விதியின் பிழை

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

எஸ்ஸார்சி


என் அலுவலகத்தில் பணி ஆற்றும் அவன் பெயர் செந்தில். அவன் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி கண்முன் நிகழும் போட்டா போட்டியில் அரசு நிறுவனத்தில் வேலை செய்ய ஒப்பந்தம் பெறுவது என்பது லேசுபட்ட சமாச்சாரம் இல்லை.
முட்டியும் மோதியும் அப்படி ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றால் அந்த அலுவலகத்து டெண்டரில் கண்டுள்ள அந்த வேலையை மட்டுமே செய்து கொடுக்க வேண்டும்.
மற்றபடி எத்தனை ஆட்களை அந்த ஒப்பந்தக்காரன் அந்த ஒரு வேலையை முடிக்க வைத்துக்கொண்டால்தான் எனக்கும் உங்களுக்கும் என்று இல்லை யாருக்கும் தான் என்ன.
அலுவலகத்தில் வேலை ஆகவேண்டுமே தவிற வேலைக்கு வருபவர்கள் குறித்துப் பேசிக்கொள்ள யாருக்கும் விஷயம் எதுவும் இல்லை. இன்றைக்கு உள்ள நடைமுறை
வாழ்க்கையில் பத்தாண்டுகாலம் இப்படிக் காண்ட்ராக்டிலேயே ஒரு மைய அரசின் மாவட்ட அலுவலகத்தில் வேலை செய்து குப்பைகொட்டி ஆயிற்று செந்திலுக்கு. இங்கு இதே பணியில் அவனுக்கு நிரந்தரம் என்பது நடக்கிற காரியம் இல்லை. நிரந்தரம் ஆகுமா அப்படி ஒருக்கால் பணி நிரந்தரம் ஆகுயென்றால் அந்த நிரந்தரம் எப்போதுவரும் .என்றெல்லாம் யார் யாரைக்கேட்கமுடியும்.
தொழிலாளியை நம்மோடு வாழும் ஒரு சக மனிதனாகப்பார்த்து அவனுக்கு ஆவன செய்தது வந்தது என்பது எல்லாம் அனேகமாக பழங்கதையாகத்தானே ஆகிவிட்டது. சொன்னால் யார் நம்பப்போகிறார்கள்
சில நோய்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் சில ஏழைக்கு வரும் என்றபபடி யெல்லாம் ஒருகாலத்தில் பெரியவர்கள் பேசக்கேட்டிருக்கிறோம் இ¢ப்போதோ நோயுக்கு
வர்க்கபேதம் என்பது இல்லாது போயிற்று . இது கலிகாலம்.
இந்த செந்திலின் தாயாருக்கு இப்படி ஒரு கொடிய நோய் வரும் என்று யார்தான் ஊகித்திருக்கமுடியும்.
செந்திலுக்கு அண்ணன் ஒருவனும் இருந்தான். அவனுக்கும் இவனைப்போலத்தான் நட்டாமுட்டியாய் ஒரு கம்பெனி வேலை.
தனியார் நிறுவனத்தில் என்ன தயார்செய்து எங்கே அனுப்பிவைக்கிறார்கள் என்பது தெரியாமலே அங்கே கண்ணாடி சீசாக்கள் கழுவிச்சுத்தம் செய்து தரும் அழகு வேலை அவனுக்கு.. அன்றன்று வேலைக்குப்போனால் மட்டுமே சம்பளம் இல்லை என்றால் அது இல்லைதான்
. ‘இஷ்டம் இருந்தா வேலைக்கு வா நீ இல்லைன்னா இங்க ஒண்னும் குடி முழிகிடாது. இன்னும் ஆயிரம் பேரு இதே வேலை க்கு வர த்தவம் கிடக்குறாங்க’ இது மாதிரி ஒரு தொழிலாளி முதன் முதலாய் க் கேட்கின்றபோது நெஞ்சு பதறிதான்போகும். கொஞ்சம் உப்பும் புளியும் சேர்த்து காட்டமாய் இரண்டு வேளைக்கு வாழை இலை போட்டுப்பிசைந்து பிசைந்து சாப்பிட்டால் பிறகென்ன மனிதனுக்கு ரோசம் கீசம். அவை எல்லாம் மூட்டை முடிச்சோடு பறந்துபோய்விடாதா.
