விஸ்வாமித்ராவுக்கு மீண்டும் பதில்

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

பரிமளம்


விவாதத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பதில் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால் இந்தப் பதிலை எழுதுகிறேன். கூறியது கூறல் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை. அன்பர்கள் பொறுத்தருள்க.

இந்த விவாதம் தொடர்பான விஸ்வாமித்ராவின் கட்டுரை, கடிதங்களிலிருந்து எடுக்கப்பட்ட கூற்றுகள் [ ] இந்த அடைப்புக்குள் தரப்படுகின்றன.

1 விஸ்வாமித்ரா

[ ‘ஈ வெ ரா வின் அவமரியாதைத் திருமணத்திற்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல ‘ என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, இன்னொருபுறம் வக்காலத்து வாங்கியிருக்கிருக்கும் உங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.]

மேலே மேற்கோள் குறிகளுக்குள் இடம்பெற்றிருப்பதை நான் எழுதவில்லை. ஈவேராவின் திருமணத்தை அவமரியாதைத் திருமணம் என்று குறிப்பிட்டவர் விஸ்வாமித்ராவே தவிர நானில்லை. இப்படி அழைப்பது அநாகரிகமானது, வன்மையான கண்டனத்துக்குரியது என்றே நான் எழுதியிருந்தேன்.

நான் எழுதாத, நான் எதிர்த்த ஒன்று என் கூற்றாக வருவதை எண்ணி நான் என்ன செய்வது ?

[அது சரி, ஈ வெ ராவின் சீடர்களிடம் நேர்மையான விவாதங்களையா எதிர் பார்க்க முடியும் ?]

***

[ஆக உங்கள் பகுத்தறிவுப் படி ஒரு எண்பது வயது கிழவன், பருவமடையாத 16 வயது பென்ணைத் திருமணம் செய்து கொண்டால் அது தவறு, ஆனால் அதே கிழவன், பருவமடைந்த 16 வயது சிறு பெண்னைத் திருமணம் செய்து கொள்வது சரி அப்படித்தானே ?]

பருவமடைந்தபெண், பருவமடையாதபெண், 16 வயதுப்பெண் என்னும் வார்த்தைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தவே இல்லை. ‘சட்டபூர்வமாக வயதுக்கு வந்த பெண்’ என்றே நான் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழில் நல்ல தேர்ச்சியுடைய விஸ்வாமித்ராவுக்குப் பருவமடைவதற்கும், சட்டபூர்வ வயதை அடைவதற்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரிந்திருக்கும் என்று நம்பலாம். இருந்தும் நான் குறிப்பிடாத வார்த்தைகளை அவர் பயன்படுத்துவதற்குக் காரணம் என்ன ?

வேண்டாதவர்களைக் கொச்சைப்படுத்தி மகிழ்வது.

[அப்போது ஈவேராவின் வயது 72. மணியம்மைக்கு 26.]

சட்டபூர்வ வயதை அடைந்தால் மட்டும் ஒரு பெண் ஒரு கிழவரை மணந்துகொள்வது சரியாகிவிடும் என்றும் நான் குறிப்பிடவில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருமணத்தை நான் ஆதரிக்கிறேன் என்பதுபோன்ற ஒரு தோற்றத்தை விஸ்வாமித்ரா உருவாக்குகிறார். அந்தப் பெண் எவ்விதக் கட்டாயமும் இல்லாமல் தன் விருப்பப்படித் தானே மணம் செய்துகொள்வதுதான் தவறில்லை என்று குறிப்பிட்டேன். திருமணத்துக்கு வேண்டிய ‘பெண்ணின் விருப்பம்’ என்ற இந்த முக்கியமான விதி விஸ்வாமித்ராவின் கட்டுரையிலோ கடிதங்களிலோ காணப்படாததில்ி வியப்பொன்றுமில்லை.

[மணியம்மைக்கு எவ்வித உணர்வுகளும் இருந்து விட்டுப் போகட்டும், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.]

***

[சட்டபூர்வமாகக் கூட ஒரு வயதுக்கு வந்த பெண் ஒரு கிழவனைக் திருமணம் செய்து கொண்டால் அது பொருந்தாத் திருமணம் என்று தான் ஈ வெ ராவே கூறுகிறார். அப்படி எழுதிய மை காய்வதற்குள் தன் தள்ளாத வயதில் ஐம்பது வயது இளைய ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அதைத்தான் நான் முரண்பாடு என்று குறிப்பிட்டேன்.]

