வழி (ஒரு குறும்பா அந்தாதி)

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

அனந்த்


நடக்கமுடி யாதஅந்த மாது
நடுத்தெருவில் மலைத்துநிற்கும் போது

கடந்துசெல்லும் பேர்கள்அவர்
கல்மனத்தால் ஊர்திகளும்

தடங்கலின்றி ஓடும் சாலை மீது!

*****

மீதமுள்ள பணத்தையெல்லாம் மொத்தம்
வீதிமுனைக் கள்கடைக்கு நித்தம்

ஈந்து ‘இந்தத் தேசமெல்லாம்
ஏழைகள்மேல் நேசமில்லாப்

பாதகர்கள் பார்! ‘எனல்அ பத்தம்!

*****

தம்மனைவி மக்கள்மட்டும் இன்று
தழைத்திடநாம் உழைக்கவேண்டும் என்று

இம்மனிதர் விருப்பம்போல
இந்தநாட்டில் இருப்பதற்குச்

சம்மதிக்கும் வாழ்வுமுறை நன்று!

*****

நன்று!நன்று நாம்நடக்கும் பாதை
நம்மிலெவர் ஒருவர்இவ்வு பாதை

குன்றுபோல உயர்ந்திருந்தும்
குறுகியுள்ளம் அயர்ந்திடாமல்

வென்றதனைத் தீர்ப்பர்அவர் மேதை!

*****

மேதையிலும் மேதையவன் காந்தி
மீண்டும்வந்து விளக்குமாற்றை ஏந்தி

பாதையுள்ள தூசகற்றிப்
பாரிலுள்ள மாசகற்றி
நீதிவழி காட்டவரும் சாந்தி!

*****
ananth@mcmaster.ca

Series Navigation