வாரபலன் –

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

மத்தளராயன்


கேரளீயருக்கும் கேம்ப்ரிட்ஜ் யூனிவர்சிற்றி நாட்டுத் துரைகளுக்கும் ஒற்றுமை உண்டு. பொழுது போகாவிட்டால் மேசை நாற்காலியை இழுத்துப் போட்டு, மைக்செட் கட்டி, சோடா கலர் குடித்து ஏப்பம் விட்டுப் புதிதாகச் சங்கம் ஆரம்பித்து விடுவார்கள்.

இங்கிலாந்தில் தற்போது தொடங்கி இருப்பது நாடாளுமன்ற மாஜி உறுப்பினர்களின் சங்கம்.

இந்தியாவைப் பாருங்கள். மாஜி எம்.பிக்களையும் எம்.எல்.ஏக்களையும் வறுமையில் வாட (யாருப்பா அங்கே சிரிக்கறது ?) விடக்கூடாது என்று எவ்வளவு பார்த்துப் பார்த்துச் சட்டம் எல்லாம் இயற்றி, அவர்களுக்குப் பென்ஷன் கொடுக்கிறோம். தொகுதியில் பட்டினியால் ஏழை நெசவாளர், விவசாயத் தொழிலாளர்கள் பலபேர் குடும்பத்தோடு பட்டினியால் இறந்து போனதை எடுத்து மக்களவையில் சொல்ல எத்தனை கரிசனமாக நடந்து உள்ளே போயிருக்கிறார்கள் அவர்கள் எல்லாம். பகல் சாப்பாடுக்கு அப்புறம் இதை எல்லாம் பேசத் தொடங்கினால், தூக்கம் வராமல் என்ன செய்யும் ? அவைக் காவலர்கள் கொஞ்சம் முன்னாலேயே எழுப்பி விட்டிருந்தால் நிச்சயம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசியிருப்பார்கள்.

இப்படி மக்கள் தொண்டர்களாக இருந்து ஏதேதோ காரணத்தால் பதவி போனால், அல்லது அடுத்த ஆட்சியில் சீட்கிடைக்காமல் போனால் என்ன, கவலைப் படாமல் மூணு வேளை சாப்பிட இந்திய சர்க்கார் பென்ஷன் தரும். சகல வளமும் கொழிக்கும் நாடு இதுவாக்கும்.

ஆனால், இங்கிலாந்து ? பாவம் தரித்திரர்கள். பஞ்சைப் பராரிகள். மாஜி எம்.பிக்கு எல்லாம் மாசாமாசம் வழங்க, காசு என்ன கொட்டியா கிடக்கிறது அங்கே இந்தியா போல ?

ஆனாலும் மாஜிகள் எத்தனை நாள்தான் பொறுப்பது. கட்சி வேற்றுமைகளை மறந்து போராடுவோம், ஒன்று படுவோம் என்று ஒன்று சேர்ந்து விட்டார்கள். கிட்டத்தட்ட நூற்றெண்பது பேர். ஐம்பது வயது மாமா மாஜியிலிருந்து தொண்ணூறு வயசு தாத்தா மாஜி வரை, தொழிற்கட்சி, கன்சர்வேடிவ், லிபரல் டெமக்ரட் என்று எல்லாக் கட்சி பழைய எம்.பிக்களும் இதில் அடக்கம். இவர்களைச் சங்கம் அமைத்து இணைத்து வழிநடத்துகிறவர் ஜோ ஆஷ்டன். மாஜி தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் இல்லை புள்ளிக்காரன். அந்தக் கால ஷெப்பீல்ட் இரும்புத் தொழிற்சாலையில் இரும்படித்த தொழிலாளி. எழுத்தாளன் வேறே. (இலக்கியப் பத்திரிகையில் தேங்காய் மூடிக் கச்சேரி நடத்துகிறாரோ என்னவோ தெரியலை.)

சொல்றார் ஆஷ்டன் – ‘இந்த அரசு மாஜி எம்.பிக்களுக்கு என்ன செய்திருக்கு ? 1935ம் வருஷத்துலே இருந்து யார் எம்.பியா நாடாளுமன்றத்துலே நுழைஞ்சு குப்பை கொட்டினாலும், மாசச் சம்பளத்திலே இருந்து ரெண்டு பவுண்ட் பிடிச்சுக்கறாங்க. வாஸ்தவம். குருவி சேத்தமாதிரி அந்தப் பணம் எல்லாம் இப்போ வங்கியிலே நாற்பது லட்சம் பவுண்டா வட்டி, வட்டி போட்ட குட்டின்னு தூங்கிட்டு இருக்கு. மாஜி எம்.பி நல நிதின்னு தான் பேரு. நாங்க அய்யா, வேலை இல்லாம அவதிப் படறோம். ஒரு பீடாக் கடையோ, பியர்க் கடையோ நடத்திப் பொழச்சுக்கறோம். சும்மா வேணாம். கடனா நிதியிலே இருந்து ஆயிரம் பவுண்டு கொடுங்கன்னு மனுப்போட்டா, போய்யா, முடியாதுன்னு துரத்திடறாங்க. இது என்ன நியாயம் ? ‘

