வாரபலன் ஜூன் 3 , 2004 – மலேசியா ஸ்பெஷல் சேடிஸம் – இத்தாலிய பிட்ஸா எமெர்ஜென்ஸி – கேரள புஷ் மாங்கல்ய பிரஸ்னம்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

மத்தளராயன்


நாளைக்கு சாயந்திரம் ஸ்பெஷல் கிளாஸ்.

கடைசி வகுப்பு முடிந்து பெல் அடிக்கும்போது ஆசிரியர் குழந்தைகளிடம் சொல்கிறார்.

அடுத்த நாள் மாலை எல்லாச் சிறுவர் சிறுமிகளும் பள்ளி மைதானத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்துக்குள் என்னத்துக்காகவோ போலீஸ்காரர்கள். அவர்கள் அங்கேயும் இங்கேயுமாக பூட்ஸ் கால்களின் சத்தம் ஒலிக்க நடப்பதே அந்தப் பிஞ்சுகளைப் பயப்பட வைக்கிறது. ஸ்பெஷல் கிளாஸ் நடத்துகிற இடத்தில் இவர்கள் எதுக்கு ? மார்க் குறைவாக வாங்கிய பிள்ளைகளை அடித்து மிரட்டி அடுத்த பரீட்சையில் நிறைய வாங்காவிட்டால் ஜெயிலில் போட்டுவிடுவேன் என்று பயமுறுத்தவா ?

மைதானத்துக்கு நடுவே ஒரு தூணைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் போலீஸ்காரர்கள். அங்கே கால்பந்தும் கூடைப் பந்தும் விளையாடித்தான் சிறுவர்களுக்குப் பழக்கம். இது என்ன மாதிரி விளையாட்டு என்று தெரியாமல் தயங்கித் தயங்கி அவர்கள் வந்து உட்கார்கிறார்கள். இருநூறு முன்னூறு குழந்தைகள் கூடும் இடத்தில் பொங்கி எழும் உற்சாகமான கூச்சலும் ஆரவாரமும் சிரிப்பும், ஒப்புக்காக ஆசிரியர்கள் எழுப்பும் சைலன்ஸ் சைலன்ஸ் சத்தமும் இல்லாத மயான அமைதி. ஆசிரியர்கள் முகமும் இறுகிப் போய்க் கிடக்கிறது.

ஒரு மூத்த பொலீஸ் அதிகாரி கூட்டத்தை விலக்கிக் கொண்டு லெப்ட் ரைட் லெப்ட் ரைட் என்று கம்பீரமாக நடந்து வந்து எல்லோருக்கும் வணக்கம் சொல்கிறார். பதில் வணக்கம் கூடச் சொல்ல முடியாமல் அரண்டு போய்க் குழந்தைகள் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரி மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பிக்கிறார்.

அன்பான மாணவர்களே. நான் இந்த நாட்டின் காவல் துறையில் போதை மருந்துகளைக் கடத்துவதைத் தடுக்கும் பிரிவில் அதிகாரியாக இருக்கிறேன். போதை மருந்துகள் ஒரு மனிதனின் வாழ்க்கையையே முழுவதுமாக அழித்துவிடும் அளவு பயங்கரமானவை. தனி மனிதனை மட்டுமில்லை, அவனைச் சேர்ந்தவர்களை, நண்பர்களை, குடும்பத்தையே குடிகெடுத்து நிர்மூலமாக்கும் அசுர சக்தி வாய்ந்தவை அவை எல்லாம்.

அதிகாரி தொடர்கிறார். எல்லாம் நல்ல வார்த்தைப் போதனைகள் தான். பிள்ளைகள் ஆசிரியர் மூலமும், பெற்றோர் மூலமும், சினிமா மற்றும் சின்னத்திரையிலும் கேட்டும்ம் பார்த்தும் அறிந்து கொண்டது தான் இதெல்லாம். ஆனாலும் காவல்துறை அதிகாரி சொல்லும் போது அதெல்லாம் இன்னும் பயங்கரமாகத் தெரிகிறது அவர்களுக்கு.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நாலைந்து காவலர்கள் எதையோ சுமந்து கொண்டு மைதானத்துக்கு நடுவே வருகிறார்கள். என்னது அது ? யார் அது ? ஜெயில் கைதியா ? அசைவே இல்லையே ? செத்துப் போய் விட்டானா ?

