விடியும்! நாவல் – (10)

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


(10)

பஸ் முகப்பைப் பார்த்தான் செல்வம். நீட்டு பிரேமில் புத்தர் படம் மெக்கா படம் லட்சுமி படம் பிள்ளையார் படம் இயேசு படம் என்று வரிசையாக இருந்தன. புத்தருக்கடியில் ஊதுபத்தி ஏற்றியிருந்தது. எல்லாக் கடவுளர்களுக்கும் அங்கே இடம் இருந்தது. நாலு சாதி மனிதரும் பிரயாணம் செய்கிற பஸ். எம்மதமும் சம்மதமென காட்டிக் கொள்ளும் வர்த்தக தந்திரமானாலும் அவனுக்கு அந்த ஒற்றுமையுணர்வு பிடித்திருந்தது.

டொறொன்ரோவின் மூன்று பகுதியாகப் பிரித்த பெரிய தெருக்களைப் பார்த்த கண்ணுக்கு கண்டி வீதி பாவைப்பிள்ளை மாதிரித்தான். சரியான நெரிசல். பஸ் ஓட ஓட, கண்ணைக் கவ்விக் கொண்டு வந்தது. தலை கவிழ்ந்து பக்கத்துத் தோள்மாட்டில் தூங்கி வழிந்தான். எதிரே வந்த லொறிக்கு வழிவிட்டு வெட்டியதில் சட்டென முழிப்பு வந்தது. பக்கத்துத் தோளை தலையணையாகப் பாவித்ததும் புரிந்தது.

“ஐ ஆம் சாரி”

“பரவாயில்லீங்க”

இனி தூங்கக் கூடாதென நினைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து பக்கத்தில் பேச்சுக் கொடுத்தான்.

“பன்குளத்தில தமிழாக்கள் இப்பவும் இருக்கினமா ? ”

“பொன்னா விளைஞ்ச பூமி. எண்பத்திமூனு கலவரத்தோட நிறையப் பேர் அகதியாப் போயிட்டாங்க. கொஞ்சப்பேர் டவுனுக்கு வந்திட்டாங்க. என் மச்சான் குத்தகைக்கு விவசாயம் பன்றாரு. பயந்தான், என்ன செய்யிறது. உழைப்புக்கு வேற வழி தெரியல்ல.”

“ஏன் மலைநாட்டில தொழில் கிடைக்காதா ? ”

“தொழிலா ? அங்க நாங்க மனுசங்க மாதிரியே இல்லீங்க.”

“பின்ன ? ”

அவன் செல்வத்தை முதன் முதலாக ஆழமாகப் பார்த்து விட்டுச் சொன்னான்.

“உங்க பக்கத்தில போராடுறதுக்கு ஒரு இளைஞர் சமுதாயம் இருக்கு. நம்மளும் மனுசங்கதான்கிற அடையாளத்தைக் காப்பாத்துறதுக்கு ஆணும் பெண்ணும் உயிரைக் குடுக்கிறாங்க. என்னைக்கின்னாலும் நிம்மதி வந்திடுங்குற நம்பிக்கையில எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு மக்களும் சீவிக்கிறாங்க. நம்ப நிலைமை அப்படியில்லீங்க.”

செல்வம் தனக்கு எதுவும் தெரியாதென்பது போல முகத்தை வைத்துக் கொண்டான். அது சரியான காரணமில்லையென்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அப்போதைக்கு எதையும் சொல்ல முனையவில்லை.

“கோழிக்கூடு மாதிரி கூரை ஒழுகிற ஓட்டைக் காம்பறா லயன்ல தான் எங்க வாழ்க்கை. இன்னைக்கு நேத்து இல்லை. பிறந்ததிலிருந்தே அதுதான். பட்டால அடைச்சு வைக்கிற மாடுக மாதிரி. புதுசா கல்யாணம் கட்டிக் குடுத்த தங்கச்சியும் புருசனும் அம்மா அப்பாவோட ஒன்னா படுக்க வேண்டிய சங்கடம். நாள் பூரா உழைச்சாலும் சம்பளம் பத்தலை. குடிக்கிற தண்ணி பிடிக்கிறதுக்குக் கூட நம்ப பொம்பிளைங்க மணிக்கணக்கா காத்துக் கிடக்க வேண்டிக் கிடக்கு. நம்ப பிள்ளைகுட்டிங்களுக்கு இன்னைக்கும் மரங்களுக்கு கீழதான் படிப்பு. மொத்தத்தில அடிமைச் சீவியம். ”

