விகிதாச்சார பிரதிநிதித்துவம் – பல்வேறு முறைகள்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

எட் லாபோண்டே


http://www.ed.labonte.com/pr.html என்ற வலைப்பக்கத்திலிருக்கும் கட்டுரையை இந்தியாவை பற்றியதாக மாற்றி எழுதப்பட்டது

இந்தியா ஜனநாயகமா ?

ஆமாம் இல்லை என்ற இரண்டு விடைகளையும் இதற்குச் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட ஜனநாயக முறையைப் பின்பற்றி இந்தியா தன் மக்களின் பிரதிநிதிகளையும் குடியரசுத்தலைவரையும் பிரதரையும் மற்றும் மாநிலத் தலைவர்களையும் தேர்தெடுக்கிறது. ஆனால் எந்த அளவு இது ஜனநாயகமாக இருக்கிறது உண்மையில் ? ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வளவு மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடுகிறார்கள் என்பதை ஒரு அளவுகோலாகக் கருதலாம். இந்தியாவில் பெரும்பான்மையான தேர்தல்களில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்காளர்களே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கிறார்கள். ஆனால் ஜெர்மனி, ஆஸ்த்ரியா, ஃபின்லாந்து ஸ்வீடன் ஆகிய நாடுகளில் வாக்களிப்பவர்களின் சதவீதம் சுமார் 75இலிருந்து 90 வரைக்கும் இருக்கிறது. ஏன் இப்படிப்பட்ட வித்தியாசம் ? பலவேறு விஷயங்கள் வாக்களிப்பவரின் எண்ணிக்கை சதவீதத்தைப் பாதிக்கின்றன. ஒரு தனி நபரின் ஓட்டு எந்த அளவுக்கு தேர்தலைப் பாதிக்கிறது என்பது இதில் முக்கியமானது. பெரும்பான்மையாக காங்கிரஸ் வாக்காளர்கள் இருக்கும் தொகுதியில் நீங்கள் கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று வைத்துக்கொள்வோம். தேர்தலில் நிச்சயம் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும் என்று தெரிந்திருந்தும் நீங்கள் ஓட்டுப்போடப்போவீர்களா ? அப்படியே நீங்கள் ஓட்டுப்போட போனாலும் அது ஒரு அடையாள ஓட்டு என்பதைத் தவிர வேறெந்த மதிப்பு அந்த ஓட்டுக்கு இருக்கிறது ? ஆனால் ஏன் ஃபின்லாந்து ஜெர்மனி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் வாக்குசதவீதம் மிக அதிகமாக இருக்கிறது ? மேற்கண்ட நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் இருக்கிறது.

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்றால் என்ன ?

இறுதி முடிவுகளின் விகிதாச்சாரம் வாக்குக்களின் விகிதாச்சாரத்தை பெருமளவு ஒத்திருக்கும் தேர்தல் முறையே விகிதாச்சார முறை பிரதிநிதித்துவம் என்பது. உதாரணமாக ஒரு கட்சி 30 சதவீத வாக்குக்களைப் பெற்றிருந்தால், அது வெற்றிபெற்ற வேட்பாளர்களில் 30 சதவீத வேட்பாளர்களை பெற்றிருப்பது. இப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறையில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதுதான். தற்போது இருக்கும் தேர்தல் முறையில், ஒரு தேர்தலில் ஒரு வேட்பாளர் பெறும் 20 சதவீத வாக்குக்களுக்கும் 30 சதவீத வாக்குக்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் விகிதாச்சார முறையில் 20 சதவீத வாக்குக்களுக்கும் 30 சதவீத வாக்குக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

விகிதாசார நடைமுறையிலும், நாடாளுமன்ற ஆள்முறை (Parlimamentary system) ஏதோ ஒரு விதத்தில் இருந்து தானே ஆக வேண்டும் ?

இல்லை. நாடாளுமன்ற ஆள்முறை என்பது ஆட்சியின் ஒரு வடிவம், ஆனால் விகிதாசாரப் பிர்ந்திநிதித்துவம் என்பது வாக்களிப்பு வடிவம். விகிதாசார முறை உள்ள நாடுகளிலும் நாடாளுமன்ற ஆள்முறை உள்ளது. கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நாடாளுமன்ற முறை (இந்தியா போல்) உள்ளது ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இல்லை.