விஸ்வாமித்ரா மேற்கோளாகக் காட்டும் ராமசாமியின் குடியரசு கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 1928. [(குடியரசு 3-6-1928)]

மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டது 1949 ல். [சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஈவேராவின் இரண்டாவது திருமணம் 9-7-1949 ஆம் ஆண்டு நடந்தது.]

எழுதிய மை காய்வதற்குள் நடந்த திருமணமா இது ?

21 ஆண்டுக்கால இடைவெளியைக் குறிப்பதற்கு ‘எழுதிய மை காய்வதற்குள்’ என்னும் தொடரைப் பயன்படுத்தலாம் என்பதை அறியும் அளவுக்கு எனக்குத் தமிழறிவு போதாது என்று ஒத்துக்கொள்கிறேன்.

[எதைப் பற்றியும் ஆராய்ந்து படித்து அறியாமல், அரைகுறையாக படித்து விட்டு, கண்மூடித்தனமாக கண்டிக்க வருவது உங்களின் வழக்கமாக இருக்கிறது என்பேன்]

***

[அந்தத் திருமணத்தை தவறு என்று நான் குறிப்பிடவில்லை, அதிலுள்ள முரண்பாடுகளைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன்.]

இப்போது இப்படி எழுதும் விஸ்வாமித்ரா ராமசாமியின் திருமணத்தைப் பற்றி முன்பு எழுதியது என்ன என்று பார்ப்போம்.

[ஈவேராவின் அவமரியாதைத் திருமணத்துக்கும் சப்பைக்கட்டு கட்டி நண்பர் பரிமளம் எழுதியுள்ள மடலைக் கண்டு சிரிப்புதான் வருகிறது.]

இதற்குக் கூட, அவமரியாதைத் திருமணம் என்று திட்டினேனே தவிர, தவறு என்று சொல்லவில்லையே என்று புலவர் விஸ்வாமித்ரா வாதிடலாம்.

2 மணப்பொருத்தம்

ராமசாமியின் குடியரசுக் கட்டுரையை மையமாக வைத்தே விஸ்வாமித்ரா இந்த விவாதத்தை ஆரம்பித்து நடத்துகிறார் என்பதால் அதை மீண்டும் பார்ப்போம்.

[ ‘ ‘மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற நிர்ப்பந்த முறையில் நடப்பது சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்றே சொல்லலாம். ‘ ‘ (குடியரசு 3-6-1928) ]

திருமணத்துக்கு ராமசாமி மூன்று கூறுகளை முன்வைக்கிறார். இதில் ‘போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்’ என்பதுதான் இங்கே முக்கியம்.

வயது பொருத்தமில்லாதது என்றால் குழந்தைத் திருமணத்தையும் பெண்களை முதியவர்களுக்குக் கட்டாயமாக மணமுடித்து வைப்பதையும் குறிக்கிறது என்று நான் பொருள்கொள்கிறேன். விஸ்வாமித்ரா இல்லை என்கிறார். திருமணம் செய்துகொள்ளும் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே உள்ள வயது இடைவெளியைப் பற்றி மட்டுமே ஈவேரா இங்குக் குறிப்பிடுகிறார் என்றும் குழந்தைத் திருமணத்தைப் பற்றி அறவே பேசவில்லை என்றும் அழுத்தம் திருத்தமாக நம்புகிறார். விஸ்வாமித்ராவின் கடிதத்தில் இந்த அழுத்தங்கள் மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் வலியுறுத்தப்படுகின்றன. [ ‘போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும் ‘ தமிழ் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டுப் புரிந்து கொண்டு விவாதிக்க வரவும். ‘போதிய வயது ‘ என்றுதான் சொல்லியிருக்கிறார், சிறு வயது என்றோ மைனர் வயது என்றோ சொல்லவில்லை. போதிய வயது என்று எழுதும் பொழுது, மணமக்களிடையே ஒன்றிலிருந்து பத்து வயதுக்குள் இருக்கக்கூடிய வயது வித்தியாசத்தைத்தான் ஈ வெ ரா சுட்டுகிறார் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.] விஸ்வாமித்ரா கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்றால் ஒரு பத்து வயதுச் சிறுமிக்கும் ஒரு பதினைந்து வயதுச் சிறுவனுக்குமிை டயே நடைபெறும் ஒரு திருமணத்துக்குப் பெரியார் ஆதரவு தெரிவிக்கிறார் என்று பொருளாகிறது!

எனவே ஈவெராவின் கூற்று வெறும் வயது வேறுபாட்டை மட்டும் குறிப்பிடவில்லை என்பது தெளிவு.

