வாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

மத்தளராயன்


ஆவணப் படங்கள் எடுப்பது பற்றிப் போன வாரம் இங்கே எழுதியதைப் படித்த ஓர் அன்பர் சொன்னார் – ‘காம்கார்டரில் படம் எடுத்துக் கம்ப்யூட்டரில் மென்பொருள் கொண்டு எடிட் செய்து ஆவணப் படம் எடுக்கலாம் ‘.

கம்ப்யூட்டர் இருக்கு, மென்பொருள் இருக்கு. நாமும் ஒரு ஆவணப் படம் தயாரிக்கலாமே என்று யோசனை சில மாதங்கள் முன்னால் வந்தது.

அறுநூறு பவுண்ட் கொடுத்து புஷ்டியான சோனி டிஆர்வி 14 ஈ காம்கார்டர் வாங்கிக் கொண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்க ஹாலிபாக்ஸ், ப்ராட்போர்ட், ஷெஃபீல்ட் போன்ற திருத்தலங்களிலும் நீண்ட விடுமுறையின் போது லண்டன் மாநகரத்தில் கென்சிங்க்டன், பிக்கடலி வளைவு, டிரபால்கர் சதுக்கம், ஈஸ்ட் ஹாம், வால்த்தம்ஸ்டோ, டவர் பிரிட்ஜ், கிளஸ்டர் ரோடு என்று சந்து பொந்து விடாமலும் அலைந்து நாலைந்து குட்டியூண்டு வீடியோ கேசட்டுகளில் எல்லாமும், எல்லாரும் அடக்கி எடுத்து வந்தேன்.

‘ஹேண்டிகேம்லே எப்படிப் படம் எடுக்கறது ? ‘

‘ரொம்ப எளிசு..இந்தப் பாரு .. இப்படி ‘

வீட்டில் மனைவி, மக்களுக்கு விரிவுரை எடுக்க ஆயத்தமாக உட்கார ஐந்தே நிமிடத்தில் கேம்கார்டர் என் மகன் கையில்.

என் ஆணவமான ஆவணப் படக் கனவுகளுக்கு என்ன ஆச்சு ?

இதுதான் –

டிரபால்கர் சதுக்கத்தில் எலிசபெத் அரசியாரின் வீரர்கள் அணிவகுத்துக் கெத்தாக நடந்து போகிறபோது சின்ன மாமனார் எங்கள் வீட்டுக் கூடத்தில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். லண்டன் பத்மநாப ஐயர் பிளைஸ்டோவில் அவர் இல்லத்தில் எனக்கும் அம்ஷன் குமாருக்கும் மஹாகவியின் ‘சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் ‘ பற்றிச் சுவையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஹைதராபாத் பேகம் பஜாரில் மூலக் கச்ச வேட்டி கட்டிய ஆந்திரர்கள் உயிரைத் திரணமாக மதித்து, ஆட்டோ, ஸ்கூட்டர் களேபரங்களுக்கு இடையே வாயில் புகையும் சிகரெட்டோடு வீதியைக் கடந்து போகிறார்கள். அம்ஷன் குமாரின் ‘பாதல் சர்க்கார் ‘ ஆவணப் படத்தைப் பற்றி யமுனா ராஜேந்திரனும் ஈழ நாடக ஆசிரியர் பாலேந்திராவும் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ராத்திரிப் பத்து மணி மாம்பலம் வெங்கட்நாராயணா தெருவில் ஸும் ஷாட்டாக, ராத்திரி வெளிச்சத்தில் ஓனிக்ஸ் ஊழியர்கள் துப்புரவு செய்கிறார்கள். கிரீன்பார்க் பாதாள ரயில் நிலையத்தில் எக்கச் சக்கக் கூட்டத்தோடு வண்டி நுழைய, நண்பர்கள் பா.ராகவனும், இகாரஸ் பிரகாஷும் நாற்காலியில் உட்கார்ந்து புன்னகை புரிகிறார்கள்.

கொஞ்சம் பொறுங்கள். இன்னும் இரண்டு காசெட் பாக்கி இருக்கிறது. நானும், வீட்டில் மற்றவர்களும் அவற்றையும் ஒரு வழி செய்த அப்புறம் சாவகாசமாக உட்கார்ந்து போஸ்ட் மார்டனிச ஆவணப்படம் தயாரித்து விடுகிறேன்.

———————–

ராஜராஜன்

———-

ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்

ராஜராஜனின் சிலையின் உள்ளே

நரம்புகள் உண்டா ? நாளங்கள் உண்டா ?

சிலையாகுமுன்னர் ஜீவித்திருந்த

இம்மன்னன்

எதைச் செய்து கிழித்துவிட்டானாம் ?

ஈழம் கொண்டானாம்…

சாவகம் வென்றானாம்…

காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை

பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு

மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்

கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்

பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக

குடும்பவிளக்கின் கொழுந்துகளை எல்லாம்

மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்

தஞ்சை நகரில் தேவரடியார் தெருக்களுக்குக்

கால்கோள் விழாச்செய்த காமுகன்

இம் மன்னன்.

மக்களாட்சியின் மகத்துவத்தைச்

சிலையான பின்னும் கற்பழிக்கிறான்

————

ராஜராஜ சோழன் பற்றிய இன்குலாப் கவிதையின் பகுதி மேற்கண்டது.

‘ராஜராஜ சோழனுக்கும் அவன் மகனுக்கும் (ராஜேந்திர சோழன்) வாழ்க்கையில் இரண்டு முக்கியமான வேலைகள் தான் உண்டென்று தெரியவருகிறது. அவர்கள் போர் செய்யாத போதெல்லாம் கோவில் கட்டினார்கள். கோவில் கட்டாத போதெல்லாம் போர் செய்தார்கள். போரில் எதிரிகளை வென்று அவர்களிடமிருந்து காணிக்கையாகப் பெற்ற பொருளையெல்லாம் கோவில் கட்டுவதில் செலவழித்தார்கள் ‘

இதை எழுதியவர் சாட்சாத் கல்கி தான். (கல்கியின் கட்டுரைகள் – ‘வாழ்வும் தாழ்வும் ‘).

ராஜராஜசோழனைப் ‘பொன்னியின் செல்வன் ‘ மூலம் கிட்டத்தட்டக் காவிய நாயகன் அந்தஸ்துக்கு உயர்த்திய கல்கி எழுதியது இது என்பதை நம்பச் சிரமமாக இருந்தாலும், அவர் சொன்னதில் இருக்கும் உண்மையை நம்பித்தான் ஆக வேண்டும்.

ராஜராஜன் காலத்தில் வரிச்சுமை அதிகமாகி, உழவர்கள் போராட்டம் நடத்திய கல்வெட்டுச் செய்திகளை பேராசிரியர் நா.வானமாமலையும், ஆய்வு வட்டம் வெ.கிருஷ்ணமூர்த்தியும் குறிப்பிட்டுள்ளார்கள். நொபுரு கரோஷிமாவும் பிற்காலச் சோழர்கள் காலத்தை ஆராய்ந்து எழுதியபோது சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

வரலாறு யாருக்கு வேண்டும் ? நமக்கு ஆசுவாசமளிக்கும் பிம்பங்கள் மட்டும் போதும்!

————————————————–

இருக்கப்பட்ட இலவசப் பத்திரிகைகள் போதாதென்று, மயிலையில் தான் வேலை பார்க்கும் வங்கியில் யாரோ விநியோகித்ததாக என் மனைவி ஒரு எட்டுப் பக்க ‘ஹெல்த் ந்யூஸ் ‘ இதழைக் கொண்டு வந்து போட்டாள்.

கடலை மடித்து வந்த காகிதம் என்றாலும் மேய்கிற பழக்கம் இன்னும் விடாத காரணத்தால் பிரித்தேன்.

ப்ரிவெண்டிவ் பெரிநேட்டாலஜி செண்டர் துவக்கம், சிசோஃப்ரீனியா ஆராய்ச்சி மையம், அல்ஷைமர் நோய், பைபோலார் கோளாறு, டாமென்ஷியா என்று கனமான மருத்துவ நெடிக்கு நடுவே ராசிபலன். பிறந்த தேதிப்படிக்கு ராசி பார்த்துக் கணித்த இதேபடிதான் ஆகஸ்ட் 2003-ல் உங்களுக்கு நடக்கப் போகிறது. ஜாக்கிரதை.

ஏரிஸ் (மார்ச் 21 – ஏப்ரல் 20) – இருபத்து மூணாம் தேதிவரை தோள்வலியும் கண்வலியும் இருக்கும்.

டாரஸ் (ஏப்ரல் 21 – மே 21) – வயிற்றில் வாயுத் தொல்லை. அஜீர்ணம் ஏற்படும்.

ஜெமினி (மே 22 – ஜுன் 21) – சைனஸ், சளி, இருமல்.

கான்சர் (ஜூன் 22 – ஜூலை 22) – மூச்சு விடுவதில் தொல்லை.

லியொ (ஜூலை 23 – ஆகஸ்ட் 22) – தோல்நோய், வயிற்று வேதனை மாதம்.

வெர்கோ (ஆகஸ்ட் 23 – செப்டம்பர் 22) – இரண்டாம் வாரத்தில் பிளட் பிரஷர் எகிறும்.

லிப்ரா (செப் 23 – அக்டோபர் 23) – ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும்.

ஸ்கொர்ப்பியொ (அக் 24 – நவம்பர் 21) – நரம்புத் தளர்ச்சி ஏற்படலாம்.

சகிற்றாரியஸ் (நவ 22 – டிசம்பர் 21) – முதுகுவலி, வயிற்றுவலி வரும். போகும்.

கெப்ரிக்கார்ன் (டிச 22 – ஜனவர் 19) – கால்வலி. இல்லாவிட்டால் தோள்வலி வந்தே தீரும்.

எக்வாரியஸ் (ஜன 20 – ஃபெப்ரவரி 18) – மூட்டுவலி, நரம்புத் தளர்ச்சி மாதம் இது.

பிசெஸ் (ஃபெப் 19 – மார்ச் 20) – இரண்டாம், மூன்றாம் வாரத்தில் காலில் அடிபடும் என்பதால் பார்த்து நடக்கவும்.

என்னய்யா வெளயாடறீங்களா ? பட்டணத்தான்னா, காதுலே பிளாஸ்டிக் பூ சுத்திட்டு வந்திருப்பான்னு

நினச்சீங்களா ?

————————————————–

நண்பர் ஹரிகிருஷ்ணனின் நகர வெண்பா ஒன்று –

முன்னே இலையுரசும்; மூண்டெழும்பும் தீவண்ணக்

கொன்றைப்பூச் சூடிக் கிளையுரசும் – பின்னின்று

சோடியம் பூத்தவொளி சூழ்ந்து தரைநக்கும்

மாடிக் குடியிருப்பில் வந்து.

‘சோடியம் பூத்தவொளி சூழ்ந்து தரைநக்கும் ‘ – மரபின் முதிர்ச்சியும், புதுசின் பாய்ச்சலும் சச்சரவில்லாமல் கலக்கும் செழுமையான கவித்துவத்துக்கு உதாரணம் சொல்ல இந்த ஒரு வரி போதும்.

——————————————————————-

eramurug@yahoo.com

Series Navigation