வானமும் கூரையும்

This entry is part [part not set] of 10 in the series 20000924_Issue

முகையூர். அசதா


உலக் மொத்தத்திற்கும் ஒரே கூரை

-வானம்

அது நமக்கு அநாவசியம்

நமக்கென தனித் தனிக் கூரைகள்

என் ஓலைக் கூரைக்குள் நானும்

உன் ஓலைக் கூரைக்குள் நீயும்.

விழல் வேய்ந்தது

அவரவர் கூரைக்குள் அவரவர்கள்.

ஓலையும் விழலும்

ஓடும் சன் ஷேடும்

ஒருபோதும் கவலைப்பட்டுக் கொண்டதில்லை

நீயும் நானும் அவர்களும் கூட

ஒரு கோரப்புயல் அடித்தும் ஓயும் வரை.

பின் உன்னுடைய என்னுடைய

அவர்களுடைய கூரைகள்

கண்காணாத தூரத்தில் வெள்ளத்தில் கலந்திருக்க

நீயும் நானும் அவர்களும்

நிர்கதியாய் நிற்கிறோம்

மேலே உலக மொத்தத்திற்கும் ஒரே கூரை

-வானம்

நீயும் நானும் அவர்களும் அண்ணாந்து பார்ப்பது

உணவு பொட்டலம் சுமந்து வரும்

ஹெலிகாப்டருக்காகத்தான் என்றாலும்

அதற்கும் மேலே தெரிகிறது

உனக்கும் எனக்கும் அவர்களுக்கும்

அனாவசியமான அந்த வானம்.

Series Navigation

முகையூர். அசதா

முகையூர். அசதா