விடியும்! நாவல் – (8)

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


(8)

செல்வம் குழம்பிப் போனான்.

அவசரத்துக்கு இப்படித்தான் சுருக்கமாக பக்ஸ் அடிப்பாள் சின்னம்மா. அவள் சிக்கனமானவள். அப்படியிருந்திராவிட்டால் அவனால் இந்த அளவிற்கு குடும்பத்தை கொண்டிழுத்திருக்க முடியாது. எப்போது பக்ஸ் கிடைத்தாலும் முழுவிபரம் கேட்க டெலிபோன் எடுப்பான் செல்வம்.

‘அத்திவாரத்துக்கு நாள் எடுத்தாச்சு. உவர்மலை சிவசேகரந்தான் மேசன். சீமெந்தும் மண்ணும் இறக்கியாச்சு. நாளைக்கு வேலை தொடங்கிறம். ‘

டெலிபோன் செலவைக் குறைப்பதற்காக குறித்து வைத்துக் கொண்டு பேசுவது போல் சுருக்கமாக கடகடவெனப் பேசுவாள் சின்னம்மா. அறிய வேண்டுமென அவன் வரிசைப் படுத்தி வைக்கிற எந்த முக்கிய தகவலும் விட்டுப் போகாது.

தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்த விசயம் சொன்னாள் ஒருமுறை.

‘மாப்பிள்ளை நல்ல லெட்சணம்;. ஆறாயிரம் சம்பளம். தாய் தகப்பன் நல்ல மாதிரி. பொம்பிளைச் சகோதரம் கட்டாற்றுது. வீடும் ரொக்கம் மூன்டும் கேட்கினம். ராணிக்கும் விருப்பம். அப்பாவும் ஓம் என்டுட்டார். முடிச்சிருவமா தம்பீ ‘

சுருக்கெழுத்தில் சொன்னாலும் விசயம் அனைத்தும் அதில் அடக்கம். குறுக்குக் கேள்விக்கு இடமிராது. மறுப்புச் சொல்ல காரணம் தோன்றாது. சின்னம்மா மட்டும் உத்தியோகத்திலிருந்தால் ஐம்பது நூறு பேரை வைத்து அலுங்காமல் குலுங்காமல் வேலை வாங்கக் கூடிய பெண். எதைச் செய்தாலும் கட் அன்ட் றைற். செலவில் கட்டுமட்டு. முடிவை மட்டும் அப்பாவிடமும் அவனிடமும் கேட்பாள். சின்னம்மா சொல்லி அவன் ஒருபோதும் தட்டியது கிடையாது.

குழப்பம் தரக்கூடிய செய்தியானால் சின்னம்மா பக்ஸ் டெலிபோன் மூலமாக அறிவித்ததில்லை. தூரத்தில் இருக்கும் ஒருவனுக்கு அது தருகின்ற உடனடிப் பாதிப்பை உணர்கிற சக்தி அவளிடம் இருந்ததாகவே அவன் நம்பினான். ஆனால் இப்போது வந்த பக்ஸ்!!

நெஞ்சு இடிக்க டெலிபோன் எடுத்தான். பக்கத்திலேயே காத்திருந்திருந்தவள் போல் உடனே சின்னம்மாவே எடுத்தாள்.

‘தம்பி, நான் என்ன செய்வன். நாலு நாளா ஜெயத்தைக் காணேல்லை. ஆவணியில சோதனை முடிஞ்சதிலிருந்து நேரஞ் சென்டுதான் வாறவன். நீ பேசுவாய் என்டு சொல்லேல்லை. கூடப் படிக்கிற குணாளனிட்டை நேத்துக் கேட்டனான். அழுது குளறி கேட்டாப் பிறகுதான் சொன்னான் ‘ .. .. .. தொண்டை அடைத்துக் கொண்டது. தொடர்ந்து பேச முடியாத திணறல். மூக்குச் சீறுவதும் பின்புலத்தில் கேட்டது.