“ஏன் தொண்டமான் மந்திரியாயிருந்த காலத்தில எவ்வளவோ செய்தாரே ? ”

“தொழிற்சங்கம் மூலியமா அரசியல்ல கொஞ்சம் நன்மை வந்தது உண்மைதான். ஆனா அந்த நன்மையெல்லாம் ஏழை எளிய மக்களைப் போய்ச் சேரலை. கங்காணிமாரும் படிச்சுத் தேறிய உத்தியோகக்காரன்களும் அரசியல்வாதிகளும் தங்களுக்குள்ளயே பிரிச்சுக்கிட்டாங்க. நாய்க்கு எலும்புத் துண்டு மாதிரி காட்டிட்டு மிச்சத்தை உறிஞ்சிட்டாங்க. இந்த மண்ணில வியர்வை சிந்தி உழைக்கிற மக்களோட பிள்ளைக எதிர்காலம் என்னன்னு தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கு.”

“பத்துலட்சம் பேருக்கும் இதே கதிதானா ? ”

“பங்களாவில இருக்கிறவங்க தொடர்ந்து சுகப்படுறாங்க. பாட்டாளிங்க நிலைமை அப்படியேயிருக்கு”

“வெளியில பெரிசா ஒன்னும் தெரியல்லையே ? ”

“சார், உங்க பக்கத்தில போராட்டம் சாத்வீகமாத் தொடங்கிச்சு. மாறி மாறி வந்த அரசாங்கங்கள் கண்டுக்கலை. ஆயுதப் போராட்டம் தொடங்கிச்சு. அரசாங்கமும் விட்டுக் குடுக்கலை. இன்னமும் மூர்க்கமா எதிர்த்திச்சு. அதுக்காக ஓய்ஞ்சு போயிராம விடாம போராட்டம் நடந்துகிட்டிருக்கு. தமிழ் மக்களுக்கு பிரச்னையிருக்குன்னும் அதைத் தீர்க்க வேனும்னும் உலக நாடுகள் சொல்லத் தொடங்கியிருக்கு. அதுவே பெரிய விசயம்னு நான் நினைக்கிறேன். ஆனா நம்ப பக்கத்தில அப்படியில்லீங்க. ஒன்னிலையும் உறுதியில்லை. தடபுடலா வேலை நிறுத்தம் தொடங்கும். ஏதோ சில குட்டி சலுகைகளைக் காட்டின உடன திடுதிப்பின்னு நின்னு போயிரும். நமக்கு விடிவே இல்லாமப் போச்சு.

அடிப்படையில நாங்க இந்த நாட்டு மக்களேயில்லைன்னு நினைக்கிறாங்க. காலத்துக்குக் காலம் இடம் மாறுகிற நாடோடிக் கூட்டம்னும் கள்ளத்தோணின்னும் பேசிக்கிறாங்க. தமிழ்நாட்டிலிருந்து வந்த மாதிரியே திரும்பப் போக வேண்டியவங்கன்னு எண்ணுறாங்க. இன்னும் சொல்லப் போனா, எங்க வரலாற்றை இன்னை வரைக்கும் உருப்படியா யாரும் பதிவு செய்யலை. எங்களைப் பத்தி உண்மைகளை உள்ளதை உள்ளபடி யாரும் தெளிவு படுத்தலை. அப்படியே ரெண்டொரு பேர் எழுதினாலும் நம்பளை ஒரு பின்னடைந்த சமூகமா குறிப்பிடுறாங்களே தவிர நாமளும் மதிப்பு மரியாதையோட வாழவேண்டிய சமூகந்தான்னு எழுதிறதில்லை.

