விளையாட்டு பற்றி சில சீரியஸ் சிந்தனைகள்

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

ஜடாயு


தீவிரவாதம் போன்ற தீவிர விஷயங்களையும் விளையாட்டுத் தனமாக அணுகுவது நம் சமூக நடைமுறையாகிவிட்ட நிலையில், ஆனந்த விகடன் (3.8.06) இதழில் குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணன் விளையாட்டுகள் பற்றி எழுதியிருந்தது தீவிர சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. இவர் கூறும் சில மையமான கருத்துக்கள்:

· விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு என்பது தான் நம் மூளையில் உறைந்திருக்கிறது. அன்போ, நன்றியோ, ஈரமோ, வீரமோ எதுவாக இருந்தாலும் குழந்தைகள் தங்கள் விளையாட்டுகள் மூலமே கற்றுக்கொள்கிறார்கள்..
· “அமெரிக்க ஜனாதிபதிகளின் நாடு பிடிக்கிற பேராசைக்கும், அதனால் எத்தனை உயிர்களையும் விலை பேசுகிற வன்முறைக்கும் அமெரிக்கக் குழந்தைகளின் விளையாட்டுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.. “ என்று நோம் சாம்ஸ்கி கூறுகிறார்.
· ஆடுவதற்குப் பெயர் தான் விளையாட்டு.. நாமோ விளையாட்டைப் பார்க்கிற விஷயமாக மாற்றி விட்டோம்
· [நம் மூதாதையர்கள்] சேர்த்து வைத்த மரபான விளையாட்டுச் செல்வங்களை எல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டோம். மனமகிழ் விளையாட்டுக்கள், உடல் வள விளையாட்டுக்கள் என்று குழந்தைகளுக்கான விளையாட்டுகளை இரண்டு வகையாகப் பிரித்தார்கள் தமிழர்கள்..
· பெரியவர்களுக்கான உலகத்தில், பொருளாதாரப் போட்டியில்.. எதிரியை வீழ்த்தும் சூழ்ச்சியில், பொறாமையும், வஞ்சமுமே நிரம்பி வழிகின்றன. அந்த உலகத்தில் குழந்தைகளையும் கொண்டுவந்து விடுவது நம் தலையில் நாமே நெருப்பு வைத்துக் கொள்வதற்குச் சமம்

இந்தக் கருத்துக்களைப் படித்த பின் எனக்குத் தோன்றிய சில விஷயங்கள்:
உளவியல் ரீதியாக விளையாட்டுக்கும், மன வளர்ச்சிக்கும் உள்ள ஆழமான தொடர்பை நாம் சாதாரணமாக உணர்வதில்லை. சமீபத்தில் என் நாலரை வயது மகளுக்கு முதன் முதலாக கூடைப் பந்து விளையாட்டை அறிமுகப் படுத்தச் செய்த முயற்சிகள் இதை எனக்கு விளக்கின. கடையிலிருந்து வாங்கி வந்த toy basketஐ வீட்டு வாசல் தூணில் பொருத்தும்போது குழந்தையின் உயரத்தைவிட சற்று அதிக உயரத்தில் வேண்டுமென்றே பொருத்தினேன்; ஓரளவுக்காவது “சேலஞ்ச்” வேண்டும், குதிக்க வேண்டும் என்பதற்காக. ஆர்வத்தோடு ஓடி வந்த என் மகள் நான்கைந்து முறை எம்பிப் பார்த்தாள். ம்ஹூம்.. கூடைக்குள் பந்து போகமாட்டேனென்கிறது.. “ஒரு நிமிஷம்” என்று உள்ளே ஓடியவள், ஒரு சின்ன ஸ்டூலைக் கொண்டுவந்து போட்டு அதன் மேல் ஏறி நின்று கூடைக்குள் பந்தைப் போட்டு விட்டு என்னைப் பார்த்து “பார்த்தியா, போட்டு விட்டேன்” என்று புன்னகைக்கிறாள்! என்ன செய்வது? ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது.. “ஆகா.. என்ன துரிதமான problem solving திறமை! ” என்று கணினி வயப்பட்ட என் மனம் இன்னொரு பக்கம் களிக்கிறது.

