வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

மத்தள ராயன்


வேணாம்யா என்றாலும் கார்க் கதவைத் திறந்து விட்டுப் பொட்டிக்குக் கை நீட்டுகிற டிரைவர், கதவைத் தட்டி விட்டு அறைக்குள் வந்து, குளிர்பதனம் சரியாக இருக்கா என்று மேற்கூரையைப் பார்க்கத் தலை திருப்பி உலகையே ஆசீர்வதிப்பது போல் கை உயர்த்திவிட்டு, மினரல் வாட்டர் பாட்டில் மாற்றிப் போகிற காண்ட்ராக்ட் சிப்பந்தி, அறைக் கதவின் கண்ணாடிச் சதுரத்தை அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஈரத் துணியால் துடைக்கிற (என்னத்துக்கு ?) பையன், மூணு தொலைபேசி, லேப்டாப், கார்ப்பரேட் கிரடிட் கார்ட் இன்னோரன்னது மட்டும் சீனியர் மானேஜ்மெண்ட் என்றால் நன்றாகத் தான் இருக்கும். இல்லையாம்.

பஞ்ச பஞ்ச உஷத் காலத்தில் இயற்கையை அனுபவிக்கிற பாவனையில் ஊருக்கு வெளியே ஏதோ ரெசோர்ட்டில் மில்லியன் டாலர்களில் பேசிக் கொண்டு நடந்து, மதியம் ஒரு மாறுதலுக்காகத் தரையில் திண்டு தலையணை போட்டுச் சாய்ந்து ரத்தினக் கம்பளத்தில் விவாதம் நீண்டு, மொபைலில் லண்டனையும் பெர்லினையும் அவ்வப்போது தொட்டுச் சூடேறி, சாப்பாட்டுக்கு நடுவே மில்லியன் டாலர்களைச் சிந்தித்து, நடுராத்திரிக்கு அப்புறமும் தொடர்ந்து, டாய்லெட்டில் மில்லியன் டாலர்களை சிறுநீரோடு விட்டு, பக்கார்டியோடு திரும்ப விழுங்கி, ஒரு ஜோக், பிசினஸ் ட்ரைவர், சுக்கா ரொட்டி, போர்ஸ் மல்ட்டிப்ளையர், உருளைக்கிழங்கு சிப்ஸ், பிசினஸ் மாடல், எனாபிளர், பிளடி மேரி, ரோட்மேப், சுட்ட அப்பளம், மூவாயிரம் பேரை நிர்வகிக்க கவர்னன்ஸ் மாடல், தயிர்ப் பச்சடி, ரிட்டர்ன் ஓஃப் இன்வெஸ்ட்மெண்ட், ரசகுல்லா, ஆர்கானிக் க்ரோத், இன்னொரு ஜோக், கபாசிட்டி யுடிலைசேஷன், நீங்க நாவலிஸ்டாமே, என்ன சப்ஜக்ட் எழுதுவீங்க, வேல்யூ ஓஃபரிங்க், டார்கெட் ரிவ்யூ, எத்தனை மில்லியன் டாலர் …

ஒன்றரை நாள் முழுக்க டாலரில் சுவாசித்து, டாலரில் காலைக் கடன் கழித்து, டாலரின் சுதி ஏற்றிக் கொண்டு மூலவரோடும் சக உற்சவர்களோடும் சடுகுடு ஆடி விட்டுத் திரும்பினால் பசியை மீறிக் கொண்டு கண்ணைச் சுழற்றுகிறது.

நேற்று ராத்திரி தொலைத்த தூக்கத்தைத் திரும்பப் பிடிக்க வேண்டும் – மில்லியன் டாலர் கனவில் வராத உறக்கம் …. கதையும் கவிதையும், பிழைத்துக் கிடந்தால் பார்த்துக் கொள்ளலாம்…

****

தமிழில் சிறந்த குறுநாவல் எது ? உடன் நவில்க என்று கேட்டால் யோசிக்க வேண்டி வரும்.

