This entry is in the series 20100418_Issue

வி பிச்சுமணி



மத்தியான வேளையில்
குளத்தில் சிற்றலைகள்
சுடான கரையினை
குளிர்வி்த்து கொண்டிருந்தன
பொட்டல் காட்டில்
ஒற்றை ஆலமரத்தடியில்
ஆடுகள் அசைபோட்டு
கொண்டு இருக்கின்றன
கறவைக்கு வந்த மாடுகள்
மேய்ச்சலுக்கு திரும்பி கொண்டிருக்கின்றன
ஆள் அரவமில்லாத பகல் வேளையில்
எங்கிருந்தோ வந்த குளவி
கூடு கட்ட உத்திரத்து மூலையில்
இடம் தேடி ரீங்காரமிட்டு அலைகிறது
தெருவில் குரைத்து திரியும் நாய்கள்
நிழலில் நாக்கை தொங்க போட்டு
படுத்து உறங்கின்றன
ஆரியங்காவில் இருந்து
வீசும் காற்று பறங்பறங் அடித்து
கொண்டிருக்கிறது
அவள் கூட படித்த பிள்ளைகளின்
பிள்ளைகள் இரண்டு சத்தமிட்டு
தெருவில் ஓடுவது கேட்கிறது
வீட்டோடு தங்கி போய்விட்ட
அவள் திருமணமாகி
பிள்ளை குட்டி பெற்றெடுப்பது பற்றி
என்றும் போல் யோசித்தவாறு
நடைமேல் தலைவைத்து
ஓலைகூரையில் அலையும்
சுவர்கோழியை பார்தது வண்ணம்
படுத்து கிடந்தாள்
நாளையும் இப்படியொரு
பகல்பொழுது கழியும் என்ற
உணர்வோடு

Series Navigation