரரசியலில் ஒரு பகடைக் காயாகத்தான் பண்பாட்டைக் கருதுகின்றன. பண்பாடும், இலக்கியமும், கலையும் இவற்றுக்கு ஒரு சரக்கு. ஆனால் மையச் சரக்கு. பெரும் ஊடகங்களுக்கு, தினத் தந்தி, விகடன், சன் டிவி இத்தியாதிகளுக்கு அவை சரக்குச் சந்தையில் ஒரு சிறு பகுதிதான். எனவே இங்கு பெரும் ஊடகங்களைப் பற்றிப் பேசப் போவதில்லை.

தம் மதிப்பீடுகளுக்கு வாசகர் தம் சிந்தனை வழியே வரவேண்டும் அல்லது அதை மதித்து வாசகர் எதிர் வினை ஆற்ற வேண்டும் என்பது முந்தைய காலப் பத்திரிகைகளுக்கு இலக்கு. நிலவும் அரசியல், கருத்துச் சூழலில் எந்தப் பக்கம் வலு இருக்கிறது என்று கணித்தபடி தம் வாதங்களை அதற்கு ஏற்ப வளைப்பது 90-00 காலப் பத்திரிகைகளின் மைய நீரோட்டம்.

ஆனால் வெ.சா. திண்ணையில் இந்த வாதங்களை முன் வைப்பதில் ஒரு நியாயமும் இருக்கிறது. அதாவது லாபம் கருதாமல் நடத்தப்படுவதால் திண்ணை ஒரு விதத்தில் 60-80 காலச் சிறு பத்திரிகைகளின் அடிநாதக் கருத்தின் ஒரு நீட்சியாகத் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

இதெல்லாம் இருப்பினும், அமெரிக்க டான் இளைஞரின் வழக்கில் சொல்வதானால் – வெ.சா. சொல்லும் தரும யுத்தம் ‘is so 60ish’.

வெ.சா சொல்லக் கூடும் – தன்னுடையது இந்திய மதிப்பீடுகளைச் சார்ந்த, காலம் கடந்து நிற்கும் ஒரு சூழலை ஒட்டியது, அதில் தன்னை உயர்த்துவது இழிவானது. கருத்தை உயர்த்துவதுதான் உயர் மக்கள் குணம் என்று.

உயர் மக்கள் என்று சொன்னவுடன் போர்ப் பறை ஒலிக்க இது பார்ப்பனியம், இதை அழிப்போம் என்று களத்தில் முண்டா தட்டி ஒரு கூட்டம் இங்கு இறங்கும் என்பது நான் எதிர்பார்ப்பதுதான். உயர்மக்கள் என்று எந்த சாதியையும் நான் குறிக்கவில்லை. Elite என்ற சாதாரண ஆங்கிலச் சொல்லைத்தான் இலக்காக வைத்திருக்கிறேன். இதன்படி திண்ணையில் எழுதும் பெரும்பாலானவரும் உயர்மக்கள்தாம். இங்கு குறிப்பிடப்படும் பத்திரிகைகளில் எழுதுபவரும், அவற்றைப் படித்து விவாதித்து சிந்திப்பவர் எல்லாமே அந்தக் கூட்டம் தான்.

அப்படி ஒரு வேளை வெ.சா. கருதி இருந்தால், அதுவுமே அவ்வளவு சரியான வாதம் அல்ல என்பது என் கருத்து.

அதனால்தான் நேருவிய காலத்து பொது நிறுவனங்களில் பணியாற்றிய எழுத்தர் (clerks) கூட்டங்கள், ஒரு ‘loser’ மனோபாவத்தில் நடத்திய பத்திரிகைகளின் பட்டியலைத் தந்தேன்.

காலச்சுவடு போன்ற இன்றைய சிறு பத்திரிகைகளோ சந்தை வலுத்த காலத்தின் விளை/வினை பொருட்கள் மட்டும் அல்ல, முன் தலை முறை சிறுபத்திரிகைகளின் இளம்பிள்ளை வாத இயக்கம், அவற்றின் துர்மரணத்தில் இருந்து கற்ற பாடங்களினால் உயிரணுவளவில் மாறிப் போன புது ஜந்துக்கள். இம்முயற்சிகள் சந்தைச் சாக்காட்டில் சிலம்பு சுற்றியாவது பிழைக்கும் வீராப்பு உள்ள ஒரு பரிணாமத் தாவலும் கூட. இதுவும் ஏன் வெ.சா.விற்குப் புலப்படவில்லை ?

இதையெல்லாம் வெ.சா. கருதி இருந்தாரானால், அதாவது சூழல் எவ்வளவு மாறி இருக்கிறது, இதில் இந்தியப் பண்பாடும், தமிழகப் பண்பாடும் கடந்த இரு பத்து ஆண்டுகளில் எந்த விதங்களில் மாறி இருக்கின்றன என்று கருதி இருந்தாரானால், மேற் சொன்ன சம்பவங்களை மீண்டும் ஒரு சமூகவியல் + தத்துவத் தளத்துக்கு எடுத்துச் சென்று வாதிட்டிருந்தாரானால் அவரது கருத்துகளுக்கு கூடுதலான தாக்கம் இருக்கும்.