எவ்வாறு விகிதாச்சார முறை பிரதிநிதித்துவம் வேலை செய்கிறது ?

விகிதாச்சார பிரதிநிதித்துவத்துக்கு பல வழிகள் இருக்கின்றன. இவை அனைத்திலுமே ஒரே தொகுதிக்கு பல வெற்றிபெறும் வேட்பாளர்களை கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு தொகுதிக்கு பிரதிநிதியாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள். கீழ்க்கண்டவை ஒரு சில உதாரணங்கள்.

கட்சி மட்டும் உள்ள விகிதாச்சார அமைப்பு: (Party List System )

இதுவே மிகவும் பிரபலமாக பல நாடுகளால் பின்பற்றப்படும் விகிதாச்சார தேர்தல் அமைப்பு. எல்லா கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை வாக்குச் சீட்டில் குறிப்பிடுகின்றன. ஆனால் மக்கள் வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடுவதில்லை. கட்சிக்கே ஓட்டுப்போடுகிறார்கள். ஒரு சில தேர்தல் முறைகளில், வாக்காளர் ஒரு கட்சி கொடுக்கும் வேட்பாளர் வரிசையில் தனக்கு விருப்பப்பட்ட ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரிசைப்படுத்தலாம். இருப்பினும் வாக்காளர் கட்சிக்கே வாக்களிக்கிறார், வேட்பாளருக்கு அல்ல.

ஒவ்வொரு கட்சி பெற்ற வாக்குக்களின் சதவீதத்தைப் பொறுத்து வேட்பாளர்கள் பங்கிடப்படுகிறார்கள். இது நேரடியான அமைப்பு.

Mixed Member Systems : கட்சி- வேட்பாளர் கலந்த அமைப்பு:

இது ஜெர்மனி மற்றும் இத்தாலியில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தொகுதி பிரதிநிதி ஆகிறார்கள். மீதமிருக்கும் இடங்கள் தனி நபர் வெற்றி பெற்ற இடங்களினால் உருவான விகிதாச்சாரமற்ற பிரதிநிதித்துவத்தை மாற்றி விகிதாச்சார முறையாக மாற்ற கட்சிக்கு அளிக்கப்படுகின்றன.

உதாரணமாக தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் மொத்தம் 50 தொகுதிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு தொகுதியும் ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும். ஆகவே 50 எம் எல் ஏக்கள் இருப்பார்கள். உதாரணமாக திமுக 26 இடங்களையும் அதிமுக 24 இடங்களையும் பெற்றிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

இன்னொரு 50 எம் எல் ஏக்கள் இடங்கள் உருவாக்கப்படும். இந்த 50 இடங்கள் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு வாக்குக்களைப் பெற்றிருக்கிறது என்பதை வைத்து பிரித்துக்கொடுக்கப்படும். உதாரணமாக அதிமுக 44 சதவீதத்தையும், திமுக 46 சதவீதத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி 10 சதவீதத்தையும் பெற்றிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த 50 இடங்களில் 20 இடங்கள் அதிமுகவுக்குச் செல்லும். ஆக அதிமுகவின் எம் எல் ஏ எண்ணிக்கை 44 ஆகும். இது ஏறத்தாழ அதிமுக தமிழ்நாட்டில் பெற்ற ஓட்டு எண்ணிக்கை விகிதத்துக்கு ஈடானது. திமுகவும் 20 இடங்களைப் பெறும். இத்துடன் திமுகவின் எம் எல் ஏ எண்ணிக்கை 46 ஆகிறது. இதுவும் திமுக தமிழ்நாட்டில் பெற்ற வாக்கு சதவீதத்துக்கு ஈடானது. கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களைப் பெறும். இது கம்யூனிஸ்ட் கட்சி எந்த அளவு தமிழ்நாட்டில் வாக்குக்களைப் பெற்றதோ அதற்கு ஈடானது. கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 சதவீத வாக்குக்களைப் பெற்றிருந்தாலும், தற்போதைய அமைப்பில் எந்த பிரதிநிதித்துவமும் பெற்றிருக்க முடியாது. ஆனால் இந்த முறையில் கம்யூனிஸ்ட் கட்சி வாக்காளர்கள் சமமான முறையில் தங்கள் கருத்துக்களைச் சொல்ல பிரதிநிதிகளை சட்டமன்றத்தில் பெற்றிருப்பார்கள். இது 100 சதவீத விகிதாச்சார முறையில் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான பிரதிநிதித்துவத்தை தருகிறது.

