விக்ரமாதித்தனின் ‘கவிமூலம் ‘

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

கோபால் ராஜாராம்


(மருதா வெளியீடு , 621/ முதல் தளம் , பீட்டர்ஸ் ரோடு, இராயப் பேட்டை , சென்னை 600 014. விலை ரூ 40/)

விக்ரமாதித்தனை கவிஞராக நாம் அறிவோம். அவருடைய கவிதைக் குரல் தனித்த குரல். எளிமையும் கைத்துப் போன மனத்தின் வெளிப்பாடும் கொண்டவை. வாழ்வனுபவங்களின் குறுக்குவெட்டுத் தோற்றமாய் எழும் அவருடைய கவிதைகள் ஆனால் பல நேரங்களில் சட்டென்று நின்று விடுவதான முழுமையின்மையைக் கொண்டதாய்த் தோன்றுவதுண்டு. இட்டு நிரப்பிக் கொள்ள அவருடைய மற்ற கவிதைகளிலிருந்தும் சில விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமோ என்னவோ.

ஆனால் அவருடைய சிறு கதைகளும் , கட்டுரைகளும் கூடச் சிறப்பானவை – இது வரை பரவலாய்ப் பேசப்படாவிடினும். ‘கவிமூலம் ‘ என்ற அவருடைய இந்தக் கட்டுரைத் தொகுப்பு, அவருடைய கவிதைகளின் வேர்களைப் பற்றிப் பேசுகின்ற அளவில் இது வரை தமிழில் முயலப் படாத ஒரு வெளிப்பாடு. கவிதையின் மூலக்கீற்றுகள் பல வேளைகளில் கவிஞர்களுக்கே தெரிவதில்லை. அல்லது தெரிந்தாலும் அதை நல்ல உரை நடையில் வெளிப்படுத்த வேண்டிய கட்டுக்கோப்பான தன்மை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. விக்ரமாதித்தனின் அனுபவப் பதிவுகளாய் உள்ள இந்தப் படைப்புகள் தெளிவான நடையும் உண்மையும் கொண்டவை.

விக்ரமாதித்தனின் ‘கவிமூலம் ‘ இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று : கவிதை உருவாக்கத்தின் புறச் சூழ்நிலைகளையும் அவை உண்டு பண்ணும் அகச் சூழ் நிலைகளையும் பற்றியது. கவிதை உருவாகும் நேரத்தை நாம் கவிஞனருகில் நின்று கவனிக்கிற மாதிரியான அந்தரங்கத் தொனியை இந்தக் கட்டுரைகள் வெளியிடுகின்றன. இன்னொன்று : இவை விக்ரமாதித்தனின் வாழ்க்கையின் சில சிதறல்களை நமக்கு அளிக்கின்றன. இத்துடன் ஒட்டியே விக்ரமாதித்தனின் வாழ்க்கையில் கடந்து போகும் நபர்கள் பற்றிய வாழ்க்கைச் சித்திரமும் நடைச் சித்திரமாய் வந்து போகின்றன. கவிதையின் மூலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது அந்தக் கவிதைக்கான நம் அனுபவம் இன்னமும் விரிவடைந்து ரசனை பெருக்கம் கொள்கிறது. எல்லாக் கவிதைகளுக்கும் எல்லாக் கவிஞர்களுக்கும் இப்படிச் செய்வது சாத்தியம் தானா என்று கோள்வி எழலாம். கவிதை தன்னுள் நிறைவு கொண்டிருப்பதெனில் விளக்கங்களும், கவி மூலங்களும் தேவையா என்று ஒரு கேள்வி எழலாம். இப்படியும் கவிதையை அணுக வழியுண்டு என்பது தான் என் பதில்.

