வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

மத்தளராயன்


சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.

இங்கே எழுத வந்தது ஒரு அவஸ்தையைப் பற்றி.

வெங்கடசாமிநாதன் பேச வந்தார். க.நா.சு, அமிதாப்பச்சன், ஜோதிபாசு, மிதுன் சக்கரவர்த்தி, வண்ணநிலவன், சிமெண்ட் டால்மியா, சோ என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே லேசாகத் தொடங்கியது. (இவர்கள் எல்லாம் எப்படி ஒரே கோட்டில் வருகிறார்கள் என்று எல்லோரும் ஒரு வாரம் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் சொல்கிறேன்).

எழுத்தாளர் ஐராவதம் பேசும்போது சுத்தமாக ஒன்றுமே கேட்காமல் போனது. நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்டெல்லா புரூஸையும் ஞானக்கூத்தனையும் பார்க்க அவர்களும் சங்கடத்தோடு என்னைப் பார்த்தார்கள். அவ்வளவுதான் அவர்களால் செய்யமுடிந்தது.

மேடையில் உட்கார்ந்திருந்த எழுத்தாளர் சிஃபிடாட் காம் வெங்கடேஷுக்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பி ‘எத்தனை பக்கம் பேசப் போகிறீர் ‘ என்று விசாரித்தேன். ஒன்பது பக்கம் ஏஃபோர் சைசில் என்று பதில் கொடுத்தார்.

வெங்கடேஷ் பேச எழுந்து வந்தார்.

இவர் பேசுவதாவது முழுசும் காதில் விழ வேணுமே என்று எழுத்தாளர் விட்டல்ராவைத் தள்ளிக் கொண்டு நான் முன் வரிசையில் போய் உட்கார, இன்னும் பலமாகப் பின்னால் இருந்து மழைக்காலக் கடல் போல் சத்தம்.

இது பொறுப்பதில்லை என்று நண்பர் விருட்சம் அழகியசிங்கரிடமும், ழ ராஜகோபாலனிடமும் முறையிட, ஞானக்கூத்தன் பரிந்துரைக்க, அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு பின்னால் ஓடினார்கள். ஊஹும், சத்தம் கூடியதே ஒழியக் குறைந்ததாகத் தெரியவில்லை.

வெங்கடேஷுக்குத் தொண்டுள்ளமும் அதிகம். தொண்டை வளமும் அதிகம். கொண்டு வந்த காகிதத்தை போடியத்தில் வைத்து விட்டுச் சுபாவமாகக் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தார்.

இப்படிப் பேசினால்தான் எடுபடும் என்றார் விட்டல்ராவ்.

தட்டில் காராசேவையும், பிஸ்கட்டையும் வைத்துக் கொண்டு ஒருத்தர் மேடைக்கு ஓடி எல்லோருக்கும் கொடுத்து, பேசிக் கொண்டிருந்த வெங்கடேஷுக்கும் தட்டை நீட்ட, நானும் ஞா.கூ சாரும் ரசித்துச் சிரித்தோம். வெங்கடேஷுக்கும் சிரிப்பு வந்திருக்கும். அத்தனையையும் மீறி அவர் நன்றாகப் பேசினார்.

ஆனாலும் இந்த மாதிரி இலக்கிய விழாக்களில் நான் பேசுவதாக இல்லை – விழா நடந்து கொண்டிருக்கும்போதே சிற்றுண்டி வினியோகம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று யாராவது அவசரச்சட்டம் பிறப்பிக்கும் வரை.

அதுவும் பாரதி வசித்த திருவல்லிக்கேணி வீடு போன்ற இலக்கியப் புனிதத் தலங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும்போது சாப்பாடு, சிற்றுண்டி விநியோகத்தை அறவே விட்டொழிக்க வேண்டும்.

சுற்றி நூறு வாய்கள் காராபூந்தி கொறித்துக் கொண்டு இருக்கும்போது கவிதையில் மரபுத் தொடர்ச்சி பற்றிப் பேசச் சொல்வது போல் அபத்தமான விஷயம் ஏதுமில்லை.

