வாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

மத்தளராயன்


தீபாவளி மருந்து. இது என் பாட்டியம்மா ஸ்பெஷல் சமாசாரம்.

‘ கொழந்தே..ஆறுமுகம் செட்டியார் கடைக்கு ஒரு விசை ஓடிப்போய் இதெல்லாம் வாங்கிண்டு வந்துடு..மணக்க மணக்க தீபாவளி மருந்த்து கிளறித் தரேன்.. ‘

பாட்டி லிஸ்டில் புலிப்பாலையும் காண்டாமிருகக் கொம்பையும் தவிர மற்ற எல்லாம் இருக்கும்.

தீபாவளிக்கு கணக்கு வாத்தியார் பட்டாசுக் கடை போட்டிருப்பார். அங்கே நின்று வேடிக்கை பார்க்க விடாமல், சந்தோஷமாக எடுபிடி வேலை செய்ய விடாமல், மளிகைக்கடைக்கு விரட்டப்படுவேன்.

நாட்டுச் சர்க்கரை, பேரீச்சம்பழம், கடலெண்ணெய், திப்பிலி என்று யாராரோ வந்து வாங்கிக் கொண்டு ஊர் வம்பு பேசிவிட்டுப் போக செட்டியார் என்னை நிற்க வைத்து விடுவார். சாவகாசமாக பழைய தகர டப்பாக்களைத் திறந்து குப்பை செத்தையாக தட்டிக் கொட்டி எடுத்து சின்னதும் பெரிசுமாகப் பொட்டலம் கட்டி விட்டு, ‘பாட்டியம்மா கிட்டே ஆறுமுகத்துக்கு ஒரு கரண்டி மருந்து எடுத்து வைக்கச் சொல்லு ‘ என்று கையில் திணிப்பார்.

கடைவீதியில் இரண்டு சவுண்ட் சர்வீஸ் கடைகள். காலையிலிருந்து மதியம் வரை ஒரு கடை, மதியத்திலிருந்து ராத்திரி வரை அடுத்த கடை என்று பிரித்துக் கொண்டு தீபாவளிக்காக வர்த்தக ஒலிபரப்பு நடத்துவார்கள்.

‘நாவிக்கினிய புரட்டாவுக்கு நாகநாதர் புரட்டா ஸ்டால் ‘, ‘கரு.பெரி.அடகுக்கடையில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் ‘, ‘நுட வைத்திய சாலையில் கைகால் முறிவு சரி செய்யப்படும். காது வளர்த்தது ஒட்ட வைக்கப் படும் ‘, ‘மூக்கக் கோனார் ஜவுளிக் கடையில் நவநாகரீகமான ஜவுளிகள் தீபாவளிக்காக மலை போல் குவிந்துள்ளன ‘ என்று வரிசையாக இலங்கை வானொலி மாதிரி அறிவிப்புக்கள். ‘இலந்தப் பயம் ‘, ‘ ‘பளிங்கினால் ஒரு மாளிகை ‘, ‘அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ ‘ போல இடை இடையே இசைத்தட்டு. ஓட்டைக் கடியாரத்தில் பார்த்து நேரம் அறிவிப்பு.

எல்லாம் ரசித்துக் கொண்டே வீட்டுக்கு வந்தால், தேங்காய் எண்ணெயும் நல்லெண்ணெயும் கமகமக்க ஆரம்பித்திருக்கும்.

தீபாவளிக்கு இரண்டு நாள் முன் குண்டு குண்டாக குமுதம் வரும். நல்லையா மரப்பெட்டியில் வைத்து எடுத்து வரும்போது தெரு முழுக்க குணேகா செண்ட் வாசனை. அச்சடிக்கும் மையில் குணேகா செண்ட் கலந்தோ என்னமோ தீபாவளிக் குமுதம் வரும். அந்த வாடைக்கு ஈடாக மற்றொரு பத்திரிகை வாடையை நான் முகர்ந்ததில்லை. குமுதத்திற்கு அப்போது குணேகா செண்ட் மணமாவது இருந்தது.

