விடியும்!நாவல் – (18)

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


பக்கத்தில் நடந்த ராணியைப் பார்த்துக் கேட்டான் செல்வம்.

“தம்பி கட்டையா வளத்தியா ? ”

கட்டையா ? உன்னை விட உசரம். அப்பாக்குப் பக்கத்தில நின்றால் அரை அடி உசரமாயிருப்பான் என்று தம்பியைப் புகழத் தொடங்கியவள் அவன் போனது நினைவுக்கு வர கவலையில் நிறுத்திக் கொண்டாள்.

பின்னால் வந்த எஞ்சினியர் மச்சானிடம் ஏதாவது கதைக்க வேண்டுமென்பதற்காக ஐடென்டிகாட் கொண்டு வாறீங்களா தம்பி என்று கேட்டான் செல்வம். கிடைத்த சந்தர்ப்பத்தை தாராளமாகவே பயன்படுத்திக் கொள்ள அறிமுக அட்டைகளைக் காட்டினான். ஒன்றா இரண்டா – தேசிய அட்டை ஒன்று. அலுவலகம் கொடுத்ததொன்று. ஆமி அளித்ததொன்று. ரெட்குறொஸ் தந்ததொன்று. பொலிசில் பதிந்த வீட்டுப் பதிவு ஒன்று. எல்லாமாக ஒரு மனுசனுக்கு ஐந்து அறிமுகங்கள். இன்றைய திகதியில் உயிருக்கு அடுத்ததாக பெறுமதியானவை இந்த அட்டைகள். அதுதான் இவ்வளவு பத்திரம். வெளியே போகிற போது சட்டை போட மறந்தாலும் அட்டைகளை மறக்கக்கூடாது. மறந்தோமோ அதோ கதிதான்.

இந்த நிட்டூரமெல்லாம் தேவையா ? நிம்மதியும் ஆறுதலும் இல்லாத இந்த நாட்டில் இருக்கத்தான் வேண்டுமா ? போதும் போதும் இந்த மண்ணே வேண்டாம். எவ்வளவு கெதியாகப் போக முடியுமோ அவ்வளவு கெதியாக போய் விடவேண்டும்.

வழியெல்லாம் விடியாத முகங்கள். என்ன நடக்குமோ என்று ஏங்கிய முகங்கள். ஆயுதக் கலாசாரத்தால் அமுங்கிப் போன முகங்கள். நித்திரைப்பாயில் எழும்பி தங்கள் தலைவிதிகளை நிர்ணயிக்கப் போகிற முகங்கள்.

மண்டப வளவில் சனவெள்ளம். பெருசு சிறுசு பேதமில்லாமல் சாரனிலும் கலிசானிலும் சாறியிலும் கவுனிலும் எழும்பிய கோலத்தோடு வந்த சனங்கள். ஊர்ச்சனம் மொத்தமுமே அங்கு கூடிவிட்ட மாதிரி ஏகத்துக்கு தலைகள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் எந்தத் தலை தப்பும் எது தப்பாது என்று. கைக்குழந்தைக்குப் பால் கொடுக்கிற தாய், பள்ளிக்கூடத்தில் இன்னம் சேர்க்காத பிள்ளை, பொக்கைவாய்க்கிழவன், இருந்தால் எழும்ப இயலாத கிழவி யாருக்குமே விதிவிலக்குக் கொடுக்காத சுற்றிவளைப்பு. குழந்தையோ குமரனோ கிழவனோ எல்லோருக்கும் ஒரே நீதி நியாயம் சமஉரிமை வழங்கும் ஜனநாயக ஆட்சி.

சோதனை தொடங்கும் வரை வெய்யில் காத்திருக்கத் தயாராயில்லை. நெற்றியில் எறித்து உச்சந்தலைக்குப் பரவிற்று. கோப்பி குடித்த கையோடு கிளம்பி வந்தவன் செல்வம். வயிறு கறுபுறுத்தது. அவசரத்துக்குப் போக இடமில்லை. அடக்கினாலும் வரும் போலிருந்தது. நெளிந்து கிளிந்து பார்த்தான்.

மண்டப வளவு வாசலில் ஒரு வெள்ளை வான் வந்து நின்றது. கண்டதுதான் தாமதம், சனத்தின் ஊசாட்டங்கள் சட்டென நின்றன. செல்வத்தின் வயிற்றுப் புரளி சொல்லாமல் கொள்ளாமல் நின்று போயிற்று.

வெள்ளை வாகனம்!