நீங்க குத்தமா நினைக்கக் கூடாது. பக்கத்திலயே இருக்கிறீங்க உங்களுக்கே எங்க நிலைமை தெரியலையே. உங்க வடகிழக்கு கல்விமான்கள் அரசியல்வாதிகள் கூட எங்களை முற்றா மறந்து போயிற்றாங்க. அது பத்தாதுன்னு இப்ப எங்க பசங்களை புலின்னு வேற சொல்றாங்க அங்க. கொழும்புக்கு போக முடியலை. உங்க பக்கத்துக்கும் வர முடியலை. இந்தியாவுக்குப் போகலாமுன்னா அங்கயும் வேண்டாத விருந்தாளியாப் பாக்கிறாங்க.”

அவன் முகத்திற்கு நேரே குற்றம் சாட்டியது செல்வத்திடம் ரோசத்தை வரவழைத்தது.

“நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எஸ்ஜேவி செல்வநாயகம் ஐயா உங்களுக்காக வாதாடவில்லையா ? ”

“அவருக்குப் பிறகு யார் அதைச் செஞ்சா ? சோத்துக்கு ஊறுகாய் தொட்டுக்கிற மாதிரி எப்பவாவது தேவைன்னா தொட்டுக்குவாங்க. தொண்டமான் உங்களுக்காக பரிஞ்சு பேசின அளவுக்குக் கூட யாரும் பேசலையே. எல்லாராலும் மறக்கப்பட்ட ஒரு சமூகமாப் போச்சு.”

“நீங்க சொல்றதில உண்மையிருக்கு. ஆனா எங்க பக்கத்தில பிரச்னை அதிகமாயிட்டுது. அதனால உங்க பிரச்னையை இழுத்துப் போட்டுக் கொண்டு போக முடியாம போயிருக்கலாம். அதுக்காக மலையகத் தமிழ் மக்களில எங்க மக்களுக்கு அக்கறை இல்லையென்டு அர்த்தமில்லை. அது மட்டுமில்லை. வெள்ளைக்காரன் உங்களை கொண்டு வந்து முழுக்க முழுக்க சிங்கள மக்கள் செறிந்து வாழுகிற மலையகத்தில குடியேத்திற்றான். என்ன செய்யிறது தேயிலை அங்கதானே வளருது. எங்க மக்களோடு குடியேறக் கிடைச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது. இன்னொன்னு, உரிமை கிடைக்க வேனுமென்டா நாம நாமதான் கஷ்டப்பட வேனும். மற்றவங்களை நம்பிப் புண்ணியமில்லை.”

“அது உண்மைதாங்க. காலங்காலமா அடக்கப்பட்டதனால அடிமைத்தனம் ரத்தத்தில ஊறிப் போயிறிச்சு. மூடநம்பிக்கையும் சாதி சம்பிரதாயங்களும் இவங்களை முன்னேற விடல்ல. இப்போ சரியான முறையில வழிநடத்தி சமூக அந்தஸ்தை உயர்த்திவிட நேர்மையும் தியாக உணர்வும் துணிவும் மிக்க சரியான தலைமை அமையலை. தலைவர்னு வாறவங்கெல்லாம் தேனொழுக பேசுறாங்க. கொஞ்ச நாள்ள கொழும்பு மையல்ல ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லடின்னு மாறிருறாங்க. இதில இன்னொரு சாபக்கேடு என்னன்னா நம்ம ஜனங்க ரொம்ப குடிச்சுப் பழகிட்டாங்க. ஹட்டன்ல தோட்டப் பக்கம் பார் வந்திட்டுது. கள்ளச் சாராயம் கொடி கட்டிப் பறக்குது. பொலிஸ் கண்டுக்கிறதேயில்லை. குடிச்சுக் குடிச்சு இந்த சமூகம் மக்கி மண்ணோடு மண்ணா அழிஞ்சு தேயிலைக்கு எருவாப் போகட்டும்ன்னு நினைக்கிறாங்களோ என்னவோ.”

