விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று

This entry is part 1 of 26 in the series 20100516_Issue

இரா.முருகன்


25 ஜூலை 1910 – சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை

அய்யரே மயிராண்டி தொரை ஆசனவாயிலே விரலை விட்டுக் கொடையறான்யா.

நாயுடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் பாதி தூரம் கேட்கிற மெல்லிய சுவரத்தில் சொன்னான்.

ஏற்கனவே கோட்டையில் பரிபாலனம் செய்து வந்த இன்னொரு துரை பகவான் பாதத்தில் போய்ச் சேர்ந்த களேபரத்தில் இருந்த உத்தியோகஸ்தர்கள் காதில் அது விழுந்ததும் விழாதுமாகப் பாவித்துக் கொண்டு சும்மா அங்காடி நாய் போல வெகு மும்முரமாக அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

என்னடா நாயுடு, ஆசன வாயிலே எல்லாம் அனாசாரமாத் தொரையைத் தொட விட்டுண்டு. துரைசானி தொட்டாலும் பாதகமில்லே.

நீலகண்டன், நாயுடு காதில் கிசுகிசுத்தான்.

நித்தியப்படிக்கு தலை குளித்து காதில் துளசி வைத்தபடி கோவிலுக்குப் போய் இத்தனை வருஷம் நாயுடு கழித்ததாலோ என்னமோ, அவன் பக்கத்தில் போனாலே அந்தத் திருத்துழாய் மணமும் கூடவே அவன் நாலு வேளையும் போஜனத்தில் இஷ்டப்பட்டு சேர்த்துக் கொள்ளும் பூண்டு வாடையுமாகச் சூழ்ந்திருந்தது.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாடை. நீலகண்டன் நினைப்பில் கற்பகம் எப்போதும் கறிவேப்பிலை வாடையோடு தான் வருகிறாள்.

கற்பகம் வீட்டில் சமையல் ஒழித்துப் போட்டு விட்டு அரைத் தூக்கமாகப் புரண்டு கொண்டிருப்பாள். கறிவேப்பிலை வாசனை நீலகண்டனுக்குத் தூக்கலாக மனதில் எழுந்தது.

இன்னிக்கு ஆபீஸ் குரிச்சியில் உட்கார்ந்து காகிதக் கட்டுக்களைப் பிரித்துப் படித்து இங்கிலீஷில் நோட்டு போட்டுக் கொண்டிருக்கிற வேலை கிடையாது. கிளம்பி வீட்டுக்குப் போனாலும் ஏன் போனேடான்னு கேட்க ஒருத்தனும் இல்லை.

வாரம் பிறந்து உடனே வந்த இன்னொரு ஞாயிற்றுக்கிழமை. அண்டிக்ளேர்ட் ஹாலிடே. ரஜா. விடுப்பு. இன்னும் என்னென்ன பாஷையில் என்ன எல்லாம் உண்டோ அதெல்லாம்.

படியளக்கிற துரை பரலோகம் போய் இப்படி ஒரு நாள் திடுதிப்பென்று ரஜாவாகிப் போன சந்தோஷம் நீலகண்டன் மனதில் றெக்கை கட்டிப் பறந்தது. சுற்றி நடக்கிற சுவாரசியமான வர்த்தமானங்களை சாவகாசமாகக் கொஞ்சம் அனுபவிக்கலாம்.

இந்த நாயுடுப் பையன் அரக்கப் பரக்க வந்து நின்று அந்த மாதிரிப்பட்ட ஏதோ சொல்கிறான். அந்தத் தெலுங்கனுக்கு எஜமானனான ஜட்ஜ் துரை இடக்குப் பண்ணுகிறது ரசமான வேடிக்கை விவகாரமாச்சே இந்த மணி நேரத்தில்.

இப்படி வா, ஓரமா ஒரு நிமிஷம் உட்காரலாம்.

ஆள் ஒழிந்த ஆபீசில் ஒரு நாற்காலியை சர்வ சுவாதீனமாக எடுத்துப் போட்டுக் கொண்டு நாயுடு உட்கார்ந்தான். எதிரில் மேஜை மேல் ஆரோகணித்தான் நீலகண்டன்.