கிலோக் கணக்கில் கனக்கும் தீபாவளி மலர்களில் கலைமகளும், கல்கியும் பதிவாக வீட்டில் வாங்குவது வழக்கம். கோபுலுவின் ஆர்ட் பேப்பர் ஓவியம், சங்கராச்சாரியார் படம், அருள் வாக்கு, தீபாவளிக்குக் கதை கேட்டு நெருக்க, எழுத்தாளர்கள் அவசரத்தில் பிடித்த கொழுக்கட்டைக் கதைகள் (பிற்காலத்தில் நானும் என் பங்குக்குப் பிடித்திருக்கிறேன்), தீபாவளிக்கு மாமானார் வீட்டுக்கு வந்து தங்கி விட்ட மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை அங்கேயே தீபாவளிக்கு சீராட வருவது பற்றிய சாமா ஜோக் என்ற சாகாவரம் பெற்ற தீபாவளி மலர் சமாச்சாரங்களோடு, சல்பேட் உரம், மோட்டார் பம்பு செட், சிட் பண்ட் விளம்பரங்கள்.

தினப்பத்திரிகைகளின் தீபாவளி இதழ்கள் வழக்கமான சவசவ. முரசொலியும் விடுதலையும் தவிர மற்றப் பத்திரிகைகள் எல்லாம் தீபாவளி சிறப்பிதழ் போடுவார்கள்.

தினமணியில் ஒரு தீபாவளி தவறாமல் சந்தக் கவிமணி தமிழழகன் ‘ஞான விளக்கேற்றுவோம், தீப ஒளி போற்றுவோம் ‘ என்கிற மாதிரி சம்பிரதாயக் கவிதை எழுதியிருப்பார். கீழே சொக்கலால் ராம்சேட் பீடி விளம்பரம் சுவாரசியமாக இருக்கும்.

தினத்தந்தியில் ஜெயசித்ராவும் பிரமீளாவும், ‘தீபாவளிக்கு வென்னீரில் குளிப்பேன் ‘ என்று பேட்டி கொடுத்திருப்பார்கள். பக்கத்தில் போட்ட புகைப்படத்தில் வென்னீரில் குளித்த பின்னால் ஏற்படுகிற சந்தோஷம் முகத்தில் தெரிய சேலை விலகினது கூடத் தெரியாமல் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

திருச்சி வானொலியில் தீபாவளிக்குச் சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீவைகுண்டம் எஸ்.எஸ்.பரமசிவம் பிள்ளையும், தென்னூர் கிருஷ்ணமூர்த்தியும், ‘வாங்க கண்ணுச்சாமி..ஹெ..ஹெ..இன்னிக்குத் தீபாவளியாச்சே.. சாப்பிட்டாங்களா..விதர்பாவிலே சர்க்கரைத் தொழிற்சாலையைத் திறந்து வைத்து உணவுப் பொருள் உற்பத்தியிலே நம்ம நாடு தன்னிறைவு அடையணும்னு நம்ம பிரதமர் பேசியிருக்காரே…படிச்சீங்களா ‘ என்று நாட்டு நடப்பு விவாதிப்பார்கள்.

பரமசிவம் பிள்ளை கொஞ்ச நேரம் கழித்து பக்க வாத்தியத்தோடு கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்வார். சாயந்திரம் வாசகர் கடிதம் படிப்பார். ராத்திரியில் அகில பாரத நாடகத்தில் ‘பிரிஜேஷ் சர்மா..உங்களைத் தூக்கித் தயிர்லே போடணும் ‘ என்று எந்த மொழியிலும் சிரிப்பு வராத ஜோக் அடித்து, கெக் கெக் என்று சிரிப்பார். அவர் குரலின் பலத்தில் தான் திருச்சி வானொலியே நடந்தது என்று தோன்றுகிறது.

தீபாவளி மருந்தில் ஆரம்பித்து திருச்சி வானொலிக்குப் போய்விட்டேனே…

தீபாவளி விடிகாலையில் யாரும் எழுப்பாமலேயே எழுந்து குளித்து ஒப்பேற்றி விட்டு, புது டிரவுசர் மாட்டிக் கொள்ள அவசரம். வளர்கிற பையன் என்பதால், பாட்டியம்மா டிசைன் ஸ்பெசிபிகேஷன் கொடுக்க, கான் அப்துல் கபார்கான் பைஜாமாவில் பாதியைக் கத்தரித்த மாதிரி தொளதொள என்று குருசாமி டெய்லர் தைத்துக் கொடுத்திருப்பார். அந்த அற்புதமான கலைப்படைப்பை வாங்க அவர் கடைக்கு நடக்கிற நடையை எல்லாம் சேர்த்தால் சிவகங்கையிலிருந்து சென்னைக்கு மூன்று தடவை வந்து போனதற்குக் கொஞ்சம் குறைவாக இருக்கும்.