“இதுக்கெல்லாம் எப்பதான் விடிவு ? ”

அவன் சிறிது யோசித்த மாதிரி தெரிந்தது,

“மக்கள் மத்தியில முதல்ல விழிப்புணர்ச்சி உண்டாகனும். எல்லா அநியாயத்துக்கும் வளைஞ்சு போற அடிமைத்தனம் ஒழிஞ்சி போகனும். நம்பிக்கையான தலைமையைத் தெரிஞ்செடுத்து ஒன்னு சேரனும். படிச்சவங்க ஆதரவா நிக்கனும். அரசியல் சூழ்ச்சிக்காரங்களும் சுயநலத் தொழிற்சங்கவாதிகளும் நமக்கு எதிரா விரிக்கிற வலையில சிக்காம ஒத்துமையா உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடை போடனும். இல்லாட்டிப் போனா நம்மளோட இனம் அழிஞ்சு போயிரும். இப்படியொரு சமூகம் இருந்த அடையாளமே இல்லாமப் போயிடும். ”

அவன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான். தன் ஆதங்கத்தைச் சொன்னானே தவிர இதெல்லாம் எப்படி நடக்கும் என்று அவனுக்குத் தெரியுமா! மலை குடைந்து காடு வெட்டி தேயிலை றப்பர் தோட்டங்களை இந்த நாட்டில் நிறுவிய சமூகம். அதன் விளைச்சலை கொஞ்சமேனும் அனுபவிக்க முடியாமல் ஓரமாக நின்று பெருமூச்சு விடுகிறது. இடர்களை மட்டும் இந்நாட்டுப் பிரசைகளாகப் பங்கிட்டுக் கொள்ளும் இவர்களுக்கு இன்பத்திலும் சுகத்திலும் பங்கில்லை. உழைக்கப் பிறந்தவர்களுக்கு உரிமை பெற உரித்தில்லை.

எத்தனை துயரங்களை மனத்தில் அடைத்து வைத்திருந்திருக்கிறான் இவன். காய்ந்த சருகு நெருப்பு வைத்ததும் பற்றிக் கொள்கிற மாதிரி கேட்டதுதான் தாமதம் நெஞ்சிலிருந்ததைக் கொட்டி விட்டான். இப்படியொரு உருக்குலைந்த சமூகம் அங்கு இருக்கிறதென்று செல்வத்திற்குத் தெரியும். ஆனால் இந்த அளவிற்குத் தெரியாது.

எங்கள் மக்களோடு குடியேறியிருந்தால் இப்படி நடந்திராது என்று ஒரு பேச்சுக்குத்தான் செல்வம் சொன்னான். அது உண்மையில்லை என்று அவனது உள்ளுணர்வுக்குத் தெரியும்.

ஊரில் சக்கிலியவாடி என்று ஒரு ஒதுக்கமான இடம். குச்சு குச்சா ஓலைக் குடிசைகள். அந்த மக்கள் அங்கே எப்போது வந்து சேர்ந்தார்களென்றே அவனுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. மலையகத்திலிருந்து உழைப்புத் தேடி வழி தவறிய ஆடுகளாய் வடகிழக்கிற்கு வந்திருக்கலாம். வந்தவர்கள் என்ன சுகத்தைக் கண்டு விட்டார்கள். நம்மவர்கள் அவர்களுக்கு வழங்கிய தொழில் நகரசபையில மலகூடத் துப்புரவு, தெருநாய் பிடிப்பு.

“அம்மா தண்ணி ஊத்துங்கம்மா”

மாரி மாரியென்று வயசு போன மலகூடத் தொழிலாளி. நாள் தப்பினாலும் நாளிகை தப்பாமல் வாளியோடு வருவான். நீர்அடைப்பு மலகூடங்கள் ஊருக்கு வந்திராத காலமது. கையில் வேலையாக இருந்தாலும் தானே வந்து அள்ளி ஊற்றுவாள் அம்மா. அது அவனில் உள்ள இரக்கத்தினாலல்ல. தண்ணிவாளியை அவன் கையால் தொட்டுவிடக் கூடாதென்ற ஜாக்கிரதையினால். எங்கள் கழிவுகளை துப்புரவாக்குவான். செல்வம் மூக்கைப் பிடித்துக் கொண்டு தூரத்தில் நிற்பான்.

