வாயு (குறுநாவல் அத்தியாயம் மூன்று)

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

இரா.முருகன்


அத்தியாயம் மூன்று

ஓரமாகக் கதவு திறக்க நீண்ட பழுப்புத் தலைமுடியும் சிறு தாடியுமாக ஒருவன் அவசரமாக உள்ளே நுழைந்தான். மேல் சட்டை போடாமல் சதை பிதுங்கி இருந்த உடம்பு அவனுக்கு.

கூடவே சூட் அணிந்த கனவான்களில் ஒருவர் வாசலிலிருந்து ஓடி வந்து அவனோடு சேர்ந்து நின்றார்.

மொத்தமே மூணு பேர்தானா ? இன்றைக்கு ஒளிப்பதிவைத் தள்ளிப்போட வேண்டியதுதான்.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, முதல் வரிசைக் கிழவர் திரும்பி வந்து, மூணு இல்லை நாலு பேர் வந்திருக்கிறோம் என்றார்.

சரி அவ்வளவுதானே ?

தாடிக்காரனை முந்திக் கொண்டு சூட் அணிந்த கனவான் சொன்னார்.

உங்கள் நிகழ்ச்சிகளை ஆர்வமாகப் பார்க்கிறவர்கள் நாங்கள்.

பின்வரிசை இளைஞன் யுவதிக்கு முத்தம் கொடுப்பதை ஒரு வினாடி நிறுத்தி அறிவித்தான்.

தாடிக்காரன் தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறவன் என்பது குளோரியா அம்மாளுக்கு நினைவு வந்தது. சீமாட்டி வீட்டுத் தொலைக்காட்சியில் பார்த்தது இவனைத்தான். ஆனால் அப்போது கொசகொச என்று ஒரு சட்டை மாட்டி இருந்தான்.

வயதானதால் முகங்கள் குழம்பித் தெரிகின்றன. ஆனாலும் எல்லாமே ஒரு இனம் புரியாத பயத்தை அவளுக்குள் உருவாக்குகின்றன.

விளம்பரப் படுதாவை இங்கே கட்டலாமா ?

உள்ளே புதிதாக நுழைந்து யாரோ கேட்டபடி படுதாவைத் தரையில் தவழவிட்டு விரித்தார்கள்.

ஒரு குளிர்பானப் போத்தலின் பெரிது படுத்தப்பட்ட படமும், கூடவே அதைப் பருகிய படிக்கு ஒரு பள்ளத்தாக்கில் பனிக்குவியலுக்கு நடுவே சாய்ந்திருந்த இளஞ்ஜோடியின் புகைப்படமுமாக இருந்தது அது.

இதற்கென்ன இப்போ அவசரம் ? நிகழ்ச்சியே நடத்தாலாமா வேண்டாமா என்று..

சூட் அணிந்த கனவான் சலித்துக் கொண்டபோது வாசலில் அமர்ந்திருந்த பெண்மணி அவசரமாக உள்ளே வந்தாள்.

ஒரு பஸ் நிறைய மாணவர்கள் வந்திருக்கிறார்கள். பல் மருத்துவக் கல்லூரியாம். நிகழ்ச்சியில் எல்லோரும் பங்கு பெற வேண்டுமாம். நாற்பது பேராவது குறைந்த பட்சம் இருப்பார்கள். இந்த இடம் எப்படிப் போதும் ? திரும்பச் சொல்லிவிடலாமா ?

அவள் கேட்டபோது வேண்டாம் என்று தாடிக்காரன் தலையசைத்தான். அவன் முகம் திருப்தியைக் காட்டியது.

மூன்று அல்லது நான்கு குழுக்களாக ஒளிப்பதிவு செய்து கொள்ளலாம். வந்தவர்களில் ஒரு பத்துப் பேரை இங்கே வந்து உட்காரச் சொல்லுங்கள். மற்றவர்களை மேல்தளத்தில் அமர்த்தி வையுங்கள். பெண்களும் உண்டுதானே ?

அவன் அக்கறையாக விசாரித்தபோது பின்வரிசை யுவதி வாயால் பர்ர்ர் என்று சத்தம் எழுப்பினாள்.

தாடிக்காரன் ஜப்பானிய முறைப்படி குனிந்து அவளுக்கு வணக்கம் சொல்லி உடனே திரும்பிப் பின்புறத்தை அசைக்க அபானவாயு ஓசையோடு வெளியானது.

