விலையேற்றம் கட்டுப்படுமா?

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


சென்ற வாரம் ஏதோ ஒரு நாள், தி.நகர் உஸ்மான் சாலை வழியாக போய்கொண்டு இருந்தேன். மாலை நேரம். பசி. முருகன் இட்லி கடை கண்ணில் தென்பட, உள்ளே போனேன். ஒரு உள்ளங்கை அளவு ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டேன். விலை ரூ.37. பகீரென்றது.

நான் வழக்கமாக காய்கறி வாங்கும் கடையில், காய்கறிகள் வாங்கபோனேன். பொதுவாக விலை கேட்கும் வழக்கமில்லை. கடைக்காரர் நண்பர். அளவு கூடுதலாகவே கொடுக்கக்கூடியவர் என்பதால், விலை பேசுவதில்லை. அன்று நான் வழக்கமாக வாங்கும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு, மொத்த விலை கேட்டேன். ரூ.135. பொதுவாக ஐம்பது ரூபாய்களுக்குள் ஆகும் காய்கறி, ஒன்றரை மடங்கு விலையுயர்ந்திருந்தது. அதிர்ச்சியாக இருந்தது.

உணவுப் பொருள்களின் விலையேற்றம் எல்லா தரப்பினரையும் பாதித்து இருக்கிறது. மதுரை ஓட்டல்களில் மத்திய சாப்பாடு போடுவதே நின்றுவிட்டது என்கிறார்கள். சென்னையில் உள்ள சாதாரண ஓட்டல்களில் எல்லாம் கடுமையான விலையேற்றம். ஒரு சாதா தோசை 20 ரூபாய். மசால் தோசை 25 ரூபாய். ரூ.20வுக்குப் போடச் சொன்ன ஜனதா சாப்பாடு எங்கேயும் இல்லை.

விலைவாசிகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கின்றன. 2008 நவம்பரில் இருந்து விலையேற்றம் கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாப் பொருள்களும் விலையேறி இருக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் விலையேற்றம் இன்னும் அதிகமாகி இருக்கிறது. வாரம் தோறும் வெளிவரும் பணவீக்கத்தில், உணவுப் பொருள்களின் வீக்கம் மட்டும் 17.46 சதவிகிதம்.

மத்திய அரசின் தவறான கொள்கை எப்படியெல்லாம் மக்களை வாட்டுகிறது என்று இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை. புரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை போலிருக்கிறது. உற்பத்தி பெருகவேண்டும், வளர்ச்சி வேண்டும் என்ற முகாந்திரத்தில், வங்கிக் கடன்களுக்கும் சலுகைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விளைவு, இந்தியாவுக்குள் பணப்புழக்கம் அபரிமிதமாக அதிகரித்திருக்கிறது. பணப்புழக்கம், எல்லா விலைகளையும் தாராளமாக உயர்த்திவிட்டது.

இப்போது புலிவாலைப் பிடித்துவிட்ட கதையாக மாறிவிட்டது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் விலைகள் குறையும். அதற்கு அரசு கடன்களின் வட்டி விகிதங்களை உயர்த்தவேண்டும். வட்டி விகிதங்கள் உயர்ந்தால், வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்று ஒரு சாரார் பீதி கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். உற்பத்தி பாதிக்கும், வேலைவாய்ப்புகள் பாதிக்கும் என்று சொல்கிறார்கள்.

இத்துடன் சேர்ந்துகொண்டது வறட்சியும் அதிக மழையும். இரண்டுமே இரண்டு எக்ஸ்ட்ரீம். உற்பத்தி போதவில்லை என்ற பெயரில், விலையேற்றம். இன்னொரு பக்கம் உணவுப் பொருட்கள் பதுக்கல். பல ஊர்களில் விற்கப்படும் அரிசி, பழைய அரிசி. குறைந்த விலைக்கு வாங்கித் தேக்கிவைக்கப்பட்டு, இப்போது அதிக லாபத்துக்கு விற்கப்படுகின்றன. தாராளமயப் பொருளாதாரத்தின் படி இதெல்லாம் நியாயம்.

