வாழும் இறப்பாய்…

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

சுந்தர் பசுபதி


வாழும்போது ஒரு விதமாயும்,
அவன் உயிர் போய் வீழ்ந்தபின்னே
ஒருவிதமுமாய்
மாற்றிப் பேசும் மாந்தரின் செயலுக்கு
நரம்பில்லா அவன் நாக்குதான் காரணமோ
என நான் வியந்ததுண்டு ஒரு காலம் …!!

**********

நாடாண்ட நடிகன் அவன்..
வாழுங்கால் வல்லவனாய் வாழ்ந்தானே ஒழிய
நல்லவனாய் வாழ்ந்திலன்…
விமரிசனம் தாண்டியவனும் அல்ல..
தாங்கியவனும் அல்ல…
காலன் அவனை அழைத்தபோது
ஊர் கூடி ஓலமிட்டது பொன்மனம் பூமியில் புதைந்ததாக…

ஆதிக்க வெறி பிடித்த ஆண்டை என்பர்
குலகல்வி திணிக்கப் பார்த்த குல்லூகப் பட்டரென்பர்
குறைகள் இல்லாமல் இல்லை, உண்டு அனேகம்
பூவுடல் நீத்தபின் மூதறிஞர் உதிர்ந்தார் என்பர்..

வஞ்சமுள்ள நெஞ்சம் உண்டு கஞ்சம் எனப் பழியும் உண்டு
குற்றமற்ற குணக்குன்று அல்ல..
திரையில் நடித்து , நிஜத்திலும் நடிக்கும்
மாபெரும் நடிகன்,
இயல்பாய் இருக்கப் பணித்தால் கூட
அதைப்போல் நடிக்க மட்டுமே முடிந்தவன்…
தலை சாய்ந்தபோது வையமே வாடியது
சிம்மக்குரலோன் சிதைந்ததாக

அரக்கி எனபர், கொடுங்கோலன் என்பர்
பல அரசுகளை பந்தாடும் படுபாவி என்பர்
நெருக்கடி நிலை கொண்டு வந்த நீலி என்பர்
கணவனை தானே கொன்ற காதகி என கதைப்பர்
தோட்டாக்கள் துளைத்து துடி துடித்து வீழ்ந்தபின்
அவரையே அன்னை என்பர்..

***************

மரணம்….

காலதேவன் தரும் இவ் விசேஷ அந்தஸ்து
மாய்மாலக்காரர்களை கூட
மகாத்மா ஆக்கி விடுகிறது…

மரணம் தின்றபின் மனிதனைப் பாடுவது
அதன் மீது மனிதனுக்கு இருக்கும் பயம் பொருட்டே…

செததபின் ஒலிக்கும் இந்த சிந்து
‘எனக்கின்ணும் காலம் உண்டு ‘
என்றெண்ணும் விடுதலை உணர்வே..

**********

இறப்பில் அல்ல..இருப்பிலேயே நாம்
எப்போது
நேசிக்கப்படப்போகிறோம்…

இரஙகல் கூட்டத்தில் மட்டுமின்றி
இருக்கும்போதே நாம் எப்போது
பாராட்டுப் பெறப்போகிறோம்
உண்மையாய்….

பாராட்டுக்கள் பிணமாலை போலன்றி
நிஜமாலையை நேர்மையாய் பெறும்
அந்த நியாயமான கழுத்து

நம்மில் யாருடையது… ? ? ?
***
sundar23@yahoo.com

Series Navigation

சுந்தர் பசுபதி

சுந்தர் பசுபதி