பிச்சமூர்த்தி புகழ் வாழ்க. கிருஷ்ணா ஸ்வீட் காராபூந்தியும் அது பாட்டுக்கு வாழ்க.


மலையாளத் திரைப்பட நடிகர் எம்.எஸ்.திருப்புணித்துற பற்றிப் பேச வேண்டும்.

மாடத்திப்பரம்பில் சேஷன் வெங்கட்ராமன் என்ற மலையாளத் தமிழரான இவர், மலையாள வளமுறைப்படித் தான் பிறந்த திருப்புணித்துற ஊர்ப் பெயரால் அறியப்படுகிறார். (இதுவும் இடவாகுபெயரோ என்று தெரிந்தவர்கள் சொால்லவும்). எரணாகுளத்தைத் தொட்டடுத்து இருப்பது இந்தத் திருப்புணித்துறை. திருப்பணித்துறை மருவித் திருப்பணித்துறை ஆகி இருக்கலாம்.

எம்.எஸ்.திருப்புணித்துற மலையாளத் திரையில் பரவலாக அறியப்பட்ட நகைச்சுவை நடிகர். (காலஞ் சென்ற) அடூர் பாஸி, பகதூர், ஜகதி ஸ்ரீகுமார், மாமு கோயா, கொச்சி ஹனிபா (தமிழிலும்)என்று நம் தமிழ் நகைச்சுவை நடிகர்களுக்கு இணையான நடிகர்கள் அங்கேயும் உண்டு – விவேக் போல் ஒரு திறமைசாலி இன்னும் அங்கே உருவாகவில்லைதான்.

இந்த நகைச்சுவை நடிகர்களின் கூட்டத்தில் தனித்து நிற்பவர் திருப்புணித்துற. நகைச்சுவையும், குணச்சித்திரமும் கலந்து இவர் நடிக்க ஏற்கும் பாத்திரங்கள் பலவும் நம்பூதிரியாகவே அமைந்து விடும். முன்குடுமியும் ஆகிருதியுமாக நம்பூதிரியாக நடிக்க வேண்டுமானால், மலையாளத்தில் இரண்டு நடிகர்களைத் தேடிப் போவார்கள் போல் இருக்கிறது – ஒன்று நெடுமுடி வேணு. மற்றவர் திருப்புணித்துற.

வேணுவும் இவரும் இரண்டு நூற்றாண்டுகள் முந்திய நம்பூதிரிகளாகத் திரையில் வாழ்ந்த ஹரிஹரனின் ‘பெருந்தச்சன் ‘ திரைப்படம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. வேணுவின் நடிப்புக்கு ஈடு கொடுத்துப் பெருந்தச்சனாக அற்புதமாக நடித்திருப்பார் திலகன். தேசிய அளவில் அவர் இன்னும் அங்கீகாரம் பெறாதது ஆச்சரியமே.

ஹரிஹரனும் தான் – தமிழில் ரகுவரன் நடித்து இவர் இயக்கிய ‘ஏழாவது மனிதன் ‘ குறிப்பிடத் தகுந்த இன்னொரு படம். முழுக்க முழுக்கப் பாரதி பாடல்களுக்கு நேர்த்தியாக இசையமைத்திருந்தார் எல்.வைத்தியநாதன்.

திருப்புணித்துறாவுக்குத் திரும்புவோம். மலையாள ஏஷியாநெட் சீரியல்களில் அடிக்கடி தட்டுப்படும் இவர் தமிழிலும் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்தார். மம்முட்டியின் முதல் தமிழ்ப் படம் நினைவிருக்கிறதா ? கல்யாணத் தேன்நிலா என்று தர்பாரி கானடாவில் ஜேசுதாஸ் பாட்டு வருமே ? அந்தப் படத்தில் நாகேஷின் சைட்-கிக்காக வருகிறவர் திருப்புணித்துற தான். நேரங்கெட்ட நேரத்தில் சங்கடமாக எதாவது சொல்லி நாகேஷின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் நகைச்சுவைப் பாத்திரம் அது.