தாத்தா, ஹோவ்ஸ் உங்களைக் குசுவுக்குக் கூடப் பெறுமானம் இல்லாமல் ஆக்கி விட்டான். சொன்ன மாத்திரத்தில் அவனுக்கு உடம்பு எப்படி வழங்குகிறது பாருங்க. ஹோவ்ஸ், நீ நல்ல பிள்ளை இல்லையோ ..எங்கே இன்னொரு முறை ..

பின்வரிசை யுவதி கிழவரிடம் சொல்ல ஆரம்பித்து தாடிக்காரன் முகத்தைப் பார்த்து சிரித்தபடி முடித்தாள்.

ஹோவ்ஸ் என்ற அந்தத் தாடிக்காரன், சீமாட்டி, உங்கள் சித்தம் என்று மரியாதையாகச் சொல்லி, அவள் அருகில் போய் நின்று இன்னும் சத்தமாக வாயு வெளியேற்றினான்.

ஆனாலும், போட்டி நடத்துகிறவர்கள் அதில் பங்கு பெறமுடியாதே ?

கிழவர் எழுந்து நின்று சொன்னபோது அவர் முகத்தைக் குளோரியா அம்மாள் கவனித்தாள். இதைச் சொல்லி முடித்தபிறகு ஒருதடவை பர்ர்ர் என்று தாடிக்காரனுக்குச் சமமாக ஒலியெழுப்ப அவர் சிரமப்பட்டதுபோல் தோன்றியது அவளுக்கு.

கவலையே படாதே தாத்தா. நான் உன்னோடு போட்டி போடப் போவதில்லை. பெண்ணே, உன் மார்பகங்கள் அழகானவை.

தாடிக்காரன் கடைசி வரிசைப் பெண்ணின் கைகளைப் பற்றியபடி சொன்னான்.

உன்னுடையதும் தான்.

அவள் திரும்பிச் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். யுவதி கூட இருந்த இளைஞன் தாடிக்காரனின் பின்புறத்தில் தட்டினான்.

மயான அமைதி.

அவன் சொன்னபோது யுவதி கலகல என்று சிரித்தாள்.

குளோரியா அம்மாளுக்குச் சிரிப்பு வராவிட்டாலும் முகத்தைச் சந்தோஷமாக இருப்பதுபோல் வைத்துக்கொள்ள முயற்சி செய்தாள்.

ஓவென்ற பெரும்சத்தம் எழுப்பிக் கொண்டு ஏழெட்டுப் பேர் உள்ளே நுழைந்தார்கள். அவர்களில் ஒரு பெண் தாடிக்காரனின் வயிற்றில் செல்லமாகக் குத்தி இது எத்தனையாவது நிகழ்ச்சி என்று சூயிங்கம் மென்றபடிக்கு விசாரித்தாள்.

சூட் அணிந்த கனவான் கையில் வைத்திருந்த காகிதங்களைச் சரிபார்த்து அறுபத்து நாலு என்றார்.

இன்னும் நாலு போகட்டும் ஹோவ்ஸ். நீ அப்புறம் நடத்த வேண்டிய நிகழ்ச்சிக்கு யோசனை தர நான் தயார்.

அவள் வாயில் இருந்து சூயிங்க் கம்மை எடுத்து தாடிக்காரனின் பின்புறத்தில் ஒட்டி அவன் கன்னத்தைச் செல்லமாகத் தட்டிவிட்டு குளோரியா அம்மாள் பக்கத்து நாற்காலியில் அமர்ந்தாள்.

இன்னும் பத்து நிமிடத்தில் தொடங்கி விடலாம்.

தாடிக்காரன் முகம் முழுக்கச் சிரிப்பாக வெளியே போக, குளிர்பானப் படுதாக்களை அறை முழுக்கக் கட்டத் தொடங்கினார்கள்.

பக்கத்து நாற்காலிக் கறுப்பி கழிப்பறைக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பினாள்.

அவளுடைய கைப்பையை ஒட்டி இன்னும் பாதி கூடக் காலியாகாத பழுப்புக் காகிதப் பொட்டலம் இருந்தது.

குளோரியா அம்மாள் ஒருபிடி மொச்சை அதிலிருந்து எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்