வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

பி.கே. சிவகுமார்


“உடன்படாதோரை வெறுக்காத மரபு, மாற்றுக் கருத்துகளை மதிக்கிற நாகரீகம், கண்ணியமான உரையாடல்கள் மூலமே நெருங்க முடியுமென்ற புரிதல், பொதுநோக்கத்திற்கான சமரசங்கள் மூலமே முன்னகர முடியுமென்ற ஜனநாயகப் பண்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எவரும் ‘வார்த்தை’யில் எழுதலாம்.” – தலையங்கத்தில் அழைக்கிறார் இணையாசிரியர் பி.கே. சிவகுமார்.

“ஒருகாலத்தில் உங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ‘திராவிட இயக்கங்களோடு’ தற்போது சமரசமாகிவிட்டீர்களா? தமிழக முதல்வரோடு உங்களை ஒரே மேடையில் பார்க்க முடிகிறதே? இது காலத்தின் கட்டாயமா அல்லது முதுமையில் அனைவரோடும் ‘சஹிருதயமாக’ இருப்போம் என்பதாலா?”

உங்களோடு சமகாலத்தில் வாழ்ந்து மறைந்துள்ள எழுத்தாளர் சுஜாதா பற்றி உங்களது கருத்து?

– உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் பதில்கள்.

“எங்களது போராட்டம் எங்களுடைய மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத்தானே தவிர, மற்றவர்களுக்குத் துயரத்தை விளைவிக்க அல்ல.” – பொருத்தமான நேரத்தில் துகாராம் கோபால்ராவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் தலாய்லாமாவின் நோபல் பரிசு ஏற்புரை.

“நின்று கால் நனைத்தால் குனிந்து செம்பவள நகம் பார்க்கலாம். மேலும் குனிந்தால் முகம் பார்க்கலாம். காவிரிக்குக் கொள்ளிடம் போல, பழையாற்றுக்கு நாகர்கோவில்”ஐயம் இட்டு உண் சிறுகதையில் நாஞ்சில் நாடன்.

“புதிய படத்தொகுப்பு முறை வேலைச் சிரமத்தை எளிதாக்கியிருக்கின்றதே அன்றி கதைசொல்லலில் நேரியலற்ற (Non-linear) தன்மையை அறிமுகப்படுத்தவில்லை. ஒளிப்பதிவிலும் வெளிப்புறப் படப்பிடிப்பு என்பது அரங்கத்தின் இன்னொருவிதமான தன்மையையே முன்வைத்தது. யதார்த்தமான வாழ்க்கையும் அதன் சூழலும் அரிதாகவே பதிவாயின. இலக்கத் தொழில் நுட்பம் (Digital Technology) எதையும் திரையில் நிகழ்த்தும் மாயத்தன்மை கொண்டிருந்தும் அது சண்டைக் காட்சிகளில் நடிகர்கள் தொங்கி பல்டியடிக்கும் கயிறுகளை அழிப்பதற்கே அதிகம் பயன்பட்டு வருகிறது. நுட்பங்கள் எப்போதும் அதனை இயக்குபவரின் கட்டளைகளையே செய்து முடிக்கின்றன. அந்தவகையில் திரைப்படத்துறையில் நுட்பரீதியாக நமக்கு இருக்கிற சாத்தியங்கள் முழுமையாகப் பயன்வேண்டுமெனில் மாற்றம் கதையின் மூலத்தில் நிகழ வேண்டும்” – அண்மைக் காட்சிகளின் முக்கியத்துவத்தையும் அது பிற மொழிகளிலும் தமிழிலும் பயன்படுத்தப்படும் விதத்தையும் ஆராய்கிற அறிவுபூர்வமான “முகங்களின் திரைப்படம் – காட்சிமொழிக் குறிப்புகள்” என்கிற ஒளிப்பதிவாளர் செழியனின் கட்டுரை.