அண்ணன் தம்பி இருவருக்குமே திருமணம் ஆகாமல் இருந்தது. தனக்கு வந்திருக்கும் நோய்க்கு த்தான் பலி ஆவதற்கு முன்பாக தன் மகன்களுக்கு திருமணம் செய்து பார்க்க
ஆசை வந்தது . செந்திலின் தாயுக்கு. எல்லோருக்கும் எழும் ஆசைதானே. பெரிய பையனிடம் சொல்லிப்பார்த்தாள். அவன் முடியாதென்றான்.
அவன் சொல்வதில் ஒரு நியாயம் இல்லாமலா. கட்டிக்கொண்டு வந்துவிட்டு பட்டினி போடமுடியாது என்றான்.
சிறியவன் செந்தில்தான் எப்படியோ சமாளித்து விடலாம் என முடிவு செய்து கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டான். நோயின் பிடியிலுள்ள தாய் ஆசைப்படுகிறாளே ஆகத்திருமணம் செந்திலுக்கு முடிந்துபோயிற்று. வெறொன்றும் அதுபற்றிச் சொல்லிக்கொள்ள பெரியதாக இல்லை.
தன் தாயை அழைத்துக்கொண்டு எத்தனை மருத்துவமனைகள் எறிப்பார்த்தான். காசிருந்தால் வீசிப்பார்க்கலாம்
அது தான் இல்லை. அரசாங்க மருத்துவமனைகளில். நமக்கு நல்ல நேரம் இருந்தால் எந்த மருந்தாவது
வேலையும் செய்து நம்மை க்காப்பாற்றிவிடும் தான்.
செருப்பு க்கடித்து செத்தவனும் உண்டு பாம்புக்கடித்து ப்பிழைத்தவனும் உண்டு. எத்தனை ரசமான வசனங்கள் மனம் ஆறுதல் அடைய எப்படி ச்சொல்லி வைத்திர்ருக்கிரார்கள். இந்தப்பெரியவர்களும் தாம் லேசுப்பட்டவர்களா என்ன.. நாயாய்ப்பேயாய் அலைந்து எது ஏதோ செய்து பார்த்தான். ஒன்றும் கதை ஆகவில்லை. ஒரு விதமாய் முடிந்துபோனது அவளின் வாழ்க்கை.
இனிமேல்தான் நான் சொல்லவந்த அந்தக் கதைக்கு வர வேண்டும்.
‘ சார் அம்மா பாடிய ஆம்புலன்சில ஏத்திகிட்டு வாத்திப்பட்டு கிராமத்துக்கு வர்ரம். பாடி சென்னையிலேந்து வரணும் அங்க நாங்க வருவதற்குள் எப்படியும் இருட்டிவிடும். ஆக சவ அடக்கம் நாளைக்கு காலையிலதான்’ செந்தில்தான் கைபேசி வழி என்னிடம் சொன்னான் .
அலுவலகத்தில் பணிஆற்றும் பெரிய மனது படைத்தவர்கள் ஆளா கொஞ்சமாய் எனப் போட்டு ரூபாய் முந்நூறை
என்னிடம் கொடுத்து செந்திலிடம் கொடுங்கள் என்றார்கள்.. ஜம்பமாய் வாங்கியும் வைத்துக்கொண்டேன்.
மறுநாள் அதிகாலை. லேசான தூரல். ஆத்திப்பட்டு எங்கே இருக்கிறது எப்படிப்போவது. எந்த ப்பேருந்தை
எங்கே சென்று பிடிப்பது. ஒரே குழப்பாமாய் இருந்தது.
ஒரு பெட்டிக்கடைக்காரரிடம் விசாரித்தேன்.
‘ பண்ருட்டி வண்டியில எறி , அப்புறம் அங்கேந்து ஆத்திப்பட்டுக்கு வேற ஒரு டவுன் வண்டியில போவுணும்’
கடைக்காரன் விடை சொன்னான் .பூக்கடைக்காரனிடம் ஐம்பது ரூபாயுக்கு பேரம் பேசி ஒரு மாலை யைப்பையில்போட்டு வாங்கினேன்.
