வீசிவிடு தென்றலே…

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

ஆ. மணவழகன்


எத்தனை நாளைக்கடி …
உள்ளத்து நினைவுகளை
உள்ளேயே புதைத்துவிட்டு
ஒரு நிமிடம் தனிமை என்றால்
உன்னை நினைத்து புலம்புவது…!

‘கர்ப்பம் ‘ போல உன் நினைவு – அதை,
கலைத்துவிட மனமில்லை…
காலமெல்லாம் சுமந்திருந்தும் – அது
கனப்பதுபோல் தோன்றவில்லை!

அடக்கி, அடக்கி வைக்கிறேன்
அத்தனையும் அடிமனதில் – நான்
அசந்துவிட்ட நேரம் பார்த்து
மொத்தமாய் வெளுவருதே…

மூடிமூடி வைத்தாலும்
முட்டி முட்டி முளைவிடும்,
விதைபோல்ி…விருட்சம்போல்…

அறிவியல் சொல்கிறது….
அனைவருள்ளும் ஐம்பதாயிரம் ஜீன்களென்று!
ஒன்றுகூட எனதில்லை!
ஒட்டுமொத்த குத்தகைக்காய்,
ஒவ்வொன்றிலும் நீ நுழைந்தாய்!

சுகங்களின் வேர் நனைய,
சூத்திரங்கள் தான் அறிய,
கணங்களில் நான் அறிந்தேன் – என்
கனவுகளும் நீதான் என்று!

மன்றாடி சலவை செய்தும்
மடங்க மறுக்கும் மனது!
இளையவன் நான்
எனக்கும் கூட இது புதிது!

என்னுள்ளும் சில ஆசைகள்
என்னவென்று கேட்பாயா ?
ஏக்கமாய் என் பார்வைகள்,
என்றைக்காவது புரிவாயா ?

எப்படியும் மறந்து விடலாம்….
கால்வாய்க்கும், கடல் நீருக்கும்
வித்தியாசம் தெரியாத
விடலையாய் நான்!

கவிதையில் கூட
காட்டிக்கொடுத்து விடக்கூடாது…
கல்லுக்குள் தேரையாய்,
கவனமுடன் நீ!

சாபம் இல்லை இதற்கும் கூட
சாத்தியம் என்பதால் கேட்கிறேன்…

‘அவன் அருகில் இருந்தால்
ஆறுதலாய் இருக்குமே ‘ – நீ
ஆசை கொள்ளும் அந்த நாள், அந்த நிமிடம்
நான் நானாக இருப்பேனா ? – இல்லை
‘நானே ‘ இருப்பேனா ?

**********
a_manavazhahan@hotmail.com

Series Navigation