பக்கத்திலேயே இன்னொரு தாத்தா மாஜி எம்.பி குமுறுகிறார் – பணம் காசு கூட வேணாம். நேத்துப் பேராண்டி கிட்டேச் சொன்னேன், நான் ஒரு காலத்திலே எம்.பியா இருந்தேண்டா பேரப்புள்ளேன்னு. எங்கே, பார்லிமெண்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போய் நீ உக்காந்து இருந்த நாற்காலியைக் காட்டு, அப்பத்தான் நம்புவேங்கறான். சரின்னு வேகாத வெய்யில்லே குடை பிடிச்சுட்டு டோனி பிளேர் வீட்டாண்டை நடந்து நாடாளுமன்றம் போனா, உள்ளேயே விடமாட்டாங்களாம்யா. ரெண்டு டெர்ம் எம்பியா இருந்திருக்கேன்னு மன்னாடுறேன். சர்த்தான், இப்ப என்னங்கறே பெரிசு, ஒத்திக்கோ, தலிவர் வர்ற நேரம்ங்கறான். பக்கத்துலே இன்னொரு மாஜி. நாலு டெர்ம் இருந்தவராம். அவரையும் கழுத்து டையைப் பிடிக்காத குறையா வெளியே தள்ளிட்டாங்க. அழுதுக்கிட்டே போனாரு, பாவம். மாஜின்னா அவ்வளவு இளப்பமா ? இல்லே, கேக்குறேன்.

ஆமாமா, நல்லாக் கேளுங்க. நாங்களும் அடுத்த சங்கம் அமைக்கப் போறோம்.

சொல்றது யார் தெரியுமா ? மாஜி அமைச்சர்கள். கட்சி வேறுபாடாவது, வெங்காயமாவது.

இங்கிலாந்து போன்ற பரம ஏழை நாடுகளின் மாஜி எம்.பி, மாஜி மந்திரிகளான உலகம் தெரியாத இந்தப் பரிதாப ஜீவன்களை நினைத்தால் கண் கலங்குகிறது.

***************************************************************************

ஓவியத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் உண்டா ? உண்டல்லோ.

ஓவியம் மதம் சார்ந்த வெளிப்பாடாகவே பரிணமிக்கத் தொடங்கியது என்று படித்திருக்கிறேன். சான்றாக, கிறிஸ்துவுக்கு மூவாயிரம் ஆண்டுகள் முற்பட்ட எகிப்தியக் கட்டடக் கலை வரலாற்றில் (இரண்டாம் ராம்சேயின் காலம் கி.மு 1250 என்று கொண்டால்) ஓவியங்கள் கல்லறைகளின் மேற் கூரைகளில் தீட்டப் பட்டிருந்ததாகச் செய்தி உண்டு. இப்படிச் சவக் குடாரங்களின் மேல் வரைந்த ஓவியங்கள் பெரும்பாலும் உணவுப் பொருள்களின் – இறைச்சி, பழங்கள், தானியம் – படங்களாகவே இருக்கும்.

கல்லறையில் பாதுகாத்து வைத்த, தைலங்கள் கொண்டு பாடம் பண்ணப்பட்ட பிரபு வம்சத்தவர்களின் உடல்கள் மறு உயிர்ப்பு பெறும்போது, இந்த ஓவியங்களும் உயிர்த்து, நிஜமான உணவுப் பொருளாகி அவர்கள் பசியைப் போக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது.

இந்தியாவிலும் ஓவியம் மத வெளிப்பாடாகவே – இந்து, பெளத்தம் முதலியன – தொடங்கியிருக்கலாம். இப்படி ஒரு religious symbolism எப்போது, எப்படி iconography யாக மாறியது – அதுவும் anthropomorphic iconography, மற்றும் எட்டுக் கை, நாலு தலை என்று புனைவு கலந்தது – என்று தெரியவில்லை. இது சிற்பத்தில் தொடங்கி ஓவியத்துக்கு வந்திருக்கலாமோ – சிற்பம் என்பதில் மண் சுதைப் பதுமைகளையும் நான் ஓர் எளிமைக்காக அடக்குகிறேன்.

***************************************************************************8

மறுபடியும் இடம் பெயர வேண்டிய அவசரத்தில், எழுதுவதைக் கூட நிறுத்தி வைத்துவிட்டுப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

முதலில் எடுத்திருப்பது – கனகசபாபதி சரவணபவன் எழுதிய ‘வரலாற்றுத் திருகோணமலை ‘.

