வாசகர்கள் கவனத்திற்கு

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


கடந்த வாரத் திண்ணையில் ரோசா வசந்த் எழுதியிருந்த கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்.(1900களின் துவக்கத்தில் ?) நிகழில் சுஜாதா எழுதிய ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்ற நூலை விமர்சித்து பிரமீள் அறிவியலும்,ஆன்மிகமும் குறித்து எழுதியிருந்தார்.அது ஒரு விவாதத்திற்கு அடி கோலியது,ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்,ஜீவ ஒளி,நான் பிரமீள் கட்டுரைக்கும்,சுஜாதா நூல் குறித்தும் கருத்துகளைத் தெரிவித்திருந்தோம்.அக்கட்டுரைகள் அறிவியல்,ஆன்மிகம்,அதிகாரம் என்ற நூலில் (தொகுப்பாசிரியர் ஞானி ,காவ்யா வெளியீடு) உள்ளன.என் கட்டுரையில் கூற்பட்டுள்ளவை ரோசா வசந்த் எழுதியவற்றுடன் தொடர்புப்டுத்தி பார்க்கத் தக்கவை.அதில் உள்ளவற்றை நான் இங்கு மறுபடியும் விளக்கப்போவதில்லை.ஒரு சில அடிப்படை விஷயங்களை மீண்டும் மீண்டும் கூறுவது அலுப்பூட்டும் செயல்.காப்ரா எழுதியவை,அறிவியல் குறிப்பாக குவாண்டம் பெளதிகம்,ஆன்மிகம்/கிழக்கத்திய சிந்தனைகள் குறித்து பெரிய அளவில் விவாதம் நடந்துள்ளது.

மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கருத்தை ஏதோ இந்த விவாதங்களே நடக்காதது போல் தமிழ்ச் சூழலில் முன்வைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.காப்ராவிற்கும்,கென் வில்பருக்கும் இது குறித்து நடந்த உரையாடல் புகழ் பெற்றது.அதைப் பற்றிக் கூட தெரிந்திருக்க வேண்டாம், கொஞ்சம் யோசித்தால் கூட முன் வைக்கப்படும் கருத்துக்கள் பலவீனமானவை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளமுடியும். அறிவிலாளர்கள் கூறும் கருத்துக்களை அவர்கள் அறிவியலாளர்கள் என்பதற்காக அப்படியே ஒப்புக்கொள்ள முடியாது. கிழக்கத்திய சிந்தனையை சில பெளதிக அறிவியலாளர்கள் ஏற்கலாம்/புகழலாம் ஆனால் ஒட்டுமொத்த துறையில் அது குறித்து எத்தகைய மதிப்பீடு நிலவுகிறது அல்லது நிலவ முடியும் ?,இதையும் யோசிக்க வேண்டும்.ஐன்ஸ்டான் சோசலிசம்,சமாதனம் குறித்தும் எழுதியுள்ளார்.அதற்காக அவற்றிற்கு இயற்பியல் ரீதியாக அங்கீகாரம் இருப்பதாக பொருளில்லை.இவையெல்லாம் மிகவும் அடிப்படையான விஷயங்கள்.இது போன்றவற்றை எத்தனை முறை ஒருவர் எழுதிக் கொண்டிருக்க முடியும்.வேறொரு அறிவியலாளர் இனப்பாகுபாடு/இனவெறி ஆதரவாளர் என்பதற்காக அறிவியல் அதை ஏற்கிறது என்றா முடிவு செய்ய முடியும்.ஐன்ஸ்டான்

போன்றவர்கள் தத்துவத்தில் ஆர்வம் காட்டுபவர்கள், அவரது தத்துவத்துறை அறிவு அவருக்கு அறிவியல் பிரச்சினைகளை வேறோரு கண்ணோட்டத்தில் யோசிக்க உதவியது.வேறோரு விஞ்ஞானி தத்துவ அறிவு

இன்றி அதே கண்ணோட்டத்தினை வேறுவிதமாக யோசித்து முன்வைத்திருக்க முடியும்.டேவிட் போம்

ஜித்து கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடியுள்ளார்.அதே சமயம் பல இயற்பிலாளர்கள் ஜித்து கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி கேள்விபட்டிருக்கமாட்டார்கள்.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகள் அறிவியல் ரீதியாக நீருபணம்/

ஆதரவு பெற்றவை என்பதற்கு போம் எழுதியவை சான்று என்ற முடிவிற்கு வரமுடியுமா ?. ஆன்மிக கருத்துக்களுக்கு ஆதரவாக இப்படி அறிவியலாளர்களை பயன்படுத்துவது கோக்/பெப்சி விளம்பரத்திற்கு

சினிமா நடிகர்களை/கிரிக்கெட் நட்சத்திரங்களை பயன்படுத்துவதை விட கேலிக்கூத்தான ஒன்று.