“இடை அசைய நடந்து வந்து வாசலைப் பார்த்தாள். அவள் அழகு முழுக்க வெளிப்படுவது அப்போதுதான். அது அவளுக்குத் தெரியும். அவள் உடுத்தியிருந்த கறுப்பு பூப்போட்ட மஞ்சள் சேலை தனியாக உயிர்பெற்றதுபோல சரசரவென்று ஆடியது.”மன்மதன் சிறுகதையில் அ. முத்துலிங்கம்.

“இப்படிப்பட்ட கண்காட்சிக் கொடுமைகளின் உச்சம், 1906-ஆம் ஆண்டு ஓடா பெங்கா (Ota Benga) என்ற ஒரு காங்கோ பிக்மி, நியூயார்க் நகரின் ப்ராங்க்ஸ் (Bronx) மிருகக்காட்சி சாலையில் ஒரு காட்சிப்பொருளாக ஓர் உராங் உட்டான் குரங்குடன் ஒரே கூண்டில் அடைத்து வைக்கப்பட்டதுதான்.”இசையில் நனையும் காடு கட்டுரையில் சேதுபதி அருணாசலம்.

“அம்மா தன்விரலால் புழுதியில் எதையோ ரகசியமாகக் கிறுக்கி நான் அறியாமல் அழித்துக் கொண்டிருந்தாள். அம்மாவிற்கு எழுபது வயது முடிந்துவிட்டிருக்கிறது. அவள் தன் வயதை மறந்து சிறுமியைப் போலத் தெருவில் உட்கார்ந்து, விரலால் கோலம் எழுதி அழிப்பது வியப்பாக இருந்தது. அம்மாவின் விரல்கள் புழுதியை ஆசையோடு கோதிக் கொண்டிருந்தன.”திரும்பிச் செல்லும் மலைகள் சிறுகதையில் எஸ். ராமகிருஷ்ணன்.

சமீபத்தில் மலேஷியாவில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், இனம் சார்ந்த மலேஷிய அரசியல் கட்சிகளின் வரலாற்றையும் விரிவாக அறிமுகப்படுத்தும் ரெ. கார்த்திகேசுவின் மலேசியாவில் புதிய தொடக்கங்கள் என்ற முக்கியமான கட்டுரை.

“முருங்கையில இருக்கற அழகே தனிம்மா. எப்ப பார்த்தாலும் பச்சைப் பசேல்னு அழகான இலைகள். பூக்கற சமயத்தில் கிளைமுழுக்க வெள்ளித்தோடுகள் தொங்கறமாதிரி இருக்க்கும். அந்தப் பூ எவ்வளவு மணமா இருக்கும் தெரியுமா? காய் புடிச்சி தொங்க ஆரம்பிச்சிட்டா, பாக்க பாக்க கண்ணுக்கே குளிர்ச்சியாக இருக்கும். இதுக்காக ரொம்ப நாள் காத்திருக்கணும்னு இல்ல. ஒரு ரெண்டு வருஷத்துல மடமடன்னு வளர்ந்து நின்னுடும்.”கூடு சிறுகதையில் பாவண்ணன்.

“சுஜாதாவிற்கு பொருத்தமில்லாத ஒரு பாப்புலாரிடி இருக்கிறது. ஆனால் பொருத்தமான பாப்புலாரிடி மறுக்க்கப்படுகிறது. ஜெயமோகன் ஒருவர்தான் அவர்பற்றி சீரியஸ் தளங்களில் எழுதுகிறார்.”எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது என்ற தலைப்பில் பல விஷயங்களைத் தொட்டுப் பேசும் வ. ஸ்ரீனிவாசன் கட்டுரை.

