வித்யாசாகரின் ரசிகை

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


வித்யாசாகரை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. ஆள் அப்படியே மாறாமல் மீதமிருந்தாற் போலிருந்தது. குறுந்தாடி. நீள நேருபாணி குர்தா ஜிப்பா. ‘ஏய் ‘ என முதுகு பின்னால் கேட்ட எழுச்சி மிக்க குரல் ஒன்றே போதும் அவனை அடையாளம் புரிந்து கொள்ள. தொடர்ந்து முதுகில் படாரென்று அடி. முரட்டுத்தனமாய் என் தோள்களைப் பற்றித் திருப்பிப் பாதி அணைத்தபடி, ‘அர்த்தநாரி, நீதானா ? எவ்ள வருஷம் ஆச்சி – இல்ல ? ஏ அப்பா!… எப்டி இருக்கே ? கல்யாணம்

ஆயிட்டதா ? … வா இப்டி ஓரமாப் போலாம்… ‘ என்றான் படபடப்புடன்.

ஒரு நெரிசல் மிக்க தெருவின் பஸ் நிலையத்தில் ஏறத்தாழ நான் பஸ்சுக்குள் நுழையுமுன் பிடித்து வெளியே என்னை இழுத்தான். எனது பயண அவசரம் பற்றி அவன் சிறிதும் அக்கறைப்படவில்லை. ஆகவேதான் அவன் பழைய அதே வித்யாசாகராகவே எனக்குத் தோன்றினான். 555 எடுத்து நீட்டி ‘ஓ நீ ஸ்மோக் பண்ண மாட்டேல்ல ? ‘ என அவனே கையை இழுத்துக் கொண்டான்.

‘…ஸ்ஸ்ஸ் ‘ என்றுபிரஷர் குக்கர் போலப் புகை விட்டபடி ‘நீ பதிலே சொல்லலியே ‘ என்றவன் சிரித்து ‘நம்பவே முடியலை. நான் உன்னைப் பாப்பேன்னு… தெரியுமா ? ‘ என்றான்.

‘ஒனக்குக் கல்யாணம் ஆயிருச்சின்னு கேள்விப் பட்டேனே ‘ என்றேன்.

‘எஸ் ‘ என்றான் கண்மின்ன. ‘நான் இப்ப சந்தோஷமா இருக்கேன்… நீ ? ‘

‘நானுந்தான்… சந்தோஷத்துக்கென்ன ? ‘

‘அதில்லை. கல்யாணம்… ‘

‘ச் ‘

‘ஏன் ? ‘

‘ஒரு கலைஞன் கல்யாணம் செஞ்சிக்கக் கூடாது வித்யா… ‘

‘அதாம்ப்பா ஏன் ? ‘

‘பதில் உனக்கே தெரிஞ்சிருக்கணும்டா. கலை உன்னதங்களுக்கு ஆசைப்படுகிறது. இல்லறம் அபத்தங்களைப் புகுத்துகிறது! ‘

‘அ ‘ என்று வித்யாசாகர் சிரித்தான். ‘நீ மாறவே இல்லடா. ‘

‘மாறமாட்டேன்… கலைஞனாகவே வாழ்ந்து கலைஞனாவே நான் சாகணும்! ‘

‘அப்டிப்போட்!… கல்யாணம் பண்ணிக்கிட்டா கலைஞன் கலைஞனா இருக்க மாட்டானா ? ‘

‘அதெப்டி முடியும் ? ‘

‘ஏன் ? ‘

‘நான் முக்கியமான பிளாட்டை யோசிச்சிட்டிருப்பேன்… அவ வந்து ரேஷன் கார்ட நீட்டுவா… ‘

‘நீட்டினா என்ன ? ‘

‘இதான் சொன்னேன். வித்யா, கல்யாணம் உன் கலை ஜோதியை இருட்டடிச்சிட்டு வருது!… ‘ ‘அது இன்னொரு முகம் ‘ ‘ படிச்சியா ? ‘தி ண் ஆ ண ‘ல எழுதியிருக்கேன்… ‘

‘இல்லை. இலக்கியப் பத்திரிகை யெல்லாம் படிக்க எனக்கு நேரங் கிடைக்கிறதில்லை. ‘

‘பாத்தியா ? இதான் சொன்னேன்… கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி நீ ஆர்வப் பட்டிருப்பே. ‘

‘அப்டியில்ல அர்த்தநாரி… வா போயிட்டே பேசலாம்… வீட்டுக்கு வந்துட்டுப் போலாம்ல ? ‘

‘சிறைக்கூடம் ‘

‘இல்ல – கலைக்கூடம்! வா ‘ என்றான் சிரித்து.