இந்த மக்களின் வாழ்வில் வெள்ளை வாகனத்துக்கு ஒரு சரித்திரம் உண்டு. அரசபடைகளின் வாகனங்கள் அயலுக்குள் நுழைந்தால் கண் புகைந்த கிழவிகூட அடையாளம் கண்டு விடும். எங்கள் தெருவில் இத்தனை மணிக்கு இன்ன வாகனத்தில் ஆமி வந்து இன்ன இன்னாரை அள்ளிப் போட்டுக் கொண்டு போனார்கள் என்று சொல்லக் கூடும். அரசபடை வாகனம் என்றால் தானே அரசுக்குப் பிரச்னை! வேறு சாதாரண வாகனத்தில் சிவில் உடுப்பில் வந்து அள்ளிக் கொண்டு போனால் சாட்சி ஏது ? வெள்ளை வாகனத்தில் சிவில் உடுப்பில் ஒற்றர்களின் தகவலோடு வந்தவர்கள் அள்ளிக் கொண்டு போன பிள்ளைகளுக்குக் கணக்கில்லை. சாட்சியுமில்லை. பிள்ளைகள் திரும்பி வந்ததுமில்லை.

தலையாட்டி வந்திற்றாங்கள். ஆருக்குத் தலையாட்டப் போறாங்களோ குறுக்கால போவாங்கள். பால்குடிப் பிள்ளையை மடியில் வைத்திருந்த ஒரு பொம்பிளை சத்தம் வராமல் புலம்பினாள்.

தலையாட்டிகள்!

வெள்ளை வாகனம் போலவே தலையாட்டிக்கும் தமிழர் வாழ்வில் தனியிடமுண்டு. நம்மோடு நாமாகவே வசிப்பவர்கள் இவர்கள். அயலானைக் காட்டிக் கொடுக்க அரச நியமனம் பெற்ற ஒற்றர்கள். முகமூடி போட்டுத் தலையாட்டிவிட்டு, அதே வீட்டில் போய் ஆறுதல் சொல்பவர்கள். பசை கண்டால் பேரமும் பேசும் வேடதாரி வர்த்தகர்கள். மொத்தத்தில் முகம் தெரியாத எட்டப்பர்கள். ஆனையைக் கொண்டு ஆனையைப் பிடிக்கிற ராஜதந்திரம்தான் இந்த முகமூடி வித்தை.

வண்டிக்குள் இரண்டு பேர். தலையை மூடி காட்போட் பெட்டி கொழுவியிருந்தது. கண்களுக்கு மட்டும் ஓட்டைகள். தலையாட்டியின் முகம் வெளியே தெரிந்தால் பின்னுக்கு ஆபத்து. இருக்கிற ஆத்திரத்தில், வசதியாக அகப்பட்டால் சனம் கல்லெறிந்து கொன்று போட்டாலும் ஆச்சரியமில்லை. கொலைக்களத்திற்குப் போகிற மாதிரி மக்கள் வரிசையில் வந்து வண்டிக்கு முன்பாக நிற்க வேண்டும். புலிகளோடு சம்பந்தம் என்பதெல்லாம் தலையாட்டிக்கு அநாவசியம். தலையாட்டினால் அவ்வளவுதான். தலைவிதியே மாறிவிடும்.

அடிஉதைக்குப் பஞ்சமிருக்காது. குப்புறப் போட்டு குதிக்காலில் குழாயடி. கன்னங்களில் சிகரட் முத்தங்கள். குறடு இறுக்கி நிகம் கழட்டும் நிட்டூரம். தலைகீழாய்த் தணணீரில் அமிழ்த்தி கைலாயம் காட்டும் கருணை. உள்உறுப்பில் உயிர் போகும் வலியேற்ற மின்சாரம் பாய்ச்சல். மொத்தத்தில் விதி முடிந்து வாய்க்கரிசி போட ஆளில்லாமல் ‘செம்மணி ‘ போன்ற விலாசமில்லாப் புதைகுழிகளில் அடைக்கலம் தேடும் அநாதைப் பிணங்களாய் ஆக வேண்டியதுதான்.

நேரங்காலந் தெரியாமல் குரல் வைத்த குழந்தைக்கு புருசனில் மறைந்து கொண்டு பால் கொடுத்தாள் ஒரு தாய். இன்னொரு பிள்ளைகுட்டிக்காரி அலைந்து திரிந்த தன் பிள்ளைகளை உறுக்கி பக்கத்தில் சேமித்துக் கொண்டாள். பொடிசுகளுக்கு எங்கும் விளையாட்டுத்தான். சனம் ஒன்று கூடினால் அது செத்த வீடாயிருந்தாலும் ஓட்டமும் பாட்டமுந்தான். ஓடிப் பிடிச்சு விளையாடுகிற நேரமா இது! தங்களுடைய முறைக்காக தயங்கித் தயங்கி நகரும் மக்கள் வரிசையை பார்த்தான் செல்வம்.