‘என்ன சின்னம்மா அழாமச் சொல்லுங்க ? ‘

‘ஜெயம் புலிக்குப் போயிற்றானாம் தம்பி ‘ .. .. .. ரகசியம் சொல்வது போல் மெதுவாய் சொன்னாள்.

‘கேட்டதிலிருந்து அப்பா நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு குந்தியிருக்கிறார். வெளிய தெரிஞ்சா வந்து கூண்டோட கொண்டு போயிருவாங்கள். என்ன செய்யிறதென்டே விளங்கேல்லை. நாலு நாளா அடுப்பு பத்த வைக்கேல்லை. நீ உடன வா தம்பி. என்ர பிள்ளையைத் தேடிப் பிடிச்சுத் தா தம்பி ‘

சொல்லி முடிக்கும் முன்னரே உடைந்து போனாள் சின்னம்மா. செல்வம் உறைந்து போனான். எவ்வளவு தைரியமான மனுசி. அப்பா வேலையிலிருந்து இளைப்பாறி அதோடு ஒத்தபடிக்கு வருத்தமாகி சாய்மனக் கதிரையோடு சங்கமமான பின்னர் குடும்பத்தை தோளில் தூக்கி முண்டு கொடுத்து நிறுத்தியவள்.

‘நல்லா விசாரிச்சுப் பாத்தீங்களா ? ‘

‘குணாளன் ஏந்தம்பி பொய் சொல்லப் போறான். ஒன்டாப் படிச்சு ஒன்டாத் திரியிற பொடியன். அவனுக்கும் இங்க வரப் பயம். வழியிலதான் கண்டு கேட்டனான். ‘

‘அயலுக்குள்ள தெரியுமா ? ‘

‘தெரியும். என்ன ஏது என்டு ஆரும் விசாரிக்கேல்லை. விசயம் தெரிஞ்சதென்டு காட்டினால் அதுகளுக்கும் தொந்தரவு தானே. எந்த நேரம் ஆமி வந்து இறங்குமென்டு பயக்கெடுதியாக் கிடக்கு தம்பி. ‘

‘சரி சரி அழாதீங்க. ஆரிட்டையும் கதைக்காதீங்க. நான் பிறகு எடுக்கிறன். இப்ப அப்பாக்கு எப்படியிருக்கு ? ‘

‘இந்தா பக்கத்திலதான் இருக்கிறார். ‘

‘குடுங்க ஒருக்கா ‘

‘தம்பி செல்வம் ‘.. .. .. .. .. என்று சொன்ன போதே அழுகை வெடித்துச் சிதறியது. இருந்தும் இல்லையாகிவிட்ட பிள்ளையை நினைத்து உருகினார் அப்பா.

‘நெஞ்சிடியாக் கிடக்கப்பு. இங்க உள்ள நிலைமையை யோசிச்சுத்தான் இவனை அங்க எடு அங்க எடு என்டு தலையால அடிச்சனான். இப்ப பாத்தியா செய்த வேலையை. என்ன குறை வைச்சனாங்கள். அம்மாமுண்டி மாதிரி இருந்திட்டு இப்பிடிச் செய்து போட்டானேயப்பு நான் என்ன செய்ய ‘

‘சரி சரி, அழாதீங்கப்பா, அம்மாட்டைக் குடுங்க ‘

டெலிபோன் கை மாற சின்னம்மா தம்பீ என்றாள்.

‘அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்க. ஒன்டுக்கும் யோசிக்காதீங்க. எப்படியும் ரெண்டு நாளில வந்திருவன். வாற விசயம் ஆருக்கும் தெரிய வேண்டாம். ‘

‘தம்பி என்ர பிள்ளையைக் கண்டு பிடிச்சிருவியா ? மூக்கைப் பிடிச்சா வாய் திறக்கத் தெரியாத பிள்ளை. சீனவெடி வெடிச்சா ஓடி வந்து மடிக்குள்ள பூருவான். ஒருநேரம் பட்டினி கிடக்க மாட்டான். அம்மா அம்மா என்டு சீலைத் தலைப்பில திரியிற பிள்ளை. ஆர்ரையோ கதையில எடுபட்டுப் போயிற்றான். ‘

அப்பா இடையில் ஏதோ சொல்ல சிறிது நிறுத்தி விட்டுத் தொடர்ந்தாள்.