சில வேளைகளில் தன்னால் முடியாத வளவு துப்புரவாக்கும் வேலைகளை அவனைக் கொண்டு செய்விப்பாள். வாசலடியில் குந்தியிருந்து ஒரு வாய் வெற்றிலை போட்டு விட்டு காரியம் பார்ப்பான் மாரி. பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் செல்வம் அவனிடம் பேச்சுக் குடுப்பான்.

“நீங்க படிக்கேல்லையா ? ”

“எங்களுக்கென்ன சாமி படிப்பு. ”

“எத்தனை பிள்ளைகள் ? ”

“ஐஞ்சு”

“எங்க படிக்கிறாங்க ? ”

“ஏதோ படிக்குதுங்க”

பொங்கல் தீபாவளிக்கு முதல் நாள் பின்னேரமே தவறாமல் வந்து நிற்பான் மாரி. அவனில் கள் மணக்கும்.

“பிள்ளைகளுக்கு உடுப்பு எடுத்தியா மாரி ? ”

“இல்லைங்கம்மா”

அம்மா உள்ளே போவாள். அலுமாரித் தட்டுகளில் தேடி அளவில்லாமல் போன சட்டைகள் சாயம் போன சாறிகள் எடுத்துக் கொள்வாள். பலகாரம் முறுக்கு அரியதரம் எல்லாம் நிறைய பையில் போட்டுக் கொள்வாள். அதையும் சேர்த்து ஒரு பத்து ரூபாய்த் தாளையும் கவனம் காட்டி வேறாக மாரியிடம் கொடுப்பாள்.

“கள்ளுக் கிள்ளு குடிக்காம வீட்டை கொண்டு போய் குடு என்ன”

“ஓம் அம்மா”

அவளிடம் இரக்க குணம் இருந்தது. ஆனால் அதற்கு மேல் அவள் அவனை அண்டுவதில்லை. வாசலோடு கதைத்து விட்டு அனுப்பி விடுவாள். அம்மாதான் என்ன செய்வாள். தான் சார்ந்த சமூகத்தின் ஒரு அங்கம் அவள். இந்த லட்சணத்தில் மலையகத்து மக்கள் இங்கே வந்திருந்தாலும் மாற்றம் ஏதும் பெரிதாக நிகழ்ந்திருக்குமா ? அதே கதிதான்

செல்வத்திற்கு வெட்கமாயிருந்தது.

இரண்டு நாள் நித்திரை கண்ணுக்குள். அடித்துப் போட்ட அலுப்பு. குருநாகலில் மதிய உணவிற்காக பஸ் நிற்க, அவர்கள் இருவரும் அப்துல்லா நாநாவோடு ஒரே மேசையிலிருந்து தேநீர் குடித்தார்கள். செல்வம் பணம் கொடுத்தான்.

தான் கனடாவிலிருந்து மூன்று மாத விடுமுறையில் வந்ததை மட்டும் அப்துல்லா நாநாவிடம் சொன்னான். பஸ் புறப்பட்டது. கொழும்பிலிருந்து ஹபறனை வரை நல்ல பாதை. குலுக்கலில்லாத பயணம். இருமருங்கிலும் தென்னஞ்சோலைகளுக்குள் மறைந்த அழகான வீடுகள். முந்திப் பார்த்ததிற்கு பங்கமில்லாமல் அதே பச்சைப் பசேலென்ற சூழல். அழகு மாறாத அதே கண்டி வீதி.

ஹபறனைச் சந்தியில் ஐந்து வாகனங்கள் நிறைய இரானுவம் புறப்படக் காத்திருந்தது. திருகோணமலையை நோக்கிய பயணம். அங்கிருந்து கப்பலில் வன்னிக்குப் போகிறார்களாம்.

அவனிடம் இன்னமும் இலங்கை அறிமுகஅட்டை இருக்கிறது. அதைக் காட்டினால் அவன் இலங்கைப் பிரசை என்று ஆகிவிடும். பிரச்னைகள் வரக்கூடும். செல்வம் பாஸ்போட்டை எடுத்துப் பார்த்துவிட்டு சட்டைப் பையில் வைத்தான்.

