வழித்துணை

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

பசுபதி


( ‘நந்த வனத்திலோர் ஆண்டி ‘ சந்தம்)

எடுப்பு
——-
வண்டி வரும்நேர மாச்சு ! — துணை
வருவேன் எனச்சொன்ன வாக்கென்ன ஆச்சு ? (வண்டி)

முடிப்பு
———-
போகு மிடம்மிக தூரம் –அங்குப்
. . போவதற் கில்லையே நெஞ்சினில் தீரம் !
வேகமாய்ச் செல்கடி காரம் — இவ்
. . வேதனை நெஞ்சினில் ஏற்றுதே பாரம் ! (வண்டி)

வாணாளில் போகாத ஊரு ! — உன்
. . வழித்துணை வேண்டல் பிழையென்றால் கூறு !
காணாத காட்சியங் குண்டா ? — அங்குக்
. . காவெனக் கூவினால் நீயங்கே உண்டா ? (வண்டி)

மீண்டுமிவ் வூர்வரு வேனோ ? — விளை
. . யாட்டின் விதிகள் அறிந்திடு வேனோ ?
நீண்டவி னாக்களும் உண்டு ! — இந்த
. . நீர்மேல் குமிழியில் ஒன்றிடு வேனோ ? (வண்டி)

மிதியடி போட்டுக்கொண் டாச்சு — பின்னர்
. . விடைபெற யாவரும் கைகாட்டி யாச்சு !
விதியின் முகத்தைக்கண் டாச்சு ! — விளை
. . யாட்டு முடிந்து மணிஅடிச் சாச்சு! (வண்டி)

நெஞ்சினில் அச்சத்தைத் தாங்கி –ரயில்
. . நிலையத்தில் நிற்கிறேன் சீட்டொன்று வாங்கி !
அஞ்சாமல் ஊர்செல்ல வேண்டும் — உன்
. . அன்புக் கரங்கள் அணைத்திடல் வேண்டும் ! (வண்டி)

Series Navigation

பசுபதி

பசுபதி