‘தம்பி அப்பா சொல்றார் கொழும்பில இருந்து ரெயினில வரட்டாம். செக்கிங் குறைவாம். ‘

சின்னம்மா இன்னும் நெஞ்சில் நின்று புலம்பினாள். நிர்மலமாய் இருந்த நீலவானத்தை நாலு நாட்களுக்கு முன் சூழ்ந்து கொண்டது ஒரு கருமேகம். இப்போது திடாரென இடி இடித்து மின்னல் கிழித்து முட்டைக் கோது பிளந்த மாதிரி கோர மழை கொட்டுகிறது.

‘ஜெயச்சந்திரன் புலிக்குப் போயிற்றான்.. .. .. .. புலிக்குப் போயிற்றான். ‘

கடைக்குட்டி என கவனம் கூட்டி வளர்த்துவிட்ட பிள்ளை. கீழே இறங்க விடாமல் தோளில் தூக்கி சீராட்டி வளர்த்த பிள்ளை. வசதி குறைந்திருந்த அந்தக் காலத்திலேயே குறைவற்ற அரவணைப்பு. தீபாவளிக்கு ஆருக்கு உடுப்பு எடுக்க வசதியில்லா விட்டாலும் தம்பிக்கு மட்டும் புதுச்சட்டை புதுக்கலிசான் எடுத்து விட்டால் எல்லாரும் அணிந்த திருப்தி.

அப்பா மாறி அம்மா மாறி அண்ணன் மாறி அக்கா மாறி அவனை தோளிலும் இடுப்பிலும் தாங்கியபடியே இருப்பார்கள். முற்றத்து வெளிச்சத்தில் இடுப்பிலிருத்தி சோறு}ட்டுவாள் சின்னம்மா. அக்காமார் அண்ணன் அப்பா அத்தனை பேரின் மொத்தச் செல்லத்தில் அருக்காணி காட்டுவான் பிள்ளை.

‘ஆ அந்தா காகம்..காகம் இங்க வா, வந்து என்னன்டு கேள். தம்பி சாப்பிடுதில்லை. ‘

காகம் அவளை நம்பாது. தம் பிள்ளைகளுக்குச் சோறூட்ட தன்னை ஒரு கருவியாகப் பாவித்த எத்தனை தாய்மார்களை அந்த காகம் தன் வாழ்நாளில் கண்டிருக்கும்! அவளுக்கு எட்டாத தூரத்தில் தத்தித் தத்தி வந்து நின்று சமுசயத்தோடு பார்க்கும்.

‘சூ.. .. .. கள்ளக்காகம், என்ர பிள்ளைர கவளத்தைப் பறிக்க வந்திற்றார். ஆளைப் பாக்கேல்லை. ‘ .. .. .. காகத்தைக் கையால் விசுக்குவாள். நடித்துக் காட்டி கவளத்தை திணிக்கப் பார்ப்பாள். காகத்தை விடவும் பிள்ளைக்கு மூளை கூட – மசியாது.

‘என்ன சின்னம்மா ? ‘.. .. .. செல்வம் கேட்பான்.

‘வாயிலையென்டு ஒருபிடி சோறு வைக்கிறானில்லை ‘ .. .. .. காலையிலும் சரியாகச் சாப்பிடாத கவலை பேச்சில் தெரியும். தம்பியை தன் இடுப்பிற்கு மாற்றிக் கொள்வான் செல்வம்.

‘அங்க பார் அந்தா வானத்தில, இருட்டினாப் பிறகு வட்ட வட்டமா நிலா வருமாம். ‘ .. .. .. பிள்ளை கதை கேட்க கவனம் கூட்டி அண்ணன் காட்டிய இடம் நோக்கி அண்ணாந்து பார்க்கும்.