பரிசோதனைத் தரிப்பிடங்களில் பயந்தவன் மாதிரிக் காட்டிக் கொள்ளாதே. பயந்து காட்டினால் தலையில ஏறுவாங்கள். சாதாரணமாக நில்லு. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நீயா எதையும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக் கொண்டு சொல்லாதே. .. .. புறப்பட முன் டானியல் வழங்கிய ஆத்திசூடி இவைகள்.

அவனை பயம் பிடித்துக் கொண்டது. முன்னர் போய் வராத இடமா ? இல்லையே. பிறகேன் பயம் ? அவன் இப்போது கனடியப் பிரசை! காலுக்குக் கீழிருக்கும் இரண்டு பைகளையும் நினைத்துப் பார்த்தான். கிண்டிப் பார்க்குமளவிற்கு அதில் ஒன்றுமில்லை. வெளிநாட்டிலிருந்து வருபவன் போலத் தெரிய சந்தர்ப்பமில்லை.

தம்பிக்கு ரீசேட் டெனிம் சப்பாத்து, கட்டின தங்கச்சிமாருக்கு வீட்டுப் பாவனைக்கு சில மின்சார உபகரணங்கள், மச்சான் மாருக்கு மணிக்கூடு, கட்டாத தங்கச்சிக்கு புடவை வாசனைத் திரவியங்கள், அப்பாவுக்கு கைத்தடி, சின்னம்மாவிற்கு கை நிறையக் காசு இதெல்லாம் முன்னர் மனசு நிறைய போட்டு வைத்த பட்டியல். இப்போது திடாரெனப் போவதால் எதுவும் நடைமுறையாகவில்லை. தனக்குத் தேவையான உடுப்பும் கொஞ்சம் வாசனைத் திரவியமும் கையில் காசு அவ்வளவுதான். கலவரமான பயணத்தில் கைப்பாரமும் சேர்ந்து கொண்டால் கஷ்டம். கொட்டிக் கிளறிப் போடுவார்கள்.

முதலாவது சோதனைக் களம் தூரத்திலே கொலைக்களம் போல் தெரிந்தது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். பக்கத்தில் பார்த்தான். மலையகம் அலட்டிக் கொள்ளாமலிருந்தது. பஸ் மரியாதையுடன் ஓரமாக நின்றது.

“பயின்ட ஒக்கம பாக் அறகென”

பைகளைத் தூக்கிக் கொண்டு செல்வம் இறங்கினான். வரிசையில் நின்றான். பெண்கள் அவர்களுக்கென்றிருந்த கொட்டிலுக்குள் போய் வந்தார்கள். கூர்ந்து பார்த்ததில் பெண் பொலிஸ் தோளிலிருந்து கால்வரை தடவுவதும் கைப்பையைத் துளாவுவதும் தெரிந்தது. பெண்களைச் சோதிக்கும் ஆண் பொலிஸ்காரர்கள் முன்னர் சேட்டைகள் விட்டதாக அறிந்திருந்தான். ஆண்கள் வரிசையில் செல்வத்தின் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினான். பொலிஸ் வாங்கிப் பார்த்தான். பைகளில் புதிய வெளுத்த உடுப்புகளை தூக்கிப்பார்த்து விட்டு மூடிவிட்டான்.

அடுத்தாள்!

செல்வம் வெற்றிவாகை சூடிக்கொண்டவன் போல் பஸ்ஸிற்குள் ஏறிக் கொண்டான்.

“இப்ப செக்கிங் அவ்வளவு இல்லைப் போல”

“ஆமா வன்னியில நிறைய இடங்களை போன நவம்பரில புலிகள் பிடிச்சிட்டதனால நிறையப் பேரை அங்க அனுப்பிட்டாங்க. இங்க செக்கிங் அவ்வளவு இல்லை. ”

“அப்படியா சங்கதி”

“அதோட, அவங்களும் எத்தனைக்கின்னு சோதிக்கிறது. களைச்சுப் போயிட்டாங்க”

மற்ற சோதனையிடங்களும் தூங்கியே வழிந்தன. வழி முழுக்க முகாம்களை அண்டிய வளம் நிறைந்த காடுகள் வெட்டி எரித்து அழிக்கப்பட்டு வெளியாக்கபட்டிருந்தன. எங்கிலும் புயலடித்து ஓய்ந்த அமைதி மண்டியிருந்தது.

