விஷ்வதுளசி -இணையாத உறவுகள்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

பாவண்ணன்


முதன்முதலாக திரைப்பட இயக்குநராக மலர்ந்திருப்பவர் சுமதிராம். திரைப்பட மொழியின்மீது கொண்ட அளவற்ற ஈடுபாட்டால் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை முதலிட்டுத் தன் கனவுகளை நனவாக்கிக்கொண்டிருப்பவர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பெருமைகொள்ளும் அளவில் மிக உயர்வான தளத்தில் உள்ளது. பாத்திரங்களின் மன இயக்கத்துக்கு இணையாக ஒவ்வொரு புறப்பொருளின் அசைவையும் இருப்பையும் அர்த்தப்படுத்தியதன் வழியாக திரைப்பட மொழியைக் கையாள்வதில் இவருக்கு இருக்கும் ஆர்வத்தையும் திறமையையும் புரிந்துகொள்ளமுடிகிறது. பொருளாதார நிலையில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் இளமையில் தான் விரும்பிய பெண்ணை அடையமுடியாத ஏக்கம் ஒரு பெரும்பாரமாக அழுத்த தனிமையில் வாடும் நடுவயதைக் கடந்த ஆணும் சந்தர்ப்பவசத்தால் ஆசைப்பட்டவனை ஏற்க இயலாமல் குடும்பக் கட்டாயத்தின்பேரில் ஆசையே இல்லாதவனுடைய தாலியைச் சுமக்கும் மனைவியாக மாற நேர்ந்தாலும் இருபதாண்டுகளாக மனத்தளவில் காதலனையே நினைத்து உருகும் பெண்ணும் எதிர்பாராமல் சந்திக்கநேரும் சூழலில் நேரும் பரஸ்பர தடுமாற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஆவல்களையும் பின்விளைவுகளையும் இப்படம் முன்வைக்கிறது. ஆணின் பெயர் விஷ்வம். பெண்ணின் பெயர் துளசி. இதனாலேயே படத்தின் தலைப்பு ‘விஷ்வதுளசி ‘ என்றாகிவிடுகிறது.

துளசி என்னும் சொல்லே அன்பைச் சுட்டும் மகத்துவமாக புராணக் குறியீடு. ஒரு தட்டில் கிருஷ்ணனை உட்காரவைத்து மறுதட்டில் ஏராளமான ஆபரணங்களைக் குவித்தும் சற்றும் நகராத தராசுமுள்ளைப் பார்த்து மனஞ்சோரும் தருணத்தில் காதல் தோய்ந்த மனத்துடன் ருக்மணி கிள்ளியெடுத்து வைக்கும் துளசியால் தராசுத் தட்டுகள் சமமான கதையை எல்லாரும் அறிந்திருக்கக்கூடும். துளசியில் எப்போதும் நிறைந்திருப்பது காதல் கொண்ட ஒரு பெண்ணின் அன்பு. திரைப்படத்தில் இடம்பெறும் துளசியும் தன் நெஞ்சில் விஷ்வத்தின்மீது எல்லையற்ற காதலைச் சுமந்திருக்கிறாள். விஷ்வத்தின் இசைஞானம், கலைமனம், பொறுமை, பண்பாடு, இனிய பேச்சு, பழகும் விதம் என எல்லாவற்றாலும் மெல்லமெல்ல கவரப்படுகிறாள். விஷ்வம் இந்தப் பூமியைப்போலவே பொறுமையானவன். அன்பானவன். அடையாளம் தெரியாத பைத்தியக்காரனைக்கூட குடும்பவைத்தியரைக்கொண்டு மருத்துவம் பார்க்கச்செய்து வீட்டோடு வைத்திருக்கும் அளவுக்குக் கருணையும் பரிவும் மிக்கவன். பொருள் மிகுந்தவன். ஊர்மீதும் மனிதர்கள்மீதும் தீராத பற்றும் நம்பிக்கையும் கொண்டவன். வெறுப்புகள் இல்லாதவன். பெயர்களுக்குத் தகுந்தபடி பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லாம் சாதகமாக இருந்தும் இருவரும் இணைந்துவாழ முடியாமல் போவதுதான் வாழ்க்கையின் புரிந்துகொள்ளமுடியாத பெரும்புதிர். காலம்காலமாக இந்த மண்ணில் விடையற்று நிற்கும் கேள்வியின்முன் ஒரு புள்ளியாக நிறைவடைகிறது திரைப்படம்.