நல்ல ஆய்வு நூல். திருகோணமலையின் தமிழ்ப் புலம் கிறிஸ்துவுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்தது என்று

தொடங்கி, அது பிற்காலச் சோழர்கள் காலத்தில் செழுமையுற்றதை விரிவாக விளக்குகிறார் ஆசிரி

யர். இந்த நூலுக்கான தகவல் திரட்டக்கூடச் சிரமமான நிலையில் அவர் இவ்வளவு நுட்பமாகவும் வி

ளக்கமாகவும் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.

நூலில் இருந்து சில பத்திகள் –

‘ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தருடைய திருகோணமலைப் பதிகத்தில் திருகோணமலை என்ற பெயரையும், அங்கு வாழும் இந்துக்களின் வழிபாட்டையும் தெளிவாகக் காணமுடிகிறது. தென்னிந்தியாவிலிருந்து பல தரப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருகோணமலையில் குடியேறி இருக்கிறார்கள். குறிப்பாகச் சோழர் படையெடுப்பைத் தொடர்ந்து தமிழகச் சமூகத்தினது வருகை பெருமளவு அதிகரித்துக் காணப்பட்டது. ‘

(வன்னியர்கள், தொழும்பர்கள் ஆகிய பிரிவினர் குடியேற்றம் பற்றி விரிவாகச் சொல்கிறார் கனகசபாபதி சரவணபவன்.)

‘இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒரு பகுதியினர் திருகோணமலை நகராட்சியில் அடிநிலைத் தொழிலாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இவர்கள் தமிழ்ச் சமூகச் சாதிய ஒழுங்கு நிரலில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டதனால் ஏனைய சமூகங்களுடன் இணக்கமான உறவைப் பேண முடியவில்லை. அவர்களுக்கு வாழிடம் புறநகர்ப் பகுதிகளில் சேரிகள் வடிவில் உருவாக்கப்பட்டது. திருகோணமலையில் இரண்டாவது உலகப் போரில் இத்தாலியர்கள் தங்கியிருந்த முகாம்கள் சேரிகளாக மாறின.

சேரி வாழ்க்கையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள சுமார் 150 வருடங்களுக்கு முன்பாகச் சொந்த நாட்டிலிருந்து வெளியேறிய சமூகத்தின் ஒரு பகுதியினர் மீண்டும் திருகோணமலைச் சேரிகளில் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ‘

‘திருகோணமலையில் முஸ்லீம்களின் குடியேற்றம் எப்போது உருவாகியது என்பதைத் தீர்மானிக்கப் போதுமான

உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. திருகோணமலையில் பழமையான கல்லறை நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நீதிபதியாக (காழி) கடமை புரிந்த அபீப் அப்துல்லாஹ் இபனு அப்துர்றஹ்மான் என்பவரது கல்வெட்டெனக் கருதப் படுகிறது. மற்றொரு நடுகல் அமீத் பத்றுதீன் ஹுசைனின் மகளின் நடுகல்லாகும். அப் பெண் ஹிஜ்ரி 729 துல்கஃதா மாதம் பிறை 17 திங்கட்கிழமை காலமானார் என நடுகல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலம் கி.பி 1328 ஆகும். ‘

‘இலங்கைக்கு வெளியே இருந்து கொண்டு வரப்பட்ட காப்பிரி மக்களும், இலங்கைக்கு உள்ளே உருவான

மற்றொரு இனமான பறங்கிகளும்( Eurasians of Ceylon – like, Anglo Indians) அதி

க அளவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். இவ்விரு இனங்களையும் போர்த்துக்கீசப் பேச்சு

மொழியும், கத்தோலிக்க மதமும் இணைத்தது. ‘

மகாவம்சம் சொல்லும் சிங்கள இனத் தோற்றம் பற்றிய கதைகள் இதிகாசங்களில் காணப்படும் ஐதீகக் கதைகள் போல் காணப்படுகிறதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஹுவான் சுவாங்கின் வரலாற்றுக் குறிப்புகள் போன்ற நூல்களிலும் குறிக்கப்பட்டவை இவை.