குரல்கள். சுற்றிலும் உற்சாகமாக ஒலித்தபடி நகர்கிற குரல்கள்.

பூமாலை ஆள் உயரத்துக்கு சொல்லிடலாம்.

உயரத்துக்கு என்னத்துக்கு? நீளத்துக்குன்னு சொல்லுமய்யா.

மாலை சார்த்தி மரியாதை செய்யணும்னா இப்பவே வாங்கிடணும். காசு வசூல் பண்ணிடலாமா? நேரம் போயிட்டு இருக்கே.

ஆரியக் கூத்தா இது காசு காரியத்துலே கண்ணு வைக்க. நாதமுனி ஒரு தடவை புகையிலைக் கட்டையை மென்னு துப்பினா உடனே அனுமான் மாதிரி பெலம் வந்து நொடியிலே முடிச்சுடுவான். எங்கே போனான் அவன்?

நாயுடு தோளில் பின்னால் இருந்து கை வைத்துப் பார்த்து, அட, நாதமுனி இல்லியா என்று யாரோ சத்தமாகச் சொல்லிக் கொண்டு போனார்கள். பக்கத்து செக்ஷன் டெபுடி சூப்பிரண்டு சேஷகிரி ராவு அந்த மனுஷ்யர்.

அட எழவே. நாதமுனி டவாலி போட்டாலும் போடாவிட்டாலும் சேவகன். அவன் எந்தக் காலத்தில் நீலகண்டன் மாதிரி மேல் உத்தியோகஸ்தன் முன்னால் சரி சமானமாக உட்காருவான்? இது கூட சூப்பிரண்டு புத்திக்கு உரைக்கலியா?

நீலகண்டனுக்கு எரிச்சல் வந்தது. போகட்டும். ராவுகாருவுக்கு பகலிலேயே பசுமாடு தெரியாது. அவ்வளவு தீர்க்கமான கண் பார்வை. இப்போது துரை செத்துப் போன சந்தோஷத்தில் அதுவும் அஸ்தமித்துப் போயிருக்கலாம்.

சொல்லுடா நாயுடு. உங்க துரை என்னிக்குப் போகறதா உத்தேசம்?

அவனா, நமக்கு கருமாதி பண்ணி முடிச்சுட்டுத்தான் நாண்டுக்கிட்டு சாவான் கபோதி. ரெண்டு நாளா அவனோட ரோதனை தாளலை.

நாயுடு நிஜமாகவே கவலையோடும் எரிச்சலோடும் சொன்னான்.

என்ன ஆச்சுடா?

டாக்குமெண்டைக் கொண்டான்னு வம்படி அடிச்சுட்டு நிக்கறான்யா ஆடிட்டு வந்த துரையோட சேர்ந்துக்கிட்டு இந்த உள்ளூரானும். வந்த புடுங்கி ஜட்ஜும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது. கணக்கு வழக்குப் பார்க்க வந்தவன். அவன் சொல்றான்னு ஹைகோர்ட் ஜட்ஜ், இவன் குதிக்கறான்யா.

குதிக்கட்டும். என்னை என்ன பண்ணச் சொல்றேடா நாயுடு?

ராஜா இல்லே, டாக்குமெண்டைக் கொடுத்துடுப்பா. சிரமம் பார்க்காமா வீட்டுக்குப் போய் கொண்டாந்துடு. நீ பயபத்திரமா வச்சிருப்பேன்னு எனக்குத் தெரியாதா என்ன?

எந்த டாக்குமெண்டைச் சொல்லி எழவைக் கூட்டறேடா நாயுடு. எங்க துரை சொர்க்கத்துக்குப் போயிட்டான்னு நாங்க எல்லாம் துக்கிச்சுண்டு நிக்கறோம். இப்போ போய் வீட்டுக்கு என்னத்துக்குடா போகச் சொல்றே?

