வினை தீர்க்க வந்த விநாயகன் தம்பியே

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

பக்தியுடன் கோமதி நடராஜன்


முக்கண்ணன் வழி வந்த முத்துக் குமரா போற்றி!
உமையவள் மடி தவழ்ந்த பன்னிருவிழி பாலகா போற்றி!
தும்பிக்கையோனைத் தொடர்ந்த சோதரா போற்றி!
கார்த்திகைப் பெண்கள் கண் போல் வளர்த்தக் கந்தா போற்றி! [4]

சிற்றறிவுக்கு எட்டாத சிங்கார வேலனே போற்றி!
அறிவோடு உனை அறியும் அறிவை அருள்வாய் போற்றி!
உனைப் போற்றி எழுத என் அறிவை ஏற்றி வைப்பாய் போற்றி!
பாிவோடு எனைக் காக்கப் பறந்து வருவாய் போற்றி! [8]

கண்ணிமைபோல் எனைக் காக்கும் கருணைக்கடலே போற்றி!
எண்ணியபோது வந்து ஏனென்று கேட்பாய் போற்றி!
பண்ணிய பாவமெல்லாம் பனியாய் மறையப் பண்ணிடுவாய் போற்றி!
புண்ணியம் சேரப் புதுவழி காட்டிடுவாய் போற்றி! [12]

தமிழ் காக்க வந்த,தணிகாசலனே போற்றி!
சங்கம் போற்றி வளர்த்த சுந்தரத் தமிழே போற்றி!
முக்கனியாய்த் தித்திக்கும் முத்தமிழ் அரசே போற்றி!
எக்கனிக்கும் இனிமை தந்த எம் இளவலே போற்றி [16]

தாயும் தந்தையும் ஆனாய் போற்றி!
தாய் போல் தவறினைப் பொறுப்பாய் போற்றி!
தந்தைபோல் இருந்தெனைக் காப்பாய் போற்றி!
நண்பனாய் நின்று நல்வழி காட்டுவாய் போற்றி! [20]

சக்திவேல் தாங்கி நிற்கும் சண்முகா போற்றி!
சேவல் கொடி ஏந்தி வரும் சேவகா போற்றி!
வண்ணமயில் ஏறிவரும் வடிவேலா போற்றி!
எண்ணமெல்லாம் இனித்து நிற்கும் எம் இறைவா போற்றி! [24]

தேனும் தினைமாவும் தேடிவந்த தேவனே போற்றி!
வேழம் காட்டி வள்ளியை மணந்த வேலவா போற்றி!
நரைமுடி தாித்து நங்கையை அணைத்த நாயகா போற்றி!
புள்ளி மானைத் தேடி வள்ளிமானைப் பிடித்த வேடவா போற்றி! [28]

பார்த்தனின் வீரம் தருவாய் போற்றி!
பரதனின் பண்பை அருள்வாய் போற்றி!
கர்ணனின் கரங்கள் அளிப்பாய் போற்றி!
ஒளவையின் புலமையைப் புகட்டுவாய் போற்றி! [32]

குவிந்த கரங்களில் இன்பம் குவிப்பாய் போற்றி!
கலங்கிய கண்களில் துன்பம் களைவாய் போற்றி!
இருளில் தவிப்போருக்கு ஒளியாய் வருவாய் போற்றி!
கடலில் வீழ்ந்தோரைக் கலமாய்க் காப்பாய் போற்றி! [36]

ஆசைகள் எனை அண்டாமால் அரணாய் நிற்பாய் போற்றி!
அமைதி என்னுள் நிறைய மார்க்கம் அருள்வாய் போற்றி!
தளர்ச்சியை விரட்டும் தைாியம் தருவாய் போற்றி!
கவலையைத் தாங்கும் திடமனம் அருள்வாய் போற்றி! [40]

நாடி வந்தோர்க்கு நல்வழி காட்டுவாய் போற்றி!
தேடி வந்தோர்க்குத் தேனாய் இனித்திடுவாய் போற்றி!
வணங்கியவருக்கு வரம் அளித்திடுவாய் போற்றி!
பணிந்தவர்க்குப் பலன் தந்திடுவாய் போற்றி! [44]

செல்வத்தில் செருக்கு வாராதிருக்கச் செய்திடுவாய் போற்றி!
வறுமையில் உள்ளம் வாடாதிருக்க வைத்திடுவாய் போற்றி!
வெற்றியில் மமை
திடுவாய் போற்றி!
தோல்வியில் மனம் துவழாதிருக்க வாழ்த்திடுவாய் போற்றி! [48]

அடக்கமே ஆக்கமென்று உணர்த்திடுவாய் போற்றி!
எளிமையே இனிமையென்று சொல்லிடுவாய் போற்றி!
புன்னகையே பொன்னகையென்றுக் காட்டிடுவாய் போற்றி!
பொறுமையே பெருமை என்று சொல்லிடுவாய் போற்றி! [52]

எடுத்த காாியம் முடிக்க வைத்திடுவாய் போற்றி!
கொடுத்த வாக்கு தவறாத கண்ணியம் தருவாய் போற்றி!
அடுத்தவர் இன்னல் எனதாய் நினைக்க வைத்திடுவாய் போற்றி!
தொடுத்த மாலையில் ஜோதியாய் நிற்கும் சுந்தரா போற்றி! [56]