பை நிறைய ஆனைவெடியைத் திணித்துக் கொண்டு ஊதுபத்தியும் வத்திப் பெட்டியுமாக நைசாக நழுவும்போது பாட்டியம்மா கிடுக்கிப் பிடியாகப் பிடித்து வாயில் தீபாவளி மருந்தை உருட்டிப் போடுவாள். கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் உறைப்பு, கொஞ்சம் புளிப்பு என்று அதற்கு வினோதமான ருசி உண்டு. அதற்குச் சமமான ருசி பிள்ளைப்பெற்றாள் லேகியத்துக்குத் தான் உண்டு.

அப்புறம் ஏகப்பட்ட வருடம் தீபாவளி கொண்டாடாமல் இருந்தாலும் (இப்போதும் அப்படித்தான்) தீபாவளி மருந்து சாப்பிடுவதைத் தவற விட்டதில்லை. இப்போது அடையாறு கிராண்ட் ஸ்வீட்டில் வீட்டுக்காரி தீபாவளி மருந்து வாங்கி வந்து விடுகிறாள். என்ன தான் சொல்லுங்கள். பாட்டியம்மா கிளறிக் கொடுத்த மருந்தின் சுவைக்குப் பக்கத்தில் இது வருமா ? அதில் இருந்த பிரியம், கரிசனம் என்ற சேர்மானங்கள் எந்த ஆறுமுகம் செட்டியார் மளிகைக் கடையில் கிடைக்கும் ?

***

ஒங்கத்தை – HongKong என்பதை ஐம்பதாண்டுகளுக்கு முன்

மலாயாவில் இருந்த வணிகர்கள், ‘ஒங்கம் ‘ என்றே சொன்னார்கள்.

‘ஒங்கஞ்செங்காய் வங்கி ‘ என்பது HongKong Shanghai Bank – யைக்

குறிக்கும்.

மலேசியத் தமிழ் மற்றும் சமய, சமூகவியல் அறிஞர் டாக்டர் ஜெயபாரதி மூலம் அண்மையில் கேட்ட செய்தி இது.

‘ஒங்கஞ்செங்காய் வங்கி ‘யின் தலைவர் போன வருடம் சொன்னதை இந்த வாரம் பிரிட்டாஷ் பத்திரிகைகள் நினைவு கூர்ந்திருக்கின்றன.

‘இங்கிலாந்துலே பேங்கு நடத்தறதுலே செலவு அதிகம். நம்ம ஆளுங்களுக்குக் கொட்டிக் கொடுக்கணும். எல்லாரும் தண்டக் கருமாந்திரம். இந்தச் செலவுலே கொஞ்சம் கிள்ளிப் போட்டா, இந்தியாவிலேருந்தோ, சீனாவிலேருந்தோ சர்வீஸ் கொடுத்திடுவேன். வெள்ளையும் சள்ளையுமா வந்து மாடா உழச்சு ஓடாத் தேஞ்சு பதவிசா, நறுவிசா, உத்தியோகம் பாப்பாங்க அவங்க எல்லாம், அங்கேயே உக்காந்த படிக்கு ‘.

இது மெய்தான் சாமி என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும், கட்சிக்காரன் துண்டைப் போட்டுக் குறுக்குவாட்டில் தாண்டினாலும் – நீள வாட்டில் தாண்ட ஒலிம்பிக் சாம்பியனாலும் அவங்கொப்பனாலும் கூட முடியாது – அதெல்லாம் சரிதான். ஆனாலும், வங்கித் தலைவர் இப்படி அவங்க சாதிசனம் பற்றிப் கிரகச்சாரம் ‘ன்னு எல்லாம் பேசப்படாதுன்னாப் படாதுதானாம்.

இதை இப்போ எடுத்துத் தூசிதட்டிப் போட என்ன காரணம் ?