‘அங்க ஒரேயொரு கிழவியாம். தம்பிக்கு தோசை சுட்டுக் கொண்டிருப்பாவாம். சுட்டுச் சுட்டு தட்டில அடுக்குவாவாம். கள்ளக்காகம் ஒன்டு தெத்தித் தெத்தி வருமாம். தம்பீர தோசையைக் கவ்விக் கொண்டு போக கிட்டக் கிட்ட வருமாம். ‘

அண்ணன் தத்ரூபமாக நடித்துக் காட்ட தம்பி கவனம் பிசகாமல் பார்த்துக் கொண்டிருப்பான்.

‘கிழவி பிரம்பை எடுத்து மண்டையில படாரென்டு போடுமாம். கள்ளக் காகம் அடி வாங்கிக் கொண்டு பறந்து போகுமாம். ‘

காகக் கதையின் சுவாரஷ;யத்தி;ல் அவன் ஏமாந்த வேளை பார்த்து ஒரு வாய் உள்ளே இறக்கப்படும். கோப்பை காலியாகும் வரை, காகத்தில் தொடங்கிய கதை நாய் ப+னை என்று மாறிக் கொண்டேயிருக்கும். சின்னம்மா திருப்தியாய் குசினிக்குள் போவாள்.

அப்படிப் பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளை.

எழுத்துக் கூட்டி பாடம் சொல்லிக் கொடுப்பாள் மூத்த தங்கச்சி ராணி.

‘நட்சத்திரம்.. .. ..நட்சத்திரம், எங்க சொல்லு பாப்பம் ‘

‘நசத்திரம் ‘

‘நசத்திரமில்லை, நட்சத்திரம். நானா ட்டன்னா சானா த்தன்னா.. .. .. நட்சத்திரம் ‘

‘நசத்தம் ‘

முதலில் சொன்னதே பரவாயில்லை. அவளுக்கு கோபம் மூக்கு நுனியில் வந்து துடிக்கும்.

‘டேய், எந்த நேரம் பார் மண் விளையாட்டுத்தான். இனி மண் அளைஞ்சியோ நுள்ளுத்தான் தருவன். சொல்றா. சொல்லாட்டி இன்டைக்கு சாப்பாடில்லை. சின்னம்மா, இன்டைக்கு தம்பிக்கு சாப்பாடு குடுக்க வேணாம். என்ன ? ‘

‘ஓம் ஓம், படிச்சாத்தான் சாப்பாடு. ‘ .. .. .. .. குசினியிலிருந்து ஆமோதிப்பு வரும்.

‘எங்கையடா பிராக்குப் பார்க்கிறாய். உனக்கு வர வர செல்லம் மெத்திப் போச்சு. சொல்றா நானா ட்டன்னா ‘

ஒவ்வொன்றாய் எழுத்துக் கூட்டும் போதே கண் முட்டி சத்தம் வராமல் அழுவான் ஜெயம். உதவி எதிர்பார்த்து அக்கம்பக்கம் பார்ப்பான்.

‘என்னடா முட்டைக் கண்ணீர் வடிக்கிறாய். இன்டைக்கு சொல்லாட்டி விடமாட்டன் உன்னை ‘

சிலேட்டை இடது கையில் இறுக்கி இடுப்போடு சேர்த்துப் பிடித்தபடி பயந்து நடுங்கி ஒவ்வொன்றாய் எழுத்துக் கூட்டி எழுதுவான். தமிழ்ப் பாடம் பரவாயில்லை. கணித வாய்பாடு கேட்டால் சரியாக மாட்டிக் கொள்ளுவான்.

‘மூவேழு ? ‘

‘இருபத்தொன்டு ‘

‘நாவேழு ? ‘

‘இருபத்தேழு ‘

‘நாவேழு ? ‘.. .. .. .. நாலுவீடு கேட்குமளவிற்கு கேள்வி இரண்டாவது முறை அழுத்தத்தோடு வரும்.