வெ.சா. துவக்கத்திலிருந்தே தனி மனிதருக்கும் சூழலுக்கும் உள்ள உறவில் ஏற்படும் பொருந்தாமைகளைப் பற்றி எழுதி வருகிறார். ஆனால் அதில் பெருமளவும் தனி மனிதனைத் தான் குறிவைத்துள்ளார். இதனாலேயே இடதுசாரிகளுக்கு அவர் மீது ஓர் இளக்காரம் இருக்கிறது. வெ.சா.வே சூழலை முன்னிறுத்தி, தனி மனிதனைப் பின் வைத்து அதிகம் வாதிட்டிருந்தால் அவருக்கு விரிவான தாக்கம் இருந்திருக்கும்

.

வேறு ஒரு திக்கில் சில குறைகள்.

நுஃமான் என்று எழுதினாலும் நுஹ்மான் என்று எழுதினாலும் ஒரே நபரைத்தான் சுட்டுகிறது என நான் கருதுகிறேன். ஹ என்ற எழுத்தை நுஃமான் அல்லது இதர திராவிடியக் கருத்துக் கூட்டம் அரசியலாக்கினால் அதை வெ.சா. ஏற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படி ஏதும் கருத்து நாணயம் இன்றி பன்மொழிப் பெயர்களைத் தம் விருப்பத்துக்கு உச்சரிப்பது தமிழகத்தில் ஒரு பண்பாடாகவே இருக்கிறது. சமீபத்தில், கிராமியப் படங்கள் எடுப்பதில் வல்லவர் என்று பெயர் பெற்ற ஒரு திரைப்பட இயக்குனர், தம் திரைப்படத்தின் இசைத்தட்டை அறிமுகம் செய்யும் வகையில் ஒரு நிமிடம் பேசுவதைக் கேட்டேன். அதில் தாஜ்மஹலை, dhajmahaal என்று அவர் உச்சரிக்கிறார். தமிழில் ‘dha ‘ எப்போது அசல் தமிழாக அமுலுக்கு வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அது குறித்து யாரும் ஏதும் கவலைப் பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று துவக்க காலத்து தமிழ் தேசியவாதிகள் மொழிபெயர்த்ததை நான் பார்த்திருக்கிறேன். பேச்சிலோ, எழுத்திலோ சரிவரப் பெயர்களைச் சொல்ல வேண்டும் என்று வாதிடுவதை நானும் ஒத்துக் கொள்பவனே. ஏதாவது ஒரு கட்டத்தில் தமிழகத்தில் இந்த செயல்முறை அமலுக்கு வந்தால் அது மிக நன்மை தரும். ஆனால், இன்றளவில் இந்தப் பண்பாடு நம்மிடம் இல்லை என்பது ஒரு யதார்த்தம்.

ஆக இதே வகை சுதந்திரத்தை வெ.சா.விற்கும் கொடுப்பதில் என்ன குடி முழுகி விடும் ?

ஃ என்ற எழுத்துக்கு என்ன உச்சரிப்போ அது ஹ் என்ற எழுத்துக்கும் உண்டு என்பது வெ.சா.வின் கருத்தாக இருக்கலாம். அல்லது ஃ என்ற எழுத்தை எப்படி எதற்குப் பயன்படுத்துவது என்பது குறித்து அவருக்கு ஒரு கருத்து இருக்கலாம். Uniform civil codeஐ எதிர்க்கும் தமிழக அறிவு ஜீவிகளுக்கு, தமிழில் உச்சரிப்பை மட்டும் ஒற்றைத் தளத்தில் பொருத்துவதில்தான் ஏன் இப்படி ஒரு தீவிரம் ? வெ.சா. தம் பதிலில் இதை விளக்கியிருந்தால் இதில் கூட அவருக்கு ஒரு கருத்துத் தளம் இருப்பது புலப்பட்டு இருக்கலாம்.

அதைத்தான் சுந்தர ராமசாமி குறி வைத்துத் தாக்கினாரோ ? வெ.சா.வுக்கு ‘இன’ அல்லது ‘மொழி’ அரசியல் ஏதும் இருப்பின், மறுபடி எல்லாருக்கும் அதை நினைவு படுத்த வேண்டும் என்று சு.ரா. கருதி அப்படிச் சொன்னாரா அல்லது வெ.சா.வின் கவனக் குறைவான பயன்படுத்துதலில் ஓர் இளக்காரம் மறைந்து இருப்பதாகத் தனக்குத் தெரிகிறது, அது ஆரோக்கியமான விவாதச் சூழலுக்கு இடம் கொடுக்காது என்று கருதினாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படிப் பூடகமாக எதையும் செய்யாமல் நேராகவே சு.ரா. தன் கருத்துகளைத் தெரிவித்தால் அதுவும் ஆரோக்கியமாகவே இருக்கும்.