ஜெர்மனி, பொலிவியா ஹங்கேரி, இத்தாலி, மெக்சிகோ, நியூ ஜிலாந்து ஆகிய நாடுகளில் இந்த முறை பின்பற்றப் படுகிறது.

Preference Voting (also known as Single Transferable Vote)

முன்னுரிமை வாக்கு முறை ( மாற்றக் கூடிய ஒற்றை வாக்கு முறை)

இந்த முறை ஆஸ்திரேலியா , அயர்லாந்து ஆகிய நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. இதன் சிறப்பு தனிப்பட்ட நபருக்கு ஓட்டுப் போட்டாலும் விகிதாச்சார முறையில் வெற்றிபெற்றவர்களை பங்கிடு செய்ய உதவுகிறது.

இந்த முறையிலும் ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

இந்த முறையில் ஒவ்வொரு வாக்காளரும் தனக்குப் பிடித்த வேட்பாளருக்கு முதலிடத்தையும் (1) அவருக்கு அடுத்தபடி இன்னொரு வேட்பாளருக்கு இரண்டாம் இடத்தையும் (2) தரவேண்டும்.

முதலிடங்கள் அனைத்தும் கூட்டப்பட்டு எண்ணிக்கைப் பார்க்கப்படும். 50 சதவீத வாக்குக்களை ஒருவர் முதலிடத்தில் பெற்றால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். யார் ஒருவரும் 50 சதவீத வாக்குக்களை முதலிடத்தில் பெறவில்லை என்றால், மிகவும் குறைவாக முதலிட வாக்குக்களை பெற்றவர் நீக்கப்படுவார். அவரது முதலிட வாக்குக்கள் அந்தந்த இரண்டாம் இட வேட்பாளருக்கு மாற்றப்படும். மீண்டும் எண்ணப்படும். இப்படியாக யார் முதலிட வாக்குக்களில் அடிப்படைத்தேவையான 50 சதவீத வாக்குக்களைப் பெறுகிறார்களோ அவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். அடுத்தாற்போல முதலிட வாக்குக்களை இன்னொருவர் பெறவில்லை எனில் மீண்டும் மிகக்குறைந்த முதலிட வாக்குக்களைப் பெற்றவர் நீக்கப்பட்டு அவருக்கு வந்த முதலிட வாக்குக்கள் அந்தந்த வாக்குக்களில் யாருக்கு இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்தந்த வேட்பாளர்களுக்கு மாற்றப்படும். மீண்டும் எண்ணிக்கையில் யார் முதலிடத்து 50 சதவீத வாக்குக்களைப் பெறுகிறார்களோ அவர் இரண்டாவது வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

ஒரு தொகுதிக்கு மூன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் என்ற அமைப்பு கூட உருவாக்கலாம். அப்போது 33 சதவீத முதலிட வாக்குக்கள் ஒரு வேட்பாளர் பெற வேண்டும்.

Cumulative Voting : (கூட்டு வாக்கு)

இந்த முறையில் ஒரு தொகுதிக்கு மூன்று வெற்றி பெறும் வேட்பாளர்கள் என்று இருந்தால், ஒவ்வொரு வாக்காளருக்கும் 3 வாக்குக்கள் வழங்கப்படும். இந்த முறையில் யார் வேண்டுமானாலும் தன் வாக்குக்களை யாருக்கு வேண்டுமானாலும் போடலாம். உதாரணமாக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியில் சிறுபான்மை என்று இருந்தால், கம்யூனிஸ்ட் கட்சி வாக்காளர் தன் மூன்று ஓட்டுக்களையும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கே அளிக்கலாம். வேறொருவர் தன் இரண்டு ஓட்டுக்களை காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கும் ஒரு ஓட்டை கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கும் அளிக்கலாம். மிக அதிகமாக ஓட்டுக்களைப் பெற்ற முதல் மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

இந்த முறையைக் கொண்டு முனிஸிபல் தேர்தல்களில் சிறுபான்மையாக இருப்பவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கு உபயோகப்படுத்தலாம்.

