விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து.

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

திண்ணை


திண்ணையில் நிகழும் விவாதங்கள் அந்த விவாதத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் உண்மை நாடும் அக்கறையையும், பிறரின் மாற்றுக் கருத்துகள் வெளியிட உள்ள உரிமைக்கு அளிக்கும் மதிப்பையும் அடிப்ப்டையாய்க் கொண்டு இயங்க வேண்டும் எனப்து எங்களின் விருப்பம். பல சமயங்களில் நாங்கள் சில பகுதிகளை நீக்கியும் இருக்கிறோம். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படிச் செய்வது சாத்தியம் அல்ல. சில சமயம் அப்படி எழுதுபவர்கள் தமிழ் விவாதத்தளத்தில் பொதுவாய் உள்ள ஒரு நசிவுப் போக்கைப் பிரதிபலிக்கும்போது அந்தப் போக்குகளும் விவாதிக்கப்படவேண்டும் என்பதால் அந்தப் பகுதிகளை நீக்காமலும் இருப்பதுண்டு. விவாதிப்பவர்கள் கொண்டிருக்கும் அரசியல், மதச்சார்புகளை வெளிப்படுத்தும்போது மாற்றுக் கருத்தினரை மதிக்க வேண்டும் என்பது முக்கியம். தாம் நம்பிக் கொண்டிருந்த உண்மைகள் அவ்வாறல்ல என்று நிறுவப்படும்போது, அவற்றை ஒப்புக்கொள்வதும், தொடர்ந்து அந்த உண்மைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதும் நாகரிகம். குறிப்பாக ஒருவரை ஒருவர் பொய்யர் என்றெல்லாம் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டும்போது , இந்த பரஸ்பர நம்பிக்கை தகர்ந்து போகிறது. ஒருவரின் கூற்றுகளை நம்பவில்லை என்றால் ஆதாரங்களைக் கோரலாம். ஆனால் நம்பகத் தன்மையைக் ஆதாரம் இல்லாமல் கேள்விக்குள்ளாக்கக் கூடாது.

தன்னுடைய நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்குவது பற்றிய மலர்மன்னனின் வருத்தத்தை நாங்கள் மதிக்கிறோம். தமிழ் விவாதக் களத்தில் வேறு வேறு கருத்துடையவர்கள் இடம்பெறுமாறு ஒரு தளம் இல்லை என்பதால், தம்முடைய சார்புகளே உண்மையின் எல்லை என்று எண்ணி பிற கருத்துகளைப் புறந்தள்ளும் ஒரு போக்கு மிகச் சர்வசாதாரணமாக அறிவுலக வட்டத்தில் புழங்கி வருகிறது. இந்தப் போக்கின் வெளிப்பாடுதான் மாற்றுக்கருத்தினர்களை அவமானப்படுத்த முனைகிறது. இந்தப் போக்கை எப்படி எதிர்கொள்வது என்பதும் நம் விவாதப் பொருளாக வேண்டும். எப்படி கருத்துகளையும், சரித்திரத்தின் போக்குகளையும் வெறுமே தம்முடைய இன்றைய நோக்கங்களைத் தாண்டி பதிவு செய்வது என்பதும் சிந்தனைக்கு உரியது.

மலர்மன்னன் இன்னமும் பல விஷயங்கள் குறித்து எழுதவிருந்தார். உதாரணமாக, நீதிபதி வேணுகோபால் ஆர் எஸ் எஸ்-ஐத் தடைசெய்யச் சொன்னது பற்றி எழுதுவதாய்த் தெரிவித்திருந்தார்.

பல சமயங்களில் திண்ணை குழுவும் அவரிடம் பல ஆதாரங்களைக் கேட்டு உறுதி செய்துகொண்டிருக்கிறது..

மலர்மன்னன் கட்டுரைகளில், உண்மையாயினும் சில தகவல்களை நீக்கியுள்ளோம் – அவற்றின் இன்றைய பொருத்தம் கருதி. அவருக்கு அதில் வருத்தம் என்றாலும் எங்கள் நிலைபாட்டைப் புரிந்துகொண்ட பெருந்தன்மைக்கு எங்கள் நன்றி.

மலர்மன்னன் தொடர்ந்து எழுதவேண்டும் என்பது எங்களின் விருப்பம் மட்டுமல்ல பல வாசகர்களின் விருப்பமும் கூட. அவர் கருத்துடன் உடன்படாதவர்களின் விருப்பமும் கூட அதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறோம்.

உண்மைகளே நம்மை விடுவிக்கும்.

திண்ணை குழு

Series Navigation