விக்ரமாதித்தனின் வாழ்க்கை புயலைப் போன்றது. எல்லாப் பத்திரிகைகளிலும் புகுந்து புறப்பட்டு., எல்லா வித மனிதர்களுடனும் அலைந்து திரிந்து அடங்கி, எல்லா வித அனுபவங்களுக்கும் வடிகால்களாய் நண்பர்களையும் இலக்கியத்தையும் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பது இந்தத் தொகுப்பில் தெரிகிறது. இலக்கிய ஈடுபாடு என்பது ஒரு வகையில் , சினிமாவில் சேரக் கிளம்புகிற விடலைப் பையன்களின் ஆகர்ஷிப்பும், போதையும் கொண்டது தான். சினிமாவிற்குக் கிளம்புபவர்கள் கடைசியில் எக்ஸ்ட்ரா என்றோ அல்லது வேறு ஏதோ வெளியில் தெரியாவண்ணம் சினிமா என்ற யந்திரத்தில் ஒரு உறுப்பாகிப் போவார்கள் அல்லது சொந்த ஊருக்குத் திரும்பிப் போவார்கள். எழுத்துலக ஜாம்பவான்களாக ஆகவேண்டுமென்று கிளம்புகிறவர்கள் பத்திரிகை அலுவலகங்களில் பிழை திருத்தம் செய்து கொண்டிருப்பார்கள் அல்லது , உதவி ஆசிரியர் என்ற பெயரில் செய்திக் குறிப்பை மொழி பெயர்த்துக் கொண்டிருப்பாரகள். இல்லாவிடில் நிருபர்களாய் செய்திச் சேகரிப்பு நடத்திக் கொண்டிருப்பார்கள். இந்த சோகங்களுக்கிடையில் தம் தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு எழுத்துப் பதிவுகளில் தம்மை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களும் உண்டு. அப்படித் தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர் விக்ரமாதித்தன்.

‘கவிதையாக்கம் ‘ பற்றிய தன் பார்வைகளையும் இதில் ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். விக்ரமாதித்தனின் கவிதைகளில் உள்ளார்ந்த யாப்புத் தன்மையும் ஓசை ஒழுங்கும் உண்டு – ஞானக் கூத்தனின் கவிதைகள் போன்ற வெளிப்படையான யாப்புத் தனம் அவற்றில் இல்லையென்றாலும் கூட. இது பற்றி அவரே சொல்கிறார் ‘ கூடுமானவரைக்கும், எதுகை மோனைகள் இருக்கிற மாதிரியும் , உள்ளமிழ்ந்த ஓசை நயம் இருக்கிற மாதிரியும் எழுதுகிற தன்மை எனக்குள் படிந்து போயிருக்கிறது. யாப்பை உதறிய போதே , அதன் ஓசை நயத்தையும் இழந்து விட்ட நவீன கவிதைக்கு என்னளவில் , வேறு விதத்தில் ஓர் அமைப்பு உண்டாக்குவது இப்படித் தான் சாத்தியமாகிறது.. இந்த வகையில் தமிழ்-திராவிட மரபு கொண்டவை என் கவிதைகள் ‘ என்று சரியாகவே தன்னைப் பற்றி கணிக்கிறார்.

‘எழுதாத கலைஞன் ‘ என்ற தலைப்பில் கார்க்கி என்ற எழுத்தாளரைப் பற்றி எழுதியிருப்பது ஒரு சிறந்த நடைச் சித்திரம். கார்க்கி சென்னை எழுத்துலக வட்டாரங்களில் தெரிந்த பெயர். எழுத்தாளனுக்கே உரிய பலமும், பலவீனங்களும், சமரசங்களும்,எதிர் நீச்சல்களும் கொண்டு வாழ்ந்த மனிதர். இன்று போலவே என்றுமே , வணிகப் பத்திரிகைகளில் வெளிவராத வெளிவரமுடியாத எழுத்தின் வலுவைப் புரிந்து கொண்டும் கூட வணிகப் பத்திரிகைகளுடன் தான் பின்னிப் பிணைந்து வாழவேண்டும் என்பது எல்லா எழுத்தாளருக்கும் ஏற்பட்ட நிர்ப்பந்தம். இந்த கார்க்கியின் வாழ்க்கையின் சலனங்களை ஆழமாக இல்லாவிடினும் மனதில் தைக்கிற மாதிரி ‘எழுதாத கலைஞன் ‘ சொல்கிறது.

