விடியும்! – (21)

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


சலூனில் முடிவெட்ட நாலு பேர் காத்திருந்ததைக் கண்டு வீட்டிற்குத் திரும்பி நடந்தான் செல்வம். பொங்கல், வருசப்பிறப்பு போன்ற பெருநாள் காலங்களில் சலூனில் இப்படி சனம் சொரிவது வழக்கந்தான். சலூனின் ஒரே முதலாளியும் தொழிலாளியுமான அந்தோனி கையில் சீப்பும் கத்தரிக்கோலும் தொழிலில் கண்ணும் கருத்துமாய் மும்முரமாக இருந்தார். செல்வம் தெருவிலிருந்து பார்த்துவிட்டு உள்ளே வராமல் திரும்பியதை அவர் கவனிக்கவில்லை. கண்டிருந்தால் விட்டிருக்கமாட்டார். இந்தா முடிஞ்சிரும் தம்பி இருங்க என்றிருப்பார்.

அவர் சொன்னதைக் கேட்டு இருந்துவிட்டால், எல்லாருக்கும் வெட்டி முடியுமட்டும் பொறுக்க வேண்டும். அங்கு இரண்டொரு பழம் பேப்பரைத் தவிர பார்ப்பதற்கு வெறொன்றுமிருக்காது. இருந்து இருந்து அலுத்துப் போகும். இருக்கிறவர்கள் முடிவெட்டுவதோடு சேவ் எடுக்கிற ஆக்களாகவும் இருப்பதை முகக்கறுப்புகள் காட்டின.

‘பொங்கல் சாமானும் வாங்கிக் குடுக்க வேனும். குடுத்துப் போட்டு வந்து வெட்டுவம். ‘

“தலை நல்லா வளந்து போச்சு, மழை விட்டதோட போய் வெட்டாற்று வா” என்று சின்னம்மாதான் சொன்னாள். சலூன் தூரமில்லை, சந்திக்கு வந்து சோற்றுக்கைப்பக்கம் திரும்பினால் இருக்கிற முதல் கிட்டங்கியில் மூன்றாவது கடை. அயலுக்குள்ளேயே இருந்ததால், அங்கேதான் வாடிக்ககையாக வெட்டுவது.

திரும்பி வரும் வழியில் ‘கணவாய், முட்டைக்கணவாய் ‘ என்று மீன்காரன் கூவிக்கொண்டு வந்ததைக் கண்டான் செல்வம்.

“கணவாய் என்ன விலை ? ”

வேலியால் அசரீரி மாதிரிக் கேட்டதும் சைக்கிளை நிற்பாட்டி இறங்கினான் மீன்வியாபாரி. அவர் பெரிய வியாபாரியில்லை, அன்றாடங்காய்ச்சிதான். இன்றைக்கு இதை விற்றால்த்தான் நாளைக்குப் பொங்கல் என்கிற மாதிரி அழுக்கில் தோய்ந்து தொய்ந்த கோலம். வேலியால் விலை கேட்ட மனுசி சைக்கிள் கரியரில் கட்டியிருந்த பெட்டியின் ஈரச்சாக்கைத் திறந்து கணவாயின் தரத்தை புகுந்து புகுந்து பார்த்தாள் – ஐஎஸ்ஓ 9002 சட்டதிட்டங்கள் தெரிந்தவள் போல. முதலில் கணவாய் அவளது கண்களைக் கவர்ந்து மனதைத் தொட வேண்டும். அதன்பின் அவன் சொல்கிற விலை ஒத்து வரவேண்டும். பிறகுதான் உள்ளிருந்து சருவச்சட்டி வரும். இல்லாவிட்டால், வியாபாரி நடையைக் கட்ட வேண்டியதுதான்.

“என்ன இது, கணவாய் விக்காம அப்படியேயிருக்கு” .. .. .. .. .. சரக்கின் தரம் குறித்து சந்தேகம் கிளப்பினாள் மனுசி. விலை குறைக்கும் நோக்கம்.

“உடன் கணவாய், இப்பதான் கூறி எடுத்துக் கொண்டு வாறன் ” என்றான் வியாபாரி. நாலைந்து கணவாய்களை கையில் அள்ளி, ஒன்றின் தலையைக் கிளப்பியும் காட்டினான்.