மூவேழு நாவேழுவில் வரும் ‘ழு ‘ ஓசைநயம் அக்காவின் கேள்வியில் வெகு அழுத்தமாக விழுவதால் பிள்ளை திரும்பத் திரும்ப அதே ஓசை நயத்தில் பதிலை பிழையாகச் சொல்வான். ராணி குற்றப்பத்திரிகை வாசிப்பாள்.

‘நாவேழு இருபத்தேழாம். நல்லாக் கொழுப்புக் கூடிப் போச்சு. இனி தோசை அப்பம் என்டு கேக்கிறதெல்லாம் சுட்டுக் குடுங்க செய்யிறன் வேலை. ‘

சின்னம்மாவிற்கு அடுப்பில் நெருப்புத் தின்னும் வேலை, செல்வத்திற்குத் தாங்காது.

‘இஞ்ச கொண்டா நான் சொல்லிக் குடுக்கிறன். பிள்ளைகளுக்கு விளையாட்டுச் சாமான் காட்டி படிப்புச் சொல்லிக் குடுக்கிற காலம் இது. அடிச்சுப் படிப்பிக்கக் கூடாது. ‘

அவள் புறுபுறுத்து விலகுவாள். படிப்பு முடிவதற்குள் பிள்ளை தூங்கித் தூங்கி விழும். ராணி புட்டும் கிழங்கு வெள்ளைக்கறியும் பிசைந்து தம்பியை மடியிலிருத்தி ஊட்டுவாள். உருளைக் கிழங்கென்றால் அவனுக்கு உயிர்.

‘என்ர குஞ்சல்லோ ராப்பட்டினி இருக்கக் கூடாதனை. ஒரு வாய் ஒரு வாய் சாப்பிட்டுப் படு.. சின்னம்மா இங்க பாருங்க சாப்பிடுறானில்லை. ‘

எவ்வளவு நுள்ளுகள் வாங்கினாலும் அவளோடுதான் ஒட்டுவான் தம்பி. மூத்தக்காவோடு ஒரே பாயில்தான் படுப்பான். கிழமைக்கு ஒருக்காவென்றாலும் நித்திரைப்பாயில் வடித்து விடும் வழக்கம் அவனுக்கு. அவளும் கண்டிருக்கமாட்டாள். அடுத்தநாள் பள்ளிக்கூட நாளாகவுமிருக்கும். காலைத் திருப்பள்ளியெழுச்சியில் தோத்திரமாலை சாத்து நடக்கும். கிணற்றடியில் பாயை ஊறப்போட்டு கழுவிக் காயப் போட வேண்டிய அரிகண்டத்தால் ஆத்திரம் கொடி கட்டிப் பறக்கும். சத்தம் வேலி கடந்து போகும்.

‘இஞ்சால வாடா எத்தனை தரம் சொன்னனான் ஒன்டுக்கு இருந்திற்றுப் படு என்டு. எனக்கு இதே வேலையாப் போச்சு. இனி இருந்து பார் என்ன செய்யிறன் என்டு. திரும்படா அங்கால ‘

இரவில் அவர்களைப் பார்த்தால் செல்வத்திற்கு சிரிப்பாயிருக்கும். தம்பியைக் கட்டிப் பிடித்து செல்லம் பொழிந்து கொண்டு படுத்திருப்பாள்.

அப்படி பூட்டிப் பூட்டி வளர்த்த பிள்ளை புலிக்குப் போயிற்றான்! இந்த சொந்தங்களையெல்லாம் உதறி எறிந்துவிட்டு அவனால் எப்படிப் போக முடிந்தது ?

பூனைத் தூக்கம் போடுவதும் திடாரென வீட்டு ஞாபகம் வந்து முழிப்பதுமாய் இருக்கைக்குள் நேரம் போனதே தெரியாமல் அடைந்து கிடைந்தான் செல்வம்.