சாவுக்கு மாலை வாங்குவதில் கூட பூக்கடையில் என்னபேரமோ. பேரம் கட்டாயம் உண்டுதான். பைசாதானே வாழ்க்கைய நிர்ணயிக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. நாம் புதியதாய் சொல்லவில்லை. அந்த உலக நீதி சொல்கிறது..
மனம் எப்போதும் சமாதானத்திற்கு அலைகிறது. மனத்தைப்போல் ஒரு கேடுகெட்ட பச்சோந்தி ஜீவன் எதுவும் இல்லை. அதுதான் வளைந்து வளைந்து எப்படி எப்படி எல்லாம் கில்லாடியாய் ஒட்டை நியாயம் பேசிவிடுகிறது.
பண்ருட்டி பேருந்து நிலையமும் வந்தது. பேருந்திலிருந்து இறங்கி அந்த ஆத்திப்பட்டு கிராமம் செல்லும் அப்பேருந்து குறித்து விசாரித்தேன்.
‘ இப்பதான் அந்த ஆத்திப்பட்டு வண்டி போச்சி, அடுத்தவண்டின்னா இன்னும் அதுக்கு எம்மாம் நேரம் கெடக்குது’
இப்படித்தான் பதில் சட்டமாய்க்கிடைத்தது.
காசைப்பார்த்தால் என்ன செய்வது. சவம் எடுத்துவிட்டால் பிறகுபோய்தான் என்ன பிரயோசனம். சவத்திற்கு வாங்கிய மாலையை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்ய.
டாக்சிக்காரன் ஒருவனிடம் சென்று லேசாக ஆரம்பித்தேன்.
‘ ஆத்திப்பட்டு வரை போய் வரணும்’
‘ அதுக்கென்ன நம்ம வண்டிய எடுத்துகலாங்க. இப்ப ஏது ஆத்திப்பட்டுக்கு வண்டி. கையில மாலையை பாத்தா துக்கத்துக்கு போறீங்கன்னு தெரிது.’
‘ போக வர எம்மாம் ருபா கேப்பிங்க’
‘ ரெண்டு நூறு ஆவும், நானே கொறைச்சிதான் சொல்லிருக்கேன்’
நான் வண்டியில் ஏறி கம்பீரமாய் அமர்ந்து கொண்டேன்.
மாலைப் பொட்டலம் கைவசம் பத்திரமாக இருந்தது.
ஏதோ சாதிக்க ப்போவதாக பாழும் மனம் கிடந்து அலட்டிக்கொண்டிருந்தது.
முந்திரிக்காடுகள். எங்கும் வீசும் முந்திரிப்பூவின் சுக மணம். இடை இடை பச்சைப் பெலாமரங்கள் மாமரங்கள்.
நடுவே ராஜ பாதையாய் பள்ளிகொண்ட தார்ச்சாலை.
‘ அப்ப பண்ருட்டியார் காலத்துல போட்ட ரோடுவ, இப்பத்திய சேதி இல்ல’
டாக்சிக்காரன் சின்னதாய் அரசியல் பேசினான்.
ஆத்திப்பட்டு என எழுதிய பலகை சாலை ஒரத்தில் கண்ணில் பட்டது.
‘ எங்க போவுணும்’
‘செந்தில்னு பேரு அவன் அம்மாதான் தவறிப்போனது’
‘ யாரு எவுறு, ஊரா காலனியா ஆளு யாருண்ணு சொல்லுணும்ல’
‘ காலனிக்கு த்தான் போவுணும்’
செந்தில் ஒருமுறை ஏதோ விண்ணப்பம் பூர்த்திசெய்யும் சமயம் அந்த விஷயம் என் கண்ணில் பட்டது நினைவுக்கு வந்து உதவியது.