ஒரு அறிவிய்லாளர் உருவாக்கிய மென்பொருளைப் பயன்படுத்துவதைப் பற்றி ஒரு இணைய இதழில்

கட்டுரை வெளிவந்துள்ளது.அதைப் படித்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.ஏனெனில் அதை எப்படிப்

பயன்படுத்துவதை அவர் எதிர்த்து எழுதினாரோ அப்படி பயன்படுத்துவதை ஆதரித்து கட்டுரையில் எழுதப்பட்டிருந்த்து, அதுவும் அவர் அவ்வாறு எதிர்த்து எழுதியிருந்தார் என்பதை குறிப்பிடாமலே.இவ்வளவிற்கும் அவர் எழுப்பிய கேள்விகள்,எதிர்த்து எழுதியது ஆகியவை பரவலாகத் தெரிந்தவை.அந்த மென்பொருள் குறித்த விவாதங்களில் இதுவும் இடம் பெறுவது சாதாரணமான ஒன்று.1976 ல் இந்த அறிவிலாளர்

எழுதிய நூலில் இது குறித்து எழுதியுள்ளார். இது பரவலாக மேற்கோள் காட்டப்படுவது,பாடத்திட்டங்களில்

இடம் பெற்றுள்ளது.நான் சமீபத்தில் படித்த,2003ம் ஆண்டு வெளியான ஒரு தொகுப்பு நூலில் இவர் எழுதிய கட்டுரை உள்ளது. ஆனால் 2003ல், இந்த சர்ச்சையே இல்லாதது போல்,அவர் அதை எதிர்த்தது குறித்து ஒரு வரி கூட இல்லாமல் ஒரு கட்டுரை எழுதப்பட்டு, வெளியாகிறது.இதைப் பற்றி தமிழில் நானே 1980களின் இறுதியில் எழுதியிருக்கிறேன்.அதற்கான சான்றாதாரங்களையும் கொடுத்துள்ளேன்.வேறு சிலரும் எழுதியிருக்கக் கூடும். இது குறித்து அந்த இணைய இதழாசிரியருக்கு முழு விபரங்களைத் தெரிவித்து எழுதினேன்.அவர் இது குறித்து அறிந்திருக்கவில்லை,அறிந்திருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவர் இப்படி 10 வரி எழுதினால் அது குறித்து விளக்கி 100/200 வரி எழுதி இதுதான் விஷயம்,இதற்கான சான்றுகள் இவை என இன்னொருவர் எழுத வேண்டியிருக்கிறது.ஆனால் இந்தக் கட்டுரையை எழுதுபவர் குறைந்தபட்சம் அடிப்படை தகவல்களையாவது தெரிந்து கொண்டு எழுத வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்த்தால் அதில் தவறில்லை.படிக்கும் வாசகர் அந்த அறிவியலாளர் குறித்து ஒரு மிகத்தவறான புரிதலைப் பெற்றிருப்பார்.அம் மென்பொருள் குறித்த ஒரு முக்கியமான விவாதம் நடந்தது என்பது கூட அவருக்குத் தெரிந்திராது.ஆனால் அதைப் படித்தப் பின் இணையத்தில்/நூலகங்களில் மேலதிகவிபரங்களைத்

தேடினால் அவருக்கு கிடைக்கும் தகவல்கள் வேறுவிதமாக இருக்கும்.

ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம்,தனிசொத்து,சமூகத்தின் தோற்றம் குறித்த நூல் மிகவும் புகழ்பெற்றது.இதை படித்திராத/கேள்விப்பட்டிராத மார்க்சியர்களே இல்லை எனலாம்.தாய் வழிச் சமூகம்,பெண்ணுரிமை குறித்த

விவாதங்களில் பலர் மேற்கோள் காட்டும்/குறிப்பிடும் நூல் இது.மார்கன் என்ற மானுடவியலாளர் செய்த ஆய்வுகளை ஏங்கெல்ஸ் இதில் பயன்படுத்தியுள்ளார். இந்நூலின் போதாமைகளை,பலவீனங்களை

குறித்து எழுதப்பட்டுள்ளது.மார்கனின் ஆய்வுகளை பின்னர் மானுடவியலாளர்கள் கேள்விக்குட்படுத்தி அவர் கண்ட முடிவுகளை கிட்டதட்ட நிராகரித்துவிட்டனர்.மேலும் இதனடிப்படையில் ஏங்கெல்ஸ் முன்வைத்த