Competitive sports என்னும் “போட்டிக்காகவே விளையாட்டு” என்ற கருத்து தான் மக்கள் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. விளையாட்டு என்பது வெறித்தனமான போர் என்பதாக ஆகிவிட்டது. NDTV-ல் cricket controversies என்ற பெயரில் நிகழ்ச்சி கொடிகட்டிப் பறக்கிறது! Posh area என்று சொல்லப் படும் மேல்தட்டு ஏரியாக்களில் குழந்தைகள் வெளியில் விளையாடுவதையே பார்க்க முடியாது.. பக்கத்து வீட்டுப் பசங்களெல்லாம் சேர்ந்து போக்குவரத்தை மறிக்கும் வகையில் சாலைக்கு நடுவில் ஸ்டம்ப் கட்டி, அக்கம்பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த சுகமெல்லாம் அந்தக் காலத்தோடேயே போச்சு! சாஃப்ட்வேரர்களின் குழந்தைகளுக்கெல்லாம் விளையாட்டில் கூட விளையாட்டுத் தனம் இருக்கப் படுமா? இலக்குகள் (targets), செயலாற்றங்கள் (performance) எல்லாம் உண்டு. தெருவில் கிரிக்கெட் விளையாடினால் சும்மா உடற்பயிற்சி, சந்தோஷம், நட்பு அவ்வளவுதான்.. இதெல்லாம் வருமா? உயர்தர கோட்சுகள் பயிற்சியளிக்கும் அகாடமிகளில் சேர்ந்து விளையாட்டையும் “படிக்க வேண்டும்” ! நடுத்தரக் குடும்பத்துக் குழந்தைகள் பாடு இந்த விஷயத்தில் ஓரளவு பரவாயில்லை, ஆனால் மைதானங்கள் இருந்த இடங்களெல்லாம் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருக்கும் நம் நகரங்களில் சாதாரணக் குடும்பத்துக் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

மைதான விளையாட்டுகளுக்கான வசதிகளும் வாய்ப்புகளும் அருகி வரும் சூழலில், வீட்டுக்குள் தனியாக விளையாடும் விளையாட்டுக்கள் பிரபலமடைந்து வருவதில் வியப்பே இல்லை. அமெரிக்க குழந்தைகளின் விடியோ கேம் மோகம் அதீதமானது.. Playstation, X-Box, Gameboy என்று கேம் ஆர்வலர்களின் பசிக்குத் தீனி போட அதி நவீன 3-D பெட்டிகள் இருக்கின்றன; இப்போது நம் நகரங்களில் சாஃப்ட்வேரர்கள் போன்ற வசதி வாய்ந்த குடும்பத்துப் பிள்ளைகளும் இந்தப் பெட்டிகளை வாங்கி விளையாடுவதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். The Shrek போன்ற படங்களில் வருவது போன்ற அதி அற்புதமான 3D கிராபிக்ஸ் விந்தைகள் வளர்ந்தவர்களையே கட்டிப் போடும் திறன் கொண்டவை என்றால் குழந்தைகள் பற்றிச் சொல்லவா வேண்டும்? ஒரு காலத்தில் ஹாலிவுட் படங்களில் மட்டுமே சாத்தியமான இந்த விந்தைகள் மேற்சொன்ன விளையாட்டுப் பெட்டிகளிலேயே கிடைக்கும் போது மயங்காதவர் யார்? பயங்கரமான வன்முறை, போட்டி மனப்பான்மை, எதிரியைத் தாக்கி அழிக்கும் வெறி, அதற்கான வழிமுறைகள் வகுக்கும் தந்திரம் போன்றவை தான் முக்கால்வாசி வீடியோ விளையாட்டுகளின் கருப் பொருள்கள். சதுரங்கம் என்ற நம் பாரம்பரிய விளையாட்டும் அடிப்படையில் போர் சார்ந்தது தான்; ஆனால், அதில் பகுப்பாய்வுத் திறன் (Analytical skills), கூர்மையான நினைவுத் திறன், பலவிதமான சாத்தியக் கூறுகளையும் மனதிற்குள்ளேயே உருவாக்கிப் பார்த்தல் போன்ற மன வளர்ச்சிக்கான அற்புதமான கூறுகள் இருக்கின்றனவே தவிர வீடியோ கேம்களில் இருப்பது போன்று “காட்சிப் படுத்தப் பட்ட வன்முறை” (graphic violence) என்பது இல்லை. உழைப்பும் சிந்தனையும் தேவைப் படுகிற சதுரங்கத்தை ஓரங்கட்டி, சினிமாத் தனமான வன்முறை கலந்த வீடியோ கேம்கள் வளர்வது துரதிர்ஷ்டவசமானது.