கையூட்டாகக் கிடைத்த தனம் மாதிரி தானாக வந்து சேர்ந்த ரஜா நாளை இஷ்டத்துக்கு லகரி விஷயமாகக் கருதிச் செலவழிக்கத் துடிக்கிறபோது நாயுடு என்னமோ காரியத்துக்கு ஏவுகிறானே. அவனை உபத்திரவப் படுத்துகிற ஜட்ஜ் நாசமாகப் போக.

நீலகண்டனுக்கும் நாயுடுவின் எரிச்சல் தொத்திக் கொண்டது.

துரை பங்களாவுக்கு எல்லோரும் புறப்படும் வரை பரபரப்பாக மாலையைக் கொண்டா, நாரைக் கொண்டா, பாடை கட்ட மூங்கிலைக் கொண்டா என்று அலைகிற மாதிரி போக்குக் காட்டிக் கொண்டிருப்பான் அவன். மற்றவர்கள் ஜட்கா, டிராம் இதர வாகனங்களில் இழவு வீட்டுக்குப் போன பிற்பாடு குடையை தோளில் தொங்க விட்டுக் கொண்டு பிராட்வே சாப்பாட்டுக் கடையில் ஏறி மனசுக்குத் தோணிய மாதிரி சகலமானதையும் ருஜித்துச் சாப்பிட்டு விட்டு சைனா பஜாரில் பராக்குப் பார்த்தபடி அலைய உத்தேசமாக திட்டம் போட்டிருந்தான். இந்தப் பழிகார நாயுடு என்னத்துக்கு இப்போ வந்து நிக்கணும்?

டெத்துக்கு மல்லிப்பூ மாலை என்னத்துக்கு? ரோஜா மாலையே வாங்கிடலாம். பெரிசா இடுப்பு வரைக்கும் வரணும். கல்யாண வரன் மாதிரி அனுப்பி வச்சுடலாம். மேலே போயாவது துருத்தியைச் சும்மா வச்சுட்டு கிடக்கட்டும்.

டபேதார் நாதமுனி யாரிடமோ சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தது ஆபீசுக்கு அன்னியனான ஹைகோர்ட் நாயுடுவைப் பார்த்ததும் நின்று போனது.

சார் மன்னிக்கணும். ஒரு டெத் ஆயிடுச்சு.

அவனுக்கு இங்கிலீஷ் பேசுகிற சந்தோஷம் உச்சத்தில். டெத் என்ற வார்த்தையை இப்படி நொடிக்கொரு தடவை நாலு பேர் கூடிய சபையில் உச்சரிக்க வாய்ப்ப்பு கிடைக்கும் என்று அவன் சொப்பனத்திலும் நினைத்ததில்லை. அவன் தொடுப்பு வைத்திருந்த சட்டைக்காரி அன்னி நாலைந்து கெட்ட வார்த்தையோடு டெத், பர்த், வாட் இஸ் யுவர் நேம், ஷெல் வி ஸ்லீப் இப்படியும் சொல்லிக் கொடுத்திருக்கிறாள்.

நாதமுனிக்குத்தான் அதீத துக்கம். பார்த்து பார்த்துப் பங்கா வீசிப் பழகின தோஷமாச்சே. இவனுக்கு சுடச்சுட ஆப்பம் சாப்பிட்டாத்தான் இன்னிப் பொழுதுக்கு விசனம் தீரும். இல்லியா செட்டியாரே?

நீலகண்டன் சிரிக்காமல் சொன்னான்.

சாமிகளே, உங்க ஹாஸ்யத்தை சாவகாசமா அனுபவிக்கறேன். இப்போ தலை போற விஷயம். உத்தரவு கொடுத்தா.

ரோமமாச்சு. அட, நேரமாச்சுய்யா. சொல்லு.

நாங்க பியூனுங்க டவாலி எல்லாம் தலைக்கு கால் ரூபா போடறோம். குமஸ்தன்மார் அரை ரூபா. உங்களைப் போல தலைமை உத்தியோகஸ்தாள் அவங்க அவங்க இஷ்டம் போல தரலாம்னு தீர்மானம் ஆகியிருக்கு.