மத்திய அரசு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. பிரணாப் முகர்ஜி இதைப் பற்றிப் பேசினால் கோபப்படுகிறார். சோனியா அம்மையார், விலைவாசி உயர்வு தனக்குப் பெரும் கவலை அளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். நேரடியாகத் தானே மன்மோகன் சிங்கிடமும் பிரணாப் முகர்ஜியிடமும் பேசியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் சோனியா. என்ன பேசி என்ன பிரயோஜனம்?

எப்போது பார்த்தாலும் மத்திய அரசு தொகுப்பிலும் மாநில அரசுகளின் தொகுப்புகளிலும் போதிய உணவுத் தானியக் கையிருப்பு இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார்கள். கூடவே, எதிர்காலத் தேவையை ஒட்டி இரண்டு லட்சம் டன்கள் வரை உணவுத் தானியங்களை தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையை வேறு சில விஷயங்களோடு வைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. அரிசி விலையேற்றம் என்பது தற்செயலானதா, அல்லது வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா என்றும் சந்தேகம் எழுப்ப வேண்டியிருக்கிறது. சமீபத்தில் லண்டன் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, பிலிப்பைன்ஸ் கிட்டத்தட்ட 6 லட்சம் டன் அரிசியை தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய இருக்கிறது. இந்தியா முந்திக்கொண்டு இறக்குமதி செய்துவிடும் என்ற பயத்திலேயே இந்த அளவுக்கு பிலிப்பைன்ஸ் இறக்குமதி செய்ய இருக்கிறது. மேலும் அங்கே அதிபர் தேர்தல் வரவிருப்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதெல்லாம் தற்செயலானதா? ஆசிய அரசியலில் வேண்டுமென்றே அரிசித் தேவையை உருவாக்கி, விலையேற்றத்தை நம்மீது திணிக்கிறார்களா? தெரியவில்லை.

கூடவே இந்த நிலை 2010ல் மாறிவிடலாம் என்றும் அதற்குள் எவ்வளவு விலையேற்றத்தை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்துவிட வேண்டும் என்று சந்தையைக் கையாள்பவர்கள், பெருமுதலாளிகள் நினைப்பதாகவும் தெரிகிறது. இன்னொரு பக்கம் எப்படியும் இந்திய அரசு, கடன்களுக்கான வட்டி விகிதத்தை விரைவில் கூட்டாது, அதுவரை இந்த விலையேற்ற ஆட்டத்தைத் தாராளமாகத் தொடரலாம் என்றும் நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாங்கம் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் உறுதியுடனும் தொலைநோக்குடனும் நடந்துகொள்ள வேண்டும். கையிருப்பில் இருக்கும் உணவுப் பொருள்களை சந்தையில் இறக்கினாலே, தன்னால் விலைகள் வீழ்ச்சி அடையும். ஒருவகையில் அரசின் கையிருப்பு என்பதே இங்கே எதிர்மறை பலனைத் தந்துகொண்டு இருக்கிறது. இதைவிடக் கொடுமை தேசிய மற்றும் மாநில சேமிப்பு கிடங்குகளில் இருக்கும் மெத்தனம். பெரும்பாலான இடங்களில் pilferage இருக்கிறது. பல பொருள்கள் உபயோகமற்றுக் கிடக்கின்றன. இதையெல்லாம் முறைப்படுத்தினாலே, சந்தைக்கு இன்னும் கூடுதலான பொருள்கள் வந்துசேரும்.

வழக்கம்போல், அரசு, எப்போதும் கடைசியில்தான் விழித்துக்கொள்கிறது. நிலைமை கையைவிட்டுப் போய், கட்டுக்கடங்காமல் போகும்போதுதான், மேலும் அது அவர்களுடைய ஓட்டு அரசியலைப் பாதிப்பதாக இருந்தால்தான் விழித்துக்கொள்கிறார்கள். பிரணாப் முகர்ஜி, சோனியா என்றெல்லாம் விலையேற்றம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால், அரசு விழித்துக்கொண்டுவிட்டது என்று அர்த்தம். இப்போதாவது விழித்துக்கொண்டார்களே என்று மகிழ்ச்சி அடையவேண்டியதுதான். வேறு வழி?

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்