விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

பாவண்ணன்


சிவராம் மிகப்பெரிய கணிப்பொறி வல்லுநன். சிக்கலான எந்தவிதமான ஆணைத்தொடரையும் எளிதாக எழுதிவிடக்கூடியவன். அவனுடைய பேச்சும் பழக்கமும் யாரையும் எளிதில் வசீகரித்துவிடக்கூடியவை. பத்து நிமிடங்கள் அருகில் நின்று பேசினாலேயே பத்தாண்டுகளாகத் தொடர்ந்து பழகிவருவதைப் போன்ற உணர்வை உருவாக்கிவிட வல்லவன். அவனுக்கு முத்துமுத்தாக இரண்டு குழந்தைகள்.

சிவராமுடைய நிறுவனத்துக்கும் அமெரிக்காவில் உள்ள நிறுவனமொன்றுக்கும் தொடர்பு உண்டு. அவர்கள் வேலைகளையெல்லாம் இங்கேயே செய்து உடனுக்குடன் அனுப்பும் ஒப்பந்தம் அவர்களுக்கு இருந்தது. நிறுவனத்தில் எப்போதும் ஓயாத வேலைகள். அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்து நிறுவனத்துக்கு வரும் சிவராம் வீடு திரும்ப இரவு பதினொன்று ஆகிவிடும். குழந்தைகள் தொடர்ச்சியாகப் பல நாட்கள் அவனைப் பார்க்காமல் இருந்ததுண்டு.

அவன் மனைவி பலமுறை இந்தக் குறையை அவனிடம் எடுத்துச்சொல்லியும் அதைக்கேட்கும் நிலையிலில்லை அவன். வேலைவேலை என்று நாளெல்லாம் அலைந்துகொண்டே இருந்தான். விடுப்பு நாள்களில் கூட மனைவி, குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்காமல் உழைப்பே கண்ணென்று ஓடினான். நண்பன் என்கிற முறையில் அவன் மனத்தில் பதியும்வண்ணம் ஆழமாக எடுத்துச்சொல்லுமாறு என்னிடம் வேண்டிக்கொண்டாள் அவன் மனைவி.

அந்த நிறுவனத்துக்கே சென்று தேநீர் பருகியவாறு அவன் மனம் பாதிக்காத வகையில் மனைவி, குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கவேண்டிய அவசியத்தை எடுத்துச்சொன்னேன். தான் உழைப்பதெல்லாமே அவர்களுக்காகவே என்றும் அவர்களுடைய எதிர்காலம் வளமாக இருப்பதற்காகவே நேரம் காலம் தெரியாமல் அலைந்துகொண்டிருப்பதாகவும் சொன்னான். அவர்களிடம் கொஞ்சிக்கொஞ்சி வீணாக்குகிற நேரத்தை வேலைக்காக செலவழித்தால் வெகுசீக்கிரம் அவர்கள் உல்லாசமாக இருக்கும் வண்ணம் மிகப்பெரிய வீடொன்றை வாங்கிவிட முடியும் என்று சொன்னான். தற்சமயத்தில் இழக்கிற ஒவ்வொரு இன்பமும் எதிர்காலத்தில் இரண்டு மடங்காகவும் மூன்று மடங்காகவும் கிட்டவேண்டும் என்பதற்காகவே எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

அவன் சொன்னதையெல்லாம் அவனுடைய மனைவியிடம் சொன்னேன். அவள் கலக்கம் அதிகரித்தது. ஆனால் காலம் நிச்சயம் கனிந்துவரும் என்று அமைதிப்படுத்திவிட்டு திரும்பினேன். வழக்கம்போல சிவராம் தானுண்டு தன் நிறுவனமுண்டு என்று ஆழ்ந்திருந்தான். ஒருமுறை மகளுடைய பிறந்தநாள் வந்தது. மாலையில் சீக்கிரம் திரும்பி வெளியே அழைத்துச்செல்வதாக வாக்களித்துச் சென்றவன் மறந்துபோய் நடுஇரவில் திரும்பினான். இன்னொருமுறை பெரிய பெண் கேட்ட பொருளை வாங்கிக்கொண்டு வராமலேயே திரும்பினான். இப்படி பல சந்தர்ப்பங்கள் அமைந்தன. குழந்தைகள் அவனிடமிருந்து மெல்ல மெல்ல விலகினார்கள். அவர்கள் உற்சாகம் குறைந்தது. படிப்பார்வம் குறைந்தது. விளையாட்டு ஆர்வமும் குறைந்தது. உணவு உட்கொள்வதும் உறங்கும் நேரமும் குறைந்தது. எப்போதும் பறிகொடுத்ததைப்போன்ற தோற்றத்தில் இருந்தார்கள். பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து உடனே வந்து பார்க்குமாறு மடல் வந்தது. அப்போதும் சிவராமால் செல்ல முடியவில்லை. சிவராமுடைய மனைவி மட்டுமே சென்று வந்தாள். பிள்ளைகள் எல்லாப் பாடங்களின் தேர்வுகளிலும் ஒற்றைப்படை மதிப்பெண்ணைப் பெற்றிருந்தார்கள்.

