வாய்பாயி பதவி இறங்க வேண்டும்.

This entry is part [part not set] of 14 in the series 20010318_Issue

சின்னக்கருப்பன்


தெஹல்கா என்ற மின்வலைப்பக்கத்தில் பாதுகாப்பு சம்பந்தமான பொருள்களை வாங்குவதிலும் விற்பதிலும் கமிஷன் பல்வேறு நபர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை பரபரப்பாக வெளியிட்டு பல மந்திரிகளின், அரசியல்வாதிகளை தலைகளை உருட்டியிருக்கிறார்கள்.

வாழ்த்துவது தவிர வேறு என்ன ?

ராஜீவ்காந்தி ஆட்சிக்கு வந்ததும் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் கமிஷன் வழங்கவோ பெறவோ கூடாது என்பதை சட்டமாக்கினார். காங்கிரசுக்கு அடாவடி பெரும்பான்மை இருந்த அந்த பாராளுமன்றத்தில் எதிர்க்குரலே இல்லாமல் இது சட்டமானது. அதன் பின்னர் ராஜீவ்காந்தியே போபர்ஸ் என்ற பீரங்கிகள் வாங்கும் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு, அடுத்த தேர்தலில், மக்களால் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

ஜெனரல் நட்கர்ணி அவர்கள், ‘பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் கமிஷன் வழங்கக்கூடாது என்ற சட்டம் தேவையற்றது, இது இன்னும் மறைமுகமான ஊழலுக்கு மட்டுமே வழிவகுக்கும் ‘ என்று இந்த சட்டத்தை குறை கூறியிருக்கிறார்.

ஒப்புக்கொள்ளக்கூடிய பேச்சு இது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பாஜகவின் தலைவர் பங்காரு லஷ்மண் அவர்கள் பணம் பெற்றது கட்சிக்குத்தானே தவிர தனக்காக அல்ல என்று கூறியிருக்கிறார். ஒப்புக்கொள்ளக்கூடியதாகத் தெரியவில்லை. கட்சிக்குப் பணம் வாங்கவேண்டுமென்றால் ஏன் டாலரில் கேட்கவேண்டும் ? பாஜக என்ன அமெரிக்க கட்சியா ?

உடனே ஆர் எஸ் எஸ், பங்காரு அவர்களை கை கழுவி விட்டது ஆச்சரியமானதல்ல. ஆர் எஸ் எஸ் ஒரு பிராம்மணியக் கட்சி என்பது இதனால் தீர்மானமாகிறது என்று இடதுசாரிகளோ அல்லது காங்கிரஸ் அறிவுஜீவிகளோ பேசினால் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஆனால் ஆர் எஸ் எஸ் என்ற அமைப்புக்கு ஜாதி என்பது ஒரு காரணமாக இருந்ததே இல்லை என்பது ஆர் எஸ் எஸ் நிறுவனத்தைப் அரசியல் ரீதியாக கவனித்துவருபவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம். சுப்பிரமணியசாமி, பி.என்.ஓக் போன்ற பிராம்மணர்களையும், கல்யாண்சிங் போன்ற நடுவாந்தர ஜாதித் தலைவர்களையும் கைகழுவிவிட அது என்றுமே தயங்கியதில்லை. அவர்களுக்கு என்னதான் மக்கள் ஆதரவு இருந்தாலும், புத்திசாலிகளாக இருந்தாலும், ஆர் எஸ் எஸ் என்ற நிறுவனத்தின் மீது சவாரி செய்ய ஒருவரையும் அது அனுமதித்ததில்லை. தலித் என்பதால் என்மீது கட்சியைச் சேர்ந்தவர்கள் பழிவாங்கிவிட்டார்கள் என்று பங்காரு சொல்கிறார். இது அஜாருதீன் நான் முஸ்லீம் என்பதால் என்னைப் பழிவாங்குகிறார்கள் என்று பேசியதுபோலத்தான். முஸ்லீம்களும், தலித்துகளும் என்னதான் ஊழல் செய்தாலும் அவர்களை கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ கூடாது என்று இந்திய அரசியல்சட்டத்தில் எங்காவது எழுதியிருக்கிறதா என்று தெரியவில்லை. ஊழல் செய்வதில் ஜெயலலிதா போன்ற பிராம்மணர்களும், லல்லுபோன்ற நடு சாதிக்காரர்களும், சோனியாபோன்ற வெளிநாட்டுக்காரர்களும், அஜார் போன்ற முஸ்லீம்களும், பங்காரு போன்ற தலித்களும், ஒரே கூட்டணியில் தான் இருக்கிறார்கள். தெற்காசிய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இறப்பும், ஊழலுமே சமத்துவ காரணிகள்.