குழந்தைகளின் நடுக்கம் அதிகமாகிக் கொண்டு போக, சுமந்து வந்ததைத் தொப்பென்று தரையில் போடுகிறார்கள் பொலீஸ்காரர்கள். அப்பாடா, சவம் இல்லை, வெறும் பொம்மை தான். அந்தப் பொம்மையைத் தூணோடு அவர்கள் சேர்த்துக் கட்டிக் கொண்டிருக்கும்போது மைக்கைப் பிடித்த பொலீஸ் அதிகாரி குரலில் இன்னும் கடுமை ஏறத் தொடர்கிறார்.

அன்பான குழந்தைகளே, மேலும், போதை மருந்து கடத்தினாலோ, பயன்படுத்தினாலோ நம்முடைய நாட்டு அரசாங்கச் சட்டப்படியான தண்டனை என்ன தெரியுமா ? சிறையில் அடைத்து பிரம்பால் அடிப்பது. நான் அந்த மாதிரித் தண்டனை வழங்க விசேஷப் பயிற்சி அளிக்கப்பட்ட அதிகாரி. ஏழு வருடமாக ஏராளமான கைதிகளுக்குப் பிரம்படி கொடுத்திருக்கிறேன். எப்படி அது நடைபெறும் என்பதை இப்போது செய்து காட்டுகிறேன்.

பக்கத்தில் நின்ற துணை அதிகாரி நீட்டிய பிரம்பைப் பிரியமாக வாங்கி உருட்டியபடி உருட்டி முழிக்கும் அதிகாரி அதைக் காற்றில் விர் விர் என்று சத்தம் வர விசிறுகிறார். குழந்தைகளின் இதயத் துடிப்பு ஒருகணம் நின்று தொடர்கிறது.

இந்தப் பிரம்பின் நீளம் சரியாக ஒரு மீட்டர் ஒன்பது செண்டிமீட்டர். இதைக் கையில் பிடித்து மணிக்கு நூற்று அறுபது கிலோமீட்டர் வேகத்தில் இப்படி வீசுவேன். வீசி அடிக்கும்போது.

அவர் சொல்லியபடி திரும்பி உக்கிரமாகப் பிரம்பைச் சொடுக்கி அந்தப் பொம்மையை விளாச ஆரம்பிக்கிறார்.

இப்படி அடிக்கும்போது கைதியின் உடம்பில் பலமான காயம் ஏற்படுவது மட்டுமில்லாமல் உடம்பிலிருந்து தசை பிய்ந்து எல்லாத் திசையிலும் சிதறும். அது என் முகத்தில் படக்கூடாது என்பதற்காக இந்த முகமூடியையும் அணிந்து கொள்வேன்.

கொள்ளைக்காரனைப் போல் முகமூடி அணிந்த பொலீஸ்காரர் தன் பேச்சில் தானே லயித்து காவல்நிலையச் சித்திரவதைகளைப் பற்றி ரன்னிங்க் கமெண்றி கொடுத்தபடி தொடர, சின்னக் குழந்தைகளில் சிலது இருந்த இடத்தை நனைக்கின்றன. சிலது விம்மி அழுது வெளியே போக வாசலைப் பார்க்கின்றன. இன்னும் சிலவோ பக்கத்தில் இருக்கும் தோழர்களைக் கட்டிப்பிடித்து நடுங்கியபடி கோழிக்குஞ்சுகள் போல் ஒடுங்கி உட்கார்ந்திருக்கின்றன.

எனவே, குழந்தைகளே, போதை மருந்துகள் பக்கம் போகாதீர்கள். போனால் இதுதான் கதி.

உள்ளே இருந்து பஞ்சு எல்லாம் அடித்த அடியில் வெளியே விழுந்த பொம்மையைக் காலால் ஓங்கி மிதித்தபடி பொலீஸ்காரர் கூச்சலிடக் குழந்தைகள் பயப்பட இன்னும் பாக்கி இல்லாமல் நீண்டதோர் கெட்ட கனவைக் கண்டு கொண்டிருப்பதுபோல் உடல் வெடவெடக்க அமர்ந்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி முடியும் முன்னால் நீங்கள் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் உண்டு. பிரம்படி வாங்கித் துடித்து ரத்தம் சிந்தும் போதை மருந்துக் கடத்தல் கைதிகளைப் புகைப்படம் எடுத்திருக்கிறோம். இதெல்லாம் தான். நன்றாகப் பாருங்கள்.

