விரைந்து தமிழினி வாழும்

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

கவிஞர் புகாரி


டொராண்டோ ஜூலை 7, 2006 வெள்ளி: இயல்விருது விழா முடிந்த இருவாரங்களுக்குள்ளாகவே தமிழ் இலக்கியத் தோட்டத்திடமிருந்து இன்னொரு அழைப்பு வந்துவிட்டது. மாலை ஆறுமணிக்கு அஞ்சப்பர் உணவுவிடுதியில் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத் தலைவர் முனைவர் கல்யாணசுந்தரம் அவர்களோடு கைகளையும் கருத்துக்களையும் குலுக்கும் தமிழ்விழா. செவியோடு சேர்த்து வயிற்றையும் நிரப்ப இரவு உணவும் உண்டு என்றார்கள்.

என் அலுவலகக் கயிறோ வழமையாய் மாலை ஐந்து மணிக்குத்தான் அவிழும். நான் தற்போது பணிசெய்யும் ப்ராம்டன் நகரிலிருந்து 10 வாகனங்கள் ஒன்றாய் பயணம் செய்யக்கூடிய வசதியுடையதுதான் என்றாலும் நெடுஞ்சாலை 401ன் நெரிசலில் நின்று நின்று திணறித் திணறி ஸ்கார்பரோ அஞ்சப்பரைத் தொடுவதற்குள் பற்றவைத்தத் தீக்குச்சியாய் கரிந்தே போவேன் என்பதால் மாலை நாலுமணிகே அலுவகத்துக்கு ஓர் அவசரக் கையசைப்பைக் காட்டிவிட்டுப் புறப்பட்டுவிட்டேன்.

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தைப் (Project Madurai) பற்றி அறியாதவர்கள் இணையத்தில் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஆஊ என்றால் அங்கே சென்று தேடிப்பிடித்து பழந்தமிழ்த் தாகம் தீர்த்துக்கொள்வது அனேகமாக அனைவருக்குமே வழக்கமாய்த்தான் இருக்க வேண்டும். இருந்தாலும் இந்நிகழ்வை எழுத அமர்ந்துவிட்டதால் என் பங்குக்கு சுருக்கமாக ஓரிரு விசயங்களை மட்டும் சொல்லிவிடுகிறேன். நறுக்கென்று ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் என்பது இணையத்தில் இலவசமாய்ப் பரந்து கிடக்கும் தமிழ் இலக்கிய இனிப்புக் கடல்.

1998ல் பொங்கல் நாளில் தமிழன்னையின் ஆசீர்வாதத்துடன் தொடங்கப்பட்ட தன்னார்வத் தொண்டர்களின் இலக்கிய மின் தொகுப்புச் சேவைதான் இந்த மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம். அதாவது தைத்திங்கள் முதல் நாளில், தமிழ்ப்புத்தாண்டுத் திருநாளில் தொடங்கப்பட்ட தமிழ் இலக்கியங்களின் இணைய அச்சேற்று அருஞ்சேவை.

அப்படி எதையெல்லாம் அச்சேற்றி இணையத்தில் தொகுக்கிறார்கள் இவர்கள்? இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டிய பழைமைமிக்கதமிழ் இலக்கியங்கள் தொட்டு நேற்று உருவான இலக்கியம்வரை அனைத்தையும் எந்த பேதமும் இன்றி இங்கே தட்டச்சி உள்ளிடுகிறார்கள். இது ஒரு பிரமாண்டமான இலவச மின்நூலகமாய் துரிதகதியில் உருவாகி வருகிறது. ‘ப்ராஜக்ட் மதுரையைப் பாத்துட்டுத்தாம்பா சொல்றேன்’ என்று எந்தக் கருத்தாடலிலும் கர்வமாய்த் தமிழர்கள் அடித்துச் சொல்லும் வண்ணம் இது பெருமையாய் வளர்ந்துவருகிறது. இந்த ப்ராஜக்ட் மதுரையின் பெருமையாக நான் நினைக்கும் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், இது கூலிக்கு மாரடிக்கும் வணிகப் படையினரால் உருவாக்கப்படாமல், இதன் ஒவ்வொரு எழுத்தும், தமிழை நேசிக்கும், தமிழைப் போற்றிவளர்க்கும் அப்பழுக்கற்ற தன்னார்வத் தொண்டுத் தமிழர்களால் உருவாக்கப்பட்டுவருவதுதான்.