திரைப்படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரையில் பல்வேறு காட்சிகளில் திரும்பத்திரும்ப இடம்பெறும் தாமரைக்குளத்தை கதைக்குப் பொருத்தமான ஒரு படிமமாக கருதத்தோன்றுகிறது. வண்டிசெல்லும் பாதைக்கு அருகில் ஒரு தாமரைக்குளம். பெண்கள் குளித்துக் கரையேறும் குளம்நிறைய தாமரை இலைகள். வீட்டுமுகப்பில் தாமரை இலைகள் மிதக்கும் அகன்ற நீர்நிலை. பாத்திரங்கள் ஒருபுறம் நடந்துகொண்டும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பறவைகளின் ஓசையில் லயித்துக்கொண்டும் நிற்கிற சமயங்களில் எல்லாம் மெளனமாக எதையோ ஓயாமல் சொன்னபடி இருக்கின்றன இத்தாமரை இலைகள். ஒரு கவிதையின் வரிகளைப்போல அவற்றின் கூற்று நம் கண்களை நிறைத்து நெஞ்சை ஊடுருவிப் பதிகின்றது. தாமரை இலையும் நீரும் நெருக்கமாக இருக்க நேர்ந்தாலும் அவை ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதில்லை. அவற்றிடையே இருப்பது ஒட்டமுடியாத உறவு அல்லது இணைதல் என்பது சாத்தியமேயற்ற உறவு. விஸ்வம்-துளசியின் உறவின் தன்மையை அல்லது முடிவை ஒவ்வொரு காட்சியின் ஓரத்திலும் வீற்றிருந்து மெளனமாக முன்கூட்டியபடி புலப்படுத்தியவாறு இருக்கும் இப்படிமத்தை இயக்குநர் கண்டடைந்திருக்கும் விதம் பாராட்டுக்குரியதாகும்.

விஷ்வம் தோன்றும் ஒவ்வொரு இடமும் அவன் மனத்தனிமையைச் சுட்டிக்காட்டும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. ஒரேஒரு காக்கைகூட வந்து உட்காராத மாடி, இசைத்தட்டு சுழன்றபடி இருக்கும் அறை, நாலுபக்கமும் வயல்களால் சூழப்பட்ட ஒரு பரண், ஜோடி இல்லாத யானை என அடுக்கிக்கொண்டே செல்லலாம். எல்லாமே மிக அழகாகவும் கச்சிதமாகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. விஷ்வத்தின் அறை பூட்டப்படுவதில்லை. மேசை இழுப்பறை பூட்டப்படுவதில்லை. பெட்டி பூட்டப்படுவதில்லை. அவன் மனத்தைப்போலவே எல்லாமே திறந்தே கிடக்கின்றன. இதற்கு நேர்மாறானவன் துளசியின் கணவன். அவன் தோன்றும் ஒவ்வொரு இடமும் அவன் மனக்குழப்பத்தையும் பாரத்தையும் சுட்டும் விதமாக உள்ளது. பாரம் சுமந்த வண்டி, செத்தைகளும் குப்பைகளும் நிறைந்த புதர், முள்வேலி, பீதியுண்டாக்கும் காவல் தெய்வத்தின் வாசல், குட்டிச்சுவர்கள், சுமைதாங்கிக்கல் எனச் சொல்ல ஒரு பட்டியலே உண்டு. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் எடுத்துக்கொள்ளும் சிரத்தைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