சிவராம் காதுக்குச் செய்தியெட்டியது. சற்றே கவலைப்பட்டான். ஆனால் சமாளிக்கும் பொறுப்பை மவைனியிடமேயே ஒப்படைத்துவிட்டு நிறுவன வேலைகளில் மூழ்கினான். ஆனால் சில மாதங்களில் குழந்தைகளை மனநல மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு நிலைமை முற்றியபோது அவன் நிலைகுலைந்தான். நிறுவனத்தையும் மறந்துவிட்டு மருத்துவமனையே கதியென்று கிடந்தான். ஒரு மாதம் மருத்துவம் நிகழ்ந்தது. அக்குழந்தைகளுக்கு மருந்து தேவைப்படவில்லை. மாறாக, அருகிலிருந்து உள்ளூர அன்புடன் பேசப்படும் சொற்களும் முத்தங்களும் தேவைப்பட்டன. மருத்துவர் அவன் மனத்தில் பதியும்படி எல்லாவற்றையும் அசான்னார். நிகழ்காலத்தைத் தொலைத்துவிட்டு எதிர்காலத்தைச் சேமிப்பதில் பொருளில்லை என்பதைப் புரிந்துகொண்டான். நிறுவனத்தில் எளிய பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு தினமும் குடும்பத்தினருக்கும் கொஞ்ச நேரம் ஒதுக்கிச் செலவழித்தான். மனைவியும் குழந்தைகளும் மறுபடியும் அவனுடன் நெருக்கமானார்கள். குழந்தைகள் பள்ளியில் ஓராண்டுக் கல்வியை இழக்கவேண்டி வந்தது. ஆனாலும் கவலைப்படவில்லை அவன். அதே பள்ளியில் அதே வகுப்பில் மறுபடியும் தொடர வைத்தான்.

குடும்பத்துக்குத் தன் அன்பு தேவை என்னும் விஷயத்தை அறிய சிவராம் கொடுத்த விலை மிகப்பெரிது. அதில் அவனுக்கு வருத்தம்தான். ஆனால் விஷயம் கைமீறிப்போவதற்கு முன்பாக அப்பாடத்தை அறிந்துகொண்டோமே என சற்றே நிம்மதியடையவும் செய்தான். வாழ்க்கை இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு பாடத்தையும் சொல்லித் தருகிறது. எதை விலையாகக் கொடுத்து எதைப் பெறுகிறோம் என்பதுதான் முக்கியம். இந்த எண்ணம் தோன்றும்போதெல்லாம் குஜராத்தி மொழிக் கதையாசிரியரான துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ சிறுகதை தவறாமல் நினைவில் எழுவதுண்டு.

கதையில் ஓர் அஞ்சல் நிலையம் இடம்பெறுகிறது. அஞ்சல் அதிகாரி ஒருவரும் குமாஸ்தா ஒருவரும் அங்கே வேலை செய்து வருகிறார்கள். தினமும் வருகிற கடிதக்கட்டுகளைப் பிரித்து நிலைய முற்றத்தில் காத்திருப்பவர்களின் பெயர்சொல்லிக் கூப்பிட்டு உரியவரிடம் தருவது அவர்களுடைய வழக்கம்.

அஞ்சல் நிலைய முற்றத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகத் தினந்தோறும் வந்தமர்ந்து தனக்கு வர இருக்கிற கடிதத்துக்காகக் காத்திருந்துவிட்டுச் செல்கிறான் ஒரு கிழவன். அவன் பெயர் கோச்மேன் அலி. அங்கே இருப்பவர்கள் அனைவரும் அவனைப் பைத்தியம் என்றே கருதுகிறார்கள். அதையெல்லாம் அவன் பொருட்படுத்துவதில்லை. தனக்கு வந்துசேர வேண்டிய கடிதம் ஏன் வரவில்லை என்கிற குழப்பமே அவன் மனத்தில் எஞ்சியிருக்கிறது.