***

கட்டுரை எழுதப்பட்டது 1928 இல். சட்டபூர்வ வயதை அடைந்த பிறகே பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அரசாங்கம் 1970 களில் கூட பிரச்சாரம் (ஒரு மகப்பேறு மருத்துவமனையின் சுவரில் இருந்த ‘குழந்தைக்கு ஒரு குழந்தையா ? சிந்திப்பீர’ி என்னும் விளம்பரத்தை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை) மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒரு நாட்டில், 1928 காலப்பகுதியில் குழந்தைத் திருமணங்களும் கட்டாய மணங்களும் அதிகம் நடந்திருக்குமா அல்லது சட்டபூர்வ வயதை அடைந்த பெண்கள் தொண்டு கிழவர்களைத் தம் விருப்பப்படித் தாமே மணந்துகொள்ளும் திருமணங்கள் அதிகம் நடந்திருக்குமா ?

முதல் இரண்டையும் விட்டுவிட்டு மூன்றாவது வகைத் திருமணங்களைத்தான் ராமசாமி தன் கட்டுரையில் கண்டிக்கிறார் என்று விஸ்வாமித்ரா எப்படி உறுதியான முடிவுக்கு வருகிறார் ?

[குழந்தைத் திருமணத்தைப் பற்று ஈ வெ ரா எழுதவில்லை. பொருந்தாத் திருமணத்தைப் பற்றித்தான் அவர் எழுதினார்.]

முடிவுக்கு வந்து அதன் மீது எப்படித் தன் வாதத்தை விடாப்பிடியாகக் கட்டமைக்கிறார் என்பது வியப்புக்குரியது.

மூன்றாவது வகைத் திருமணங்கள், அதிகம் என்ன, ஒன்றிரண்டுகூட நடந்திருக்குமா என்பதும், (இப்படிப்பட்ட கற்பனைகூட யாருக்கும் வந்திருக்காது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்) அப்படியே நடந்திருந்தாலும் காலமெல்லாம் பெண்ணுரிமையை வலியுறுத்திய ராமசாமி அதை எதிர்த்திருப்பார் என்பதும் ஐயமே.

***

இவ்வளவுக்கும் பிறகு ராமசாமியின் இந்த மேற்கோள் குழந்தைத் திருமணத்தையோ அல்லது கட்டாயத் திருமணத்தையோ பற்றியது அல்ல என்று நிரூபிக்க விஸ்வாமித்ராவுக்கு வேறொரு சுலபமான வழி இருக்கிறது. ஈவேராவின் அந்தக் கட்டுரையை முழுமையாக வெளியிடுவதே அது. (முழுக்கட்டுரையை யாரேனும் திண்ணைக்கு அனுப்பிவைத்தால் மகிழ்வேன்)

***

திருமணத்தைப் பற்றிய ராமசாமியின் மூன்று கூறுகளை அவரது சொந்தத் திருமணத்தோடு ஒப்பிடுகையில் முதலாவது கூறு ஐயத்துக்குரியது என்றே ஒரு விவாதத்துக்காக வைத்துக்கொள்வோம். இரண்டாவது மூன்றாவது கூறுகளில் எந்த வித முரண்பாடுகளும் இல்லை. இருந்தாலும் ராமசாமியின் திருமணம் முரண்பாடு உடையது என்று விஸ்வாமித்ரா ஏன் முரண்டுபிடிக்கிறார் ? (எனக்குத் தமிழ் தெரியாமல் இருப்பதுபோல் விஸ்வாமித்ராவுக்குக் கணக்குத் தெரியாதோ ?)

3 பதிவுத்திருமணம்

[மற்றவர்களுக்கு எல்லாம் ஏன் ஈ வெ ரா பதிவுத் திருமணத்தை சிபாரிசு செய்யவில்லை என்பதுதான் எனது கேள்வி. பதிவுத் திருமணமும் சுயமரியாதைத் திருமணம் என்றால் தன்னை நம்பி வந்த கூட்டத்திற்கும் சட்டத்திற்குட்பட்ட அதே பதிவு திருமணத்தைச் செய்து கொள்ள அறிவுறுத்துவதுதானே ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளம் ?]