நாதமுனி காசுக்காகக் காத்திருக்கிறான். நீலகண்டன் ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ கொடுத்தால் தான் துரை சாயந்திரம் மண்ணுக்குள் போவான்.

ரெண்டு ரூபாய் கொடுக்கிற அளவு அவன் ஒண்ணும் நீலகண்டனுக்கு அத்தனை அபிமானம் காட்டவில்லை.

பார்த்தசாரதி அய்யங்கானுக்குத்தான் பட்சமாக இருந்து ரெண்டு வருஷம் முன்பாகவே உத்தியோக உயர்வு வாங்கிக் கொடுத்தவன் பரமபதமடைந்த துரை. அவனுக்கு எருக்கம் பூ மாலையே ஜாஸ்தி. சாணிப் பிள்ளையார் மாதிரி போட்டுக் கொண்டு பாதிரி உதவியோடு நரகத்துக்குப் போய்ச் சேரட்டும். துடைக்கு நடுவே கிள்ளுகிற பாதிரியாக இருந்தால் கஷ்டம். துரை எழுந்து உட்கார்ந்து விடலாம்.

சாமிகளே, நான் நிக்கட்டா இல்லே மத்தவங்களை முடிச்சுட்டு.

என்னை இப்பவே முடிச்சுடு நாதமுனி. போய்ச் சேர்ந்திடறேன்.

அவச் சொல்லு என்னத்துக்கு சாமி. எட்டுக் கிளார்க்கு சீமான்கள் சௌக்கியமா இருந்தாத்தான் என்னைப்போல பாவப்பட்ட டவாலிகளுக்கு ஒரு வாய்க் கஞ்சி.

இதையும் கஞ்சிக் கணக்குலே சேத்துக்கோ. எட்டுக்கிளார்க் நீலகண்டய்யர் உபயம் ஒரு கோடி வராகன். அழுகிப் புழுத்துப் போவானுக்கு மாலை மரியாதை செய்கிற வகையில் ஆசீர்வாதப் பணம்.

நீலகண்டன் ஜேபியில் இருந்து ஒரு முழு ரூபாயை எடுத்து மனசே இல்லாமல் கொடுத்தான். டபேதார்களும் மற்ற டவாலிகளும் பிணத்துக்கு ரோஜா மாலை போட்டது போக மிச்சம் பிடித்த பணத்தில் இன்னிக்கு ராத்திரி சாராயக் கடையில் ஏக ரகளையாக இருப்பார்கள். அவனுக்குத் தெரியும்.

அய்யரே, துரையை கடைத்தேத்தறதோட என்னையும் கொஞ்சம் கவனிய்யா. ஆபீசுக்கு லேட் ஆகிட்டு இருக்கு. அவசரமா வயித்தைக் கலக்குதுன்னு சொல்லி மருந்து வாங்க வந்தேன்.

நாயுடு நெளிந்தான்.

என்னடா பண்ணனும்கிறே நாயுடு? கக்கூஸ் எங்கே இருக்குன்னு காட்டணுமா?

பகடி பண்ணாதே அய்யரே. சிரிக்கற ஸ்திதியிலே இப்ப இந்த நாயக்கன் இல்லே.

விஷயத்துக்கு வாடா.

உன் கையிலே ஒரு பித்தளைக் கொடம் கொடுத்தேன் இல்லே முன்னே ஒரு வாட்டி நீ நம்ம கோர்ட்டுக் கச்சேரிக்கு வந்தபோது. சனிக்கிழமை மத்யானம். வடை துன்னோமே. வெங்காய வடை.

வெங்காய வடையா? கொடமா? எதைப் பத்திடா பிரஸ்தாபம்?

கொடம்யா அய்யரே. பித்தளையோ செப்புக் கொடமோ. நல்லா வடிவா.

அவன் கையைக் குவித்து உதாரணம் சொல்வதற்கு முன் தடுத்து நிறுத்தினான் நீலகண்டன்.