Limited Voting பிரதிநிதிகளை விட வாக்குகள் குறைவாய் உள்ள தேர்வு முறை

இந்த முறை ஜப்பானில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த முறையில், ஒரு தொகுதிக்கு எத்தனை வெற்றி பெறும் வேட்பாளர்கள் இருப்பார்களோ அதில் பாதிதான் வாக்குக்களாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக 5 பிரதிநிதி தொகுதிகள் இருந்தால், வாக்காளர் ஒவ்வொருவருக்கும் 2 வாக்குக்களே வழங்கப்படும். 7 பிரதிநிதி தொகுதிகளில் ஒவ்வொரு வாக்காளருக்கும் 3 வாக்குக்களே வழங்கப்படும். சிறுபான்மையினர் தங்கள் ஆளுக்கே அனைத்து வாக்குக்களையும் கொடுக்கவும், பெரும்பான்மையினர் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க தங்கள் ஓட்டுக்களை பிரித்தும் போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள். முதலில் வரும் வேட்பாளர்கள் பிரதிநிதிகளாகத் தேர்தெடுக்கப்படுவார்கள். சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு வசதியான முறை இது.

Majority Preference Voting பெரும்பான்மை முன்னுரிமை முறை

நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அதிபர்களைக் கொண்ட நாடுகளுக்கு – அமெரிக்கா போன்றவை – சிறுபான்மை வாக்காளர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப் பரிந்துரைக்கப் படும் இந்த் முறை, இந்தியாவிற்குப் பொருந்தாது. எனினும் இதனைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

ஒரே ஒரு ஆளை தேர்தெடுக்கவேண்டிய தேர்தல்களில் இந்த முறை கடைபிடிக்கக்கூடிய ஒரு தேர்தல் முறை. உதாரணமாக முதலமைச்சருக்கு அனைத்து தமிழக மக்களும் ஓட்டுப்போட்டு ஒரு நபரை முதலமைச்சராக தேர்தெடுக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். (இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தமிழக மக்களைத் தேர்தெடுக்கிறார்கள்).

முதலமைச்சராக இருக்க 2 அல்லது 3 நபர்களைத் தேர்தெடுக்க முடியாது. ஒரே ஒரு நபரை மட்டுமே முதலமைச்சராக ஆக்கவியலும். அப்படிப்பட்ட இடங்களில் இது உபயோகப்படும்.

முதலமைச்சராக விருப்பம் தெரிவித்து 5 நபர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மு. கருணாநிதி, வை. கோபால்சாமி, தொல்.திருமாவளவன், ஜே. ஜெயலலிதா, கிருஷ்ணசாமி ஆகிய ஐவரில் ஒருவரை மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கவேண்டும்.

இன்றைய தேர்தல் முறைப்படி யார் மிக அதிகமான ஓட்டுக்களைப் பெறுகிறார்களோ அவர் முதலமைச்சராக ஆவார். உதாரணமாக மு. கருணாநிதி அவர்களுக்கு 23 சதவீத ஓட்டும். ஜெ ஜெயலலிதாவுக்கு 24 சதவீத ஓட்டும், வை கோபால்சாமி அவர்களுக்கு 20 சதவீத ஓட்டும், தொல் திருமாவளவனுக்கு 20 சதவீத ஓட்டும் கிருஷ்ணசாமி அவர்களுக்கு 13 சதவீத ஓட்டும் விழுகிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் 24 சதவீத ஓட்டுக்களைப் பெற்ற ஜெ ஜெயலலிதா முதலமைச்சராக வெற்றி பெறுவார். ஆனால் அவர் முதலமைச்சராக ஆவதை எதிர்த்து 76 சதவீத தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். இதனை தவிர்க்கவே கீழ்க்கண்ட முறை.

இந்த பெரும்பான்மை முன்னுரிமை முறையில் வாக்குச் சாவடிக்குச் செல்லும் மக்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும். அதில் ஐவரின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கும். ஆனால், ஒரே ஒருவருக்கு அவர் ஓட்டுப்போடுவதற்கு பதில், தனக்கு யார் மிக விருப்பமானவர், அதற்கு அடுத்த விருப்பமானவர், அதற்கு அடுத்த விருப்பமானவர் என்று வாக்காளர் வேட்பாளர்களை வரிசைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக ஒரு வாக்காளர், தன் வரிசையில் முதலாவதாக தொல் திருமாவளவனையும், அடுத்ததாக ஜெ ஜெயலலிதாவையும் அடுத்ததாக மு கருணாநிதியையும் அடுத்ததாக வை கோபால்சாமியையும் அதற்கு அடுத்ததாக கிருஷ்ணசாமியையும் வரிசைப்படுத்தலாம்.