“ஐயோ என்ர பிள்ளையைக் கொண்டு போறாங்களே”

திடாரெனக் கேட்ட ஓலம் எல்லாரையும் உலுக்கியது. வீட்டில் இறுதிக் கிரியைகள் முடிந்து மயானம் நோக்கிக் கிளம்பும் பிணத்தை தூக்க விடாமல் இழுத்துப் பிடித்து கத்திக் குளறும் பெண்களின் ஓலம் போல எல்லோரின் நெஞ்சங்களையும் அந்தச் சத்தம் கசக்கிப் பிழிந்தது. கத்தியது ஆரென்று தெரியவில்லை. அதன்பிறகு தலையாட்டிக்கு முன்னால் போவதற்கு ஒன்றுமறியாத சின்னப்பிள்ளை கூடப் பயந்தது.

தலையாட்டியைக் கடந்து போனவர்கள் கண்டத்திலிருந்து தப்பிய ஆறுதலில் வெளியே நடந்தார்கள். வரிசை நீண்டு கொண்டே போயிற்று. செல்வத்தின் முறைக்கு இன்னும் கொஞ்ச தூரந்தான். தலையாட்டிக்குப் பக்கத்தில் நிற்பாட்டியிருந்த பெரிய வாகனத்தில் ஏழெட்டுப் பேரை ஏற்றியிருந்தார்கள். ஒரு நடுத்தர வயசு மனிசனின் கசங்கிய சட்டை தெரிந்தது. ஒரு பெண்ணின் சேலைக் கொய்யகம் தெரிந்தது. சுற்றி நின்று குய்யோ முறையோ கூவிய சனத்தை ஆமி விரட்டிக் கொண்டிருந்தான். அவர்களை வெளியே போகச் சொல்லியும் அவர்கள் போகாமல் ஈனக்குரல் எழுப்பினார்கள். கண்கெட்ட கடவுள் என்று பெருசுக்கும் அர்ச்சனை விழுந்தது.

கிட்ட வந்ததும் ஆரோ தலையில் மண்ணை வாரிக் கொட்டியது போல இருந்தது செல்வத்திற்கு.

ட்றக்கில் விசுவநாதன்! குணாளனின் அண்ணன்!

விசுவநாதன் செல்வத்தை கண்டு விட்டான். தெரிந்தவன் மாதிரிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தான். அப்படியானால் அவனுக்கு புலியோடு தொடர்பு இருக்கிறதா ? அல்லது குணாளன் போனது பொலிசுக்குத் தெரிந்து விட்டதா ? ஜெயம் போனதும் தெரிந்திருக்குமோ! உயிர்ப்பயம் வந்து விட்டது செல்வத்திற்கு. முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

இன்றைக்கு முறையாக மாட்டத்தான் போறம்!

என்னண்ணா சட்டையெல்லாம் தொப்பலா போச்சு. லேஞ்சியால முகத்தைத் துடையுங்க என்று பின்னால் நின்ற செவ்வந்தி காதோடு சொன்னாள்.

“அந்தா உள்ளுக்க நீலச் சேட்டில இருக்கிற ஆளைக் கவனி. பிறகு சொல்றன். நேராப் பாக்காதை”

பின்னால் திரும்பாமலே தங்கையிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான் செல்வம். தலையாட்டிக்கு முன்னால் வந்தான். நேராக நிமிர்ந்து பார்க்கும்படி பொலிஸ்காரன் சொன்னான். அவன் உடனடியாகச் சரிபடுத்திய முகத்துடன் கமராவுக்குப் போஸ் கொடுப்பது போல் நின்றான்.

ஆமி அடுத்தாள் என்றான். செவ்வந்தியும் வந்து நின்றாள். பின்னால் ராணி புருசன் வசந்தி புருசன் எல்லாரும் வரிசையாக வந்தார்கள். தலையாட்டி தலையாட்டவில்லை. வெளியே வந்ததும் துறைமுகக் காற்று வீசி கழுத்தடி குளிர்ந்தது. இவ்வளவு நேரமும் எங்கே போனது இந்தக் காற்று!