ஆங்கிலேயர்கள் அவர்களது நாட்டின் அமைப்பைப் பற்றி பேசும்போது ‘muddle through ‘ என்று சொல்வார்கள். சில தவறுகள், சில சரிகள் நடந்துகொண்டே இருக்கும். சரிகள் நிற்கும், தவறுகள், தவறுகள் செய்தவர்கள் தொடர்ந்து களையப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதுதான் ஜனநாயகம். அதுதான் அறிவியல். தவறுகள் வெளிப்படக்கூடிய சுதந்திரச் சூழ்நிலையை தக்கவைத்துக்கொள்வதே ஜனநாயகத்தின் சுதந்திரம். அவ்வாறு இருக்கும் சுதந்திரத்தை தெஹல்கா இன்று பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

தெஹல்காவின் அறிக்கை குறைகள் இல்லாமல் செய்யபடவில்லை. உதாரணமாக ஆர்கே ஜெயின் தானே சுகாய் பேரத்தில் ஈடுபட்டு சமதா கட்சிக்கு காசு வாங்கித்தந்ததாகக் கூறுகிறார். சுகாய் நரசிம்மராவ் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முலயாம் சிங் காலத்தில் கையொப்பமிடப்பட்டது. ஆர்கே ஜெயின் எப்படி அதில் ஈடுபட்டு சமதா கட்சிக்கு காசு வாங்கித்தந்திருக்க முடியும் ? வெட்டி பந்தா போலத்தான் அவரது பேச்சு இருக்கிறது. நேராக காசு வாங்குவதை காண்பித்தபின் மற்ற குறைகளைக்காண்பித்து தப்பிக்க முடியுமா ?

தலைகள் உருளவேண்டியது நியாயம். கிஞ்சித்தேனும் மக்களுக்கு ஆளும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வேண்டும். அதற்காகத்தான் ஜனநாயகம். ஐந்து வருடங்களுக்கு தங்களையாரும் அசைக்க முடியாது என்பது இருந்தால் இப்படித்தான் தெளிவாக வெளிப்படையாக ஊழல் நடக்கும். ஐந்து வருடங்களுக்கே இந்த கதி என்றால், எப்போது போவான் என்று தெரியாத பக்கத்து நாட்டு ராணுவச் சர்வாதிகாரி பண்ணும் அட்டூழியம், ஊழல் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். வெளியே தெரியவில்லை என்பதால் நடக்கவில்லை என்பது பொருளல்ல. வெளியே தெரியாமல் இருக்கத்தான் பத்திரிக்கை சுதந்திரம் இது போன்ற ராணுவ அரசாங்கங்களில் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆகவே காப்பாற்றப்பட வேண்டியது இந்த அரசாங்கம் அல்ல. காப்பாற்றப்படவேண்டியது ஜனநாயகமும் அதன் சுதந்திரமுமே. நான் என் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் பாஜக அரசுக்கு என்ன மாற்று என்று கேட்கிறார்கள். இந்த அரசாங்கம் போனால் வேறு யார் வருவார் என்றும் கேட்கிறார்கள். நிச்சயமாக சோனியா அல்லது காங்கிரஸ் அரசோ, அல்லது வேறு குஜ்ரால், சந்திரசேகர், ஜோதிபாசு அரசோ ஊழலில்லாமல் இருக்கும் அல்லது இதை விட ஊழல் குறைவாக இருக்கும் என்றோ யாராலும் தைரியமாகச் சொல்லமுடியவில்லை. (கேவலம் ஒரு லட்ச ரூபாய் என்று அரசாங்க அதிகாரிகளே சென்னையில் பாஜக தலைவரை கிண்டல் வேறு செய்கிறார்கள்) ஆனால் இந்த அரசில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவி இறங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆகவே இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதவி இறங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தலைசாய்த்து பாதுகாப்பு மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும், பாஜக தலைவர் பங்காரு லக்ஷ்மண் அவர்களும், ஜெயா ஜெட்லியும் பதவி இறங்கியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் நான் இன்னொன்றை கவனிக்கிறேன். காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்றும் பாஜக இன்னும் அவ்வளவாக ஊழல் கட்சியாக பார்க்கப்படாமலும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்திய ஊழலின் அடித்தளத்தை நிறுவியவர்களும், அதன் வேர்களுக்கு நீர்பாய்ச்சி அது கொப்பும் கிளையுமாக கடந்த 50 வருடங்களாக கவனித்து வளர்த்தவர்களும் காங்கிரஸ் கட்சியினர். அந்த ஊழல் பாடத்தை பல்வேறு கட்சிகளுக்கு கற்றுகொடுத்து எல்லோரையும் ஊழல் மன்னர்களாக ஆக்கியவர்களும் அவர்களே.

மேலும் அது நேரு பரம்பரை கட்சியாக வேறு நிலை பெற்று காங்கிரஸ் என்றாலே நேரு குடும்பம் தான் என்று சாதாரணர்களும் புரிந்து அறிந்து வைத்திருக்கும் இந்தக் காலத்தில், குடும்ப கெளரவத்துக்காக முன்பு காங்கிரஸ் கட்சித்தலைவர்களாக இருந்த நேரு, இந்திரா, ராஜீவ் போன்றவர்களை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விமர்சனம் செய்துவிட்டு அந்தக்கட்சிக்குள் இருக்கமுடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இது போன்ற ஒரு சிந்தனைக்கு மாற்றாக பாஜக கட்சி பரம்பரை ஆட்சியாக இல்லாமல் இருப்பதும் ஒரு நல்ல விஷயம் என்று இதைப் பார்க்கிறார்கள். ( நிக்ஸன் ஆட்சியை தெளிவாக விமர்சிக்கும் குடியரசுக்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களே இன்று சின்ன புஷ் இருக்கும்போது பெரிய புஷ் அரசு செய்த தவறுகளை வெளிப்படையாக பேச அஞ்சுகிறார்கள்). ஆகவே பங்காரு முன்னாள் கட்சித்தலைவராக இருந்தாலும் அவரை தெளிவாக பொதுவில் விமர்சனம் இன்றைய போக்கு ஆதரிக்கத்தக்கதுதான்.

இன்று பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் வாய்பாயி அவர்களுக்கு நெருங்கிய நபர்களான மிஸ்ராவும், அவரது மருமகனான ரஞ்சன் பட்டாச்சார்யா அவர்களும் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வந்திருக்கிறது. இது குறித்து வாஜ்பாயி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே என் கருத்து. பாஜகவில் இருக்கும் மற்ற அரசியல்வாதிகளான ஜஸ்வந்த் சிங், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களில் ஒருவர் ஏன் பிரதமராகக்கூடாது ?

ஆகவே காப்பாற்றப்பட வேண்டியது வாய்பாயி அல்ல. காப்பாற்றப்படவேண்டியது ஜனநாயகமும் அதன் சுதந்திரமுமே.

Series Navigation