‘வீ ஆர் அப்றோச்சிங் கொழும்பு. பிளீஸ் பாஸ்றன் யுவர் சீற் பெல்ட்ஸ் ‘

விமான கப்டனின் அறிவித்தல் வந்ததும் பூனைத் தூக்கம் கலைந்து அவன் நிமிர்ந்தான். கிட்டத்தட்ட ஒரு முழுநாள் பிரயாணம். ஜன்னலால் எட்டிப் பார்த்தான். விமான இறக்கை மறைக்காத வான்வெளி. முற்றிக் கனிந்த தக்காளிப் பழங்களை நீளத்திற்குச் சிதறி இறைத்த மாதிரி சிவந்த வானம். கூட்டங்கூட்டமாய் அடர்த்தி மேகங்கள்.

மேகங்கள் குளிர்ந்து மழையாகப் பொழிகின்றது. சின்ன வயதில் பள்ளியில் படித்த பாடம் ஞாபகத்தில் வந்தது. இந்த விண்வெளியும் மேகங்களும் சூரியன் சந்திரன் நடசத்திரங்களும் எவ்வளவு பெரியவை! பிரபஞ்சத்தை யாரால் அளவிட முடியும் ? இந்தப் பிரம்மாண்டத்தில் நான், என் குடும்பம் – தூசிலும் தூசு. வெள்ளை வெளீரென்ற மேகக் கூட்டங்களை பார்த்துக் கொண்டேயிருக்க மனம் எங்கோ போனது. மேகங்கள் மறைக்காத வானத்திற்கு ஏது வடிவு ? சூரியனின் ஒளிக்கிரணங்கள் மேகங்களைக் கிழித்து ஊடுருவினால்தான் அழகு. உதயத்தின் போதும் சாய்கிற போதும் அவரது அழகுக்கு அணி சேர்ப்பது மேகங்கள். நேரத்திற்கு நேரம் சூரியக் கதிர்களை மறைத்து நின்று வானத்திற்கு விதவிதமான வர்ணங்களைத் தீட்ட இடங்கொடுப்பதும் மேகங்கள்தான்.

பொழுது புலரப் போகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஒரு புது அத்தியாயம். அதற்குக் கட்டியம் கூறுகிற ஆதவன் வரப் போகிறார். அவரது உதயத்தில் மண்ணும் விண்ணும் சீவராசிகளும் புத்துணர்வு பெறப் போகின்றன. சோர்ந்து கிடப்பவரை உலுப்பி எழுப்பப் போகிறார். போனதெல்லாம் போகட்டும் இனி நடப்பதைக் கவனி என்று புத்தூக்கம் தரப் போகிறார். அவருக்குச் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கும் கிழக்கு வானையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வம்.

கீழே கடல் நீலம் கடந்து பச்சைப் பரப்பு எட்டிப் பார்த்தது. வளமான பூமி. விமான நிலையம் கிட்ட நெருங்க நெருங்க நிலத்தின் ஒரே சீரான கரும்பச்சை மறைந்து சிலிர்த்த தென்னஞ்சோலைகளின் குருத்துப் பச்சை கண்ணைக் கவரத் தொடங்கிற்று. விட்டு விட்டு மின்னிய வீட்டு வெளிச்சங்கள். ஓடி ஒழியப் போகிற இருளும் தரிசனம் தரப் போகிற ஒளியும் தம் எல்லைக் கோடுகளில் நின்று கை கொடுத்து பிரியப் போகும் நேரம். ஒரு இனம் புரியாத அதிகாலை அமைதி.

நீர்கொழும்பு கடந்து கட்டுநாயக்கா கண்ணுக்குள் வந்தது. வரக்கூடாதென நினைத்திருந்த பூமி நெருங்கிவிட்டது. இப்போது விமான நிலையத்தின் பெயர் தெரியத் தொடங்கிற்று. கொழும்பு விமான நிலையம் என்று முன்னர் இருந்தது பண்டாரநாயக்கா விமானநிலையமாக மாறியிருந்தது. எத்தனை தரமென்று பெயரை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்!