தப்பிப் பிழைத்து வந்த ஆறுதலில் வியர்வை அடங்கிற்று. மனம் அடங்கவில்லை. விசுவநாதனை ஏன் பிடித்தார்கள் ? கொண்டு போய் என்ன செய்வார்கள் ? அடி தாங்காமல் எங்களையும் சொல்லிவிட்டால்!

விசுவநாதனைப் பற்றிச் சின்னம்மாவிடம் சொல்ல அவள் பதறிப் போனாள்.

நீ வந்த வழிய போயிரு தம்பி. நாளைக்கே திரும்பிப் போயிரு. உன்னை இழந்திட்டு இந்தக் குடும்பம் உய்யாது என்று நாலு வீடு கேட்க கத்தத் தொடங்கி விட்டாள்.

அன்று முழுக்க செல்வம் வெளியே வெளிக்கிடவில்லை. வீட்டிற்குள்ளேயே அடுகிடை படுகிடையாய்க் கிடந்தான். கால்மாடு தலைமாடு ஒழுங்கு மாறி சாமிப்படத்திற்கு கால் நீட்டிக் கிடந்தான். ஆரிடமும் கதைபேச்சில்லை. பச்சைத்தண்ணி வாயில் வைக்கவில்லை.

டெலிபோன் மணியடித்தது.

“தம்பி, கனடாவிலிருந்து டானியல் கதைக்குது, ஓடிவா”

அவனோடு கதைத்தாலே ஒரு ஆறுதல் வந்து நிறைந்து கொள்ளும் செல்வத்திற்கு. இப்ப எடுப்பான் அப்ப எடுப்பான் என்று டானியலின் அழைப்பிற்காகக் காத்திருந்தவன் செல்வம். இப்போது அந்த ஆர்வம் செலவாகிவிட்டிருந்தது. இந்த நேரத்தில் இவன் ஏன் எடுத்தான் என்ற கசப்போடு டெலிபோனை எடுத்தான்.

“செல்வம் பேசுறன் ”

“செல்வம், என்ன குரல் ஒரு மாதிரிக் கிடக்கு என்ன நடந்தது.”

“ஒன்டுமில்லை இங்க ரவுண்டப் ”

“ஏன் ? ”

“ஏன் என்டா ஆருக்குத் தெரியும். சொல்லிப் போட்டா ரவுண்டப் பண்றாங்கள் ”

“ஆருக்கும் ஏதும் பிரச்னையா ? ”

“இல்லை”

“பின்ன ஏன் ஒருமாதிரிக் கதைக்கிறாய் ”

“ஒன்டுமில்லை மச்சான். ரவுண்டப்புக்கு போய் வந்ததிலிருந்து மனஞ் சரியில்லை. நீ விசயத்தைச் சொல்லு”

அந்தப் பக்கம் கொஞ்சம் மெளனம். ஆர்வம் அற்றுப் போன தயக்கம்.

“என்னடா சொல்லன் ”

“ஒன்டுமில்லை, தம்பியின்ர விசயம் எப்படியிருக்கு ? ”

“இன்னம் ஒன்டும் சரிவரேல்லை. சியாமளா பிள்ளைகள் சுகமாயிருக்கினமா ? கேட்டதுதென்டு சொல்லு”

“சரி சரி நீ குழம்பாதை. எல்லாம் சரியா வரும். நான் நாளைக்கு ராவைக்கு எடுக்கிறன். இப்ப வைக்கட்டா”

வை என்று சொல்ல மனமில்லை. சொல்ல வந்ததை சொல் என்று கட்டளையிடவும் முடியவில்லை. இப்போதைக்கு ஆளைவிட்டால் கானும் மனநிலை. ஓம் என்று சொல்லிவிட்டு அழைப்பு கட்டாகும் வரை காதிலேயே வைத்திருந்தான். அந்தப் பக்கத்தில் வைக்குமுன் ஒரு கவலை தெரிந்தது.

இருந்த அலுப்போடு டானியலுடன் பட்டும் படாமலும் கதைத்த உழைவும் சேர்ந்து கொண்டது. வசூலிக்காமல் போவதில்லையென்று வாசலில் காத்திருந்த சீட்டுக்காரன் போல உடும்பாகப் பற்றிக் கொண்டது கவலை. இவ்வளவு தூரத்திலிருந்து கோல் எடுத்தவனோடு எடுத்தெறிஞ்சு கதைச்சிற்றியேடா மடையா மடையா!