இந்தத் ‘தலை சிறந்த நாவல், குறுநாவல் ‘ என்று வரையறுத்து முழங்குவது காலை ஏகத்துக்கு வீசிப்போட்டு நடக்கிற விஷயம். இதுக்கு முதலில் செய்ய வேண்டியது யாதெனில், தமிழில் நேற்று ராத்திரி எட்டே முக்கால் மணி வரை வெளியான அத்தனை நாவல், குறுநாவல்களையும் வாசல் விளக்கு ப்யூஸ் போன லைப்ரரி, பளிச்சென்ற விற்பனையாளினி உள்ள புதுப் புத்தகக் கடை, அழுக்கு வேட்டியும் தாடியுமாக ஆழ்வார் பெஞ்சில் ஆரோகணித்திருக்கும் பழைய புத்தகக் கடை, நண்பர்கள், சத்ருக்கள், கோடி வீட்டு எபனேசர் சார், அபுசாலி வைத்தியர், ஒண்ணு விட்ட சித்தப்பா (அவர் வீட்டில் மாத நாவல் வாங்கினால்), பழைய பேப்பர் வியாபாரி அஞ்சுமலை இன்னோரன்னோரையும், இடங்களையும் தேடி நடந்து ஒரு குறுநாவல் விடாமல் – அட்டை காணாமல் போயிருந்தால் பரவாயில்லை – சேகரிக்க வேண்டும். அப்புறம் ஆப்பீஸ் வேலை, ராத்தூக்கம், சாயந்திர டிபன் எல்லாவற்றையும் துறந்து சேகரித்ததையெல்லாம் ஒன்று விடாமல் படிக்க வேண்டும். நாலு பாரசெட்டமால் மாத்திரை, பத்து கிளாஸ் சாயா, பழக்கமிருந்தால் சிகரெட் அல்லது பீடி இவற்றின் துணையோடு தலை சிறந்த ஆயிரம், தலை சிறந்த நூறு, தலை சிறந்த பத்து என்று பட்டியல்கள் போட்டுக்கொண்டே போக வேண்டும். ஆச்சா, ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு ரெடியா ? மேடையில் ஏறித் தொண்டையைக் கனைத்துக் கொண்டு ‘மிகச் சிறந்த தமிழ்க் குறுநாவல் ‘ என்று அறிவிக்கத் தயாராகிறீர்கள். கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். உங்களைப் போலவே நண்பர்கள், சத்ருக்கள், ஒண்ணு விட்ட சித்தப்பா உள்ள இன்னொருத்தர் பக்கத்தில் மேடை போட்டு, ‘தமிழில் மிகச் சிறந்த குறுநாவல் ‘ என்று ஆரம்பித்திருப்பார். அவர் தேர்ந்தெடுத்ததை நீங்கள் மூக்குக்கு நாலு செண்டிமீட்டர் தள்ளிப் பிடித்து வாசனை பிடிக்கக்கூடப் பிரியப்பட மாட்டார்கள்.

ஆக, சிறந்த, மிகச் சிறந்த போன்ற ரிலேட்டிவிடி சார்ந்த பிரயோகங்கள் நம்மை எங்கேயும் கொண்டு நிறுத்தப் போவதில்லை. எனக்குப் பிடித்த, எனக்கு மிகவும் பிடித்த – அவ்வளவே வேண்டியது.

சார்வாகனின் ‘அமர பண்டிதன் ‘ படித்திருக்கிறீர்களா ? விஷ்ணு நாகராஜனின் ‘கொடுகொட்டியாட்டம் ‘ படித்திருக்கிறீர்களா ? பொ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம் ‘ படித்திருக்கிறீர்களா ? ராஜநாராயணனின் ‘கிடை ‘ படித்திருக்கிறீர்களா ? ஸ்ரீதரனின் ‘ராமாயணக் கலகம் ‘ படித்திருக்கிறீர்களா ? நாகூர் ரூமியின் ‘குட்டியாப்பா ‘ படித்திருக்கிறீர்களா ? ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு ‘ ? ஜெயமோகன் பாலசங்கராக அவதாரம் எடுத்துக் கணையாழியில் எழுதிய ‘அம்மன் மரம் ‘ ?

எனக்குப் பிடித்த குறுநாவல்களில் இவையெல்லாம் (இன்னும் குறிப்பிட அவகாசம் இல்லாத பலவும் – என்னுடைய ‘விஷம் ‘ உட்பட) அடங்கும்.

ஆமா, பிடித்த தான். தலைசிறந்த என்றெல்லாம் ஒரு சுக்கும் இல்லை.

****

என் நண்பர் ஹரிகிருஷ்ணன் மிதிலையில் ராமன் வரக் கண்ட பெண்கள் மத்தியில் உண்டான பரபரப்பு பற்றி அழகாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வந்ததுக்கு நானும் ஒண்ணு சோதிச்சோட்டே.