‘ரேஷன் கார்டை நீட்டினா என்னடா ? வாழ்க்கைல அதும் ஒரு விஷயந்தானே ? ‘

‘அப்றம் உன் குழந்தைக்கு ஆய் அலம்பி விடறதுல என்ன தப்புன்னு நீ சொல்வே… ‘

‘ ? ‘ என்று முதுகில் அடிக்க வந்தான். ‘இன்னும் குழந்தை கிழந்தை ஆகல… ‘ என்றான் வெட்கம் பூக்க.

‘தாம்பத்யம் கொஞ்சங் கொஞ்சமா உன் கலை உணர்வை மந்தப் படுத்தி, கறையான் மாதிரி அரிச்சிரும்டா. லெளகிக வட்டங்கள்லேர்ந்து மானுடம் விடுதலைப்படணும். அதுதான் கலையின் இலக்கு. லட்சியம்… ‘

‘அர்த்தநாரி, வாழ்க்கையை வாழாமலே புரிஞ்சுக்க எப்படி முடியும் ? அது சரியா இருக்குமா ? ‘

‘அது… வாழ்க்கையின்னா என்னன்னு நாம புரிஞ்சுக்கறதுல இருக்கு பதில். ‘

‘டாய் அனுபவத்தால புரிஞ்சுக்க முடியாதுன்றது அபத்தம்டா. நீ லெளகிக வட்டத்துக்குள்ள தலை குடுக்காமலேயே, அதுக்குத் தலை வணங்காமயே இல்லறம் நடத்தலாம். ‘

‘நல்ல கற்பனை. அதெப்டி முடியும் ? ‘

‘பாரு. காஞ்சனாவைக் கல்யாணம் பண்ணிண்டதுல எனக்கு, என் ஓவிய வாழ்க்கைக்கு, ஒரு குந்தகமும் வரல்ல. ‘

நான் அவனைப் பார்த்தேன் –

‘எஸ். லலித் கலா அகாடெமில ஒரு கண்காட்சி வெச்சிருந்தேன். அதுக்கு அவ வந்திருந்தா. ‘

‘காஞ்சனா. ‘

‘உன் ரசிகை ‘

‘ம் ‘

‘அப்றம் காதலி ‘

‘ம் ‘

‘அபத்தம்! ‘ என்றேன் நான். ‘நாலு பேர் உன் ரசிகையா வந்து உன்னை லவ் பண்ணினா நாலுபேர் கூடயும் வாழறதா ? ‘

‘கேளு… ‘

‘எங்களைப் பாரு. சுதந்திரப் பறவை. ரசனைன்ற பேர்ல எங்களை யாரும் ஆக்ரமிக்க முடியாத்! ‘

‘அப்ப ரசனையே ஆக்ரமிப்புன்றியா ? ‘

‘ம் ஒருவிதத்ல. அன்பே வன்முறைன்னு ஆயிப் போகுதில்லையா. அதுபோல. ‘

‘வெல் செட். ரசிக்கப்படாத கலையால என்னா பிரயோஜனம் அர்த்தநாரி ? ‘

‘பாவி… நீ தப்பா விஷயங்களைப் புரிஞ்சிக்க ஆரம்பிச்சாச்சி… ‘ நான் சற்றே எக்களிப்புடன் தலையை விரைத்து ‘ஒரு ரசனைக்கு கலைப்படைப்புல கலைஞனோட தலையீடு தேவையில்லைன்றேன். உன் ஓவியத்தை அவள் ரசிக்கட்டும்டா. உன்னை ஏன் ரசிக்கணும்! ‘

‘காஞ்சனா அருமையான பெண். நான் அவளை எப்பிடி விரும்பறேன் தெரியுமா! ‘ என்கிறான். முகத்தில் திரும்ப அந்த மென்மைச் சாயல்.

‘கவனம் வித்யா. உன் வாழ்க்கையில் கலைக்கு நீ தர்ற முன்னுரிமை குறைஞ்சிட்டே வருதோன்னு படுதுடா. ‘

‘பைத்தியம் மாறிப் பேசாதே! அதுக்கும் இதுக்கும் என்ன ? ‘

‘கலைதான் என் முதல் காதலி. ‘

‘அப்ப கல்யாணம் சின்ன வீடா ? அபத்தம்! ‘

‘கலைஞனுக்குப் படைப்பு உந்துதல் எந்நேரமும் ஏற்படும். அதுக்கு சராசரி வாழ்க்கை சரிப்டாது… பாதி ராத்திரில நேத்து ஒரு கவிதை எழுதினேன். ‘

‘பேயைப் பத்தியா ? ‘

‘ச் ‘ என்றேன் சலிப்புடன். ‘நீ அழிஞ்சிட்டேடா. உன்னால புரிஞ்சுக்க முடியாது. யுவார் நோ மோர் எ கலைஞன். ‘

‘அ போடா! நோ மோராவது, எக்மோராவது… போன வாரம். மூளையைக் குப்பைக்கூடை மாதிரிப் போட்டு – புத்தகமும் ஃபைலும் கம்பியூட்டரும் ஸ்டாயரிங்கும் ஸ்பானருமா… போட்டு ஒரு படம் வரைஞ்சிட்டிருந்தேன். பாடமே திணிப்பா ஆயிருதில்லையா… இதை என் மனைவியைத் தொந்தரவு பண்ணாம எழுந்து போயி வரைஞ்சேன். அப்போ ராத்திரி ரெண்டு மணி. பிக்காசோ, பிசாசோன்னு நினைச்சிக்காதே… ஸ்டைல் ஓவியம்.