ஒரு காலத்தில் திறமையான வேட்டைக்காரன் அவன். மறைவான புதர்களில் மறைந்திருக்கிற பறவைகளைக் கூடக் கூர்மையாகக் கவனித்துவிடுகிற அளவுக்கு அவன் பருந்துப்பார்வை நுட்பமாக இருந்தது. ஆனால் அவனது ஒரே மகள் மரியம் திருமணம் செய்துகொண்டு கணவனுடன் பஞ்சாப் சென்றுவிட்ட பிறகு அவன் வாழ்க்கை முறையே மாறிவிடுகிறது. கொல்லப்படும் பறவை அல்லது தவிக்கும் பறவை ஏதோ ஒரு விதத்தில் அவனுக்குத் தன் மகளை நினைவுபடுத்துவதால் வேட்டையின் மீதிருந்த நாட்டம் குறைந்துவிடுகிறது. அருகில் மகள் இல்லாதபோதுதான் அன்பைப்பற்றியும் பிரிவைப்பற்றியும் அவனுக்குப் புரிகிறது. இந்த உலகமே அன்பினால் உருவானதென்றும் பிரிவுத்துயர் தப்பிக்க முடியாத ஒன்றென்றும் அவனுக்குப் புரிகிறது.

அன்றுமுதல் அவன் ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்குமணிக்கு எழுந்து அஞ்சல்நிலையத்துக்கு வருகிறான். அவனுக்கு அவன் வாழ்நாளில் ஒருமுறை கூட கடிதம் வந்ததில்லை. இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் வாஞ்சையிலும் ஆழ்ந்த நிதானத்துடன் அவன் தொடர்ந்து அஞ்சல் நிலையத்துக்கு முதல் ஆளாக வருகிறான். கும்பலில் ஒருவனாக உட்கார்ந்து தன் பெயர் உச்சரிக்கப்படாதா என்று ஏக்கத்துடன் கதவுகளையே பார்த்திருந்துவிட்டு எழுந்து செல்கிறான். முற்றத்தில் காத்திருக்கும் மற்ற ஆட்களின் கேலிப்பேச்சு அவனை ஒன்றும் செய்வதில்லை.

திடாரென அலியின் வருகை நிற்கிறது. அதற்கான காரணத்தை அறிய ஒவ்வொருவருக்கும் ஆவலாக இருப்பினும் யாருக்கும் முயற்சிசெய்யும் ஆர்வம் இல்லை. வெகு நாட்களுக்குப் பிறகு அலி மீண்டும் ஒருநாள் வருகிறான். அன்று மூச்சுவிடக்கூடச் சிரமப்படுகிறான். வழக்கமாகப் பொறுமை காப்பவனால் அன்று பொறுமையாகக்கூட இருக்கமுடியவில்லை. தனக்கு வரஉள்ள கடிதத்தைப்பற்றி அஞ்சல் அதிகாரியிடம் கேட்கிறான். ஏதோ அவசரத்தில் இருந்த அதிகாரி அவன் மீது எரிந்துவிழுகிறார்.

வேறு வழியின்றி அலி திரும்பி நடக்கிறான். தன் இயலாமை குறித்து அவன் கண்களில் கண்ணிர் நிரம்புகிறது. சட்டெனத் தன்பின்னால் குமாஸ்தா வருவதைப் பார்த்து நிற்கிறான். தன் பையிலிருந்து பழைய டப்பாவை எடுத்து அதனுள்ளிருந்து ஐந்து தங்கநாணயங்களை எடுத்து அக்குமாஸ்தாவின் கைகளில் வைத்துத் தனக்கு ஓர் உதவி செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறான். குமாஸ்தா விவரம் கேட்கிறான். தன் மகளிடமிருந்த கடிதம் வந்ததும் தன் கல்லறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோருகிறான்.

இந்த நிகழ்ச்சிக்கப்புறம் அலியை யாருமே பார்க்கவில்லை.

ஒருநாள் அஞ்சல்நிலைய அதிகாரிக்கு ஒரு பிரச்சனை எழுகிறது. மற்றொரு நகரிலிருந்த அவர் பெண் நோய்வாய்ப்பட்டிருக்கிறாள். அவளைப்பற்றிய செய்திக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார். பதற்றம் அவர் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டபடி இருந்தது. உறக்கமின்றிக் கடிதப்பைக்காகக் காத்திருக்கிறார். கடிதக்கட்டுகள் வருகின்றன. ஆவலுடன் அவற்றைப் பிரித்துத் தேடுகிறார். அவர் எதிர்பார்த்திருந்த வடிவத்திலும் நிறத்திலும் ஓர் உறையைக் கண்டு ஆவலுடன் அதை எடுத்துப் பார்க்கிறார். உறையின் மீது கோச்மேன் அலி என எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுறுகிறார். அவன் காலமெல்லாம் வந்து காத்திருந்தது இக்கடிதத்துக்காகத்தான் என்பதை அவர் புரிந்து கொள்கிறார். மகளிடமிருந்து வரவேண்டிய ஒரு கடிதத்துக்காக ஒரு தந்தையின் மனம் எவ்வளவு எதிர்பார்ப்புகளைச் சுமந்திருக்கும் என்பதை அன்று அவர் அனுபவபூர்வமாக உணர்கிறார். சற்றே குற்ற உணர்ச்சியும் அவரைத் தைக்கிறது.