‘சொல்லே கவிதை தான் ‘ என்ற கட்டுரையில் ‘தமிழ் உரைநடை வளர்ச்சியில் திராவிட இயக்கத்தினருடைய பங்களிப்பும், தமிழறிஞர்களுடைய கொடையும் கணிசமானவை; மகத்தானவை என்று சொன்னாலும் தப்பாகாது ‘ என்று நேர்மையுடன் பதிவு செய்து விட்டு தான் படித்தப் போற்றிய பலரைப் பட்டியலிடுகிறார் விக்ரமாதித்தன். மறைமலையடிகள் தொடங்கி புனிதன் வரையில் நீள்கிற இந்தப் பட்டியலின் முடிவில், தன் நேர்மையை இன்னமும் உறுதி செய்வது போல் சொல்கிறார் : ‘ இடையில் விட்டுப் போன ஒரு விஷயம்; மகாகவி பாரதியாரும் மகாமகோபாத்யாய டாக்டர் உ வே சாமிநாதையரும் வெ சாமிநாத சர்மாவும் விவரம் தெரிந்த பிறகு தான் எனக்குப் படிக்கக் கிடைத்தார்கள். இதற்கு திராவிட மாயையும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். இன்றளவும் முழுக்க வாசிக்காதிருப்பதற்கும் இதையே சுட்ட வேண்டும். ‘ . ஆனால் மிக முக்கியமாய் பின் வரிகளில் சொல்கிறார் : ‘ஒரு கவிஞனுக்குச் சொல் ரொம்ப முக்யம். அது கொண்டிருக்கும் அழகு அவனை அலைக்கழிப்பது. சொல்லிலிருந்தே கவிதை தோன்றுகிறது என்று சொன்னாலும் தப்பில்லை. சொல் வைத்திருக்கும் மாயம் தீராது. ‘ என்று தொடரும் இவர் ‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் ‘ என்ற பாரதியின் வரியை ஏன் வெளிப்படையாய்ச் சுட்டவில்லை என்று என்னை யோசிக்க வைத்தது.

‘வள்ளுவர் கோட்டத்துத் தேர் ‘ கவிதைப் பொருளானது பற்றி இவர் எழுதியிருப்பது இன்னொரு சுவாரசியமான கட்டுரை. கவிதைகளை விட கவிதை பற்றிய கட்டுரை சிறப்பாக இருக்கிறது என்று சொல்லும்படி இந்தத் தொகுப்பில் சில கட்டுரைகள் உள்ளன. இந்தக் கட்டுரையும் சிறப்பு. கவிதையும் சிறப்பு. ஒரு காலகட்டத்தின் பிரபலமான விசித்திரத்தை ( கருணாநிதி முயன்று கட்டிய கட்டடத் திறப்பு விழாவிற்கு அவருக்கு அழைப்பு இல்லை) மீறியும் இந்தக் கவிதையில் இடம் பெயர்ந்த நிகழ்வுகளுக்கிடையில் இடம் பெயரவொண்ணாத வடிவில் தேர் நிற்கிற உறுதியும், சோகமும் தெரிகிறது. கட்டுரையில் துரை என்ற நண்பர் பற்றியும், அதன் வழியாய் வள்ளுவர் கோட்டம் விக்ரமாதித்தன் மனதில் குடி கொண்ட கதையும் வருகிறது.