பணிப்பெண் வாயிலில் ‘ஆயுபோவன் ‘ நன்றி சொல்லி வழியனுப்பினாள். மிஸ்டர் லோசனும் அவனும் பைகளோடு பக்கம் பக்கமாக நடந்தார்கள். வாசலில் விமானப்படை வீரர்கள் விறைப்பாக நின்றார்கள். கைகளிலிருந்த ஆயுதங்களின் மினுக்கம் நாட்டின் சீர் மங்கியிருப்பதைக் காட்டியது.

அவன் இப்போது இலங்கைப் பிரசை அல்ல. பாஸ்போட்டை ஒருதரம் பிரித்துப் பார்த்துவிட்டு இமிகிறேசன் வரிசையில் நின்றான். சோதனை வரிசைகளில் பிரிந்து நிற்க நேர்ந்ததால் மிஸ்டர் லோசன் காணாமல் போயிருந்தார். நெடுநாள் பழகிய நேசமான மனிதரைப் பிரிந்த சோகம். சந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கையில் மீண்டும் ஒரு முறை அவரோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான். கொழும்புக் கோட்டை வரையாவது அவர் கூட வந்தால் நல்லாயிருக்கும்!

சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியே வந்தான். இலங்கைக் காசு மாற்றிக் கொள்ள வேண்டும். உள்ளேயிருந்த பல வங்கிக் கிளைகள் கை காட்டி அழைத்தன. யாரிடம் போவதென்ற ஐயப்பாடு வந்தது. கூப்பிட்ட மாதிரியில் தெருவில் ஐஸ்பழம் விற்பவர்கள் கூறிக்கூறி அழைத்தது போலிருந்தது. அவன் மக்கள் வங்கிக் கிளையில் நின்ற அழகான பெண்ணிடம் 500 டொலர்ஸ் மாற்றிக் கொண்டான்.

ஊருக்குப் போகும் அந்தரம்.

விமானநிலைய டாக்சியில் ஏறி கோட்டை ரயில் நிலைய முன்றலுக்கு வந்த போது வெளியே இறங்க முடியாதபடி அசாதாரண கூட்டம் நெருக்கிற்று. ஏதோ ஒரு மறியல் போராட்டம். கைகளில் மட்டைகளோடு மறியல் செய்யும் கூட்டம். அவர்கள் போட்ட கூச்சல் உயர்மாடிக் கட்டிடங்களில் பட்டுத் தெறித்தது. வெள்ளை உடுப்புகளுக்கு மத்தியில் மஞ்சள் போர்வையணிந்த பல மொட்டைத் துறவிகள் தெரிந்தார்கள்.

அவன் கலவரமானான். அந்த சூழலிலிருந்து உடனே கழன்றால் போதும் போலிருந்தது. கோட்டை ரயில் நிலையத்திற்குள் புக முடியாத படிக்கு சுற்றிலும் பொலிசார். அடிதடி கல்லெறி அபாயம் மணந்தது. சந்தியில் பொலிஸ்காரன் நிற்கிறான் என்று எதிரே வருபவர் சொன்னால் போதும் – நமக்கெதுக்கு வம்பு என்று வழியை மாற்றுகிறவன் அவன். தெருவைக் கடந்து நடைபாதைக்கு வந்தான். பஸ்ஸில் போவதே நல்லது. புறக்கோட்டை பஸ் ஸ்டான்ட் நடைதூரந்தான்.

ஒரு வயதான துறவி முகத்தில் வெய்யில் படாமல் பிடித்துக் கொண்டிருந்த மட்டையின் வாசகங்களை அவன் தனக்குத் தெரிந்த சிங்கள அறிவின் துணையோடு அவசரமாய் வாசித்தான்.

‘சமவாய்ப்புச் சட்டத்தைக் கொண்டு வராதே.

போரை நிறுத்தாதே.

புலிகளைப் பூண்டோடு ஒழி.

கள்ளத் தோணிகளை நாட்டை விட்டு விரட்டு ‘

செல்வத்திற்கு உடனே மிஸ்டர் லோசனின் முகந்தான் மனதில் வந்தது.

அந்தப் புனிதர் இந்தப் பக்கமாக வராததே நல்லது!

***

(தொடரும்)

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்