கொடம் எங்கேடா கொடுத்தே? ஒரு ஸ்தாலி சொம்பு கொடுத்தே. ஞாபகம் இருக்கு.

அதான் அய்யரே. அதேதான். என்ன அழகா பேரு சொல்றே பாரு. நமக்கு எல்லாமே கொடம் தான். அந்த தாலிக் கொம்போடு கூட.

ஸ்தாலி சொம்புடா பழி.

என்ன எழவோ. அதோட கூட ஒரு டாக்குமெண்ட் கொடுத்தேனே. நினைவிருக்கா?

வீட்டு பீரோவில் பத்திரமா பூட்டி வச்சிருக்கேண்டா. அதுக்கென்ன இப்போ.

நாயுடு ஒரு எட்டு முன்னால் வந்து நீலகண்டனை ஆரத் தழுவிக் கொண்டான். மற்ற நேரத்தில் மடி ஆசாரம் தீண்டல் பார்க்கிற நீலகண்டனுக்கு இந்த சந்தோஷ நேரத்தில் பிரஷ்டாகப்படவில்லை அது. சாயந்திரம் குளிக்கிறபோது இன்னொரு வாளி கிணற்று ஜலத்தை நாயுடு பெயர் சொல்லித் தலையில் கவிழ்த்துக் கொண்டால் போச்சு.

ராஜா இல்லே. வீட்டுக்குப் போய் அந்தத் தாலிக் கொடியையும், டாக்குமெண்டையும் எடுத்தாந்து கொடுத்திடு அய்யரே. மதியம் மதுரைக்கார கருத்த பார்ப்பான் கடையிலே அசோகா அல்வா நம்ம கணக்குலே உனக்கு. சிரமம் பார்க்காமப் போய் வந்துடு கண்ணு. நீ ஒரு சல்லிக்காசு தர வேணாம். அல்லாத்தையும் இந்த நாயுடு பாத்துப்பான்.

உலகத்தையே சுருட்டி எடுத்து தத்தம் பண்ணுகிற மனநிலையில் நாயுடு இருந்தான்.

எதுக்குடா இப்படி கூத்தாடறே?

நீலகண்டன் விசாரித்தான். வீட்டுக்குப் போய் உடனே திரும்ப உண்டான வண்டிச் சத்தத்தையும் கொடுக்க நாயுடுவிடம் தாராளமாகப் பணப் புழக்கம் உண்டு இப்போது என்பதில் கொஞ்சம் பொறாமை நீலகண்டனுக்கு.

அந்த டாகுமெண்ட் ஹைகோர்ட் கட்டிடத்தை இடிச்சுக் கட்டும்போது என் கவனிப்புக்காக ஒப்படைச்சது. ஜாபிதா போட்டு கையெழுத்து வாங்கிட்டானுங்க நாய்ங்க. இப்போ ஆடிட் வந்த வெண்குஷ்டக்காரன் அந்தக் காகிதத்தை வச்சு நாக்கு வழிச்சுட்டு நிக்கறான்.

என்ன சொல்றா பிரஜாபதிகள்?

மயித்தப் புடுங்கச் சொல்றான். நான் அந்த டாக்குமெண்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்னு ஜட்ஜ் மயிரான் ஆடிட்டன் கிட்டே சொல்லிட்டானாம். எங்கேடா அதுன்னு இவன் கொடையறான். ஒரு புடுங்கிக்கும் அந்த மலையாள காகிதத்திலே முலையாளச்சி மச்ச லச்சணம் எழுதியிருக்கா மத்த மயித்து விவரம் பதிஞ்சிருக்கான்னு தெரியாது. காணோமா? நாயுடுவைக் காச்சு. கிடைச்சுதா? வாகா மடிச்சு குண்டியைத் தொடச்சுப் போட்டு போய்க்கினே இரு. அவன் வச்சது தானே அய்யரே சட்டம்.