‘பார்க்லே (வங்கி) கிரடிட் கார்ட் ஏகத்துக்குச் செலவு இழுக்கும். கட்டணம் எல்லாம் அதிகம். என் கிட்டே அந்தப் பிளாஸ்டிக் கார்டு கிடையாது. என் புள்ளைங்க கிட்டேயும் வாணாம்டா ராஜா, கட்டுப்படியாவாதுன்னு சொல்லிப் போட்டேன் ‘.

முந்தாநாள் நாடாளுமன்றக் கமிட்டி எதோ ஒன்றுக்கு (இந்தியாவோ, இங்கிலாந்தோ, நாடாளுமன்றக் கமிட்டிக்கா பஞ்சம் ?) அளித்த பேட்டியில் இப்படிச் சொன்னவர் பார்க்லே வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாம்.

‘உனக்கே உன் கம்பெனி மேல் இப்படியான அபிப்ராயம்ன்னா, மத்தவங்க எப்படிய்யா பிசினஸ் பண்ண வருவாங்க ? ‘ என்று சகலரும் எகிற, அவரை இன்னும் இரண்டு மாதத்தில் கம்பெனியின் தலைவராக்க எடுத்த முடிவை அவசர அவசரமாக மாற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

இது பரவாயில்லேங்க, அங்கே பேட்டைக்கு ஒண்ணா நகைக்கடை திறந்திருக்கிற ஒரு கம்பெனி தலைமை நிர்வாகி அவங்க கடையிலே அஞ்சு பவுண்டுக்குக் கிடைக்கும் ஒரு நகையைப் பத்தி (முன்னூத்தம்பது ரூபாய்க்கு ரங்கநாதன் தெருவிலே கில்ட் நகை கூடக் கிடைக்குமான்னு சந்தேகம்) சுபாவமாச் சொன்னது இது – ‘அதெல்லாம் சும்மாக் குப்பைங்க ‘. முதலாளியை ஓரங்கட்டிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு இப்போ அங்கே ஜாம்ஜாம்னு குப்பை வித்து ராணியம்மா தலை போட்ட காசும், கரன்சியுமா வாங்கிக் குவிக்கறாங்க.

இன்னொருத்தர் – லண்டன்லே சூட் விக்கற பெரிய ரெடிமேட் கடை நிர்வாகி. குறைந்த விலைக்கு நயமான துணிமணி வேணும்னா, நாட்டு மக்கள் அங்கதான் படியேறுவாங்களாம். அவர் சொன்னாரு –

‘ஊரிலே இருக்கற திருட்டுப்பய, கேப்மாரி எல்லாம் ஜெண்டில்மேனா நடமாடணும்னா நம்ம கடைக்குத் துணி எடுக்க வந்துடுவாங்க ‘. அவர் இப்போ எங்கே, எப்படி நடமாடிட்டு இருக்கார்னு தெரியலே.

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால், சம்பளம் என்பது செய்கிற வேலைக்கு மாத்திரம் கொடுக்கப்படுவதில்லை. வாயைத் திறந்து காலை விழுங்குவதை விட, வாயைத் திறக்காமலேயே அடுத்தவர் காலைக் குறிவைக்கலாம். அவருடைய காலாகப்பட்டது அவருடைய வாய்க்குள் இருந்தால் பருத்தி புடவையாய்க் காய்த்து ‘பால்ஸ் ‘ அடித்து மேட்சிங் ப்ளவுஸ் பீஸோடு வந்தது போல.

****************************************************

வைரமுத்துவின் ‘கிண்ணத்தில் வழிந்து நிரப்பும் நிலவுக்காக உயிரைக் கொடுப்பாள் ஒருத்தி ‘ பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

அது நல்ல கற்பனைதான் என்று நினைக்கிறேன். அதுவும் ஹரிஹரனின் குரலில்.

நிலா தான் எத்தனை எத்தனை கவிஞர்களைப் பாதித்துப் போட்டிருக்கிறது.