“எனக்கு விளையாட்டில் ரொம்ப ஆர்வம் உண்டு சார்” என்று ஒரு இளைஞரோ, நடுத்தர வயது ஆசாமியோ சொன்னால், ஆகா பரவாயில்லையே இந்த வயதிலும் விளையாடுகிறாரே என்றெல்லாம் (பெரும்பாலும்) எண்ணி விடக் கூடாது.. “ஆர்வம்” என்று அவர் சொன்னதன் உட்பொருள் என்னவென்றால், “மனிதர் மணிக்கணக்காக உட்கார்ந்து டெஸ்ட் மேட்ச் உட்பட சகல மேட்சுகளையும் சளைக்காமல் பார்ப்பவர், ஸ்போர்ட்ஸ் தொடர்பான எல்லா புள்ளி விவரங்கள், சர்ச்சைகளையெல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பவர். ஸ்போர்ஸ் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்” என்பது தான். விளையாட்டு என்பது சினிமா போல “பார்த்து ரசிக்கும்” விஷயமாகத் தான் பெரும்பாலோருக்கு இருக்கிறது.. பல பெரியவர்களைப் பீடித்திருக்கும் இந்தப் பைத்தியம் கொஞ்சம் கொஞ்சமாக சிறுவர்களையும் தொற்றி வருகிறது.. தான் விளையாடும் விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும், அறியும் நோக்கத்தோடு மேட்ச் பார்ப்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், ஒரு மனிதனின் ஆளுமை (personality) பரிணமித்து வளரும் அந்த இளம் வயதில், மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் அமர்ந்து பொழுதுபோக்குக்காக ஆட்டங்களைப் பார்ப்பது உடல் ஆரோக்கியத்தையும் வளர்க்காது, மன ஆற்றலையும் வளர்க்காது; தொந்தியையும், சோம்பேறித் தனத்தையும் தான் வளர்க்கும். சினிமாவாவது 3 மணி நேரத்தில் முடிந்து விடும், ஆனால் பல விளையாட்டுப் போட்டிகள் (குறிப்பாக கிரிக்கெட்) மணிக் கணக்கில், நாள் கணக்கில் ஓடுகின்றன; இவற்றைப் பார்ப்பது, பாடப் புத்தகங்கள் படிப்பது இதிலேயே பொழுது கழிவதால், அறிவை விசாலமாக்கும் மற்ற புத்தகங்கள் படிக்கும் பழக்கம் பதின் வயது (teen age) இளைஞர்களிடையே பெருமளவு குறைந்து வருகிறது. இந்த வயதில் புத்தகம் என்னும் அற்புதத்தை அனுபவித்து அறிந்தவர்கள், அப்போது படித்த புத்தகங்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கின என்பதை உணர்வார்கள். இப்படி புத்தகம் படிக்காமல் டி.வி.யில் மேட்ச் பார்த்து வளர்ந்த பல மந்தமான ஆசாமிகளை பணியிலோ, வேறு விதமாகவோ சந்திக்கும்போது அவர்களிடத்தில் இருக்கும் இந்த ஊனம் வெளிப்படையாகவே தெரிவதைப் பார்த்திருக்கிறேன்.

நம் மரபு சார்ந்த விளையாட்டுக்கள் பலவும் அனேகமாக அழிந்து விட்டன. கபடி, கோகோ போன்ற ஓரளவு பிரபலமான விளையாட்டுக்கள் கூட mainstream sportsஆல் வெகுவாக ஓரங்கட்டப் பட்டு வருகின்றன. கிராமத்துக் காட்டான் இளைஞர்கள் தான் கபடி, கோகோ விளையாடுவார்கள், ஜென்டில்மேன்கள் விளையாடத் தக்கது கிரிக்கெட், டென்னிஸ் போன்றவை தான் என்ற கருத்தும் வேரூன்றி விட்டது. இந்த முக்கிய விளையாட்டுக்களின் கதியே இப்படியென்றால், அதிகம் அறியப் படாத சிறு விளையாட்டுக்கள் ? தொலைக்காட்சியின் வெகுவான பரவலால், இப்போது விளிம்பு நிலை மக்களும், கிராமப் புறத்தவர்களும் கூட கிரிக்கெட் ஆடுவது தான் ஜன்ம சாபல்யம் என்னும் எண்ணத்தில், பழைய விளையாட்டுக்களை எல்லாம் கை கழுவி வருகிறார்கள். பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம் போன்ற உலக முன்னோடிகளான நமது மரபு சார்ந்த மனமகிழ் விளையாட்டுக்கள் மறக்கப் பட்டு, அதே போன்ற மேற்கத்திய கலாசாரத்தின் பழைய விளையாட்டுக்கள், புதிய புதிய லேபில்களுடன் நமது வீடுகளுக்குள் இறக்குமதியாகின்றன. விளையாட்டுக்களின் கருப் பொருள் ஒன்றாக இருக்கலாம், ஆனால் அதை நமது மரபு சார்ந்த வடிவில் விளையாடும்போது, விளையாட்டோடு கூட மொழி, கலாசாரம் பற்றிய கல்வியும் புகட்டப் படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்பும் இயக்கங்கள் உடனடி அவசியம்.

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சமூக அளவில் விளையாட்டுக்களின் தாக்கம் பெரியது, அது உணரப் படவேண்டும்.

– ஜடாயு
(http://jataayu.blogspot.com)

jataayu_b@yahoo.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு