வாரபலன் ஆகஸ்ட் 2, 2003 ( ஆர்ச்சர், பொது சிவில் சட்டம், விவரணப்படம், இடாகினிப் பேய்)

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

மத்தளராயன்


தமிழ்நாட்டுத் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் தமிழ் எழுத்தாளர் பெயர் வருவது உத்தேசமாக, இரண்டு சந்தர்ப்பங்களில் தான். ஒன்று சொல்லிக் கொள்ள ஏதுவாகக் கொஞ்சம் பெரிய விருது ஏதாவது கிடைத்தால். மற்றது அன்னாருக்கு நல்லூழ் இருந்தால், பத்திரிகையின் உள் பக்கத்தில் மூணு வரி – ‘காலமானார் ‘.

ஜெப்ரி ஆர்ச்சர் தமிழில் எழுதாத காரணத்தால் அடிக்கடி பிரிட்டிஷ் பத்திரிகைகளில் தட்டுப்படுகிறார். அதுவும் அந்த லட்சச் சுழற்சிப் பெரிய பத்திரிகைகள்அவரைத் துரத்தித் துரத்திச் சீண்டுவது தனிரகம். இந்த விஷயத்தில் நம்ம பேட்டை பிரபலங்களைச் சீண்டும் நம் இலக்கியச் சிற்றிதழ்கள் எல்லாம் இவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி டியூஷன் எடுத்துக் கொள்ளலாம்.

பெர்ஜுரிக்காக நாலு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆர்ச்சர் சகல சவுகரியங்களோடும் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தாலும், வெளியே தினசரி வந்து நாடகக் கொட்டகையில் தினசரி வேலை – ஒன்றும் பிரமாதமில்லை; சூடா, சக்கரை ஜாஸ்தியாக அல்லது கம்மியாக டா போட்டுக் கொடுக்கிற நாயர் கடை டா மாஸ்டர் உத்தியோகம் தான். அதோடு அவருக்கு வார இறுதியில் வீட்டுக்குப் போய் சந்தோஷமாக இருந்து விட்டு வரவும் சலுகை எல்லாம் போன வருடம் கொடுத்தார்கள்.

அவர் வீட்டுக்கும் போனார். விருந்துக்கும் போனார். போலீசில் சொல்லாமல் ஊர் சுற்றியதற்காக அவருடைய சலுகைகளை எல்லாம் ரத்து செய்து திரும்ப சிறையில் அடைத்தார்கள். நாலே மாதம். மனுஷர் இப்போது பரோலில் வெளியே வந்திருக்கிறார். இன்னும் பாதி சிறை தண்டனையாக இரண்டு வருடம் பாக்கி இருக்கிறது.

ஜெயிலில் இருந்தபடியே சிறை அனுபவங்களைப் புத்தகமாக எழுதி உரிமையை ஏகமான பணத்துக்கு விற்றார் ஆர்ச்சர். புத்தகம் வெளி வந்திருக்கிறது. மகா கேவலம். இதுக்கா இத்தனை அலட்டல் என்று பத்திரிகைகள் எகிறுகின்றன.

ஏன் மாட்டார்கள் ? சக பத்திரிகையாளர் ஒருத்தரை கோர்ட்டுக்கு இழுத்து, மான நஷ்ட வழக்குப் போட்டு, பொய்யான சாட்சியங்களை ஜோடித்து நஷ்ட ஈடாகக் கோடிக் கணக்கில் வாங்கிய புண்ணியவான் இல்லையா இவர் ? கூடச் சதி செய்தவர்கள் வாயாலேயே உண்மை வெளியே வர, இவர் காராகிருஹப் பிரவேசம் செய்தார்.

புத்தகத்தின் சில பகுதிகளை ‘தி கார்டியன் ‘ பத்திரிகையில் படித்தேன். ஆர்ச்சரியகரமான அழுத்தம் எதுவும் அதில் இல்லை.

ஆர்ச்சர் பரோலில் வெளியே வந்து சமத்துப் பிள்ளையாக இருந்து, அதை வைத்து இன்னும் இரண்டு நாவல் நல்லபடியாக எழுத வாழ்த்துகள்.மற்றப்படி படைப்பு வேலைகளில் ஈடுபட அவருக்கு வயது அதிகமானபடியால் இயலாதுதான்.


பொது சிவில் சட்டம் பற்றிய விவாதங்கள் இன்று நேற்றுத் தொடங்கியவை அல்ல. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், முற்போக்குச் சிந்தனையாளருமான திரு வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர்கள் அறுபதுகளிலேயே இம்மாதிரியான ஒரு சட்டத்தின் தேவை பற்றிய கருத்துக்களை முன்வைத்தபோது அவை ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு இடமளித்தன.

காரணம் வி.ஆர்.கேயும் அவரோடு இதை ஒட்டியும் வெட்டியும் பேசியவர்களும் இதை மதம் கடந்த, சராசரி மனிதனின் சொந்த வாழ்வை, குறிப்பாகப் பெண்ணுரிமையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய சமூக நடவடிக்கையாகப் பார்த்ததே.

கிறித்துவப் பெண்ணின் வாரிசுரிமை பற்றிய அண்மைத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றமும் இதே கண்ணோட்டத்தில் தான் பொது சிவில் சட்டம் பற்றிக் கருத்துச் சொல்லியிருக்கிறதேயன்றி, சிறுபான்மையினரின் உரிமைப் பறிப்புக்கான ஆயுதமாக இத்தகு சட்டத்தைப் பயன்படுத்த மதவாதிகளுக்குத் துணை போகவில்லை.

எல்லா மதம் சார்ந்த தனி மனித, சமூகச் சட்டங்களிலும் பெண்ணுரிமைக்கு எதிரான விதிமுறைகள் இன்னும் இருப்பது காலம் காலமாக நிலவி வரும் ஆணாதிக்க சமுதாய அமைப்பின் காரணமாகவே.

இந்து அவிபக்த (கூட்டு)க் குடும்பத்தின் தலைவராக (கர்த்தா – காரணவர்) ஓர் ஆண்தான் இருக்க முடியும் என்ற இந்து லாவும், முத்தலாக் மூலம் விவாகரத்தும் பின்னால் ஜீவனாம்சம் பெறுவதில் சிக்கல்களும் கொண்ட இஸ்லாமியச் சட்டமும், இன்னும், திருமணமான பெண்ணுக்குத் தந்தைவழிக் குடும்பச் சொத்தில் பங்கு இல்லை என்று இருந்த இந்து, பிறமத விதிமுறைகளும் சொத்துரிமையை ஆணாதிக்கத்திற்குள் எப்போதும் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில் எழுந்தவை.

இவற்றுக்கும் மதத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை விட, இவற்றுக்கும் இவற்றைக் கடைப்பிடிக்கும் அந்தந்த மத ஆண்வர்க்கத்துக்கும் நெருங்கிய நேசமுண்டு என்பது வேதனைக்குரிய உண்மை. மேல் ஷோவினிசத்தின் மதம் கடந்த வெளிப்பாடான இது மணமுறை உறவு, வாரிசுரிமை, சொத்துரிமை, சுயமாகத் தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ள உரிமை, தத்து எடுத்துக் கொள்ள உரிமை, காப்பாளர் (கார்டியன்) ஆக உரிமை என்று பலவிதத்திலும் ஆண்கள் தங்களுக்கு மட்டுமே சகல அதிகாரத்தையும் வழங்கிக் கொள்ள சமூக அங்கீகாரம் என்ற பெயரில் அனுமதி பெற்றுத் தந்தது.

காலங்காலமாக தலித் மற்றும் விளிம்புநிலை மக்களைச் சுரண்டுதல், உலக அரங்கில் வல்லரசுகள் சந்தைப் பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தி, வளரும் நாடுகளைச் சுரண்டுதல் (மரபணுத் திருத்தி காப்புரிமை பெற்ற வித்துக்கள் மூலம் விவசாயியின் வயிற்றில் அடிப்பதில் தொடங்குவது இது), கணினி போன்ற துறைகளில் கூலி குறைத்து வாங்கிக் கொள்வதில் வளரும் நாடுகளுக்கு இடையே போட்டி ஏற்படுத்தி, ஒரே நேரத்தில் தன்னாட்டுப் பெருமுதலாளிகளையும், ஏழை நாடுகள் வல்லரசுகளையே சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயத்தையும் வளர்ப்பது என்று சமூக அவலங்கள் அதிகரித்து வரும் சூழலில் பொது சிவில் சட்டம் பற்றிய விவாதங்கள் முன்னுரிமை பெறுவது முறையானதா ?

என் நண்பரும், சமூக நீதிக்காக அயராது போராடும் பிரபல வழக்கறிஞருமான திரு கே.எம்.விஜயனோடு உரையாடிக் கொண்டிருந்தபோது இது பற்றிக் கேட்டேன்.

(விஜயன் திண்ணை வாசகரும் கூட. அவருடைய தந்தையார் திரு கல்யாணம் பொதுவுடமை இயக்க மூத்த தோழர்களில் ஒருவர். ‘ஜனசக்தி ‘ பத்திரிகையின் நிறுவனர்.)

common civil code குறித்த அவசரத்தை விட common civilized code அவசியமானது என்கிறார் விஜயன்.

மதங்கள் அனைத்திலும் தெளிந்த சிந்தனையும், மனிதாபிமான நோக்கமும், சக மனிதர்கள் மேல் பரிவுணர்ச்சியும் கொண்டவர்கள் நிறையவே உண்டு. குறுகிய நோக்கமுடையவர்கள் எங்கும் எம்மதத்திலும் இருந்தாலும் அவர்கள் சிலரே.

அறிவு ஜீவிதத் தலைமை ஏற்கத் தகுதியான சமூகப் பொறுப்புணர்ச்சி மிகுந்தவர்கள் ஒட்டுமொத்தமான சமுதாய நலன், குறிப்பாகப் பெண்ணியம் குறித்த ஆரோக்கியமான சிந்தனைகளோடு தத்தம் மதம் சார்ந்த விதிமுறைகளை நுணுகி ஆய்ந்து, அவை எவ்வாறு உருமாற்றம் கொள்ளலாம் என்று சொல்லலாம். மனம் திறந்த, சமூக நலனை மட்டும் கருத்தில் கொண்ட இந்தச் சீரிய சிந்தனைகள் அந்தந்த மதச் சட்டங்களில் இடம் பெற்றாலே போதும். பொது சிவில் சட்டத்தை எதற்காக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கிருஷ்ணய்யரும் மற்ற முற்போக்கு சிந்தனை கொண்ட அறிஞர்களும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகச் சொல்லி வருகிறார்களோ அதன் பலன்கள் வருங்கால சமுதாயத்துக்குக் கிட்டும். மற்ற சமூக அநீதிகளுக்கு எதிரான மாற்றங்கள் போல் இதுவும் முன்னுரிமைப் படுத்தப்படவேண்டும்.

விஜயன் சொல்வதில் இருக்கும் அறிவார்ந்த நேர்மையை நான் ஏற்கிறேன். இந்து இதழில் ராஜிவ் தவான் எழுதிய ‘Codifying Personal Laws ‘ ( ‘The Hindu dated Friday, Aug 1, 2003 – Page 10) கட்டுரையும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் சொல்கிறது.


ராத்திரி சுதி ஏற்றிக் கொண்ட மப்பில் இலக்கியப் பத்திரிகை தொடங்குகிறேன் என்று முடிவெடுத்து, அடுத்த நாள் தேடிப் போனால் வரவேற்று உப்புமா, காப்பி கொடுத்து, ‘எதுக்கு இந்த வீண்வேலை ‘ என்று உண்மையான அக்கறையோடு சொல்ல நண்பர்கள் உண்டு. ஆனால் ஆவணப் படம் எடுக்கக் கிளம்பினால், ஆறிப் போன காப்பி கூடக் பணம் கிடைக்காது. அப்படியே எடுத்தாலும், அதைத் திரையிடக் கொட்டகை கிட்டாது. கிடைத்தாலும், காசு கொடுத்துப் பார்க்க ஆள் வராது – அறிவு ஜீவி, அல்லாத ஜீவி எல்லோரும்தான்.

இந்திய அரசாங்க நியூஸ்ரீலில், பாப்புவா நியூ கினியாவுக்குப் பிரதமர் மூன்று நாள் நல்லெண்ண விஜயமாகப் போவதோ, எக்ஸ்ட்ரா லார்ஜெஸ்ட் சைஸ் டோங்கா மன்னர் வருடாந்திர விஜயமாக இங்கே வரும்போது காந்தி சமாதியில் மலர் வளையம் வைப்பதோ முடிந்து, பீகாரில் வெள்ளம் புல்லாங்குழல் சத்தத்தோடு திரையில் விரிவதைக் காதில் கேட்டுக் கொண்டு, குறைந்த பட்சம் பத்து ஜோடிக் கால்களை மிதித்தபடி முக்கால் இருட்டில் திரையரங்கக் கடைசி வரிசையில் போய் உட்கார்வதே அனுபவமாகிப் போனதால், நம்மில் பலர் முழுசாகப் பார்க்காத சமாச்சாரங்களில் – காக்கை, ராத்திரியில் குல்ஃபி விற்கிறவன், பொதுக் கூட்டத்துக்கு மைக் செட் ஒலிபெருக்கி கட்டுகிறவர்கள் போல் – டாக்குமெண்டரி என்ற ஆவணப் படமும் ஒன்று.

பத்மா சுப்ரமணியத்தின் சகோதரர் கிருஷ்ணசாமி, ‘சிந்துநதிப் பள்ளத்தாக்கிலிருந்து இந்திராகாந்தி வரை ‘ என்று சகல சிரத்தையோடும் எடுத்த, மூன்று மணி நேரம் ஓடக் கூடிய ஆவணப் படம் தூர்தர்ஷனின் கருணையால் இருபது வருடம் முன்னால் ரசிகர்களுக்குப் பார்க்கக் கிடைத்தது.

பிடிக்காவிட்டால் ரிமோட்டை அழுத்தி, உத்தேசமாகச் சானலைத் தேர்ந்தெடுத்து ஏதாவது சீரியல் ஜோதியில் கலந்து தேம்பியழ வாய்ப்பு இல்லாமல், வசமாக மாட்டிக் கொண்ட பார்வையாளர்கள் (captive audience) அப்போது தூரதர்ஷனுக்கு நாடு முழுக்கக் கிடைத்திருந்தார்கள். அவர்கள் தலையில் இந்தியில் எண்ணெய் காய்ச்சி, இந்தியில் முறுக்குப் பிழிந்து அரைவேக்காடாக என்ன என்னவோ கட்டி தூர்தர்ஷன் இழவெடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.

பப்லி, குப்லி, சுட்க்கி, ஜும்லி, பசேசர், லாஜ்வந்தி என்று விநோதப் பெயர்களில் வரும் வட இந்தியப் பாத்திரங்கள் அதை விட விநோதமான ‘போச்சு எனக்குத் தெரிஞ்சு எனக்கு நீ என்ன சொல்ல வரேன்னு ‘ என்பது போன்ற மொழிபெயர்ப்புகளுக்கு வாயசைக்க, நம்ம ஊர் இந்தி தெரிந்த சினிமாக்காரர்கள் தினசரி ஐந்து நிமிடம் பலமாகச் சிபாரிசு செய்ய – வி.எஸ்.ராகவன் இப்படி முன் கதைச் சுருக்கம் சொல்லியே சினிமாவில் அப்பாவாக நடித்ததை விட அதிகம் பிரபலமானார் – தமிழ்நாடே ராத்திரி சாப்பாட்டுக்கு முன்னோ, பின்னோ இந்த ஜுனூனையும், கொஞ்சம் முந்தி ஹம்லோக்கையும், புனியாத்தையும் மாய்ந்து மாய்ந்து பார்த்துப் புளியேப்பம் விட்டது.

மும்பை டோம்பிவிலி, கல்யாண் பகுதிகளில் அப்பளமும் ஊறுகாயும் உண்டாக்கி விற்றுக் கொண்டிருந்த சில மும்பைத் தமிழர்கள் டிராக் மாறி, தூர்தர்ஷன் சீரியல் டப்பிங்கையே குடிசைத் தொழிலாக்கிக் கொண்டார்கள். காசு கொட்டியது நன்றாக மிக.

ஒரே வருடத்தில் முலுண்டில் நாலாவது மாடி – இரண்டு அறை ஃபிளாட் வாங்கி வாழ்க்கையில் உயர்ந்த அவர்களின் பாலி ஹில்ஸில் பங்களா கனவுகள் சிதைய தனியார் சானல்கள் வந்தன அடுத்து. நித்யஸ்ரீயும், சுதா ரகுநாதனும் உச்சத்தில் பாடி அடி எடுத்துக் கொடுக்க மிச்சத்தை நாமும் மெகா சீரியலாகப் பார்க்க உட்கார்ந்தோம் அப்புறம். இன்னும் எழுந்திருக்கவில்லை.

டாக்குமெண்டரிக்குத் திரும்புவோம். காசு கொடுக்காமல், தூர்தர்ஷனில் காட்டாவிட்டால் இங்கே ஆவணப் படங்களைப் பெரும்பாலோர் பார்க்க வாய்ப்பு இல்லை. இப்போதோ, வீட்டுத் திரையில் வந்து விழும் சானலில் நூறோடு நூற்று ஒண்ணாக, தூர்தர்ஷனும் ஆகிப் போனதால், தூர்தர்ஷனைத் தேடிப் போவது அரிதாகி விட்டது. டாக்குமெண்டரிக்காக, டிஸ்கவரிக்கும், பிபிசிக்கும் ரிமோட்டில் விரல் பயணம் போகிறவர்களை அந்த விரலை விட்டுவிட்டுப் பாக்கி விரலால் எண்ணி விடலாம்.

எப்போதாவது களைத்து வந்து உட்கார்ந்து தொலைக்காட்சியைப் போட்டால், மலையாள சானலில் பெட்டிக்கோட் அணிந்த யட்சி சீரியல். நடுவே சாக்கொலாஸ் சோப் விளம்பரத்தின் போது ரிமோட்டை இயக்கினால், தூரதர்ஷனில் ஏதோ ஆவணப்படம் ஓடிக் கொண்டிருப்பது தெரியும். அது என்ன என்று அவதானிப்பதற்குள், வீட்டுப் பொடியன் ரிமோட்டைப் பிடுங்க, டிவிடி ப்ளேயரில் ஸ்ரீகாந்த் உச்சி வெய்யிலில் ஆளரவமற்ற மைதானத்தில் வெகு நிதானமாக மட்டையை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் கற்றுத் தருவார். அந்த சிடியைப் பத்ரமா வச்சுக்கோ என்று ராயர் காப்பி கிளப் மின்குழு நண்பர் அன்போடு கொடுத்துப் போன பிறகு என் வீட்டு சீரியல் உபத்திரவங்கள் வெகுவாகக் குறைந்து சர்வம் ஸ்ரீகாந்த் மயமாகிப் போனது.

டாக்குமெண்டரியைப் பற்றி ஆரம்பித்து, தூர்தர்ஷனில் ஹம்லோக், புனியாத், ஜூனுன், கேபிள் டிவி சீரியல் என்று நினைவோடையாக ஸ்ரீகாந்துக்கு வந்து விட்டேன். அவரோடு சேர்ந்து சூரிய நமஸ்காரம் செய்கிறேன் – அடுத்த வாரம் டாக்குமெண்டரிக்குத் திரும்ப வைக்க.


‘இடாகினிப் பேய்களும்.. ‘ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு.

சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப் பிடிபட்டது.

மாலதி என்ற பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் தரும்போது பால் விக்கி, அந்தக் குழந்தை மரித்தது. அது கண்டு துயருற்ற அவள் எல்லாக் கடவுள் கோவில்களிலும் ஏறி இறங்கி, குழந்தையை உயிர்ப்பிக்கு படி வேண்டுகிறாள்.

அவள் பாசாண்டச் சாத்தன் கோவிலுக்கு வரும்போது அங்கே இருந்த இடாகினிப் பேய் – இது சக்ரவாளக் கோட்டத்து இடுகாட்டில் பிணங்களை உண்ணுவது – ஒரு பெண் வடிவில் அங்கே வருகிறது. அதுவும், பிறரை எப்போதும் குற்றம் சொல்லும் பெண்ணாக.

மாலதியிடம் ‘நீ தவம் செய்திருக்காவிட்டால் உனக்குத் தெய்வம் வரம் கொடுக்காது ‘ என்று சொல்லி, அவள் கையில் வைத்திருந்த மகவை எடுத்துப் போய் இருட்டில் வைத்து உண்டு விடுகிறது.

பாசாண்டச் சாத்தன் அந்த மகவாகப் பிறப்பதாகக் கதை நீளுகிறது.

சிலம்பின் ‘கனாத்திறம் உரைத்த காதை ‘யில் வரும் நிகழ்வு இது.

‘ஐம்பெருங்காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள் ‘ என்ற பெயரில் முனைவர் மகரிபா எழுதிய புத்தகத்தைப் படிக்க எடுத்ததும் இந்த இடாகினிப் பேய் தூண்டித்தான்.

சிலம்பிலும், மணிமேகலையிலும் காவியச் சுவைக்காகவும், முற்குறிப்பு, பின்னோக்கு உத்தி சார்ந்தும், இன்றைய மாந்திரீக யதார்த்தத்தின் பண்டைத் தமிழ் வெளிப்பாடாகவும் எத்தனையோ தெய்வங்களும், பூதங்களும், வானவர்களும் மனிதர்களோடு ஊடாடிப் போகிறார்கள் – கந்திற்பாவை, நாளங்காடிப் பூதம், சதுக்க பூதம், இடாகினிப் பேய், எரியங்கி வானவன், குரங்குக்கை வானவன், காயசண்டிகை போன்றவர்கள் இவர்கள்.

இந்திரன், பாசாண்டச் சாத்தன், மதுராபதி தெய்வம், மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சம்பாபதித் தெய்வம் போன்ற தெய்வங்கள் அங்கங்கே தட்டுப்படுகின்றன.

இந்திரனையும், பாசாண்டச் சாத்தனையும் தவிரக் காப்பியங்களில் வரும் தெய்வங்கள் எல்லாம் பெண்களே. இது ஏனென்று யாராவது ஆராயலாம்.

‘சம்பாபதித் தெய்வம் முதியோள், மூதாட்டி என்றெல்லாம் குறிப்பிடப் படுகிறது. தெய்வங்களுக்கு முதுமையுண்டா என்பது தெரியவில்லை ‘ என்பது போல், தன்னால் அறுதியிட்டு நிறுவ முடியாததை எல்லாம் தெரியவில்லை என்று அடக்கமாகச் சொல்லும் மகரிபா போன்ற முனைவர்கள் அரிதாகவே கண்ணில் படுகிறார்கள். (மகரிபா குறிப்பிட்ட சம்பாபதி, ‘மன்ற அராஅத்த பேஎம் முதிர் கடவுள் ‘ என்று சங்க இலக்கியத்தில் வருகிற வயசான கடவுளை எனக்கு நினைவுபடுத்துகிறது.)

கண்ணகி மதுரையை எரியூட்டுவதை விவரிக்கும் மதுரைக் காண்டம் – அழற்படு காதையில் அரச பூதம், அந்தண பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் என்ற நான்கு பூதங்கள் நகர் நீங்குவதாகக் குறிப்பிடப்படுவது இடைச் செருகல் என்கிறார் மகரிபா. இப்பகுதிகள் ‘கந்தியார் போலும் ஒருவரால் பாடி இடைமடுக்கப் பட்டன ‘ என்கிறார் ந.மு.வெங்கடசாமி நாட்டாரும், தம் சிலப்பதிகார உரையில் (கழகப் பதிப்பு).

பாசாண்டச் சாத்தனைப் பற்றிச் சொல்லும்போது முனைவர் குறிப்பிடுவது –

‘(சாத்தன்) சாதாரண மானுடன் போன்றே ஒரு குடும்பத்தில் மகனாக வளர்கிறான். திருமண உறவிலும் ஈடுபடுகிறான். எட்டாண்டு வாழ்க்கை நடத்துகிறான். அதன் பின் அந்த வாழ்க்கையைத் துண்டித்துக் கொண்டு கோயில் கொண்டாலும், அந்தக் கோயிலுக்கு தேவந்தியை (மனைவி) வரச்சொல்லி அவளோடு கொண்ட தொடர்பைத் தொடர்கிறான். ‘

‘கோட்டத்து நீ வா எனவுரைத்து நீங்குதலும் ‘ என்ற அடியைத் தனியே பார்க்காமல், பின்னால் வரும்

‘ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும்

தீர்த்தத் துறைபடிவே நென்றவளைப் பேர்த்திங்ஙன்

மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக்

கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் ‘

என்பதோடு சேர்த்துப் பார்த்தால் தேவந்தி மணவாழ்க்கையைத் தொடரக் கோவிலுக்குப் போகவில்லை என்பது புலனாகும்.

( ‘ஐம்பெரும் காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள் ‘ – முனைவர் எஸ்.கே.எம்.மகரிபா – வெளியீடு : முப்புள்ளிப் பதிப்பகம், 24, கிரிநகர், இராமாபுரம், சென்னை 600 089).


eramurug@yahoo.com

Series Navigation