சற்று நேரம் கழிய செல்வம் சிறிது சிலிர்த்துக் கொண்டான். மூச்சை ஒருமுறை ஆழமாக இழுத்து விட்டான். டானியல் ஆர் ? என்னுடைய ஒரே நண்பன். என்னை உள்ளும் புறமும் புரிந்து கொண்டவன். நடந்ததை நாளைக்கு விளக்கமாக சொல்லி மன்னிப்புக் கேட்டாச் சரி. இனி இப்படிப் படுத்துப் படுத்துக் கிடந்து சரிவராது. சுற்றிவளைப்பும் தலையாட்டலும் இன்றைக்கு நேற்றா நடக்குது. இதுக்கெல்லாம் மனஞ் சோர்ந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தால் ஒன்டும் நடக்காது.

செல்வம் துள்ளியெழுந்தான். தன்னைப் பிடித்திருந்த பீடையை உதறிப் போடுவது போல் குனிந்து வளைந்து நிமிர்ந்தான். சின்னம்மா பசிக்குது சோறைப் போடுங்க, குளிச்சிற்று வாறன் என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தான். டானியல் கதைத்த பிறகுதான் தம்பி சுறுசுறுப்பாகியிருக்கிறான். டானியல் அடிக்கடி கோல் எடுக்கமாட்டானா என்ற ஏக்கம் வந்தது அவளுக்கு.

அடுத்த நாள் செல்வத்திற்கு ஒரு தெளிவோடு புலர்ந்தது. மாதா கோயில் தோத்திரம் ஒலித்த போது அவன் கண் விழித்தான். அதுவே மனதிற்கு ஆறுதல். ‘அம்மா தேங்காய் ஆயிறது ‘ என்று தென்னை ஏறுகிற கிழவன் அன்றைய ஊதியத்துக்கு ஒழுங்கையில் குரல் கொடுத்தான். சின்னம்மா கோடித் தென்னையில் முற்றிய காய்களை பறிக்கும்படி, காய்ந்த மட்டைகளை இழுத்துப் போடும்படி சொல்லிக் கொண்டிருந்தாள். நேரத்திற்குக் கூவாத சேவல் நாலு தரம் சிறகைச் சிலுப்பி ராஜநடை போட்டது. வெள்ளனையோடே தபால்காரன் மணியடித்தான். தெருவில் வாகனங்கள் ஓடத் தொடங்கிவிட்டன. வீட்டுக்கு அத்திவாரம் போடத் தொடங்கியிருந்த முன்வளவில் மண்ணும் கல்லும் ட்றக்டரில் வந்து இறங்கின. வேலை தொடங்கு முன்பாக மேசனும் ஓடாவியும் ஆளுக்கு ஒரு வாய் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய பொழுது புது வீரியத்தோடு இயங்கத் தொடங்கிவிட்டது. தென்னோலைகளின் அசைவிற்கு சுவரில் நடனமாடிய சூரியக் கதிர்களைப் பார்த்தான் செல்வம். கதிரவன் வருகிற ஒவ்வொரு நாளுமே களையூட்டும் புதுநாள். சோர்வூட்டும் பழசு மறந்து புதுசுகளை மனங்கொள்தலே அவர் சொல்லித் தரும் அன்றாடப் பாடம்.

இனி நான் சோரப் போவதில்லை.

கனடா நாட்டுப் பிரசைக்கு பாரதூரம் ஏதும் நடந்தால் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு கனடிய தூதரகத்திற்கு உண்டென்றும், சின்னம்மாவின் ஆறுதலுக்காக கொழும்பிற்குப் போய் கனடியன் தூதரகத்தில் ஒரு விண்ணப்பம் கொடுத்துவிட்டுத் திரும்புவது நல்லதென்றும் அவன் எண்ணினான்.

..

ஆமியின் நடமாட்டம் தெரிய பழைய நினைவுகள் வாலைச் சுருட்டிக் கொண்டன. பஸ் ஹபறனைச் சந்தியில் தேநீருக்காக நிற்க, செல்வம் இறங்கினான். திருகோணமலைக்கு இன்னும் ஐம்பத்திரண்டு மைல். சோளங்கதிர் கொள்ளையாக விளைந்த காலம். மலையாகக் குவித்து விற்றுக் கொண்டிருந்தார்கள். அவித்த சோளங்கதிர் இரண்டு வாங்கிக் கொண்டான். பக்கத்திலும் ஒன்று கொடுத்தான். உப்புப் போட்டு பதமாக அவித்த சோளங்கதிர். உறையை உரித்து கதிரை நிர்வாணமாக்க வெந்த மஞ்சள் முத்துக்கள் கையைச் சுட்டன. காலையிலிருந்து காய்ந்திருந்த வயிறுக்கு உவப்பான உணவு.