ஆக இருவரும் கருத்துப் பரிமாற்றங்களைத் தனி நபர் விருப்பு வெறுப்புகளைத் தாண்டித் தெளிவான ஒரு மேல் தளத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பைக் கை விட்டு விட்டார்கள். அப்படி ஒரு விவாதம் பல பத்தாண்டு பண்பாட்டு அரசியல் வரலாற்றை நமக்கு விரித்துச் சொல்லி இருக்கும். பயனுள்ளதாக இருந்திருக்கும்.

வெ.சா.வை சனாதனி என்று தார் பூசிக் கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விட ஒரு கூட்டம் தமிழகத்தில் வெகு நாளாக முயன்று வந்திருக்கிறது. வெ.சா. பல இடங்களில் தனக்கு மரபு மேல் ஏதும் குருட்டுத்தனமான பிடிப்பு இல்லை என்று நிரூபித்தவர். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே என்றும் அதுவே சரி என்றும் கருதுபவர். ஆனால் மரபுகளை உடைத்தாலும் பார்த்து எடை போட்டு உடைக்க வேண்டும் என்று கருதுபவர்.

எது பழையன, எது புதியன என்று கருதுவதில் அவருக்கும் திராவிட ‘வாதம் ‘ பிடித்தவர்களுக்கும் இடையே பெரும் பள்ளத்தாக்கே இருக்கிறது. வெ.சா. வயதானாலும் வாத நோய் பிடித்தவர் அல்ல; வாதம் செய்வதில் அவருக்கு சாதுரியம் இருந்தாலும், அதில் தனித் திறமையே இருந்தாலும். அவரோடு ஒத்துப் போகாமல் விலக நமக்கு நிறையவே இருக்கின்றன. வெறுமே ஒரு முத்திரை குத்தி ஒதுக்குவது யாருக்கும் பயன் தராதது என்றுதான் எழுதுகிறேன். இன்று பன்முகப் பண்பாடு என்று முழங்குபவர் அதிகரித்துள்ள போது தமிழகத்தில் எந்தப் பண்பாடுகள் ஏற்புடையவை எவை அல்ல என்பதில் நிறையவே தேவை அற்ற வெறுப்புகள் உலவுகின்றன. அவற்றை மறு பரிசீலனை செய்வதும் இந்தியா என்ற ஒரு கூட்டு நாட்டில் நம் இடம், பங்கு ஆகியன என்ன என்று கருதுவதும் உதவும் என்று சொல்கிறேன். நவீனத்துவம் அல்லது கடந்த-நவீனத்துவம் ஏற்கனவே பன்முகப் பண்பாடு உள்ள இந்தியாவைத் தமிழகத்தில் இருந்து விலக்கி, எந்த உறவும் அற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் அல்லது ஃபிரெஞ்சு, ரஷ்ய, சீன, அரபுப் பண்பாடுகளை இறக்குமதி செய்வதுதான் உயர்வு என்று கருதும் சிந்தனை வளர்வதை ஏன் இப்படிச் செய்கிறோம் என்று மறு பரிசீலனை செய்வது நமக்கு நன்மை தரும் என்று கருதி இதை எழுதுகிறேன். ஒரியரையும், வங்காளிகளையும், பஞ்சாபியரையும் விட அரபியர் நமக்கு அண்மையானவரா ? பிரேசிலியரும், சிலே மக்களும் அவ்வளவு நெருங்கியவரா ? பின்னவரை விலக்கி விடவேண்டும் என்றில்லை, முன்னவரை அணுக நாம் என்ன செய்திருக்கிறோம் – அதுதான் கேள்வி.

மாறாக புதியனவற்றில் மிக்க புலமை உள்ளவராகத் தம்மைக் கருதுபவரில் பலருக்கு வாத நோய் மட்டும் அல்ல, அறிவளவிலேயே arthritis வேறு உள்ளது என்பது தெளிவு. இல்லாவிட்டால், மாயாஜாலக் கதைகளில் பெரும் பாரம்பரியம் உள்ள ஒரு நாட்டில் மாய யதார்த்தம் என்ற பெயரில் காப்ரியல் கார்சியா மார்குவெஸிடம் போய் கை ஏந்துவார்களா ? இன்றும் ஐரோப்பிய கற்பனையில் தான் உத்வேகம் பெற முடியும் என்று கருதும் தமிழ் மூட்டு வாதங்களுக்கு, சக இந்திய எழுத்துலகில் இருந்து உத்வேகம் பெற முடியும், வேண்டும் என்ற உந்துதல் சிறிதும் இல்லாதது அவர்களிடம் இயல்பாக ஊறிப் போன ‘மொழி = இனம்’ என்ற அபத்தக் கருத்தால்தானே ?

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்