சிங்கள வம்சம் வங்கத்திலிருந்து வந்த விஜயன் என்பவனோடு தொடங்குகிறது. இவனுடைய பாட்டி வங்க அரசனுக்கும் கலிங்க இளவரசிக்கும் பிறந்தவள். இந்தப் பெண் காட்டில் சிங்கத்தோடு கலந்து இரண்டு குழந்தைகளைப் பெறுகிறாள். சிங்கபாகு என்ற மகனும் சிங்கசீலி என்ற மகளுமே அவர்கள். சிங்கபாகு தன் தந்தையான சிங்கத்தைக் கொன்று தாயோடும், சகோதரியோடும் சிங்கக் குகையிலிருந்து வெளியே வருகிறான். அவனுடைய தாய் வங்க நாட்டுப் படைத்தலைவனை மறுமணம் செய்து கொள்கிறாள். சிங்கபாகு தன் சகோதரியையே திருமணம் செய்து கொள்கிறான். இவர்களுக்குப் பிறந்த புதல்வன் தான் விஜயன். இவனையும், இவனுடைய தோழர்கள் 700 பேரையும் வங்க நாட்டு அரசன் நாடு கடத்த இவர்கள் இலங்கைக்கு வருகிறார்கள். அருகே தமிழகத்தில் பாண்டிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஆதிகுடிகள் தங்களை வலிமையானவர்களாக அறிவித்துக் கொள்ள இப்படி வலிமையான மிருகங்களின் தோான்றல்களாகச் சித்தரித்துக் கொள்வதும், சத்திரிய ரத்தத் தூய்மையைப் பேணுவதற்காக சகோதரத் திருமணங்கள் நிகழ்ந்ததும் பிற இன வரலாறுகளிலும், ஐதீகக் கதைகளிலும் காணப்படுவதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

நூல் : வரலாறுத் திருகோணமலை

ஆசிரியர் : கனகசபாபதி சரவணபவன்

விற்பனை :குமரன் பதிப்பகம், சென்னை

விலை : ரூ 80

(பார்த்துப் பார்த்துப் பிழை திருத்தியிருக்கிறார்கள். என்றாலும் ‘சாதவாஉறனர்கள் ‘ என்று கண்ணில்

பட்டது. தட்டச்சைப் படித்துப் புத்தகம் உருவாக்கியதன் விளைவு – தமிழ்த் தட்டச்சுப் பொறியில் ஹ

என்ற எழுத்தை அடித்தால் உ-வை ஒட்டி ற-தான் வரும். உறா உறா உறா !)

**********************************************************************8

ஆடி கழிஞ்சு அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டாலும், சங்கீத சீசன் கழிந்து சாவகாசமாக அதை அசை போட்டாலும் ஒரு கடுதாசி போட்டால் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பக்கத்தில் உட்கார ஓடோடி வந்துவிடுவேன். இப்போ ஒரு லேட் கோழி.

எனக்கு ரொம்ப நாளாக ஆச்சரியம் கொடுக்கும் விஷயம் ஒன்று உண்டு. கச்சேரி சமாச்சாரம்.

பலான பலான சபாவில் பலரும் கச்சேரி கேட்க வந்து உட்கார்கிறார்கள். பாடகரோ, பாடகியோ சிரத்தையாகப் பாட ஆரம்பிக்கிறார். கச்சேரியைக் கூடக் கவனிக்காமல் கூட்டத்தில் சிலர் வெகு அக்கறையாகப் பேனாவாலோ, புழுக்கைப் பென்சிலாலோ பாக்கெட் நோட்டுப் புத்தகத்தில் கர்ம சிரத்தையாக ஏதோ குறித்தபடி இருக்கிறது என்ன என்று புரியவில்லை. அதெல்லாம் என்ன ராகம், என்ன தாளம் என்ற தகவலாம். ஞானஸ்தர் ஒருத்தர் சொன்னார்.

குறித்துக் கொண்டு போய் அந்தத் தகவலை எல்லாம் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிய ஆவல். உலகம் முழுசும் நடக்கும் கச்சேரிகளில் இந்த நூறு வருடங்களில் யார் என்ன பாடினார்கள் என்று பிரம்மாண்டமான டேட்டாபேஸில் பதிவு செய்து அப்புறம், ‘ராம நீ சமானமெவரு ‘ கீர்த்தனை இந்த வருடம் எத்தனை கச்சேரிகளில் பாடப்பட்டது என்று துருவுவார்களோ. அல்லது இன்னும் slicing and dicing செய்து, இதை இந்த வருடம் பாடிய

பெண்பாடகிகள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேர் நீலப் பட்டுப் புடவை கட்டி, காதில் ஜிமிக்கி மாட்டியிருந்து, பாடிக்கொண்டிருக்கும்போது தெரிந்தவர்கள் சபைக்குள் நுழைய அழகாகப் புன்சிரித்தபடி கச்சேரியைத் தொடர்ந்தார்கள் என்றெல்லாம் ஆராய்வார்களாக இருக்கும்..

இவர்கள் இப்படி இருக்க, கச்சேரியில் அரட்டை அடிக்கிறவர்கள் –

மூன்று வருடம் முன்னால் செளமியா கச்சேரியில் பாதிப்பாட்டுக்கு நடுவே பின்வரிசையில் யாரோ ‘குஷ்பு மாதிரியே இருக்காங்க ‘ என்று மெல்லச் சிலாகித்தது காதில் விழுந்தது. அப்புறம் குஷ்பு தான் பாடிக்கொண்டிருந்தார்.

************************************************************************

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்