உலகமே அமைதியாய் இருந்தது. நான். என் கான்வாஸ். டேபிள்-லைட். பிரஷ். கலர் கலரா துீரிகையில் ஊற ஊற ஒரு பரவசம். யப்பா வர்ணிக்க உன்னைமாதிரி நான் எழுத்தாளன் இல்லைன்னு வெய்யி.

முடிச்சி பிரஷ்ஷைக் கீழ போடறப்ப மணி எட்டு. வெயில் வந்திருந்ததே எனக்குத் தெரியாது. சுத்துச் சூழலோட கிஞ்சித்தும் லவலேசமும் உறவு ஒட்டுதல் இல்லாத நாட்டம் படத்தில். பிரஷ்ஷைக் கீழ போடறேன். அப்டியே பின்னாலேர்ந்து கட்டிக்கிட்டா இவ. காஞ்சனா. என் மனைவி. ரசிகை…

எப்ப எழுந்துண்டேன்னேன். அப்பவே. உங்க கூடவேன்னா… என்ன சொல்றே ? ‘ என்று கண் சிமிட்டினான்.

‘ம் ‘

‘என்னாங்கடா ம் ? ‘

‘பட்… சரி உன் மனைவியை நான் கட்டாயம் பாக்கணுண்டா. ‘

‘அவசியம். என் மனைவி என் கலை வாழ்வின் ஒரு கலங்கரை விளக்கம்… ‘

‘அப்டியா! ‘

‘நிச்சியமா! இதுல சிரிக்க என்ன இருக்கு ? நாம் பாட்டுக்கு வரைஞ்சி தள்றேன். விற்பனை என் மனைவி பொறுப்பு. நாமளே அதையும் பாத்திண்டா கலைல ஈடுபாடு தளர்ந்துரும்… ‘

‘இந்த நிர்வாக முறை பொருந்தி வருதா வித்யா ? ‘

‘ஏன் வராம ? எனக்கும் என் வாடிக்கையாளருக்கும் ஒரு பாலம் அவ. என் ஓவியத்தை சில சமயம் அவ விளக்கிச் சொல்லிட்டு இருக்கும்போது, எனக்கே ஆச்சர்யமா இருக்கும். அப்றம் சந்தோஷமா இருக்கும்… ‘

எனக்கு லேசாய் ஒருவகை அசூயை ஏற்பட்டாற் போலிருந்தது. பொறாமை. சோறு தண்ணி இல்லாமல், முறைகள் இல்லாமல் வறட்டு வாழ்க்கை. அழுக்கு வேட்டி சட்டை. தாடி அரிப்பு. உட்காரும் இடத்தில் ஒரு எரிச்சல். தொடையிடுக்குப் புண்… அலட்சியம் மிக்க – புறக்கணிப்பும் புறக்கணிக்கப் படுவதுமான வாழ்க்கை.

கலைஞனுக்கில்லை வறுமை – இல்லவே இல்லை… என்பார் க.நா.சு. இரண்டாம் முறை அழுத்திச் சொல்றாரேய்யா. வலியின் பலவீன முனகலாட்டம் த்வனிக்குதே. அட நிஜத்தில் கலைஞனிடத்தில் என்ன இருக்கிறது வறுமை தவிர.

வித்யாசாகரின் வீட்டுக்குள் நுழைந்தோம். வரவேற்பு அறையுடன் பெரிய வீடு. சொந்த வீடு!… இருக்கைகள் ஆடம்பரமாக இருந்தன. சுவரெங்கும் ஓவியங்கள். நான் அவன் மனைவியைப் பார்க்கப் பரபரப்பானேன்.

‘காஞ்சனா ? ‘

‘வரேன்… ‘ என்று குரல் கேட்டது. அவள் வரும்வரை சுவரில் இருந்த ஓவியங்களைப் பார்த்தேன்.

‘வித்யா என்னடா உன்னோட சுமாரான படங்களை மாட்டி வெச்சிருக்கே ? ‘

‘நல்ல படங்களை உடனே அவ வித்திருவா ‘ என்றான் அவன். சொல்லிவிட்டு வித்யாசாகர் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

—-

நன்றி – சிறுகதைத் தொகுதி – வித்யாசாகரின் ரசிகை 1994 மணிமேகலைப் பிரசுரம்

storysankar@rediffmail.com

mobile india 94444 18699

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்