பொங்கல் நாளில் மச்சங்களுக்கு அவ்வளவு மவுசு இல்லை. பறக்கப் பறக்க உடன் பாரைமீன் அள்ளி வந்து ஊர் முழுக்கக் கூவித் திரிநதாலும் ஏன் என்று கேட்க மனுசர் இருக்காது. அது மீன்காரனுக்குத் தெரியும். வந்த வியாபாரத்தை இன்றைக்குக் கோட்டை விட அவன் என்ன முட்டாளா!

“என்ன விலை ? ”.. .. .. .. .. அவள் ஏனோ தானோவென்று கேட்டாள்.

“அறுவது ரூவா”

அது அரைக்கிலோவிற்கு சொன்ன விலை. பொதுவாக ஐந்து பேர் உள்ள குடும்பத்திற்கு அரைக்கிலோவிற்கு மேல் அயலுக்குள் வாங்க மாட்டார்கள். அவள் நிற்காமல் சறுக்கென்று வளவை நோக்கித் திரும்பினாள். கூறிய விலையில் தனக்கு உடன்பாடில்லையென்பதை வாய் திறவாமலே காட்டும் நடைமுறை அது.

“சரி சரி பத்தைக் குறைச்சுக் கொள்ளுங்க – சட்டியைக் கொண்டு வாங்க”.. .. .. என்றான் வியாபாரி. அவளுக்குத் தெரியும் அவன் இறங்கி வருவான் என்று. சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி கண்டபின் உள்ளே போய் கறிச்சட்டியோடு வந்தாள். அப்போதும் ஆர்வத்தை முகத்தில் காட்டவில்லை.

“சின்னனாப் பாத்துப் போடு. என்ன ஊசி அந்தப் பக்கம் நிக்குது. ” தங்கம் நிறுப்பதை கவனிக்கிற மாதிரி தராசு ஊசியைப் பார்த்துக் கொண்டே நின்றாள் அவள். அவன் இரண்டு கணவாய் கூட அள்ளிப் போட்டு வியாபாரத்தை முடித்தான். காசு கையில் கிடைத்தபின் உண்டான துணிவில் சைக்கிளை உருட்டி நகர்ந்து கொண்டே சொன்னான்.

“என்ன செய்யிறது பொங்கல் நேரமாப் போச்சு. உங்கட காட்டில மழை. ”

வெய்யில் ஏறுவதற்கிடையில் மிச்சத்தையும் காசாக்கும் பரபரப்பில் உழக்கினான் வியாபாரி. “கணவாய் முட்டைக்கணவாய்” சத்தம், சந்தி திரும்பியும் கேட்டது.

முட்டைக்கணவாய்.. .. .. .. .. செல்வத்திற்கு கணவாய் என்றால் உசிர். கனடாவுக்குப் போனதன்பின் கண்ணைப் படைத்தும் அவன் முட்டைக் கணவாயைக் கண்டதில்லை. திருகோணமலைக்கடலில் மட்டுந்தான் பிடிபடும் என்று சொல்வார்கள். மட்டக்களப்பிலும் கொழும்பிலும் வேலை செய்யும் போது ஒரு நாளாவது உண்டதில்லையாதலால் அது உண்மையாக இருக்கும் என்றே நினைத்தான்.

அம்மா முழுமுழுக் கணவாயாகப் போட்டு உள்ளி சீரகம் மிளகு சேர்த்து ஒரு வெள்ளைக்கறி காய்ச்சுவாள், அடுப்பில் கொதிக்கிற போதே வளவெல்லாம் மணக்கும். கறியை கொஞ்சம் ஆறவிட்டு அகப்பையால் ஒரு துளாவுத் துளாவிவிட்டு அள்ளி சோற்றில் விட்டால் ஒவ்வொரு கணவாயும் பெருவிரல் நீளத்தில் உரித்த பனங்கிழங்கு மாதிரி இருக்கும். உள்ளே முட்டையிருந்தால் இறுக்கமாயும் இல்லாவிட்டால் சாக்குப் போல நசிவாயும் இருக்கும்.

ராணியை விட அவனுக்குத்தான் கணவாய் கூட அள்ளிப் போடுவாள் அம்மா.