நாதமுனியும் ரெண்டு ஜூனியர் குமஸ்தன்களும் அவசரமாக வந்து நின்றார்கள். அதிலே ஒரு குமஸ்தன் போன மாசம்தான் உத்தியோகத்தில் சேர்ந்தவன். வேலை கற்றுக் கொடுக்கும் முன்னால், தபால் சமாச்சாரங்களைக் கவனிக்க அவனுக்கு உத்தரவு கொடுத்து உட்கார்த்தி வைத்திருக்கிறான் நீலகண்டன்.

தபால் குமஸ்தா உடம்பு தடதடவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. ஜன்னி கண்ட மேனிக்கு ஆபீசுக்குப் புறப்பட்டு வந்துவிட்டானோ?

ஸ்வாமின், க்ஷமிக்கணும். நான் இவா கேக்கற காசு கொடுத்திடறேன். துரையோட ஆத்துக்கு எல்லாம் போகணும்னு சாட்டியம் பண்றா பின்னேயும். எனக்கு பிரேத பயம் ஜாஸ்தி. பக்கத்துலே நின்னாலே மூச்சு முட்டும். என்னை விட்டுடச் சொல்லுங்கோ தயவாயிட்டு. நான் எங்கேயும் வரலே.

மற்ற நேரமென்றால் நீலகண்டன் குஷியாக கீழ் உத்தியோகஸ்தனை சகலமான மிடுக்கோடும் கடிந்து கொண்டிருப்பான்.

ஓய், ஒரு சர்க்கார் காரியாலயத்தில் உத்தியோகம் என்று ஆனபிறகு ஊரோடு ஒட்ட ஒழுகலேன்னாலும் சக உத்யோகஸ்தர்களோட அனுசரிச்சு நடந்துக்க வேண்டாமா? நமக்கெல்லாம் பிரபு துல்யனான துரை இன்னிக்குக் கார்த்தாலே பகவான் திருவடி போய்ச் சேர்ந்திருக்கார். எல்லோரும் போய் மரியாதை பண்ணும்போது நீர் மட்டும் வரலைன்னா எப்படி? அதுவும் என்னைப் போல மேல் உத்யோகஸ்தன் ஆர்டர் போட்ட அப்புறம்?

கீழ்ப்பட்டவர்களை இப்படிக் காய்ச்ச அவனுக்கு வெகு இஷ்டம். சொந்த ஸ்தானத்தை அவ்வப்போது இப்படி நிர்ணயம் செய்து கொள்ளாவிட்டால் குழி பறிக்க கீழே இருக்கிற சும்பன்கள் எப்படா எப்படா என்று காத்திருப்பார்கள்.

ஆனால் இன்னிக்கு அது முடியாது. நீலகண்டனே துரையை வழியனுப்பி வைக்கப் போகப் போறதில்லை.

இந்த நாயுடு விஷயமாக போக வர ஒரு ரெண்டு மணி நேரம் வேலை. நடுவிலே வீட்டிலேயே சுடச்சுட மத்யானச் சாப்பாட்டையும் வைத்துக் கொள்ளலாம். மதியம் ஒரு சின்னத் தூக்கம். அப்புறம் டாக்குமெண்டை நாயுடுவிடம் ஒப்படைத்து விட்டு சமுத்திரக் கரையில் காற்று வாங்கிக்கொண்டு லாந்தி விட்டு வீட்டுக்குப் போக ராத்திரி ஆகிவிடும். வழியிலே சோழியன் கடையிலே சுடச்சுட இட்டலியும் சுவியனும் வெங்காயச் சட்னியோடு வழித்து முழுங்கினால் அமிர்தமாக இருக்கும்.

எல்லாச் செலவையும் நாயுடு கவனித்துக் கொள்வான். கோர்ட்டு வம்பு வழக்கு வியாஜ்ஜியம் என்று வரும் கட்சிக்காரர்கள் அவரவர் கேசுகளின் பேப்பர் கட்டு முன்னும் பின்னும் போக, அவன் கையை சதா நனைத்தபடி இருக்கிறார்கள்.