அன்று முழுக்க அவர் எதிர்பார்த்த கடிதம் வரவில்லை. இரவு முழுக்கக் கவலையுடன் விழித்திருக்கிறார். அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து அஞ்சல் நிலையத்துக்குச் சென்று காத்திருக்கிறார். நான்குமணிக்கு அலி வரும்போது நேரிடையாகவே அவனிடம் அவனுக்குரிய கடிதத்தைத் தந்துவிடலாம் என்று நினைக்கிறார். மணி ஐந்திருக்கும்போது யாரோ கதவைத் தட்டுவதைப்போல இருக்கிறது. நிச்சயம் அது அலிதான் என்கிற எண்ணத்தில் ஒரு தந்தையின் வேதனை மிகுந்த உள்ளத் தவிப்பைப் புரிந்துகொண்டவராக வாப்பா அலி, உள்ளே வா என்றபடி கடிதத்தை எடுத்து நீட்டுகிறார். அவரது குரலைக்கேட்டு வந்த குமாஸ்தா திகைப்பிலாழ்கிறான். கிழவன் அலி இறந்து மூன்று மாதங்களாகிவிட்ட செய்தியையும் சொல்கிறான். அதிகாரிக்கு எல்லாமே குழப்பமாக இருக்கிறது. அன்று அஞ்சல்களைப் பேர்சொல்லி விநியோகிக்கும்போது வழக்கமான அலட்சியப்போக்குடன் இருக்க முடியவில்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இதயம் துடிப்பதை உணர்கிறார்.

அன்று மாலை அவரும் குமாஸ்தாவும் அலியின் கல்லறைக்குச்சென்று அவருக்கு வந்திருந்த கடிதத்தை வைத்துவிட்டு வருகிறார்கள். அன்று அதிகாலையில் அவர் கண்ட விசித்திரக்கனவுகளைப்பற்றிக் குமாஸ்தாவிடம் விவரிக்கிறார். தன் மகளிடமிருந்து வரவேண்டிய கடிதத்துக்காக அன்றிரவும் அஞ்சல்நிலையத்திலேயே காத்திருக்கத் தொடங்குகிறார் அதிகாரி.

பல சிக்கலான விஷயங்களையெல்லாம் மிக எளிய முறையில் புரிந்துகொள்கிற மனம் சில தருணங்களில் எளிய விஷயங்களை ஏதேனும் விலைகொடுத்தே கற்க வேண்டியிருக்கிறது. சாதாரண மனித அன்பைப் புரிந்துகொள்ள வேட்டைக்காரன் அலிக்கு முதுமைப்பருவம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதுவும் நெடுந்தொலைவான இடத்துக்கு மகளை மணம்முடித்து அனுப்பிய பிறகு. காலமெல்லாம் கடிதங்களுடன் பணிசெய்கிற ஓர் அஞ்சல் அதிகாரிக்கு ஒரு கடிதத்துக்கு மனித மனம் ஏன் ஏங்குகிறது என்பது புரிய அவருக்கே அப்படி ஓர் எதிர்பார்ப்பு நேரும் சந்தர்ப்பம் அமைய வேண்டியிருக்கிறது. விலைகொடுத்துக் கற்கிற பாடம் கடைசிவரை மனத்தில் அழுத்தமாக இடம்பெற்றுவிடுகிறது. அது கற்கநேரும் பாடத்தின் தன்மையா அல்லது கற்கக்கொத்த விலையா என்பது அறியமுடியாத பெரும்புதிர்.

*

குஜராத்தி மொழியின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவர் துாமகேது. இவருடைய இயற்பெயர் கெளரிசங்கர் கோவர்தன்தாஸ் ஜோஷி. செளலதேவி என்கிற நாவலும் ஜீவன ரங் என்கிற தலைப்பில் வெளிவந்த இவருடைய சுயசரிதையும் குஜராத்தி மொழியில் முக்கிய நுால்களாகும். 1964 ஆம் ஆண்டில் ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களால் தொகுத்து மொழிபெயர்த்த இந்தியமொழிக் கதைகள் என்னும் தொகுப்பை மெர்க்குரி புத்தகக் கம்பெனி வெளியிட்டது. இந்தி, வங்கம், குஜராத்தி, உருது, தமிழ் ஆகிய மொழிக்கதைகள் கொண்ட தொகுப்பு இது. துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்