அவனும் தங்கச்சி ராணியும் எதிரெதிரே சப்பாணி கொட்டியிருந்து சாப்பிடுவார்கள். ஐஞ்சு விரல்களிலும் மோதிரம் போட்ட மாதிரி கொழுவிக் கொள்வான் செல்வம். ஒரு கவளத்துக்கு சின்னவிரல் போதிரத்தைக் கடித்துக் கொள்வான். அடுத்ததுக்கு சுட்டுவிரல் மோதிரம். பிறகு நடுவிரல். இப்படியே ஒவ்வொரு மோதிரமாய் வழுக்கிக் கொண்டு வாய்க்குள் இறங்கும். மிச்சம் பிடித்து வைத்ததை இரவில் புட்டுக்கென மையோடு சேர்த்துக் குழம்பு வைப்பாள் அம்மா. புட்டை சூட்டோடு முழுக் கையாலும் குழைத்து உண்ணும் போது இனி ஏன் என்று கேட்கும். அவனுக்கு சாப்பாடு நினைவு வந்தால் அதன் கூடவே அம்மாவும் வருவாள். சும்மாவா சொன்னார்கள் – தாயோடு அறுசுவை போகும் என்று.

ஏன் சின்னம்மாவென்றாற் போல என்னவாம் ? தலை வேறாக்கி மையெல்லாம் நாலைந்து தரம் கழுவித் துப்புரவாக்கிப் போட்டு பொரிச்சுத் தருவா பார்க்க வேனும். கணவாயை எண்ணைத் தாச்சியில் பொரிக்கும் போது கிட்ட வராதே வெடிக்கும் என்று சத்தம் போடுவாள்.

தெருவில் கண்ட கணவாய், அவனை எங்கேயோ இழுத்துக் கொண்டு போயிற்று. இப்போது அவன் கவனம் நெரிசலாய்த் தெரிந்த தெருவிற்கு மாறியது. மழைக்கு முன்னால் வானத்தில் கருக்கூட்டுவது போல, தெருவில் பொங்கலுக்குரிய களை கட்டிக் கொண்டிருந்தது. சைக்கிளும் ஆட்டோவும் தாறுமாறாக ஓடித் திரிந்தன. முந்தியென்றால் இத்தனைக்கும் அங்கொன்று இங்கொன்றாக சீனவெடி கேட்கும். இப்போது கேட்காது. கேட்டால் எலியை மணந்த பூனை மாதிரி மச்சான் வந்திருவான் மாமியார் வீட்டிற்குக் கொண்டு போக.

வீட்டு வாசலடியில் வந்து நின்றான் செல்வம். பெருந்தெருப்பக்கமிருந்து சைக்கிளில் வந்த ஆளைக் கண்டதும் ஆச்சரியத்திலும் ஆறுதலிலும் தன்னை மறந்து நிற்கச் சொல்லி கை காட்டினான்.

அது குணாளனின் அண்ணன் விசுவநாதன்! அவனும் டக்கென்று நிற்பாட்டினான். இறங்கி சைக்கிளை உருட்டிக் கொண்டு கிட்ட வந்தான். விசுவநாதனின் கையைப் பிடித்து தன் அக்கறையை வெளிப்படுத்தினான் செல்வம். வாயோரத்தில் பிளாஸ்றர் போட்டிருந்தான் விசுவநாதன்.

“தம்பி நேற்றும் வீட்டுக்கு வந்தனான். அம்மா அழுது கொண்டேயிருந்தா. எப்ப விட்டவங்கள் ? ”

“ராத்திரி”

“வாங்க தம்பி ஒரு கோப்பி குடிச்சிற்றுப் போகலாம் ”

வேண்டாம் என்று சொல்ல நினைத்தவன் ஒன்றும் சொல்லாமல் சைக்கிளை வாசலில் நிறுத்திப் பூட்டி விட்டு பின்னால் போனான். விறாந்தைக் கதிரையை இழுத்துப் போட்டு இருங்க தம்பி என்று சொல்லிவிட்டு சின்னம்மாவிடம் போனான் செல்வம். சின்னம்மா கையைத் துடைத்துக் கொண்டு நடந்தோடி வந்தாள்.