சினம் எனைச் சேராதிருக்கச் செய்திடுவாய் போற்றி!
மனம் மாசு படாதிருக்க மருந்திடுவாய் போற்றி!
தனம் எனைச் சேர வாழ்த்திடுவாய் போற்றி!
தினம் உனை வணங்கிட வைத்திடுவாய் போற்றி! [60]

எத்திக்கும் எதிரொலிக்கும் ஓம் முருகா போற்றி!
இத்திக்கில் எமைக் காக்கும் எம் தலைவா போற்றி!
பார்க்கும் இடமெல்லாம் பரந்து நிற்கும் பாலனே போற்றி!
கேட்கும் ஒலியெல்லாம் கீதமாய் நிறைந்த நாதமே போற்றி! [64]

அலைமகள் என் அருகிலிருக்க வைத்திடுவாய் போற்றி!
கலைமகள் கையில் நானிருக்கச் செய்திடுவாய் போற்றி!
மலைமகள் என் மனதில் குடியேற வாழ்த்திடுவாய் போற்றி!
நிலமகள் பொறுமை என்னுள் நிலைத்திடச் செய்திடுவாய் போற்றி![68]

வெள்ளிமலை ஈஸ்வரனின் மடி அமர்ந்த மழலையே போற்றி!
துள்ளிவரும் வேலோடு துணையிருக்க வருவாய் போற்றி!
வள்ளிமனம் நாடிவந்த தேவானை நாதனே போற்றி!
அள்ளித்தரும் அன்போடு அருகிலிருக்க வருவாய் போற்றி! [72]

பழுதில்லாப் பாதையைக் காட்டிடுவாய் போற்றி!
பொழுதெல்லாம் உன் புகழ் பாட வைத்திடுவாய் போற்றி!
தொழுதவர் தொல்லை அகற்றிடுவாய் போற்றி!
எழுத்தெல்லாம் நின்று நிறைந்திடுவாய் போற்றி! [76]

நல்லவர் நடுவே நானிருக்க வாழ்த்திடுவாய் போற்றி!
கற்றவரோடுக் கலந்திருக்கச் செய்திடுவாய் போற்றி!
சுற்றமாய் சூழ்ந்தெனைக் காத்திடுவாய் போற்றி!
பற்றற்ற எண்ணம் பாிசாய்த் தந்திடுவாய் போற்றி! [80]

வினைதீர்க்க வந்த விநாயகன் தம்பியே போற்றி!
எனை ஆட்கொள்ள வந்த ஆறுமுகன் நம்பியே போற்றி!
அனைவர்க்கும் அன்னையாய் நிற்கும் அண்ணலே போற்றி!
உனை வாழ்த்திவணங்கிட வரம் அருள்வாய் போற்றி! [84]

தொல்லைதரும் ஆசைகளைத் தொலைதூரம் தள்ளிடுவாய் போற்றி!
இல்லையென்று எனைச் சொல்லாதிருக்கச் செய்திடுவாய் போற்றி!
எல்லையற்ற இன்பம் எதுவென்றுக் காட்டிடுவாய் போற்றி!
தில்லை நடராசனின் திருமகனே போற்றி! [88]

ஏழைக்கு இறங்கும் இளகிய மனம் தருவாய் போற்றி!
பாவிகளை மன்னிக்கும் பரந்த மனம் அருள்வாய் போற்றி!
நட்புக்குத் தலை வணங்கும் நல்ல மனம் தருவாய் போற்றி!
வெறுப்புக்கு இடமில்லா வெள்ளை மனம் அருள்வாய் போற்றி! [92]

வானம் பொழிந்திட வழி செய்வாய் போற்றி!
நதிகள் கரை புரள வைத்திடுவாய் போற்றி!
பூமி செழித்திட உரமிடுவாய் போற்றி!
குடிகள் உள்ளம் குளிரச் செய்திடுவாய் போற்றி! [96]

ஐங்கரனின் அருகிலிருக்கும் அன்பு இளவலே போற்றி!
ஆறுதலை அள்ளி வழங்கும் ஆறுமுகனே போற்றி!
ஏழுமலை குடிகொண்டக் குன்றத்துக் குமரா போற்றி!
எட்டுத்திக்கும் புகழ் மணக்கும் புண்ணியா போற்றி!
முவுலகம் போற்றி வணங்கும் போற்றி வணங்கும் முத்துச் சுடரே போற்றி!
வெற்றிவேல் தாங்கி வரும் வெள்ளி நிலவே போற்றி!
தாமரையில் உதித்து வந்தத் தங்கமலரே போற்றி!
வையம் வளர வழிகாட்டும் வைர ஒளியே போற்றி! [104]

என் லட்சியத்துக்குத் தூணாய் துணை நின்றாய் போற்றி!
எழுத்தில் தமிழன்னை ஆசி கலந்தாய் போற்றி!
ஏற்ற பணியை இனிதாய் முடித்து வைத்தாய் போற்றி!
என் எண்ணத்தில் என்றும் நிலைத்திருப்பாய் போற்றி! [108]

Series Navigation