‘ போச்சி போச்சி இந்த சாத்த்கிப்பட்டுல ஏது காலனி ஆளு, இது என் சொந்த ஊரு. இங்க எல்லாருமே சாதி கிறித்துவங்க மொத்தமும் கொத்தா உடையார் சனம் நாம இங்க ஊரையும் சுத்தி வந்தாச்சி எந்த வூட்லயும் எழவு உழுவுல, இப்ப என்னா செய்ய’
கைவசம் இருந்த கைபேசியை எடுத்து செந்தில் எண்ணை க்குறித்து அமுத்தினேன். டவர் கிடைக்க வில்லை.
வண்டி ஒரு மேடு ஏறி இறங்கியது டவர் கை பேசியில் பளிச்சென்று தெரிந்தது. மீண்டும் கைபேசியில் அவனை அழைத்தேன். செந்தில் தான் பேசினான்.

‘ கோவிச்சுகாதிங்க சாரு சவத்தை சேடபாலயம் கொன்டாந்துட்டம். ஆத்திப்பட்டுல இல்ல காரியம்’
‘ என்னப்பா செந்திலு என்னய அலைய வுட்டுப்பிட்ட நீ’
‘ சாரு மன்னிக்கணும் நா சொல்லுற விஷயம் இப்பதான் எனக்கே தெரியும். எங்க சனத்துக்கு ஆத்திப்பட்டுக்கிராமத்துல சொடல கெடயாதாம். ஆத்திபாட்டு காலனி இல்லாத ஒரு ஊரு. அதனால எங்க சனம்க தங்குலாம் எதோ இருக்குலாம் போவுலாம் அப்பிடியேதான் என் அப்பாவும் அம்மாவும் ஆத்திப்பட்டுல இருந்திருக்காங்க; காலனி ஆளுன்னா ஊரு காட்டுல ஒரு செண்டு பூமி வாங்க முடியாது. செத்து போனாலும் சொடலயில பொதைக்க முடியாது அதனால வேற வழி யில்லாம எங்க அம்மாவோட பொறந்த ஊருக்கே சவத்த கொண்டாந்துட்டம்’.
‘ சரி செந்தில் நீ அங்க ஆக வேண்டியது பாரு.’ நான் என் கைபேசிப்பேச்சை முடித்துக்கொண்டேன். இத்தனை ஆழம் உள்ள பிரச்சனையை க்கேட்கவே கூட எனக்குச்சங்கடமாக இருந்தது.
‘ இப்ப என்ன செய்யப்போரீங்க சாரு’ டாக்சிக்க்காரன் தொடர்ந்தான்.
‘ இனி என்ன செய்ய. சேடபாலயம் போயும் ஒன்ணும் ஆவாது. நேரமும் இல்ல. அவளவுதான் நமக்கு பிராப்தம். அந்த அம்மா முகத்த கடைசியாப்பாக்க கூடம் எனக்குக் குடுத்துவக்கல’
‘ அப்ப சரி இந்த மாலை’
‘ அது வச்சிகிட்டு இப்புறம் நான் என்ன செய்ய’
‘ கெடாவிட வேண்டியதுதான் சாரு’
டாக்சிக்காரன் வண்டியை நிறுத்தினான். கதவைத்திறந்த நான் மாலைப்பொட்டலத்தை வீசி புளிய மரம் மீது
எறிந்தேன்.
டாக்சிக்காரன் புளியமரத்தடிக்கு நேராய்ப்போனான். நான் வீசி எறிந்த மாலையை எடுத்தான். அதனை அருகே இருக்கும் சிறியபாறாங்கல் ஒன்றின் மீது வைத்துவிட்டு பையவே நடந்து வந்து வண்டிக்குள் ஏறி அமர்ந்தான்
‘ சாவுக்கு வாங்கின ஒரு மாலய பச்ச மரத்துமேல கெடாவலாமா சாரு’ என்னிடம்தான் கேட்டான்.
என்னை ப்பொட்டில் யாரோ பளாரென்று அறைந்தது மாதிரி உணர்ந்தேன்.
எனக்கு ஒரு சாவுக்கு போனது அது இப்படி ஆனது என்பது எல்லாம் இப்போது ஒன்றும் பெரியதாகத்தெரியவில்லை..


essarci@yahoo.com

Series Navigation