“எனது சிந்தனைகளை வரிசைப்படுத்தி எழுதவேண்டுமென்று நினைப்பதில்லை, அப்படிச் சொல்வதால் ஒழுங்கின்றி எதையாவது சொல்ல நினைக்கிறேன் என்று பொருளல்ல. அதாவது ஒழுங்கற்ற வரிசையில் என் சிந்தனைகளை நிறுத்துவதேகூட, ஒருவித ஒழுங்கின் அடிப்படையிலேயே ஆகும்.” – ப்லேஸ் பஸ்க்காலின் சிந்தனாவாத ஆளுமையை அறிமுகப்படுத்தும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கட்டுரை.

தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா, நிர்மலா, வ.ஐ.ச. ஜெயபாலன், ஹரன் பிரசன்னா, பி.கே. சிவகுமார் எழுதிய கவிதைகள்.

கவிதைத் தொகுப்புகள் நூலகங்களுக்கு வாங்கப்படாதது குறித்தும் அவை வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கவிஞர்கள் சார்பாக வலியுறுத்தும் “கவிதைக்குக் குரல் கொடுப்போம்” என்ற லதா ராமகிருஷ்ணன் கட்டுரை.

பா. விசாலம் எழுதிய மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய் நாவலுக்கு வே. சபாநாயகம் எழுதிய புத்தக விமர்சனம்.

“ராஜேஸ்வரி அக்கா இல்லாத சமயத்தில் ஆகாயப் பந்தலிலே பாடல் ஒலிபரப்பானால் அம்மா உடனே என்னிடம் டிரான்ஸிஸ்டரைக் கொடுத்து, ‘போ… போயி ராஜேஸ்வரி அக்காட்ட கொண்டு குடு, சந்தோஷப்படுவா’ என்பாள். நான் உற்சாகமாக ஓடிப்போய, ‘அக்கா… பந்தல் போடுது பந்தல் போடுது’ என்பேன். ராஜேஸ்வரி அக்கா முகமெல்லாம் மலர்ந்து என்னையும் டிரான்ஸிஸ்டரையும் வாரியணைத்துப் பாடலைக் கேட்டு மகிழ்வாள்.”சில மனிதர்கள், சில பாடல்கள் கட்டுரையில் சுகா.

“ரமேஷ் தன் மனதிற்குள் ‘நான் ராஜாளி! நான் ராஜாளி…” என்று திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். அவனுக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.”இழப்பீடு சிறுகதையில் இறையன்பு.

ஜெயமோகன் மீதான நடிகர் சங்கம் தடை சரியா? – சட்ட வல்லுனர் கே.எம். விஜயனின் கட்டுரை.

“சாவு விஷயத்தில் அதீத உற்சாகம் காட்டுவதில் மலையாளிகளை அடித்துக் கொள்ள வேறே ஆள்கூட்டம் உலகமெங்கிலும் தேடினாலும் கிட்டாது.”குட்டப்பன் கார்னர் ஷோப் கட்டுரையில் இரா. முருகன்.

பொருள் பதிந்த சமரசம் என்ற தலைப்பில் சுஜாதாவுக்கு கோபால் ராஜாராம் எழுதிய அஞ்சலி.

தமிழ் தமிழர் தமிழவேள் என்ற தலைப்பில் சிங்கப்பூரில் தமிழின் நிலை குறித்து எம்.கே. குமார் எழுதிய கட்டுரை.

ஏ.ஜே.பி. தைலர் எழுதி மணி வேலுப்பிள்ளை மொழிபெயர்க்கும் “மார்க்சியம் ஒரு மீள்நோக்கு”.

“முடிந்தால் நமது மாணவர்களை மகாத்மா காந்தி மாதிரியும் மகாகவி பாரதி மாதிரியும் அமரத்துவம் வாய்ந்தவர்களாக ஆக்கிவிடுவது; அது இயலாத பட்சத்தில், குறைந்தபட்சம் அந்த மாணவர்கள் மீது அன்பாவது செலுத்துவது!”“ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்” கட்டுரையில் வார்த்தை இதழின் ஆசிரியர் பி.ச. குப்புசாமி.

Series Navigation

author

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

Similar Posts