கருத்துகளும் சர்ச்சிக்கப்பட்டுள்ளன.எனவே ஏங்கெல்ஸ் முன்வைத்த கருத்துகளை இன்று மானுடவியலாளர்கள்,பெண்ணியவாதிகள் நிராகரித்துவிட்டனர் என்றால் அது மிகையாகது. .அறிவுத்துறை வட்டாரங்களில் ஏங்கெல்ஸின் நூல் ஒரு முக்கியமான பங்களிப்பு,ஆனால் இன்று அதன் பலவீனங்கள் குறித்து தெளிவாகத் தெரிந்துவிட்டதால் அதன் மையக்கருத்துகளை பலமான சான்றுகளாக பயன்படுத்தமுடியாது என்று கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால் ஆதி தாய்வழி சமூகம் குறித்த ஏங்கெல்ஸின் கருத்துகள் காலாவதியாகிவிட்டன.கிட்டதட்ட 20/25 ஆண்டுகள் முன்பே இது குறித்து ழுதப்பட்டுள்ளது.தமிழில் இது குறித்து எத்தனைபேர் எழுதியிருக்கிறார்கள் என்பது எனக்குக் தெரியாது.ஆனால் 1987/(88 ?) ல் சுந்தர வாத்தி என்ற பெயரில் சுந்தர் காளி நிகழில் எழுதிய கட்டுரையில் இது பற்றி குறிப்பிட்டிருப்பதாக நினைவு. சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் ஒரு பிரபல எழுத்தளர்-விமர்சகர் ஏங்கெல்ஸ் நூலை

முன்வைத்து எழுதியுள்ளார்.அவருக்கு இந்த விவாதம் குறித்து தெரிந்திருப்பதாகத் தெரியவில்லை.

இந்த விவாதங்களின் அடிப்படையில் பார்த்தால் ஏங்கெல்ஸ் எழுதியதை அடியொற்றி மார்க்சியர்கள்/

பிறர் எழுதியவை பலவீனமான அடிப்படைகளைக் கொண்டவை,மானுடவியலாளர்கள் நிராகரித்தவற்றை

அவை நிராகரிக்கப்பட்டவை என்பது கூடத் தெரியாமல் எழுதப்பட்டவை என்றுதான் மதிப்பிடத் தோன்றும்.

இதை நான் விபரங்களுடன் எழுதினால் சிலருக்கு கோபம் வரும்.ஆனால் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன் நிராகரிக்கப்பட்டவை இன்றும் அடிப்படை உண்மைகளாக முன்வைக்கப்படும் போது அதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.இதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பேராசிரியர்களோ இவ்வாறு எழுதுபவர்களுக்கு சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருப்பாளர்கள்.இதை வெளியிட்ட இதழாசிரியர்

ஏங்கெல்ஸ் நூல் குறித்த விவாதங்களை அறிந்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.

இது போல் உதாரணங்கள் தரமுடியும்.இந் நிலையில் நான் வாசகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான்.

தமிழில் வெளியாகும் நூல்கள்,இதழ்கள்,இணைய இதழ்களில் உள்ளவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை மூல நூல்கள்,துறை சார்ந்த நூல்கள்,கட்டுரைகள் போன்றவற்றுடன் ஒப்பிடுங்கள்.இணையத்தில் தகவல்கள் பெற முயலுங்கள்.அவ்வாறு செய்த பின்னர் ஒரு (தற்காலிக) முடிவிற்கு வாருங்கள்.ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்ச்/ஜெர்மன் போன்ற மொழிகளில் அதிகம் படிக்க முயலுங்கள்,தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றையும், நீங்கள் படிப்பததையும்/படித்தவற்றையும் ஒப்பிடுங்கள்.பெரிய எழுத்தாளர்/புகழ் பெற்ற எழுத்தாளர் என்ற முத்திரைகளைத் தாண்டி படித்தால்,சிந்தித்தால்,விவாதித்தால்தான் சரியான புரிதல் ஏற்படும்.இதற்கு நான் ஏன் தமிழில் படிக்க வேண்டும், ஆங்கிலத்தில்/ஜெர்மனில்/பிரெஞ்ச்சில் படித்துவிட்டுப் போகிறேன் என்று சிலர் சொல்லக் கூடும்.ஒரு விதத்தில் அதுவும் சரிதான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

Let the buyer be beware என்பது போல் Let the reader be beware என்று சொல்ல வேண்டிய சூழல்தான் இங்கு உள்ளது.அதை வலியுறுத்தி,அழுத்தம்திருத்தமாகவே நான் இந்தக் கட்டுரை மூலம் சொல்லவிரும்புகிறேன்.

ravisrinivas@rediffmail.com

K.Ravi Srinivas

Series Navigation