திருப்புணித்துற ஒரு கர்னாடக சங்கீத வித்துவான் என்பது சிறிய ஆச்சரியம். தமிழ் நகைச்சுவை நடிகர்களில் எனக்குத் தெரிந்து கர்னாடக சங்கீதத்தில் ரசனை உள்ளவர் நீலு தான். அவர் கச்சேரி செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் செம்பை வைத்தியநாதய்யர் பாணி வித்துவானான திருப்புணித்துற, முறையான சங்கீதம் பயிலாமலேயே கேள்வி ஞானத்தின் மூலம் தேர்ச்சி பெற்று கச்சேரி செய்கிறார். ஒரு தடவை இந்து பத்திரிகையில் கூட கச்சேரி விமர்சனம் படித்தேன்.

திருப்புணித்துற கர்னாடக சங்கீத வித்துவான் என்பதோடு கதாபிரசங்கமும் செய்வார் என்பது இன்னொரு செய்தி. அவரும் அவர் சகோதரி கோமதி மகாதேவனும் சனிக்கிழமை காலையில் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி நடத்தியதைப் பார்த்ததே இதை எழுதத் தூண்டியது.

திருப்புணித்துற ஊர்க்காரரான இன்னொரு கர்னாடக – இந்துஸ்தானி இசைக் கலைஞர் மிருதங்க வித்துவான் டி.வி.கோபாலகிருஷ்ணன்.

(இந்தப் பகுதிக்கு இலக்கியவாதிகளின் ஸ்டைலில் ‘எம்.எஸ்.திருப்புணித்துறாவை முன்வைத்து ‘ என்று பெயர் வைக்கலாமா என்று யோசித்தேன். ஸ்தூல சரீரமுள்ள அவரை முன் வைத்தால், பின்னால் இருப்பதை எல்லாம் மறைத்து விடுவார் என்பதால் அப்படிச் செய்யவில்லை.)


என் நண்பர் ஓவியர் நாகராஜன் சொன்னார் – ‘நமக்கு ஒரு தொடர்ச்சியான ஓவிய மரபு இல்லை ‘. இது ஒரு முக்கியமான செய்தி.

அந்த மரபுத் தொடர்ச்சி இல்லாத காரணத்தால், ஓவியமொழி என்ற ஒன்றை நாம் இதுவரை இங்கே அனுமதிக்கவில்லை. கவிதை மொழி போல், கதை மொழி போல், ஓவியனைத் தன்போக்கில் சிந்திக்க விடும் சுதந்திரத்தை (இதை கலை கலைக்காகவே என்று சொல்வதாகத் தயைகூர்ந்து புரிந்து கொள்ள வேண்டாம்) நாம் தருவதில்லை.

ஓவியம், ‘தத்ரூபமாக ‘ அதாவது இருக்கிற ஒன்றின் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கவேண்டும் என்று ஓவியனின் மனதையும், சிந்தனையும் கட்டிப் போட்டு, அவன் கைகளுக்கு மட்டும் இயங்க அனுமதி கொடுப்பதின் மூலம் நாம் ஓவியம் மூலம் நம்மால் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிந்தனை வெளியையே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம். இந்த ‘craftmanship ‘ எதிர்பார்ப்பை வெ.சா, ‘ஆசாரித்தனம் ‘ என்பார். அந்தச் சொல்லின் சாதிய வேர்கள் காரணமாக அச்சொல்லாடலைத் தவிர்க்கிறேன்.