இதனை ஆர்வத்தோடு தொடங்கிவைத்து இதன் தலைவராகவும் இருக்கும் முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்து தற்போது கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்துவரும் ஓர் இனிமையான மனிதர். மிக எளிமையானவரும் கூட. தமிழ் இலக்கித் தோட்டத்தின் இந்த ஒன்று கூடலுக்கும் சாதாரண பயண உடையிலேயே வந்திருந்தார், ஆனால் அழுத்தமாகவும் அநாயாசமாகவும் ப்ராஜக்ட் மதுரையைப் பற்றிச் சொல்லிச் சென்றார்.

ரசாயணத்தில் உயர் பட்டம் பெற்ற ஜெனீவாவில் ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் வெளியிட்டுள்ளார். கணினித்துறையில் எந்த ஒரு பெரிய பட்டமும் பெறாத இவர் இவரின் ஆர்வத்தால் மட்டுமே முயன்று, மைலை என்ற தமிழ் எழுத்துருவையும் உருவாக்கினார். ஐநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களைத் தன் தொடர்பில் இச்சேவைக்காக வைத்துள்ளார். அமெரிக்காவில் வாழும் முனைவர் மல்லிகார்ஜுன் அவர்களும் பராஜக்ட் மதுரையின் துணைத்தலைவராய் இருந்து இச்சேவையில் செயலாற்றுகிறார்.

1995ல் திருக்குறளை, தான் உருவாக்கிய மைலை எழுத்துருமூலம் தட்டச்சு செய்து பலருக்கும் அனுப்பி இருக்கிறார். அதுதான் இவரை இப்படி ஒரு பெருந்திட்டம் உருவாக்குவதற்கு இழுத்துவிட்ட முதற்புள்ளி. அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்பதை விட துவக்கம் வேறு என்ன வேண்டும் ஓர் அருமையான தமிழ்ச் சேவைக்கு. அது படபடவெனப் பல்கிப் பெருகத்தானே செய்யும்?

மாபெரும் தமிழிணைய கணிநூலகமே இவரின் கனவாய் இருந்துவருகிறது. காகிதங்களில் வாழும் தமிழ் நூல்கள் பல காலப்போக்கில் அழிகின்றன. இலங்கை நூலகத்தில் எரிக்கப்பட்டது போல் எரிக்கப்பட்டும், வேறு சில இடங்களில் பாதுகாக்க வழியின்றி பொட்டுக்கடலை மடிக்கும் காகிதங்களாக மாற்றப்பட்டும் அழியும் பழந்தமிழ் நூல்கள் பற்றி வெகுவாக கவலை தெரிவித்தார். அதோடு மின் நூலகங்கள்தாம் வருடம் முழுவதும் இரவுபகல் எந்நேரமும் எளிதாகக் கிடைக்கும் வசதியினையுடையது என்பதையும் குறிப்பிட்டார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதினைப் பெற்ற லண்டன் பத்மநாப ஐயர் தன் சொந்த செலவில் பல ஈழத் தமிழர்களின் அரிய நூல்களை ப்ராஜக்ட் மதுரைக்காகப் பெற்றுத்தந்திருக்கிறார் என்றும் சர் ராஜா முத்தையா செட்டியார் போன்றோர் பல அபூர்வமான தமிழ் நூல்களைப் பாதுகாத்துவந்தனர் என்றும் தெரிவித்தார்.