திருகோணமலை நகர வாயிலில் அனுராதபுரச்சந்தியில் பெரிய வரவேற்பு வளைவு. சமாதான நகரம் என்று எழுதப்பட்டிருந்தது. சமாதானம் அங்கு இருப்பது போலவே அவனுக்குப் பட்டது. அவன் பயந்தது போல் வழியில் எதுவும் நடக்கவில்லையே!

தெமழ இன்னவாத – தமிழர் இருக்கிறார்களா என்று கேட்டு வழியில் இறக்கவில்லை. வெளிநாடு என்று தெரிந்து காசு கேட்டு கஷ்டப்படுத்தவில்லை. தலைகீழாகத் தொங்கவிட்டு அடிக்கவில்லை. விரல் நகங்களைப் பிய்க்கவில்லை. அம்மணமாக்கி மின்சார அதிர்ச்சி கொடுக்கவில்லை. மரியாதை குறையாமல் வந்து சேர்ந்தாயிற்றே! வந்து சேர்ந்த ஆறுதலில் நாட்டை நல்லதாகவே நினைக்கத் தோன்றிற்று. கேள்விப்பட்டதெல்லாம் மிகைதானோ! தூரத்தில் இருந்து கொண்டு நினைக்கிற போது பூனையும் யானையாவது இயல்புதான். நேரிலே வரும்போது அட இவ்வளவுதானா என்று இருக்கிறது.

எந்த வழியால் வந்தால் நகரத்துக்குள்ளிருக்கிற பரிசோதனைத் தரிப்பிடங்களை புத்திசாலித்தனமாகத் தவிர்க்கலாம் என்று சின்னம்மா ஒரு வரைபடமே பக்சில் அனுப்பியிருந்தாள். பஸ்ஸில் வரவேண்டியேற்பட்டால் எந்த இடத்தில் இறங்க வேண்டும் – துறைமுக வீதியில் கிருஷ்ணா தியேட்டர் பக்கமாக இறங்கி கடல் முகவீதியால் நடந்து சோனகவாடிக்குள் புகுந்து விட்டால் சரி. பாதுகாப்பான வழி. சோதனை மறிப்புகள் இல்லாத வழி. செல்வம் பக்கத்தில் கேட்டான்.

“நீங்க எங்க இறங்கிறீங்க ? ”

“பன்குளத்துக்கு இப்ப பஸ் இல்லை. ”

“இரவு எங்க தங்குவீங்க ? ”

“சிவன் கோயில் வாசல்ல படுத்திட்டு காலைல போயிருவேன் ”

“பயமில்லையா ? ”

“என்ன செய்யிறதுங்க.”

அவனுக்கு சங்கடமாயிருந்தது. மலையகத் தமிழ் மக்களை எங்கள் மக்கள் கை விட்டுட்டாங்க என்கிற ஆதங்கத்தில் இருக்கும் இவனிடம், அதை நிரூபிப்பது போல எப்படி விட்டுட்டுப் போறது.

“என்னோட வாங்க. காலைல போகலாம். ”

“என்னத்துக்குங்க உங்களுக்கு சிரமம். புதுசா ஆள் தங்குறதுன்னா பொலிசில பதியனும். ஏதாவது ஆச்சின்னா உங்களுக்கு கஷ்டம்.”

“அப்படியொன்டும் நடக்காது. நீங்க வாங்க”

“வேணாமுங்க”

“பரவாயில்லை வாங்க. ”

அவன் செல்வத்தை நன்றியோடு பார்த்தான். கிருஷ்ணா தியேட்டர் பக்கமாக பஸ் நின்றது. துறைமுகத்தைப் பார்த்துக் கொண்டே இறங்கினான் செல்வம்.

பிறந்த மண்ணின் வாசம் நெஞ்சில் இறங்கி நிறைந்தது.

(வளரும்)

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்