“கடவுள் காத்தது. என்ன தம்பி வாயில பிளாஸ்றர் ? ”

அவன் பதில் சொல்லவில்லை. அடிக்காமல் விடுவார்களா என்பது போல முகம் மட்டும் காட்டிச் சிரித்தான்.

“வேற காயம் கீயம் பட்டிருக்கா தம்பி ? ”

“எல்லாம் உள்காயம். ”

அடிவாங்கியதில் பயம் தெளிந்து விட்டதோ தெரியவில்லை, மிகச் சாதாரணமாகவே சொன்னான். தன் பதில்களை ஒரு வரியில் மட்டுமே சொன்னான். சின்னம்மா கோப்பி போட உள்ளே போனாள். அண்ணனுக்கு கிணற்றடி பக்கில் தண்ணீர் நிறைத்துக் கொண்டிருந்த செவ்வந்தி, சத்தம் கேட்டு குசினிக் கதவோரம் வந்து நின்று விறாந்தையைப் பார்த்தாள். அங்கிருந்து பார்க்க ஆளைச் சரியாகத் தெரியவில்லை. ரவுண்டப் அன்றைக்கு அரைகுறையாகக் கண்டது. நேரில் பார்த்தால்த்தான் ஆளை விளங்கும். அவள் அதிலேயே மறைந்து கொண்டு நின்றாள்.

“என்னத்துக்காம் பிடிச்சவங்கள் ? ”

“நினைச்சாப் பிடிப்பார்கள்”

“புறக்டரா வந்து எடுத்து விட்டது ? ”

“அதெல்லாம் அந்தக் காலம். ”

“அப்ப”

விசுவநாதன் வலதுபக்க இடுப்பைப் பிடித்துக் கொண்டு அம்மா என்றான்.

“என்ன தம்பி ? ”

“விலாவில பத்துக் கட்டப் போகிறன்”

இப்போது என்ன ஆறுதல் சொன்னாலும் அது அவனுடைய நோவை ஆற்றாது என்பதால் செல்வம் சும்மா பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சற்றுக் கழித்துக் கேட்டான்.

“அக்சுவலி வட் கப்பின்ட் ? ”

‘உண்மையில் என்ன நடந்தது ‘ என்ற இந்தக் கேள்வியை மட்டும் அவன் ஆங்கிலத்தில் கேட்டான். முகத்திற்கு நேரே சில கேள்விகளை தமிழில் கேட்பது கஷ்டமாக இருக்கும், கனதியாகவும் தெரியும். அதை ஆங்கிலத்தில் கேட்பது வசதியாருக்கும். பெரிய உபகாரம், நன்றி என்று சொல்வதை விட தாங்ஸ் என்று கூச்சமில்லாமல் இலேசாகச் சொல்லி விடலாம் என்கிற மாதிரித்தான்.

“புலிகளுக்காக காசு சேர்த்தேன் என்று அவர்களுக்குச் சந்தேகம்”

உண்மையிலேயே புலிகளுக்காக காசு சேர்த்தனீர்களா என்று கேட்க வாய் வந்து விட்டது. கேட்பது முறையில்லை. கேட்டிருந்தால் என்ன நினைத்திருப்பான்!

“ஈச்சிலம்பற்றையில் ஒரு குடும்பத்தை ஆமி சுட்டு மூன்று பச்சைக் குழந்தைகள் ஒரு இரவிலேயே அநாதையாப் போச்சு. அந்;தக் குழந்தைகளுக்கு காசு சேர்க்க ஒப்பிசில் லிஸ்ற் போட்டோம். நாலு பேர் வந்து போகிற இடம். ஆரோ குத்தி விட்டார்கள் ”

“அப்ப எப்படி விட்டவங்கள் ? ”

“தப்பினது அருந்தப்பு. ஒப்பீஸ் ஆக்கள் கூட்டமா வந்ததால விருப்பமில்லாவிட்டாலும் சதிரப் பிணையில விட்டிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமையில் கையெழுத்துப் போட வேனும்.”