அதிகாரி அந்தக் குரூரமான காட்சிகள் கொண்ட புகைப்படப் பிரதிகளை தேசியக் கொடியைப் போல உயர்த்திப் பிடித்து நாலு திசையிலும் சுற்றி எல்லாரும் பார்க்கக் காட்டிவிட்டு அமர்கிறார்.

நடுக்கம் மாறாத குரலில் தலைமை ஆசிரியர் காவல்துறையினர் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்துப் பள்ளி மாணவர்களுக்கு நல்ல உபதேசம் சொல்ல வந்ததற்காக நன்றி சொல்கிறார். கூட்டம் கலைகிறது.

இதெல்லாம் நடந்தது இடி அமீனின் உகாண்டாவிலா, அல்லது கொடுங்கோலன் போல்பாட் வெறியாட்சி செய்த கம்போடியாவிலேயா இல்லை ஹிட்லரின் ஜெர்மனியிலா ?

அங்கெல்லாம் மக்களாட்சி மலர்ந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன. இது நடப்பது நம் அண்டை நாடும் தொழில் நுட்பத்திலும், இயற்கை வளத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேறிய முடியாட்சியின் கீழ் பார்லிமெண்டரி ஜனநாயகம் நடப்பதாகச் சொல்லப்படும் மலேசியாவில். போன வாரம் தொடங்கிய நிகழ்ச்சி இது.

போதை மருந்து ஒரு சமூக அவலம். அதை விற்பது ஒரு சமுதாயக் குற்றம். அந்தக் குற்றத்துக்குக் கடுமையான தண்டனை வழங்குவதோடு, அதை வேரறுப்பது ஒரு மக்களாட்சியின் கடமை. ஆனால் தண்டனை என்ற பெயரில் சித்திரவதை செய்வது ஸ்டேட் டெரர் என்ற அரசுத்துறை சார்ந்த, அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறை. அந்தக் கொடூரத்தை நாளைய தலைமுறைக்கு முன்னால் அரங்கேற்றிக் காட்டித்தான் அவர்களைக் குற்றம் செய்யவிடாமல் தடுக்க முடியும் என்று ஒரு நாட்டு அரசாங்கமே நினைப்பது அருவருக்கத்தக்க சேடிஸம் மட்டும் இல்லை. மகத்தான தேசிய அசிங்கமும் அவமானமும் கூட.

****

மலேசியாவில் சவுக்கடி சந்திரகாந்தன்கள் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக மேட்னி ஷோ நடத்திக் கொண்டிருக்க, இத்தாலியில் நடப்பது வேறு தினுசான காரியம்.

சோனியாம்மா ஒரு பில்லியன் இந்திய மக்களின் தலைவியானதில் கொஞ்சம் போல் சந்தோஷப்பட்டு, அவர் பதவியை வேண்டாமென்று மறுத்து இந்தியக் குடிமகனின் மனதில் உயர்ந்த இடம் பிடித்தபோது வருத்தப்பட்ட இத்தாலி கெசட் அறிவிப்பாகப் போன வாரம் செய்திருப்பது சோனியா பற்றியது இல்லை. அது பிட்சா பற்றி.

இத்தாலியில் பிறந்து உலகமெங்கும் இறக்கை கட்டிப் பறக்கும் ஃபாஸ்ட் ஃபுட் பிசினஸில் ஒரு தர நிர்ணயத்தைக் கொண்டு வந்து பிட்சாவைச் செவ்வுணவாக்க இத்தாலிய அரசு எடுக்க உத்தேசித்த முயற்சிகள் பற்றிப் போன வருடம் ஒரு மழைக்கால வாரபலனில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.

இத்தாலியர்கள் பிட்சா கமிஷன் போட்டுத் தேர்தலில் டெபாசிட் போன நாலைந்து ஆளும் கட்சிக்காரர்களைச் சுகமாக உட்கார்த்தித் திட்டம் தயாரிக்கச் சொல்லிவிட்டு மறந்து போகிற வமிசமில்லை என்பதால் நிசமாகவே செயலில் இறங்கிவிட்டார்கள்.