படம் தொடங்கும் காட்சியில் ஒரு மாட்டுவண்டி இடம்பெறுகிறது. இருபதாண்டுத் தனிமைக்குப் பிறகு, வெளியூரிலிருந்து துளசியை கணக்குப்பிள்ளை அழைத்துவருவதைப்போன்ற காட்சி. தற்செயலாக நகர்வதைப்போல காமிரா துளசியையும் வண்டி அச்சாணியையும் ஒருகணம் இணைத்துக்காட்டி மறைகிறது. விஷ்வத்தை இயக்கிக்கொண்டிருக்கும் அச்சாணியான துளசியின் காதலை அறிய நாம் ஆவல்கொள்கிறோம். காதல் அச்சாணியால் அவன் மனமும் அவள் மனமும் மலரப்போகும் தருணங்களுக்காக காத்திருக்கத் தொடங்குகிறோம். படத்தின் இறுதிக்காட்சியிலும் மாட்டுவண்டி இடம்பெறுகிறது. இப்போது இதில் பயணம் செய்கிறவர்கள் துளசியும் விஷ்வமும். விடிந்தால் இணையப்போகிற நிலையில் ஆனந்தத்தோடு பரம்பரை அடையாளமான மரமல்லிகையின் அருகே புதிய கன்றை நட துளசியை அழைத்துச் செல்கிறான் விஸ்வம். எதிர்பாராத தருணத்தில் முதல் கணவனின் தலையீடு நேர்கிறது. தாம்பூலத்தட்டு உருள்கிறது. மோதல் வெடிக்கிறது. ஆயுதம் எதுவுமற்ற பைத்தியக்காரக் கணவன் ஆத்திரத்தின் விளிம்பில் வண்டி அச்சாணியைப் பிடுங்கி துளசியின் வயற்றில் செருகிக் கொன்றுவிடுகிறான். தொடர்ந்து நம்பிக்கையூட்டும் படிமமாக வளர்ந்த அச்சாணி இறுதியில் கொலைக்கான ஆயுதமாக மாறிவிடுகிறது. தொடக்கத்தில் துளசியை வரவேற்ற அச்சாணி தன்வழியாகவே அவள் உயிர் பறிக்கப்பட இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொன்னதோ என்று நினைத்தப் பார்க்கத் தோன்றுகிறது.

செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தாலும் ஊரைப் பிரிந்து பெற்றோரைப் பிரிந்து இன்னொரு இடத்தில் தங்கி இசையைப் பயிலும் நாட்டம் ஒருவனிடம் உள்ளது. அவன் வசதிக்கும் வாழ்வுக்கும் இசையின் அவசியமே இல்லையென்றாலும் அவன் மனத்தில் இசை வழிந்தபடி இருக்கிறது. இசைக்குடும்பத்திலேயே காலம்முழுக்கப் புழங்கினாலும் தண்டாமரையின் உடன்பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம் என்பதைப்போல இசையைப்பற்றி எதுவுமேயறியாதவனாக வருகிறான் இன்னொருவன். பல சமயங்களில் இசை என்பதே வெறுப்பைத் துாண்டுகிற அம்சமாக அமைகிறது அவனுக்கு. ஏன் இப்படி மனிதகுணங்கள் அமைகின்றன ? யாரால் இதற்குப் பதில் சொல்லமுடியும் ? விளங்கிக்கொள்ளமுடியாத மானுடப் புதிர்தான் இது. எதார்த்த வாழ்வில் நாம் காணும் பாத்திரங்களை இப்படி நாம் மதிப்பிட்டுவிட்டுச் செல்லலாம். ஆனால் ஒரு புனைவில் இந்த விருப்பத்தை அல்லது வெறுப்பை அழுத்தமாக நிறுவிக்காட்ட வேண்டிய அவசியம் ஒரு படைப்பாளிக்கு உள்ளது. நம்பத்தகுந்த வகையில் இந்த அம்சம் படத்தில் நிறுவிக் காட்டப்படவில்லை என்பதே மிகப்பெரிய பலவீனம். பாத்திரப் படைப்பில் நேர்ந்த இந்த ஆரம்பப் பிசகு பார்வையாளர்களை படத்துடன் ஒட்டவிடாமல் செய்துவிடுகிறது. நினைத்துநினைத்து ரசிக்கத்தக்க அழகியல் கூறுகள் படத்தில் ஏராளமாக உள்ளன. அழகாக எடுக்கப்பட்ட ஒரு படத்துடன் முழுஅளவில் நம்மால் உறவுகொள்ள முடியாமல் போவது துரதிருஷ்டவசமானது.

—-

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்