சின்னம்மாவின் அவதி தாங்காமல் அவன் கொழும்பிற்குப் போனதும் தன் கைப்பட எழுதிய கடிதத்தை கனடியன் தூதரகத்தில் கொடுத்ததும் அடுத்த பஸ் எடுத்து இப்போது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருப்பதும் அடுத்தடுத்து நடந்து விட்டன. இன்னும் இரண்டு மணிநேரப் பயணம்.. இனி வரப் போகிற ஐந்து செக் பொயின்ற்களை எண்ணிக் கொண்டிருந்த போதே பஸ் ஓட்டத்தில் நித்திரையாகிப் போனான்.

நீண்ட அலுப்புப் பயணத்தின் முடிவில் இலேசாக இருட்டி விட்டது. திருகோணமலை பஸ் நிலையத்தில் இறங்கி சுற்றிலும் பார்க்க கொட்டில் போட்டிருந்த செத்தவீட்டைப் போல ஒரு சோகச் சால்வையை போர்த்துக் கொண்டிருந்தது ஊர்.

இவ்வளவு தூரமும் ஒன்றாகப் பயணம் செய்த அவர் தலையாட்டிவிட்டு செக் பொயின்ற் இல்லாத வழியாகப் பார்த்து விரைவாக நடந்தார். அவனால் அவ்வளவு தூரம் சுற்றிப் போக முடியாது. அறிமுகஅட்டையைக் காட்டிவிட்டு நேராக நடந்தான். காளிகோயிலில் குழந்தைகளின் பிரார்த்தனை கேட்டது.

“ஆரொடு நோவேன் ஆர்க்கெடுத்துரைப்பேன் ஆண்டநின் அருளில்லையானால்”

அம்மா இல்லப் பிள்ளைகளின் வழமையான மாலைப் பிரார்த்தனை. பிள்ளைகள் கோயில் மண்டபத்துள் இரண்டு வரிசையாக இருந்து தேவாரம் பாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாமே எட்டொன்பது வயசுக்குள். இன்னும் மலராத மொட்டுக்கள். அம்மாஅப்பா அரவணைப்பில் சுத்திச்சுத்தி வருகிற வயசு. அம்மா அடிச்சா அப்பாவிடம் ஒட்டிக் கொள்கிற வயசு. அப்பா அதட்டினால் அம்மாவின் மடிக்குள் பூருகிற வயசு. மொட்டு விரிஞ்சு உலகத்தை வியப்போடு பார்க்கிற வயசு. நல்லது கெட்டது புரியாத அப்படிப் புரியாமல் இருப்பதே நல்லதாயிருக்கிற வயசு. அந்த வயசின் ரம்மியங்கள் அத்தனையும் ஒரே பாய்ச்சலில் இழந்து அநாதைகளாய் அம்மா இல்லத்தின் நிரந்தர உறுப்பினராய் மாறிவிட்ட சிறுசுகள்.

அவனுக்கு கண்களை முட்டிக் கொண்டு வந்தது. இந்தத் துயரத்தையெல்லாம் நினைத்து நினைத்து உள்ளுக்குள் மனைந்து மக்கிப் போகத்தான் அவனால் முடிகிறது. எல்லாத்தையும் மீறி வாய் திறக்கிறதென்றால், அம்மா அப்பாவை வீடுவாசலை அநாதையாக விட்டுட்டு பொசுக்கென்று போக ஆயத்தமாயிருக்க வேண்டும். முடிகிற விசயமா!

அப்ப, அந்தச் சீவனால் முடிஞ்சிருக்கே! உயிருக்கு ஆபத்து வருமென்று தெரிஞ்சும் உள்ளதை உள்ளபடி ஆருக்கும் பயப்படாமல் உரத்துச் சொல்ல முடிஞ்சிருக்கே! அங்கதானய்யா நீ நிமிர்ந்து நிற்கிறாய். பொன்னம்பலமய்யா நீ பென்னம் பெரிய்ய மனுசனய்யா!

நன்றாக இருட்டிக் கொண்டு வர எட்டி நடந்தான் செல்வம். தெரு மின்கம்பத்தில் பெரிய கறுப்புக் கொடியொன்று முளைத்திருந்தது அதற்குள்!

karulsubramaniam@yahoo.com

Series Navigation