அத்தாட்சி, மேலே குறிப்பிட்ட கெசட் அறிவிப்பு.

இதனால் இத்தாலிய அரசு அறிவிப்பது என்னவென்றால், பிட்சாவானது சரியாக முப்பத்தைந்து செண்டிமீட்டர் விட்டமுள்ள நல்ல வட்ட வடிவமாக இருக்க வேண்டும். அதன் கனம் பூஜ்யம் புள்ளி மூணு செண்டிமீட்டருக்கு மேல் இருக்கப்படாது. அதன் மேல் பரத்தி வைத்த சரக்கு இரண்டு செண்டிமீட்டர் உயரத்துக்கு மேல் ஒரு மில்லிமீட்டர் கூடப் போகப்படாது. கையில் எடுத்தால் மெத்து மெத்தென்று எளிதில் மடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் சட்ட ரீதியான பிட்சா. மொத்தம் மூன்று வகையான பிட்சா மட்டுமே அரசு அங்கீகாரம் பெறுகின்றன. அவையாவன – மரீனரா, மார்கரீட்டா, மொஸாரிலா. பிட்சாவில் இடம்பெற வேண்டிய தக்காளி, பூண்டு, கோதுமை மாவு, எண்ணெய் விவரங்களும் சேர்மானமும் துணைப்பட்டியலில் அடங்கியுள்ளன. கவனிக்கவும். இதுக்கு மேலே வேறே எதையாவது சேர்த்தால் அது அரசு அங்கீகாரம் பெற்ற பிட்சா ஸ்தானத்தை இழக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் பிட்சாவுக்கான மாவைக் கையால் தான் பிசைய வேண்டும். இத்தாலியின் பிட்சா பெருமையைப் பாதுகாக்கும் இந்தக் கை கறை படிந்ததாக இருக்கலாகாது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கொட்டரேச்சியிலிருந்து பரதேசி வரை, மாமியாவிலிருந்து மாஃபியா வரை வரவேற்கக்கூடிய இந்த பிட்சாத்துச் சட்டத்துக்கு நாட்டு பாஸ்ட் புட் உணவகங்கள் மாவு அப்பிய கையை உயர்த்திக் காட்டி ஆதரவு கொடுத்திருக்கின்றனவாம். சீக்கிரமே மற்ற நாடுகளிலும் இத்தாலியக் கெசட் வாடையோடு பிட்சா கிடைக்கும்.

அப்படியே இட்டலிக்குத் தமிழ்நாட்டுத் தர நிர்ணயமும், ரவா உப்புமாவான காராபாத்துக்குக் கர்னாடகத் தர நிர்ணயமும், புட்டும் கடலையும் தயாரிக்க வழி சொல்லும் ஆன்றணி சர்க்கார் ஓர்டரும் கிடைக்கலாம். ஆந்திராவின் பெசரட் இன்னோரன்ன தோசை வகைகளின் தர நிர்ணயம் வழக்கம் போல் ஹைகமாண்டால் தில்லியில் தயாரித்து இறக்கி விடப்படும்.

****

கேரளம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இது முன்னேற்றத்துக்கான மாற்றம் போல் தெரியவில்லை.

இருபது வருடம் முன்னால் அமைதிப் பள்ளத்தாக்கில் குந்திப்புழையைத் தடுத்து அணை கட்ட நடவடிக்கைகள் தொடங்கியபோது, இயற்கைச் சூழல் பாதிக்கப்படும், சிங்க வால் குரங்கு போன்ற அரிய பிராணிகள் அழிந்து போகும் என்று ஒருமித்த கருத்தோடு சமூக அக்கறையுள்ள மலையாள மக்கள் அதை எதிர்த்தார்கள். சைலண்ட வாலியின் அமைதியையும் சூழலையும் அழிக்க, ஆயிரக்கணக்கான மக்களை இடம் பெயர்க்க ஒரு அணைக்கட்டு தேவையில்லை என்று கவிஞரும் சமூக நலத்தில் அக்கறை கொண்டவருமான சுகதகுமாரி போராடத் தொடங்கியபோது அவருக்குக் கேரளம் துணை நின்றது. நர்மதா அணைக்கட்டுத் திட்டத்தை எதிர்த்து, பாதிக்கப்பட்ட எளியோர் சார்பில் நெடிய போராட்டம் நடத்தும் மேத்தா பட்கருக்கும் அருந்ததி ராய்க்கும் இந்த விஷயத்தில் முன்னோடி சுகதகுமாரி டாச்சர். அது எல்லாம் இப்போது பழங்கதை.

