விட்டிலாயிராமல் விலகியிரு…

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


மின்சாரமற்ற பொழுதுகளில்
மின்சார உற்பத்தியானில்
எரிப்பான் அற்ற நேரங்களில்…

கும்மிருட்டு மூலையில் கிடந்த
என்னைத் தேடி எடுத்து
ஒளிர்ப்பானில் பற்ற வைத்த போது

உணர்ந்தேன்.. உன் கைகளில்
பஃப் களின் வெண்குழல் வத்திகளும்..
புளித்த பார்லித்தண்ணீரின் வாசமும்..

உன் கை பட்டதால்
உணர்வற்று உருகிக் கொண்டிருந்தேன்
சொட்டுச் சொட்டாய்…
உனக்காயும் எனக்காயும்..

ஒளிர்ந்து கொண்டிருந்தேன்..
வேறு எந்த உபயோகமுமற்று…
நம் இருவரின் இருப்பை
உணர்த்த மட்டுமே..

ஒளியீர்ப்பு விசையாய்.
என் புன்னைகை பட்டு.
ஒளிர்ந்த்து கொண்டிருந்தது ..
உன் கண்கள் ..

இருட்டில் நவ்வாப்பழமாய்
உன் கண்கள் கனிந்து
கசிந்து கொண்டிருந்தன அன்பில்..

ஒரு விட்டிலைப் போல்
உருமாறிக் கொண்டிருந்தாய் நீ..
வினோத தாகம் ஆட்கொள்ள..

இறகுகள் சடசடக்க என் மேல்
மோதிப் பற்றியெரியும்
ஆவலில் பறக்க யத்தனித்தாய்..

உன் நலம் மட்டுமே நாடும் நான்
என்னைச் சுற்றிச் சுழன்ற
காற்றைப் பற்றி இழுத்துப்
போர்த்துக் கொண்டேன்..

ஓளிந்த என் மேல் விழுந்த நீ
வெம்மையை உணர்ந்திருந்தாய்..
ஆயினும் உயிர்த்திருந்தாய்..

மரித்து விடாமல்
உயிர்த்திரு,,
விட்டிலாயிராமல் விலகியிரு

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்