மேற்கோள் காட்டி மறுக்க என்னால் இயலவில்லை என்பதால் பதிவுத் திருமணத்தை மற்றவர்களுக்குச் சிபாரிசு செய்யவில்லை என்று கூறுவது ஐயத்துக்குரியது என்று மட்டும் தற்போதைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

[அவர்கள் சொத்து எக்கேடாவது கெட்டுப் போகட்டும், என் சொத்து மட்டும் என் கையில் இருக்க வேண்டும் என்ற எண்ணப்படிதானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதைத் திருமணத்தை மற்றவர்களுக்கு, செல்லுபடியாகும் பதிவுத்திருமணத்தை தனக்கு என்று வகுத்துக் கொண்டார்! இதுதானா கொள்கைப்பிடிப்பு! ?]

சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டால் சொத்துகளை இழக்கத்தான் வேண்டுமா என்ற விவரம் எனக்குப் புதிது என்பதை ஒத்துக்கொள்கிறேன். எத்தனைப் பேர் இவ்வாறு தமது சொத்துகளை இழந்தார்கள் என்பதற்கு ஏதேனும் புள்ளிவிவரங்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை. (பெற்றோருக்கு விருப்பமில்லாமல் காதல் மணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறி பலர் சொத்துகளை இழந்திருக்கலாம். ஆனால் விஸ்வாமித்ரா இந்த இழப்பைக் குறிக்கவில்லை என்பது தெளிவு) ஏதேனும் உண்மைச் சம்பவங்கள் அல்லது நிகழ்ச்சிகளை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும். எனக்குத் தெரிந்தவரை சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட பலர் இழப்பதற்கு ஏதுமில்லாதவர்கள்; வசதியற்றவர்கள்; அன்றாடங்காய்ச்சிகள்.

4 சில குழப்பங்கள்

[பொருந்தாத் திருமணம் பற்றி பத்தாம் பசலித்தனமாகப் பேசியதும், எழுதியதும் ஈ வே ராவும், அவரது பகுத்தறிவுப் பகலவன்களும் மட்டுமே; விஸ்வாமித்ரா அல்ல, அல்ல.]

இதற்கு என்ன பொருள் ?

***

ராமசாமியின் திருமணத்தைப் பற்றிய விவாதங்களுக்கும் மணியம்மையின் விருப்பங்களுக்கும் கூட தொடர்பில்லை என்று கருதும் விஸ்வாமித்ரா தேவையில்லாமல் ஜெயபாரதனை ஏன் இங்கு இழுக்கிறார் ? ஒருவேளை விஸ்வாமித்ரா என்னும் பெயருக்குப் பின்னால் இருப்பது ஜெயபாரதன்தானோ! (நான் பலருக்குப் பல பதில்கள் எழுதியிருக்கையில் ஜெயபாரதனை மட்டும் விஸ்வாமித்ரா குறிப்பிடுவதும் இந்த ஐயத்துக்கு ஒரு காரணமாகும்) அப்படியிருந்தால் நான் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டவனாகிறேன். ஏனெனில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஜெயபாரதனுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை என்ற முடிவில் இருந்துகொண்டிருக்கிறேன். இதை மீறிய குற்றத்துக்காளாக எனக்கு விருப்பமில்லை. இந்த முடிவை எடுப்பதற்கு முன் ஜெயபாரதனுக்கு நான் ஒரே ஒரு பதில்தான் எழுதியிருந்தேன். முடிவு எடுத்த ப ிறகு அவர் எனக்கு எதிர்வினையாற்றிய ஒரே ஒரு வேளையில் நான் பதில் எழுதவில்லை. பிறகு எப்படி அவருக்கு நான் எழுதிய பல பதில்களை(!) விஸ்வாமித்ரா கண்டுபிடித்தார் ?

5 பின்குறிப்புகள்

அண்ணாத்துரை கும்பல்களுக்கு மட்டும்தான் பதவி வெறி, மற்ற கட்சியைச் சேர்ந்த தியாகிகளுக்கெல்லாம் நாட்டின் முன்னேற்றம் மட்டுமே இலக்கு என்பது விஸ்வாமித்ராவின் நம்பிக்கையெனில் அதை மாற்றுவதற்கு நான் யார் ?

ஈவேரா பணம் சேர்ப்பதில் குறியாக இருந்தார் என்றுதான் நான் எழுதியிருந்தேன். சரியாகப் படித்துவிட்டுப் பதில் எழுத வரவும் என்று எனக்கு அறிவுறுத்தும் விஸ்வாமித்ரா இதைப் பணப்பித்து என்று மாற்றுகிறார். (பணம் சேர்ப்பதில் என்ன தவறு ? ஆட்சியில் அமர்ந்து ஈவேரா பொதுச்சொத்துகளைக் கொள்ளையடிக்கவில்லை)

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்