சுகதகுமாரி போனவாரம் அமைதிப் பள்ளத்தாக்குக்குப் போயிருக்கிறார். சைலண்ட் வாலி அணைத் திட்டத்தைப் பெயர் மாற்றி, அந்த இடத்துக்குக் கொஞ்ச தூரத்தில் பாத்ரக்கடவில் அதே அணையை எழுப்பப் போவதாகச் செய்தி வந்ததைத் தொடர்ந்து அவர் போனது. மக்களின் கருத்தை இது பற்றி அறிய சுற்றுப்புற மாசு நீக்கத்திற்கான அரசு அமைப்பு மண்ணார்காட்டில் வைத்து நடத்திய கருத்தரங்கத்துக்குத்தான் சுகதகுமாரியின் வருகை.

சுகதகுமாரியைப் பேசவே விடாமல் கத்திக் கூச்சல் போட்டு அவருக்கு நேரே கையை நீட்டித் திட்டி, கொஞ்ச நேரம் அவரைப் பிணைக் கைதியைப் போல் பிடித்து வைத்துக் கொண்டு அணைக்கட்டு அவசியம் தேவை என்று ஒரு கூட்டம் கேரளியர் முழங்கினார்கள். அவர்கள் எல்லாம் இந்தத் தலைமுறையில் வந்த இருபது வயதுக்கு உட்பட்ட மலையாளி இளைஞர்கள். பொலீஸ் காவலோடு கூட்டத்திலிருந்து வெளியேறிய சுகதகுமாரியை மட்டுமில்லை, மலையாளத்தின் மற்ற சிந்தனையாளர்கள், படைப்பாளிகளையும் இந்தத் தலைமுறை எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று சிந்திக்க வைத்திருக்கிறது இந்த நிகழ்ச்சி.

அமைதிப் பள்ளத்தாக்கில் இப்படி இருக்க, அட்டப்பாடி மலைப்பகுதியில் அதிகாரிகள் இன்னொரு விஷயத்தில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அட்டப்பாடி ஹில் ஏரியா டெவலெப்மெண்ற் அத்தாரிற்றியான AHAD என்ற அரசு அமைப்பில் பணி செய்யும் என்ஜினியர்கள் மற்றும் சிவில் அதிகாரிகள் தான் போன வாரம் பொலீஸ் ஸ்டேஷனின் புகார் கொடுத்துவிட்டு அலைந்து கொண்டிருக்கிறவர்கள்.

தங்கள் அலுவலகத்தில் ஒரு மூத்த அதிகாரியின் வீட்டுக்கு முன் அவருடைய காருக்கு அடியில் ஒரு மண் பானையும், அதில் தகடு, எலுமிச்சம்பழம், கோழி முட்டை போன்றவையும் இருந்ததைக் கண்டெடுத்ததாகவும், இது யாரோ செய்வினை வைத்ததின் அடையாளம் என்றும் இவர்கள் செய்த புகாரை ஏற்றுக் கேரள பொலீஸ் விசாரணை செய்து வருகிறதாம் – சோழி உருட்டும் நம்பூதிரிகளையோ, கடமட்டத்துக் கத்தனார் போன்ற மகாமந்திரவாதி பாதிரியார்களையோ ஆலோசனைக் கமிட்டியாக நியமித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

வருடம் ரெண்டாயிரத்து நாலில் இப்படி உயர்ந்த பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகள் மூடநம்பிக்கை வசப்படுவதும், அவர்களுக்குத் துணையாக, மலை போல் வேலை குவிந்து கிடக்க, கோழி முட்டை பார்சலையும் செய்வினையையும் பற்றி விசாரணை செய்ய காவல்துறை ஜீப்பைக் கிளப்பிக்கொண்டு ஓடுவதும் எழுத்தறிவில் நாட்டிலேயே முதலிடத்தை வகிக்கும் கேரளாவில் நடக்கிறது என்பதற்கும் மலையாள சானல்களில் மந்திரவாதி, பேய்க் கதைகள் தற்போது சக்கைப்போடு போடுவதற்கும் தொடர்பு இருக்குமா என்று தெரியவில்லை.