அவரது வாக்குச்சீட்டில் இப்படி வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்

மு கருணாநிதி – 3

கிருஷ்ணசாமி – 5

வை கோபால்சாமி – 4

தொல் திருமாவளவன் – 1

ஜெ ஜெயலலிதா – 2

(பெயர்கள் அகரவரிசைப்படி வாக்காளர் சீட்டில் இருக்கின்றன)

முதலாவது இடத்தில் ஒருவர் பாதிக்கும் மேற்பட்ட வாக்குக்களில் இருந்தால் அவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். அப்படி ஒருவரும் 50 சதவீத வாக்குக்களில் முதலாவது இடத்தைப் பிடிக்கவில்லை என்றால், மிகவும் குறைவாக முதலாவது இடத்தில் இருக்கும் ஒருவரது ஓட்டுக்கள் அவருக்கு முதலாவது இடம் கொடுத்த வாக்குக்களில் இரண்டாவது இடத்தில் குறிப்பிட்ட நபருக்கு அளிக்கப்படும். பிறகு மீண்டும் முதலாவது ஓட்டுக்கள் கூட்டப்படும். இப்போது முதலாவது இடத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குக்களைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அவ்வாறு யாரும் இல்லையெனில் மீண்டும் கடைசியில் வந்தவரின் வாக்குக்கள் மாற்றப்பட்டு எண்ணிக்கை செய்யப்படும்.

(உதாரணமாக, ஒரு தேர்தலில் 100 வாக்குக்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.

முதலாவது இடத்தில்

மு. கருணாநிதி 23 ஓட்டும்

ஜெ ஜெயலலிதாவுக்கு 24 ஓட்டும்

வை கோபால்சாமி அவர்களுக்கு 20 ஓட்டும்

தொல் திருமாவளவனுக்கு 20 ஓட்டும்

கிருஷ்ணசாமி அவர்களுக்கு 13 ஓட்டும்

இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.

இதில் யாரும் 50 சதவீத முதலாவது இட வாக்குக்களைப் பெறாததினால், கடைசியாக முதலாவது இட வாக்குக்களைப் பெற்ற கிருஷ்ணசாமியின் ஓட்டுக்கள் இரண்டாவது இடத்துக்கு மாற்றப்படும். உதாரணமாக 13 கிருஷ்ணசாமி வாக்குக்களில் 10 வாக்குக்களில் இரண்டாவது இடம் மு கருணாநிதிக்கு கொடுக்கப்பட்டிக்கின்றன என்றும் 3 வாக்குக்கள் ஜெ ஜெயலலிதாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இப்போது கருணாநிதி அவர்களின் முதலாவது வாக்குக்கள் எண்ணிக்கை 33 ஆக உயரும். ஜெ ஜெயலலிதா அவர்களின் முதலாவது வாக்குக்கள் எண்ணிக்கை 27ஆக உயரும். இப்போதும் யாரும் 50 சதவீத வாக்குக்களைப் பெறவில்லை. ஆகவே தொல் திருமாவளவனின் வாக்குக்களில் இரண்டாவது இடத்தில் இருப்பவரின் எண்ணிக்கை கணக்கிடப்படும். தொல் திருமாவளவனின் வாக்குக்களில் 18 வாக்குக்களில் 2ஆவது இடம் கருணாநிதிக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். 2 வாக்குக்களில் இரண்டாவது இடம் வை கோபால்சாமிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துகொள்வோம். இப்போது கருணாநிதியின் வாக்குக்கள் 51ஆக உயரும். வை கோபால்சாமியின் வாக்குக்கள் 22ஆக உயரும்.

இப்போது பாதிக்கும் மேற்பட்ட வாக்குக்களைப் பெற்ற கருணாநிதி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இது உண்மையான மக்கள் மனத்தை அறியும் முறை. அதாவது தொல் திருமாவளவன் ஒருவேளை முதலமைச்சராக ஆகவில்லை என்றால், உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்வியையும் சேர்த்தே இந்த வாக்குச் சீட்டு இருக்கிறது என்பதை கவனியுங்கள்)

மேற்கண்ட விவரங்கள் உள்ள இணையத் தளம்

Democracy and Electoral Assistance web site

(http://www.idea.int/index.htm).