பல தரங்களைக் கொண்ட தமிழ்க் கணியெழுத்துக்களால் உள்ள சங்கடங்களையும் சுட்டிக்காட்டி தற்போது ப்ராஜக்ட் மதுரை யுனித்தமிழுக்கு மாறியிருப்பதையும் விளக்கினார். அப்போது தமிழ்க் குழுக்களுக்கு ஆரம்ப விரல்களைத் தந்த பாலாபிள்ளை அவர்களையும் அவர் நினைவுகூற மறக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே இவர் எட்டியிருக்கும் சாதனை வியப்புக்குரியது. ஒவ்வொரு தமிழனும் இவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளான்.

சைவ வைஷ்ணவ நூல்கள் மட்டுமின்றி பைபிள் சீறாப்புராணம் என்று அனைத்து சமய நூலகளையும், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்ற எந்த பாகுபாடுமின்றி அனைவரின் இலக்கியத் தடங்களையும் பதிவு செய்துவருவதாகக் கூறிப் பெருமைப்பட்டார்.

தீயால் எரிக்கப்படாது
திருடரால் கலவாடப்படாது
கொடுத்தாலும் குறையாது

என்ற அவ்வையின் சொல் மின்நூலகத்திற்கே மிகவும் பொருந்தும் என்பதை அழகாகச் சொன்னார். குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மின்நூலகத் திட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதையும் கூறினார். அச்சேற்றிவைத்திருக்கும் தமிழ் நூல்களைத் திருத்தம் பார்த்துத்தரும் தன்னார்வச் சேவையினரையே தற்போது அவர் பெரிதும் எதிர்பபார்த்துக் காத்திருப்பதாகக் கூறினார்.

தமிழைப் பாதுகாத்துப் போற்றி வளர்க்கும் இந்த அரிய சேவைக்கு எந்தவித உதவியும் எந்த அரசும் செய்வதில்லை என்று வருத்தமுடன் கூறினார். செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட தமிழுக்கு இதுபோன்றவர்களை ஊக்கப்படுத்தும் சக்தி விரைவில் வரவேண்டும். உலகம் முழுவதிலும் தமிழ்த் தொடர்பான நல்ல காரியங்கள் அனைத்தும் அடையாளம் காணப்படவேண்டும். வணிக நோக்கமற்றை அவற்றைப் பாராட்டி, அதற்கான உதவிகளைச் செய்ய தமிழ் அமைப்புகளும் பல்கலைக்கழகங்களும் அரசுகளும் தனிமனிதர்களும் முன்வரவேண்டும்.

இழந்த தமிழை இணையமே மீண்டும் இழுத்துவருகிறது என்பதற்கு ப்ராஜக்ட் மதுரையும் ஓர் சான்று.

மிக முக்கியமான நபர்களை மட்டுமே அழைத்து இந்த விழாவை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைத்திருந்தது. முனைவர் கல்யாணசுந்தரம் அவர்களின் உரைக்குப் பின், வந்திருந்த தமிழ் ஆர்வலர்கள் கேள்விகள் கேட்டு அப்போதே பதில் பெறும் வசதியையும் அது ஏற்பாடு செய்திருந்தது. “விரைந்து தமிழினி வாழும்” என்ற நம்பிக்கையை ஊட்டும் இதுபோன்ற ஒன்றுகூடல்கள் உலகின் எல்லா மூலைகளிலும் நிகழ வேண்டும் என்ற என் ஆசையைக் கூறி இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்பற்றி மேலும் அறிய விரும்புவோர் http://www.tamil.net/projectmadurai/

என்ற இணைய முகவரிக்குச் செல்லலாம். தமிழ்த் தன்னார்வத் தொண்டர்கள் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத் தலைவர் முனைவர் கல்யாணசுந்தரம் அவர்களை kalyan.geo@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

மேலும் தொடரும் உங்கள் தேடலுக்கு இவற்றைச் சொடுக்குங்கள்:
http://www.tamilnation.org/literature/projectmadurai/intro.htm
http://www.tamil.net/projectmadurai/akaram1.html
http://www.infitt.org/pmadurai/index.html
http://www.tamil.net/projectmadurai/pmfinish.html

Series Navigation

author

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி

Similar Posts