நல்ல வேளை, கல்வி சிறந்த தமிழ்நாட்டில் செய்வினையும், செயப்பாட்டு வினையும் இன்னும் தமிழ் இலக்கணப் புத்தகத்தில் மட்டுமே காணப்படும்.

****

அஷ்ட மாங்கல்ய பிரஸ்னம். அதாவது தெய்வத்திடம் குறி கேட்பது. மலையாள பூமிக்கே பிரத்தியேகமான சமாச்சாரம்.

நம்பூத்ரி வந்து நிலவிளக்கேற்றி வைத்து சோழி உருட்டிப் பார்த்துக் கணக்கெல்லாம் போட்டு ஏப்ரல் மாதக் கடைசியில் அறிவித்தது இந்த விதத்தில் இருந்ததாம் –

நாட்டிற்கு இது மகா துர்பாக்கியமான காலம். கொலையும், கொள்ளையும், வழிப்பறியும் ரத்தம் சிந்துவதும் அதிகரிக்கும். விபத்துக்கள், இயற்கையின் சீற்றமாகப் புயலும் மழையும் வந்து தன நாசம், தான்ய நாசம், வாசஸ்தல நாசம். வடக்குப் பிரதேசங்களில் கலகம். ராஜ்ஜியம் சிதறுண்டு போகலாம். சிவகோபம், சர்ப்ப கோபம், ஜீவ கோபம் இப்படி மூன்றும் சேர்ந்து தாக்குகிறதால் விளையும் இந்தக் கஷ்டகாலம் இன்னும் எட்டு வருஷத்துக்கு நீடிக்கும்.

மாத்ருபூமி ஞாயிற்றுக்கிழமை (மே 30) பதிப்பில் கட்டம் கட்டிக் கடைசிப் பக்கத்தில் பதிப்பித்திருக்கும் செய்தி இது.

அவசரப்பட்டு, முன்னால் குறிப்பிட்ட ‘கேரளம் மாறிக்கொண்டிருக்கிறது ‘ விஷயத்தோடு இதைச் சேர்க்க வேண்டாம்.

அஷ்ட மாங்கல்யப் பிரஸ்னம் ஏப்ரலில் நடந்தது ஏ.கே.ஆன்றணி இன்னும் முதலமைச்சராக இருக்கும் கேரளத்தில் இல்லை. எலிசபெத் மகாராணியாரின் ஆளுகைக்கடங்கிய, மாண்பு மிகு டோனி பிளேயர் தொழிற்கட்சிப் பிரதமராக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் லண்டன் மாநகரத்தில் தான். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல ஜோதிடர்களும் பிரஸ்னத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

பிரிட்டாஷ் அசோசியேஷன் ஃபோர் வேதிக் அஸ்ற்றோலஜி சார்பில் இந்தப் பிரஸ்னத்தை நடத்திய பரப்பனங்ஙாடி கைலாச நாத் ராணியம்மாளின் அதிகாரமும் பறிபோகலாம் என்பதையும் ஆருடங்களில் கூட்டிச் சேர்க்க, உடனே பரிகாரத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார்களாம்.

வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் இந்தப் பரிகாரச் சடங்குகள் எல்லாம் பிரிட்டாஷ் அரசு செலவிலாயிருக்கும்.

பிரிட்டனை இப்படி அஷ்டமத்துச் சனி போல் பீடை பிடிக்கக் காரணம் என்ன ?

ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டு மக்களைக் கைதிகளாக்கிச் சித்தரவதை செய்ய அமெரிக்காவுக்கு துணை போனதும் இப்படி ஈசுவர கோபமும் மற்றும் ஏற்பட்டு பிரிட்டன் சபிக்கப்பட முக்கியக் காரணமாம்.

பரப்பனங்ஙாடி கைலாசநாதரின் ஜோசியத்தில் நம்பிக்கை இருக்கிறதோ என்னமோ, அவருடைய சமூக அக்கறை மத்தளராயனுக்குப் பிடித்த விஷயமாகிப் போனது.

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்