காவிய நாயகன் ராமன். அவனைக் கண்ட மிதிலைப் பெண்டிர் கோலத்தைக் கம்பன் சித்தரிப்பது மகாகவிகளுக்கே உரிய கற்பனையோடுதான். கம்பராமாயணத்தில் அனுபவித்துப் படித்ததை, பிற்காலத்தில் நீட்டி நீட்டி நீட்டி நீட்டி ஒண்ணரையணா ராஜாக்கள், தொப்பை பெருத்த ஜமீந்தார்கள் ஊர்கோலம் போகும்போதெல்லாம் பேதை, பெதும்பை தொடங்கி மெனோபாஸ் அம்மையார்கள் வரை அந்த ‘திவ்ய தேகங்களை ‘க் கண்டு கட்டழிந்து நிற்பதாகவும், இன்னும் ஒருபடி மேலே போய், ‘என் மகள் உன் மேல் காதல் வயப்பட்டு ஊண் உறக்கம் இல்லாமக் கிடக்கா, கொஞ்சம் வந்து அவளோட கூடி சந்தோஷத்தைக் கொடு ‘ என்று பெண்ணுக்கு அம்மாவே இந்தக் கிழட்டு முடியாண்டித் தொப்பையன்களிடம் போய் முறையிடுவதாகவும் பிற்காலத்தில் நிறையப் பாடினார்களே, நியாயமா ? பாடினவனை விட்டுவிடலாம் – பாவம், வயிறு இருக்கிறதே அவனுக்கும் குடும்பத்துக்கும். பாடச் சொன்னதுகளை நிற்க வைத்துக் காயடித்திருக்க வேணாமோ ?

****

மக்கள் கவியாக மலையாளத்தில் புகழப்படும் மூத்த கவிஞர் ‘குஞ்ஞுண்ணி மாஷ் ‘ (குஞ்சுண்ணி வாத்தியார்). ஒரு குழந்தைக் கவிஞராகவும் பிரபலமான இவரின் குறுங்கவிதைகள் சில –

நுறுங்ஙு கவிதகள்

—-

சிறகடிபோலும் கேள்ப்பிக்காதெ

பறக்கும் பட்சிக்கு

ஒரு சிறகு ஆகாசம்

மறு சிறகு ஏதென்னு அறியில்ல

அறியும்வரெ இக்கவித அபூர்ணம்.

சிறகடிப்பு கூட எழுப்பாமல்

பறக்கும் பறவைக்கு

ஒரு சிறகு வானம்

மறு சிறகு எதுவென்று தெரியவில்லை

அறியும்வரை இக்கவிதை பூர்த்தியாகாது.

****

பசுத் தொழுத்தில்ங்கல் பிறன்னு வீணதும்

மரக் குரிசிமேல் மரிச்சுயர்நதும்

வளரெ நன்னாயி, மனுஷ்ய புத்ரா, நீ

உயிர்த்தெண்ணீற்றதோ, பரம விட்டித்தம்.

பசுத் தொழுவத்தில் பிறந்ததும்

மரச் சிலுவையில் மரித்ததும்

மிக நன்று, மனுஷ்ய புத்ரனான யேசுவே. நீ

மறுபடி உயிர்த்தெழுந்தது முட்டாள்தனம்.

ஏசுவிலாணு என் விச்வாசம்

கீசயிலாணு என் ஆச்வாசம்.

என் நம்பிக்கை ஏசுவில்.

என் ஆறுதல் பணத்தில்.

****

குருவாயூரூரேக்குள்ள

வழி வாயிச்சுக் கேள்க்கவே

என்னில் நின்னு என்னிலேக்குள்ள

தூரம் கண்டு அம்பரன்னு ஞான்.

குருவாயூர் போக வழி எது என்று

விசாரித்தேன். படித்துச் சொன்னபோது

என்னில் இருந்து எனக்குள்ள

தூரம் கண்டு மலைத்தேன்.

****

ஒரு தீப்பெட்டிக் கொள்ளி தரூ

கூடு தரூ

ஒரு பீடி தரூ

விரலு தரூ

சுண்டு தரூ

ஞானொரு பீடி வலிச்சு ரஸிக்கட்டெ.

ஒரு தீக்குச்சி கொடு

தீப்பெட்டி கொடு

ஒரு பீடி கொடு

விரல் கொடு

உதடு கொடு

நான் ஒரு பீடி புகைத்து மகிழ்கிறேன்.

****

மத்தளராயன்

Series Navigation