செட்டியாரே. இந்த டெஸ்பாட்ச் கிளர்க்கனுக்கு நெக்ரோபோபியா ரோகம். வேணாம். குழந்தைப் பிள்ளை. மரண ஸ்தலத்திலே வலுக்கட்டாயமா இழுத்துண்டு போய் நிறுத்தினா, மூர்ச்சை ஆகி இவனும் யாத்திரை சொல்லிட்டுக் கிளம்பிடுவான். எனக்கு புதுசா டெஸ்பாட்ச் கிளார்க் கிடைக்கறது இன்னும் கஷ்டம். இவன் வராட்ட பரவாயில்லே. யார் வந்தாலும் யார் போனாலும் போன துரை திரும்ப வந்து நீ இழுக்கற பங்கா முன்னாலே உட்காரப் போறதில்லே.

நெக்ரொபோபியா. நல்ல நேரத்தில் சரியான இங்கிலீஷ் வார்த்தை ஞாபகம் வந்ததற்காக தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான் நீலகண்டன். அந்த வார்த்தைப் பிரயோகத்தில் நாதமுனி மட்டுமில்ல, சிநேகிதன் நாயுடு கூட தன்னை வெகு மதிப்போடு நோக்கினதாக அவனுக்குப் பட்டது.

தபால் குமஸ்தன் ஆயிரம் நமஸ்காரங்களோடு போக நாயுடுவை பெருமிதமாகப் பார்த்தான் அவன்.

சரி நீ போய்ட்டு எப்ப வர்றே? இந்தா வண்டிச் சத்தத்துக்கு வச்சுக்கோ. பிகு பண்ணிக்காதே.

நீலகண்டன் கையில் பெரிய துட்டாக சிலதைத் திணித்தான் நாயுடு. அவன் சொன்னானே என்று பிகு செய்து அப்புறம் மனசே இல்லாதவனாக வாங்கிக் கொண்டான் நீலகண்டன். இந்தத் துட்டு எதேஷ்டம். ராத்திரி இட்லிவரை பையில் மிச்சமாக இருக்கும். நாளைக்கு மதியம் வெளியே சாப்பிடக்கூட மீதி வரலாம்.

ஏழெட்டு குதிரை வண்டிகள் வந்து நிற்க வெயிலுக்குப் பிடித்த குடையை மடக்கிக் கொண்டு வண்டிக்கு ஐந்தாறு பேராக உத்தியோகஸ்தர்கள் புளிமூட்டையாக அவற்றில் அடைந்தார்கள்.

சாமி, உங்களுக்குத் தனி வண்டி ஏற்பாடு பண்ணிடட்டா?

நாதமுனி ரோஜாப்பூ மாலையை நாசுக்காகத் தூக்கிப் பிடித்தபடி கேட்டான்.

நீ போய்ண்டு இரு நாதமுனி. ஹைகோர்ட்டுலே என்னமோ வியாஜ்யமாம். நம்ம ஆபீஸ் சம்பந்தப்பட்டதுங்கறான் நாயுடு. பேசிட்டு தோ வந்துடறேன்.

கொஞ்சம் உரக்கவே சொன்னான் நீலகண்டன். மற்றவர்கள் காதிலும் விழட்டும்.

அவர்கள் போன பிற்பாடு, நாயுடுவும் புறப்பட்டுப் போனான்.

திரும்பத் திரும்ப அவன் சொன்னது இதுதான்.

அய்யரே சாயந்திரத்துக்குள்ளே வந்துடுவே இல்லே?

(தொடரும்)

Series Navigation<< ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட<< வேத வனம் விருட்சம் 85<< சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு<< ஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”<< பட்சியும் கனகாம்பரமும்<< அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010<< என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு<< பெத்தமனம் பித்து<< சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14<< பத்துப்பாட்டில் தொழிலும், தொழிலாளர்களும்<< கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)<< பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்<< குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3<< அஜ்னபி<< உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து<< அம்மா<< உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்<< காதலி எனும் கிறுக்கல்கள்!<< இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை<< திராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா?<< காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்<< முள்பாதை 29ஆயுத மனிதன் (The Man of Destiny ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -17 >>

இரா.முருகன்

இரா.முருகன்