‘திரு உத்தர கோச மங்கை ‘ யில் கோணங்கியுடன் உத்தர கோசமங்கைக் கோயிலுக்குச் செல்ல நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அந்தக் கோயில் அவருக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளும் கவிதையாய் உருப் பெற்றது பற்றியும் எழுதுகிறார். ( ‘கடந்த பதினைந்தாண்டுகளில் நான் குடிக்காமல் எழுதிய எழுத நேர்ந்த கவிதை இது ஒன்றுதான். ‘) அம்பலத்தில் ஆடுவதன் முன்பு நடராஜன் தன் நாயகிக்கு தனியே ஆடிக் காண்பித்த ஐதீகத்தைக் கவிதையாக்கியிருக்கிறார் விக்ரமாதித்தன். ‘வார்த்தைகளில் சிக்கிக் கொள்ளாதே. நீ வாழ்வைச் சொல்லு. உன்னுடைய பெருமையே கதை சொல்வது தான்; நீ சொற்களின் காட்டில் போய்ச் சிக்கிக் கொண்டாய் என்று எனக்குத் தோன்றுகிறது ‘ என்று கோணங்கியைச் சரியாகவே விமர்சித்த பின்பும் பயணம் தொடர்கிறது. பயணத்தின் முடிவில் திரு உத்தரகோச மங்கைக் கோயிலையும், கவிதையையும் அடைகிறார்கள். இந்த நெடும்பயணத்தில் தமிழுக்குக் கிடைத்திருப்பது ஒரு சிறப்பான கவிதை ஒரு சிறப்பான கட்டுரை.

இந்த நூலின் கடைசிக் கட்டுரையான ‘இந்தப் படிக்கிற பழக்கம் ‘ என்ற கட்டுரையை எழுத்தாளனாய் ஆக எண்ணம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டும். ஒரு ‘ஒரு படைப்பாளி , மரபிலுள்ளவற்றில் முக்கியமானவற்றைப் படித்திருக்க வேண்டும். அது நிச்சயம் அவன் எழுத்தாளுமையை வளர்க்கும். ‘ என்று சொல்கிறார். வேறொரு சந்தர்ப்பத்தில் இந்திரா பார்த்த சாரதி ‘ எழுத்துக் கூட்டிப் படிக்கிற ஒரே தகுதியை வைத்துக் கொண்டு மரபை எதிர்க்கக் கிளம்பி விடுகிறார்கள் ‘ என்று சொன்னது என் நினைவில் வருகிறது. விக்ரமாதித்தன் இதை இப்படிச் சொல்கிறார் : ‘ இன்றைய நவீன இலக்கியவாதிகள் நிறையபேர் , ‘தமிழில் என்ன இருக்கிறது ? ‘ என்று கேட்கிற ஜாதி. அவர்கள் எழுதுவது படிப்பதற்கே லாயக்கில்லாமல் இருப்பது அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை போல., இந்த என் முடிவு என் படிக்கும் பழக்கம் உணர்த்துவது என்றால் நானென்ன செய்ய முடியும் ? ‘

இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து சிந்தித்த போது, ஒரு விஷயம் மனதில் பட்டது. பெரும்பாலும் விக்ரமாதித்தனின் நண்பர்கள் எழுத்தாளர்களாக அல்லது எழுத்துடன் தொடர்பு கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அப்படித் தானா ? இந்த வட்டத்திற்கு வெளியே எதுவும் கவி மூலம் இல்லையா ? ‘பொருள் வயின் பிரிவின் ‘ சோகப் பின்னணி எல்லாப் பிழைப்புக் காரர்களுக்கும் உள்ளது தான். கவிதை வடிவில் இதைப் பார்க்கும் போது மனதில் நெருடல் உண்டாகாமல் இருப்பதில்லை. இந்தக் கட்டுரையும் ‘கொடை ‘ கட்டுரையும் எழுத்துச் சார்புள்ளவர்களைத் தவிர்த்தவை. இது போன்ற வேறு அனுபவங்களை விக்ரமாதித்தன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது சுய சரிதை வடிவில் கூட இருக்கலாம். நிறைய அவரிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

*********

Series Navigation