விகிதாச்சார முறை பிரதிநிதித்துவத்தில் சிறப்பான விஷயங்கள் என்று என்னன்ன இருக்கின்றன ?

சிறப்பான விஷயங்கள் பல

அதிகமான வாக்காளர்கள் பங்கெடுப்பது நடக்கும். விகிதாச்சார முறையை உபயோகிக்கும் நாடுகளில் வாக்களிப்பவரின் சதவீதம் 70இலிருந்து 95 வரைக்கும் இருக்கிறது.

பிரச்சாரங்கள் பெரும்பாலும் பிரச்னைகள் தீர்வுகள் சார்ந்து இருக்குமே தவிர யார் பிரபலம் என்ற போட்டிகள் இராது. இந்தியா என்பது பரந்த நாடாக இருப்பதால், ஒரு குறிப்பிட்ட பிரச்னைகளை மட்டும் வைத்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வது என்பது இயலாது. அதற்கும் பெரும்பான்மை ஆதரவு என்பதும் இருக்காது. ஆகவே, பிரச்சாரகர்கள் இரண்டு கட்சிக்கும் ஓட்டுப்போடக்கூடிய மக்களை மனம் மாற்ற குறுக்கு வழிகளில் இறங்குகிறார்கள். இதில் எளிய முறை எதிராளியை கேவலமாகச் சித்தரிப்பது. எதிர்மறையாக வாக்காளர்களை மனம் மாற்றுவது எளியது. ஏனெனில் நேர்மறையாக மக்களை கவர்வது எளிதல்ல.

விகிதாச்சார முறையில் வெற்றி பெற பெரும்பான்மை வேண்டாம். ஆகவே, பிரச்னைகள் அதன் தீர்வுகள் என்ற ரீதியிலேயே பெரும்பாலான தேர்தல் பிரச்சாரங்கள் விகிதாச்சார முறை தேர்தல் அமைப்பு நாடுகளில் அமைந்திருக்கின்றன.

சிறுபான்மையினரும் பெண்களும் விகிதாச்சார முறையில் அதிகமான பிரதிநிதித்துவம் பெறுவார்கள். விகிதாச்சார முறையை உபயோகிக்கும் நாடுகளில் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் சுமார் 25 இலிருந்து 35 சதவீதம் பெண்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்திய முறையை உபயோகிக்கும் நாடுகளில் பெண்களின் எண்ணிக்கை 5 சதவீதமே இருக்கிறது. (அமெரிக்கா உட்பட). சிறுபான்மையினர் தங்களுக்கு மக்கள்தொகைக்கு ஈடான பிரதிநிதித்துவம் பெறுவதற்கான வாய்ப்பு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலேயே இருக்கும்.

காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரண்டு கட்சிகளே தொடர்ந்து ஆட்சி செய்யும் நிலையை இந்தியா அடைந்திருக்கிறது. எல்லா கட்சியும் ஆட்சி செய்ய முடியாது எனினும் எல்லா கட்சிகளின் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்தில் இருப்பதை இந்த விகிதாச்சார முறைகள் உறுதி செய்யும்.

விகிதாச்சார முறை நல்ல கருத்துத்தான். ஆனால் எப்படி இந்தியாவில் அதனை கொண்டுவருவது ?

விகிதாச்சார முறை தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் நேரடி அபாயமாக இருக்கும். இதேதான் இந்தியா முழுவதிலும் இருக்கும் பெரும்பான்மை மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இருக்கும். ஆகவே இதனை பெரும் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை கொண்டுவர விருப்பம் தெரிவிக்காது. சிறு கட்சிகள் இன்று பல்கிப் பெருகி வருகின்றன. இதனை முன்னெடுத்து செல்வது மக்களாலேயே முடியும். ஆனால் இன்றைய மிக முக்கிய பிரச்னை, இந்த விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்றாலே யாருக்கும் எதுவும் தெரியாது என்பதுதான்.

http://www.ed.labonte.com/pr.html

Series Navigation

எட் லாபோண்டே

எட் லாபோண்டே