சின்னம்மா கோப்பி கொண்டு வந்து வாஞ்சையோடு கொடுத்தாள். விசுவநாதன் ஒரு பக்க வாயால் கஷ்டப்பட்டு ஒவ்வொரு முடராய் குடித்தான். குடித்து முடிக்கும் வரை டாபோயிலிருந்த பேப்பரில் சும்மா படம் பார்த்தான் செல்வம்.

“அப்ப நான் வரட்டா, அம்மாட்டைச் சொல்லுங்க”

விசுவநாதன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழும்பினான். சத்தம் கேட்டு ஓடி வந்தாள் சின்னம்மா.

“தம்பீ”

“என்னம்மா ? ”

“குணாளனைப் பற்றி எதன்டாலும் அறிஞ்சனீங்களா” .. என்று கேட்டாள். அந்தக் கேள்விக்குள் ஜெயத்தைப் பற்றியும் அடக்கம்.

இல்லையம்மா..பாப்பம், நான் வாறன் என்று சிரத்தையில்லாமல் பதில் வந்தது. அவன் இருந்த நிலையில் இதைக் கேட்டிருக்க வேண்டாமோ என்று செல்வத்திற்குத் தோன்றியது. பாவம் சின்னம்மா, பெற்ற வயிறு, கேட்டுவிட்டாள்.

“தாங்ஸ் தம்பி”

“நான் வாறன் ”

வாசல் வரை வந்து வழியனுப்பினான் செல்வம். அவன் நன்றி சொன்னது கூப்பிட்டவுடன் வந்து கோப்பி குடித்ததற்காக மட்டும் அல்ல. அடி உரத்தில் வீட்டை விட்டுப் போன தம்பியைப் பற்றி பொலிசிடம் சொல்லாமல் விட்டதற்கு. சொல்லியிருந்தால் முதலில் குணாளன், பிறகு ஜெயம், ஜெயத்தைத் தொட்டு அப்பா, நான், எங்க குடும்பம் எல்லாத்துக்கும் புலி முத்திரை குத்தியிருப்பார்கள். அடித்த சீல் அடித்ததுதான். அழிக்க ஏலாத சீல்.

விசுவநாதன் சைக்கிளை உருட்டிக் கொண்டு ஏறும் போது செல்வத்தைப் பார்த்தும் பாராததுமாய், அவனுக்குக் கேட்டும் கேளாததுமாய் தனக்குள் கதைப்பவனைப் போன்று அரைகுறையாகச் சொன்னான்.

“இவர்களுக்கு அவர்கள்தான் சரி”

“எவர்கள்தான் சரி ? ”.. .. .. .. பத்துக் கட்டப் போகிறவனை இன்னும் மினக்கெடுத்திக் கேட்கிறது சரியில்லை. மீண்டும் தாங்ஸ் சொல்லி அவனுக்கு கை காட்டி அனுப்பிவிட்டு சந்தியில் போய் மறையுமட்டும் பார்த்துக் கொண்டு நின்றான் செல்வம்.

வாசலுக்கு வந்த சின்னம்மா கேட்டாள்.

“இன்னம் தலைமயிர் வெட்டப் போகேல்லையா தம்பி”

“சலூன்ல ஆக்களாக் கிடந்தது. இப்ப லீவாயிருக்கும்.. இந்தா போறன். ”

“வெய்யில் ஏற முதல் வெட்டாற்று வந்து முழுகு”

அவன் நடந்தான். விசுவநாதனை பிடித்த நாளிலிருந்தே செல்வத்தின் நிம்மதி பறந்து போய்விட்டது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற ஒரு பயம் பிடித்திருந்தது. அப்படியொன்றும் நடக்காது என இடையிடையே ஆறுதல் பட்டுக்கொண்டாலும் மனஆழத்திலிருந்து பயம் அகலவில்லை.

அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியில் மடியிலேயே கை வைத்திருப்பார்கள். தம்பி என்ன பண்ணுகிறான், எங்கே படிக்கிறான் என்று கேட்டு குடைந்து கொண்டே போய் போன விசயத்தை மணந்திருப்பார்கள். அதற்குப் பிறகு!

விசுவநாதனைக் கண்ட பின்னர் அவனுக்கு நெஞ்சில் தண்ணீர் வந்தது.

karulsubramaniam@yahoo.com

Series Navigation