விபத்து இல்லாமல் ஓட்டி வந்து நிறுத்திய தண்ணீர் லாரிகளுக்கு முன்னால் லட்சம் பிளாஸ்டிக் குடங்கள் வரிசை அமைத்திருக்க, காற்றவிந்து போன பகல் பொழுதுச் சென்னையில், வலசரவாக்கம் பக்கத்து ஸ்டூடியோவுக்குள் சொக்கலிங்கம் ஆசாரி நிர்மாணித்த கிராமத்து செட்டின் மூலையில் இருநூறு வாட் பல்புக்கு முன்னால் ஒட்டி வைக்கப்பட்ட அட்டை நிலவைப் பார்த்து – கண்ணதாசன் எழுதி, பாகேஸ்வரியில் பி.பி.சீனுவாஸ் உருகி, ஜெமினி பைஜாமா போட்டுக் கொண்டு பாடும் ‘நிலவே என்னிடம் நெருங்காதே ‘…

நடமாட்டம் ஓய்ந்த மணல் பரப்பில், பக்கத்தில் கடல் மட்டும் மிதமாக அலையடித்துக் கேட்டபடி இருக்க, நிலா வெளிச்சத்தில் பரீக்குட்டியாக மது உட்கார்ந்து வயலாரின் ‘நிலாவிண்டெ நாட்டிலெ நிஷா கந்தி பூத்தல்லோ.. களி கூட்டுக்காரனெ மறந்நு போயோ ‘ என்று மன்னா டே குரலில் பாடியது ..

இன்னும் ‘சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் விளம்பரம் திரையடியில் டிக்கராக ஓடவேண்டும் ‘ என்ற சென்சார் சர்ட்டிபிகேட்டோடு காட்டப்பட வேண்டிய, கண்ணதாசன் மற்றும் விழுப்புரம் சின்னையா கணேசன், டி.எம்.செளந்தர்ராஜனின் கூட்டுறவில் உருவான ‘யார் அந்த நிலவு.. ஏன் இந்தக் கனவு ‘ ..

‘ஸ்டாம் லான்ச்சில் எல்லாம் இப்படித் தய்யத்தக்கா என்று குதித்தால் படகு கவிழும் – அதுவும் இப்படி ஒரு மோசமான பாட்டுக்கு ‘ எனக் குயிலி என்ற குஜராத்திப் பெண் குல்னாரை வேலு நாயக்கர் எச்சரிக்காமல் போன, வாலியின் அரிய கண்டுபிடிப்பான ‘நிலா அது வானத்து மேலே ‘ .

இலக்கியத்தில் நிலவு அன்றைய ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ‘ தொடங்கி, வைதீஸ்வரனின் ‘கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு ‘ வரை அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

நிலவை ஆராதிப்பதில் ஜப்பானியர்களுக்கு நம்மை விட ஈடுபாடு அதிகம்.

‘பனிபொழியும் இரவு. கூதல் காற்று.

மேகத்திலிருந்து வெளிப்பட்டுக்

குளிர்கால நிலா

துணைக்கு வருகிறது என்னோடு ‘

பதிமூன்றாம் நூற்றாண்டு ஜப்பானியக் கவிஞரும் ஸென் புத்தமதத் துறவியுமான மயேயின் இந்தக் கவிதையோடு தான் 1968ல் யாசுநாரி காவபாத்தா தன் நோபல் பரிசு ஏற்புரையைத் துவக்கினார்.

நிலவைப் பார்த்தபடியே தியானத்தில் அமிழ்ந்த துறவி, கண் விழித்துப் பார்க்கத் திரும்பவும் நிலவு தான் கண்ணில் படுகிறது. அவருடைய அடுத்த கவிதை பிறக்கிறது.

‘ஒரு வெளிச்சப் பெருவெளியாக

என் இதயம் ஒளிவீசுகிறது.

இது தன்னுடையதென்று

நிலவு நினைக்கலாம் ‘

எல்லாச் சலனமும் நீங்கித் தியானத்தில் ஒருமை கொண்ட அவருடைய மனதில் நிலவு முழுக்க இடம் பிடித்து நிரம்பி வழிகிறது. மயே தொடர்கிறார் –

ஒளிவீசும், ஒளிவீசும், ஒளிவீசும்,

ஒளிவீசும், ஒளிவீசும், ஒளிவீசும்,

ஒளிவீசும், ஒளிவீசும், ஒளிவீசும்,

ஒளிவீசும், ஒளிவீசும் நிலா ‘.

கிண்ணத்தில் விழுந்த நிலவுக்காக உயிரைக் கொடுப்பது கூட இந்த மாதிரியான ஆனந்தக் களிப்புத்தானோ!

******************************************************

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்