(சிற்பத்தின் நீட்சியான தச்சுக் கலையைக் கேரளக் கோவில்களில் காணலாம். மரக் கோவில்கள் தான் பலவும் அங்கே. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் பன்றியூர் அம்பலத்தை நிருமாணித்த பெருந்தச்சன் பற்றிய கொஞ்சம் போல் உண்மையைச் சார்ந்த புனைகதைகள் நினைவு வருகின்றன)

ஒரு கவிஞனின், கதைஞனின் மொழியோடு, எழுத்து-ஒலி வடிவ மொழி கடந்து, வரிகளுக்கு நடுவே ஊடாடி வரும் மெளனத்தின் மூலம் அவன் பேசுவதோடு நம்மால் ஒத்திசைய முடிகிறது. அந்த ஒத்திசைவை ஓவியத்துடன் நாம் மேற்கொள்ள இயலவில்லை என்பதற்கான காரணங்களை நம் மரபணுக்களில் தேடவேண்டி இருக்கலாம்.

சால்வடொர் டாலியின் ‘நிலைத்த காலம் ‘ படத்தை இந்தியாவில் காட்சிக்கு வைத்தால், ‘நட்டுக் கழண்ட கேசு ‘பா இதை வரஞ்சவன் .. பாரு கடியாரம் உருகித் தொங்குது.. இன்னொன்னு மரத்துலே தூக்கு மாட்டிட்டு நிக்குது.. இந்தாளு அவன் மணிக்கட்டுலே இருக்கற கடியாரத்தையே சரியாப் பாத்திருக்கானான்னே தெரியலே .. படம் போட வந்துட்டான் ‘ என்று தான் பொதுவான எதிர்வினை ஏற்படும்.

பிகாசோவின் ‘குவர்னிகா ‘ ஓவியம் இந்தியச் சூழலில் நகைப்பையே உண்டாக்கும். ஸ்பானிய உள்நாட்டுக் கலவரம் காரணமாக – குவர்னிகா என்ற கிராமத்தில் நாஜிகள் தூண்டுதலில் நிகழ்ந்த அவலம் அது- கொல்லப்பட்டவர்கள் பற்றிய, ஒரு கிராமமே அழிந்துபட்டது பற்றிய அந்த மகத்தான சோகத்தின் ஓவிய மொழியிலான பதிவு என்பதை நாம் புரிந்து கொள்ளச் சற்றே நம் மனவாசலைத் திறந்து வைத்தாலே போதும். அது சாத்தியமாகத போது, ‘என்னய்யா இருக்கு, ஒரு பல்ப், மாட்டுத்தலை, குதிரை, கூறு போட்டு வச்ச மாதிரி உடம்பு அங்கங்கே ‘ என்று தான் எதிர்வினை வரும்.

வியத்னாமை அமெரிக்க வல்லரசு ஆக்கிரமித்தபோது, மைலாய் கிராமத்தில் பொழிந்த குண்டுமழையில் ஒரு கிராமமே நிர்மூலமானது.

இந்தச் சோகத்தைச் சொல்லும் கவிஞர் வைதீஸ்வரனின் ‘மைலாய் வீதி ‘யின் கவிதைமொழி நமக்குப் புரிகிறது.

‘இன்று

தெருவிலே நடக்காதே, திரு.மனிதா!

இருபதாம் நூற்றாண்டு

தெரியுமா உனக்கு ?

திரும்பி வா உள்ளே.

வீட்டின் இருட்டு மூலையில்

குருட்டுப் பறவையாய்ப் பதுங்கு.

இதயத்தைப் பிடித்துக் கொள்.

இருபதாம் நூற்றாண்டு.

வெளியில் பல கிளிகள்

மிதிபட்டுக் கிடக்குதங்கே!

குப்பைத் தொட்டியில்

குழந்தைத் தலைகளும் ..

மலத்தொடு பிணங்கள்

கலந்து நாறும் கோரங்கள்.

பச்சை வயல்களெங்கும்

செங்குருதி பாயக் கண்டேன்.

நம்பிக்கையோடு

அறுவடைக்குப் போன மக்கள்

அறுபட்டு, உயிரற்று ஊதிப்போய்,

வயற்காட்டுப் பொம்மைகளாய்

வழியெங்கும் நிற்கக் கண்டேன்,

உலகப் பருந்துகள்

பறந்தோடிக் கூடிவந்து

நிலமெங்கும் ‘சதை சதை ‘யென்று

இறகடித்துக் கொத்தும்

விருந்து கண்டேன்.

இன்றைக்குப் படித்தாலும் நான் பார்க்காத வியத்னாமியக் கிராமத்தில் நாற்பது வருடம் முன்னால் அரங்கேறிய ஓர் அவலத்தை வைதீஸ்வரனின் கவிதைமொழி நமக்கு நிகழ்கால அனுபவமாக்கித் தருகிறது. இந்தத் தொடர்ந்த அனுபவப் பகிர்வு நம்மில் மிச்சமிருக்கும் காருண்யத்தை, மனித நேயத்தை, மன ஈரத்தை வரண்டு போக விடாமல் செய்து கொண்டே இருக்கும்.

கவிதைமொழியில் இல்லாமல் ஓவியமொழியில் வைதீஸ்வரன் இதைச் சொல்லியிருந்தால் நம்மில் எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டிருப்போம் ?

பிகாசோவின் ‘குவர்னிகா ‘ அவருடைய ஓவிய மொழிக் கவிதை.


தமிழ் நாடக உலகில் முதன்முதல் மேடையில் பங்கேற்ற பெண் யார் ? அவர் எந்தப் பின்னணியில் நடிக்க வந்தார் ? தொடர்ந்து பெண்கள் வரத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன ? இவை போன்ற வரலாற்றுத் தீர்வுகள் இன்னும் திரட்டப்படவில்லை.

இதுவரை வெளிவந்த தமிழ் நாடக வரலாற்று நூல்களில் இடம் பெறும் சில பெண்கள் உண்டு. கும்பகோணம் பாலாமணி அம்மாள், பி.எஸ்.தாணுவம்மாள், ராஜாமணி அம்மாள், டி.எம்.கமலவேணி, கொண்டித்தோப்பு சாரதா, டி.பி.ராஜலக்ஷ்மி, கே.எஸ்.அனந்தலக்ஷ்மி, டி.டி.தாயம்மாள் என்று அந்தப் பட்டியல் நீளும்.

கே.பி.ஜானகி அம்மாள் என்ற விடுதலை வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான பெண்மணி இசை நாடகத்திலிருந்து தன் வாழ்வைத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் செயல்படத் தொடங்கிய ப்ின்பு, ‘அம்மா ‘ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஜானகியம்மா, தனது நாடக வாழ்க்கை பற்றிப் பேசியதுமில்லை. பேச விரும்பியதுமில்லை.

(அ.மங்கையின் ‘பெண்-அரங்கம் – தமிழ்ச்சூழல் ‘ புத்தகத்திலிருந்து)

ஸ்நேகா பதிப்பகம், சென்னை வெளியீடு – விலை ரூ 90/ snehapublishers@hotmail.com


மருத்துவ ராசிபலன் பற்றிப் போன வாரம் எழுதியிருந்தேன். அதைப் படித்த என் நெருங்கிய நண்பரும் சீனியர் பத்திரிகையாளரும், இலக்கிய ரசிகருமான திரு எஸ். சொன்னது இது –

‘பல வருஷம் முந்தி எங்க பேப்பர்லே ராசிபலன் போடறபோது, சிம்மராசிக்கு, ‘ஆங்கிலத்தில் செய்தி ‘ன்னு போட்டுட்டாங்க. இதுக்கு என்ன அர்த்தம்னு வரிசையா டெலிபோன் கால். ஒண்ணுமில்லே, கம்பாசிட்டர் ‘அனுகூலமான செய்தி ‘யை அவசரத்துலே அடிச்சது அப்படி. ரேடியோ நிகழ்ச்சி நிரல் போட்ட கையோட அச்சுக் கோக்க உர்காந்தாரோ என்னமோ ‘.


eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்